பொலிக! பொலிக! 07

பாதையற்ற கானகத்தில் எந்தப் பக்கம் போவது என்று ராமானுஜருக்குப் புரியவில்லை. பகலென்றால் திசை தெரியும். கவிந்த இரவுக்குக் கடவுளைத் தவிர வேறு துணையில்லை. ஆனது ஆகட்டும் என்று அவர் புறப்பட்டார். கால் போன போக்கில் நடந்துகொண்டே இருந்தார்.

கோவிந்தன் சொன்ன தகவலும் அவனுக்கு இருந்த பதற்றமும் வேகமும் திரும்பத் திரும்ப அவரது நினைவில் மோதிக்கொண்டே இருந்தன. கொலைத் திட்டம். இவன் இருக்கவே கூடாது என்று நினைக்குமளவுக்கு அப்படி என்ன செய்தேன்? எத்தனை யோசித்தும் புரியவில்லை.

மீண்டும் வகுப்புக்கு வா என்று வீட்டுக்கு வந்து அழைத்தவர்கள்தாம் காசிக்கு அழைத்துச் சென்று கங்கையில் அழுத்திக் கொல்லத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். குருவுக்குத் தெரியாமலா இது நடக்கும்?

‘அண்ணா, என்னை மன்னியுங்கள். திட்டத்தை வகுத்துக் கொடுத்ததே குருவாகத்தான் இருப்பார் என்பது என் சந்தேகம்.’

வழி நெடுக யாதவர் அந்தச் சிலபேரைத் தனியே அழைத்துப் பேசியது. தற்செயலாகத் தான் குறுக்கிட்ட போதெல்லாம் பேச்சை நிறுத்தியது. பயணம் முழுதும் கூடியவரை தன்னையும் ராமானுஜரையும் அதிகம் பேசிக்கொள்ள முடியாதபடிக்குப் பிரித்து வைத்தது. யோசிக்க யோசிக்க கோவிந்தனுக்கு இன்னும் பல காரணங்கள் அகப்பட்டன.

‘இனி என் முகத்திலேயே விழிக்காதே என்று துரத்தியடித்த குரு, நீங்கள் திரும்பி வந்தபோது ஒன்றுமே நடவாததுபோல எப்படிக் கட்டித் தழுவி வரவேற்றார் என்று யோசித்துப் பாருங்கள் அண்ணா. எனக்கு அதுவே திருதராஷ்டிரத் தழுவலாகத்தான் இப்போது படுகிறது.’

ராமானுஜருக்குத் துக்கம் ததும்பியது. வேதத்தில் கரை கண்ட ஞானவித்து. வயதான மனிதர். தன் இருப்பு அத்தனை அச்சத்தைத் தந்திருக்குமா அவருக்கு? அழித்துவிடும் அளவுக்கா?

‘இது நீங்கள் யார் என்று உங்களுக்கே தெரியப்படுத்த நிகழ்ந்த சம்பவமாக இருக்கட்டும். நீங்கள் இருந்தாக வேண்டும் அண்ணா. போய்விடுங்கள். ஓடிவிடுங்கள்.’

திரும்பத் திரும்பச் செவியில் மோதிய கோவிந்தனின் குரல்.

ராமானுஜர் நடந்துகொண்டே இருந்தார். அன்றிரவு முழுதும் நடந்து, மறுநாளும் நடந்து, வானம் இருட்டும் முன் கண் இருட்டிக் கீழே விழுந்தார்.

எத்தனை நேர உறக்கமோ. யாரோ எழுப்புவது போலிருந்தது. விழித்தபோது எதிரே ஒரு வேடர் தம்பதி நின்றிருந்தார்கள்.

‘வெளியூரா?’

‘ஆம் ஐயா. இந்தக் காட்டில் எனக்கு வழி தெரியவில்லை. நான் தெற்கே போகவேண்டியவன்.’

‘நாங்கள் சத்யவிரத க்ஷேத்திரத்துக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறோம். பேச்சுத் துணைக்கு ஆச்சு. புறப்படுங்கள்’ என்றான் வேடன்.

சத்ய விரத க்ஷேத்திரம். ராமானுஜருக்கு சிலிர்த்துவிட்டது. காஞ்சிக்கு அதுதான் பெயர். எங்கிருந்தோ வந்தான். நானொரு வேடன் என்றான். இங்கிவனை நான் பெற எப்போதோ தவம் புரிந்திருக்கத்தான் வேண்டும்.

உற்சாகமாக அவர்களுடன் ராமானுஜர் புறப்பட்டுவிட்டார்.

மறுநாள் இரவு வரை அவர்கள் பேசிக்கொண்டே நடந்தார்கள். அப்போதும் கானக எல்லை வந்தபாடில்லை. அதே விந்தியம். அதே முரட்டுக் காடு. அதே பாதையற்ற பயணம். போய்ச்சேர எத்தனை மாதங்கள் ஆகப் போகிறதோ தெரியவில்லை.

அன்றிரவு அவர்கள் மூவருக்குமே பயங்கரப் பசி. ஆனால் உண்ண ஒன்றுமில்லை. பருக நீருமற்ற வறண்ட பகுதியாக இருந்தது அது. சகித்துக்கொண்டு இரவைக் கழிக்கப் படுத்தார்கள். விடிவதற்குச் சற்று நேரம் முன்பாக அந்த வேடுவனின் மனைவியின் முனகல் கேட்டது. தாகம். தாங்க முடியாத தாகம். தண்ணீர் வேண்டும்.

‘கொஞ்சம் பொறுத்துக்கொள். பொழுது விடிந்துவிடட்டும். இங்கிருந்து சிறிது தூரத்தில் ஒரு கிணறு இருக்கிறது. அதன் நீர் அமிர்தத்தினும் மேலானதென்று கேள்விப்பட்டிருக்கிறேன்’ என்று வேடுவன் ஆற்றுப்படுத்திக்கொண்டிருந்தது ராமானுஜரின் காதில் விழுந்தது.

சட்டென்று அவர் உதறிக்கொண்டு எழுந்தார். ‘ஐயா நீங்கள் எனக்கு உதவி செய்தவர்கள். உங்கள் மனைவியின் தாகத்தைத் தணிக்கும் புண்ணியமாவது எனக்குக் கிடைக்கட்டும். இருட்டானாலும் பரவாயில்லை. நீங்கள் திசை சொல்லுங்கள். நான் அந்தக் கிணற்றைத் தேடிச் சென்று நீர் எடுத்து வருகிறேன்’ என்றார்.

வேடுவன் புன்னகை செய்தான். குத்துமதிப்பாகக் கை காட்டி வழி சொன்னான்.

ராமானுஜர் நடக்க ஆரம்பித்தார். இந்த அடர் கானகத்தில் யார் கிணறு வெட்டியிருப்பார்கள்? அதுவும் அமிர்தத்தினும் மேலான நீர் உள்ள கிணறாமே?

அரை மணி தேடி அந்தக் கிணற்றைக் கண்டுபிடித்தார். ஆனால் நீர் எடுத்து வர கைவசம் ஒன்றுமில்லை. ஆனது ஆகட்டும் என்று கிணற்றில் இறங்கி, தன்னிரு கைகளில் நீரை அள்ளி ஏந்திக்கொண்டு அலுங்காமல் மேலேறி வந்தார். வந்த வழியே திரும்பிச் சென்று அந்த வேட்டுவப் பெண்ணின் வாயில் நீரை விட்டார்.

‘இவ்வளவுதான் முடிந்ததா?’ என்றாள் அந்தப் பெண்.

‘பிரச்னை இல்லையம்மா! நான் மீண்டும் சென்று நீர் ஏந்தி வருகிறேன்.’

இரண்டாவது முறையும் அரை மணி நடந்து நீர் எடுத்து வந்தார் ராமானுஜர்.

‘ம்ஹும். தாகம் தணியவில்லை. எனக்கு இன்னும் வேண்டும்.’

மூன்றாவது முறை ராமானுஜர் அந்தக் கிணற்றுக்குச் சென்று நீர் எடுத்து வந்து பார்த்தபோது அந்த வேடர் தம்பதி அங்கே இல்லை.

இருட்டில் நடந்துகொண்டே இருந்த களைப்பு. பசி மயக்கம். அப்படியெங்கே கண் காணாமல் போயிருப்பார்கள் என்கிற குழப்பம் தந்த கிறுகிறுப்பு. ராமானுஜர் அப்படியே கண்சொருகிச் சரிந்தார்.

விழித்தபோது விடிந்திருந்தது. வழிகாட்ட உடன் வந்த வேடுவத் தம்பதி பாதி வழியில் பரிதவிக்க விட்டுக் காணாமல் போனது பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருக்க நேரமில்லை. ராமானுஜர் மீண்டும் அந்தக் கிணற்றடியை நோக்கி நடந்தார்.

இப்போது அங்கே நாலைந்து பெண்கள் இருந்தார்கள். தண்ணீர் எடுக்க வந்த உள்ளூர்க்காரர்கள்.

‘அம்மா, இது எந்த இடம்?’

‘நீங்கள் எங்கே செல்லவேண்டும்?’

‘நான் தெற்கே காஞ்சிக்குப் போகவேண்டும் தாயே. வழி தெரியாத விந்தியமலை காட்டுப்பாதையில் சிக்கிக்கொண்டுவிட்டேன்.’

அந்தப் பெண்கள் அவரை வினோதமாகப் பார்த்தார்கள்.

‘சொல்லுங்கள் அம்மா. இது எந்த ஊர்? எந்த இடம்? இங்கிருந்து நான் எப்படிப் போகவேண்டும்?’

‘என்னப்பா நீ அசடாயிருக்கிறாயே. காஞ்சிக்கே வந்து சேர்ந்துவிட்டு, காஞ்சிக்கு வழி கேட்கிறவனுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?’ என்று கேட்டார்கள்.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி