இறக்கை இல்லாமல் பறக்க முடியுமா?’ என்று எண்ணி சிந்தித்த வேளையில், ‘ஆம், தோழி! கற்பனைக் கண் கொண்டு உன்னால் பறக்க முடியும்’ என்று பா. ராகவன் சூனியன் வழியாக என் மனத்திற்குள் கிளவியாக என்னையும் எடை கொண்ட பொருளாகப் பறக்கச் செய்தார்.
நியாயத் தீர்ப்பானது வெவ்வேறு கோணத்தில் வெவ்வேறு விதமாக வழங்கப்படுகிறது. கோணம் மாறுபடுவதால் மட்டும் அல்ல, பார்வைக்கோணம் மாறுபடுவதால் தீர்ப்புகள் தவறுகின்றன எனச் சூனியன் உணர்த்துகிறான்.
சூனியனின் சொற்பாணியானது எனக்கு மலை மீது நிற்கும் பொழுது, குருதிக்குள் பாயும் குளிர் போன்று உள்ளது. ஒன்றைத் தாக்க நினைக்கும் பொழுது நேரிடையாக அதைத் தாக்காமல், சுற்றி உள்ள பருப்பொருளைத் தாக்கினால் நேரிடையானது தானகவே அழிந்து விடும் என்பதைத் ‘துவாரகையை எண்ணிப்பார். யாதவர்கள் அழிந்ததை தியானம் செய்து உணர்’ என்ற கருத்தின் வழியாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு மனிதனைத் தோற்கடிக்கச் செய்ய வேண்டுமென்றால், அவனுடைய நம்பிக்கையின் மீது சொற்கணையைச் செலுத்தினால் போதுமானது. அது போல்தான் சூனியனின் மீதும் சொற்கணைகள் செலுத்தப்படுகின்றன. ஆனால், எந்தச் சொற்கணைகளையும் தன்னை அசைக்காது என்று தன் மொழி வழியே முன் வைத்துச் செல்கிறான்.
சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அவனுடைய குற்றத்திற்கு ஆதரவாகவே இருப்பதால் சந்தர்ப்பம் ஏற்படுத்திய மரணதண்டனைக்குத் தன்னை ஒப்புக்கொள்ளும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறான். தன் மனக்குமுறலை மனக்காட்சியாகவே தனக்குள் வெளிப்படுத்துகிறான். அதை மிக அருமையாகச் செதுக்கியுள்ளார் அன்புத்தோழர் பா.ராகவன். “அவருக்கு முன்னால் என் வழக்கை விசாரித்த ஒவ்வொரு நியாயக் கோமானையும் நினைவுகூர்ந்து சபித்தேன். அரசாங்கத்தைக் கெட்ட வார்த்தைகளால் வைதேன். நான் தவறிழைத்திருக்க மாட்டேன் என்று சொல்வதற்கு ஒரு சூனியன் கூட என் பக்கம் இல்லாத அவலத்தைச் சபித்தேன்”.
சூனியன் கூறும் பூரண வாக்கியம் மிகப்பெரிய மந்திரசக்தி ஆகும். இந்தப் பூரணத்தை உணர்ந்தவர்கள் என்றென்றும் பூரணமாக இருப்பார்கள். தோழர் பா. ராகவனுக்கு அன்பார்ந்த வாழ்த்துகள்.