பொலிக! பொலிக! 06

‘இதோ பார், உனக்குத் தெரியாதது இல்லை. நமது குருவுக்கு வயதாகிவிட்டது. அவரால் மாற்றுக் கருத்துகளோடு மல்லுக்கட்ட முடியாது. அதே சமயம், நீ கோபித்துக்கொண்டு வகுப்புக்கு வராதிருந்தால் நஷ்டம் உனக்குத்தான். இவரளவுக்கு வேதமறிந்தவர்கள் இங்கு வேறு யாருமில்லை என்பதை எண்ணிப் பார்.’

ராமானுஜர் யோசித்தார். அவர்கள் சொல்வது சரிதான். ஆனால் கசப்பின் திரையை இடையே படரவிட்டுக்கொண்டு கல்வியை எப்படித் தொடரமுடியும்?

‘அட என்னப்பா நீ! உன்னைக் கோபித்துக்கொண்டதில் அவருக்கே மிகுந்த வருத்தம். வெளியே காட்டிக்கொள்ள அகங்காரம் தடுக்கிறது. ஆனால் நீ பாடசாலைக்கு வருவதை நிறுத்தியபிறகு மனிதர் தவியாய்த் தவிக்கிறார். எப்போது வேண்டுமானாலும் அழுதுவிடுவார் போலிருக்கிறது.’

ஐயோ என்று பதறி எழுந்தார் ராமானுஜர். தன்னால் ஏற்க இயலாத கருத்துகளைச் சொல்லித்தருகிறவர்தான். என்றாலும், அவர் குரு. அவரது நம்பிக்கைகள் அவருக்கு. அல்லது அவரை நம்புகிறவர்களுக்கு. தன்னால் அவரை முற்றிலும் ஏற்க முடியாதுபோனாலும், முற்றிலும் நிராகரிக்கவும் முடியாது என்று ராமானுஜர் நினைத்தார். குரு என்பவர் தெய்வத்துக்கு மேலே.

‘அதைத்தான் சொல்கிறோம். அவர் சொல்வதைச் சொல்லட்டும். நீ ஏற்பதை ஏற்றுக்கொள். ஏற்க முடியாதவற்றுக்கு இருக்கவே இருக்கிறது உன் சுயபுத்தி. அது கொடுக்கிற அர்த்தங்கள். கிளம்பு முதலில்.’ என்றார்கள்.

ராமானுஜர் மீண்டும் வகுப்புக்குப் போனபோது யாதவப் பிரகாசர் அவரைக் கட்டித்தழுவி வரவேற்றார். ‘நீ இல்லாமல் இந்த வகுப்பே நிறைவாக இல்லை’ என்று சொன்னார்.

ராமானுஜரைப் பொறுத்தவரை அது பகையல்ல. அபிப்பிராய பேதம் மட்டுமே. குருவுடன் வாதம் செய்து வீழ்த்துவதில் அவருக்குச் சற்றும் விருப்பம் இருக்கவில்லை. அதை ஒரு துரதிருஷ்டமாகவே அவர் கருதினார். எனவே மீண்டும் குரு தன்னை அரவணைக்க முன்வந்தபோது அவருக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.

மீண்டும் வகுப்புகள் தொடங்கின. சிலநாள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் அமைதியாகவே போனது. யாதவர் மெதுவாக ஆரம்பித்தார்.

‘நாம் காசிக்கு யாத்திரை போனால் என்ன?’

ஓ, போகலாமே என்றார்கள் மாணவர்கள். பாவம் கரைக்கிற காசி. முனிவர்கள் வாழ்கிற காசி. முக்தியளிக்கிற காசி.

‘ராமானுஜா! நீ அவசியம் வரவேண்டும். இந்த யாத்திரை சிறப்படைவதே உன்னிடத்தில்தான் உள்ளது.’

‘தங்கள் சித்தம்’ என்றார் ராமானுஜர்.

வீட்டுக்குப் போய் அம்மாவிடம் சொன்னார். மனைவி தஞ்சம்மாவிடம் சொன்னார். குருகுலத்தில் அனைவரும் காசி யாத்திரை போக முடிவாகியிருக்கிறது.

‘காசி யாத்திரையா? அது வெகுநாள் பிடிக்குமே?’ என்றாள் தஞ்சம்மா.

‘ஆம் தஞ்சம்மா. ஆனால் இது ஓர் அனுபவம். எல்லோருக்கும் எளிதில் கிடைத்துவிடாத அனுபவம். நான் தனியாகப் போகப் போவதில்லை. என் குருநாதரும் உடன் படிக்கும் மாணவர்களும் எப்போதும் பக்கத்தில் இருப்பார்கள். என்னைப் பற்றிக் கவலை வேண்டாம்.’

அவள் தன்னைப் பற்றித்தான் கவலைப்பட்டுக்கொண்டிருந்தாள் என்பதை அப்போது ராமானுஜர் எண்ணிப் பார்க்கவில்லை. அவரது சிந்தனை முற்றிலும் யாத்திரையில் இருந்தது. அது தரப்போகிற பரவசப் பேரனுபவத்தில் இருந்தது.

‘கோவிந்தன் வருகிறானோ?’ என்றார் தாயார் காந்திமதி. ராமானுஜர் பயின்ற அதே பாடசாலையில்தான் அவரது தமக்கை மகன் கோவிந்தனும் படித்துக்கொண்டிருந்தான். அவன் பக்கத்தில் இருந்தால் ராமானுஜனை பத்திரமாகப் பார்த்துக்கொள்வான். பொறுப்பறிந்தவன் என்பது தவிர அண்ணன் மீது அவனுக்கு அளவற்ற பாசமும் உண்டு.

‘அத்தனை பேரும் கிளம்புகிறோம் அம்மா. இது குருவின் விருப்பம். முடியாது என்று சொல்ல நாங்கள் யார்?’

கிளம்பிவிட்டார்கள்.

வேத மந்திரங்களைச் சொல்லிக்கொண்டே நடக்கத் தொடங்கினார்கள். அதிகாலை சூரிய உதயத்துக்கு முன் கிளம்பி உச்சி வேளை வரை நடைப் பயணம். அதன்பிறகு உணவும் ஓய்வும். மீண்டும் மாலை கிளம்பி இருட்டும் வரை நடப்பது. எங்காவது சத்திரங்களில் படுத்துத் தூங்கி, மீண்டும் காலை நடை. ஆங்காங்கே குரு வகுப்பு எடுப்பார். அந்தந்தப் பிராந்தியங்களில் வசிக்கும் மக்களோடு உரையாடுவார்கள். எதிர்ப்படும் கோயில்களில் வழிபாடு.

நாள்கள் வாரங்களாகி மாதங்களைத் தொட்டபோது அவர்கள் விந்திய மலைப் பிராந்தியத்தை அடைந்திருந்தார்கள். மத்தியப் பிரதேசத்து நிலப்பகுதி. இந்தியாவை வட, தென் பிராந்தியங்களாகப் பிரிக்கிற மலைத்தொடர். நடந்துபோகிறவர்களுக்கு அதுதான் பாதை. விந்திய மலையைத் தொட்டு அதன் வழியாகவே உத்தர பிரதேசத்தில் கங்கை பாயும் வாரணாசியை அடைகிற வழி.

இருட்டிய பொழுதில் அவர்கள் மலைக்காட்டில் ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து படுக்க ஒதுங்கினார்கள். நடந்த களைப்பில் ராமானுஜர் படுத்தவுடன் உறங்கிவிட்டார். ஆனால் கோவிந்தன் உறங்கவில்லை. அவனுக்குச் சில குழப்பங்களும் சந்தேகங்களும் இருந்தன. வழி முழுதும் மாணவர்கள் தமக்குள் ரகசியம் பேசியபடியே வந்ததை அவன் கவனித்திருந்தான். அவன் கவனிப்பது தெரிந்தால் சட்டென்று அவர்கள் பேச்சை நிறுத்திவிடுவார்கள். அதேபோல, யாதவருக்கு நெருக்கமான சில மாணவர்கள் அவருடன் தனியே சில சமயம் உரையாடிக்கொண்டிருந்ததை அவன் கவனித்தான். வேதபாடம் தொடர்பான உரையாடலாக இருக்குமோ என்று அவன் பக்கத்தில் போனால் அடுத்தக்கணம் அவர்கள் எழுந்து போய்விடுவார்கள்.

ஒரு சிலருடன் மட்டும் குரு தனியே பேசவேண்டிய அவசியமென்ன? தான் நெருங்கும்போதெல்லாம் பேச்சு துண்டிக்கப்படுவதன் காரணம் என்ன?

அவனது குழப்பத்தின் அடிப்படை அதுதான். அதனாலேயே இரவு நெடுநேரம் தூங்காமல் வெறுமனே கண்மூடிப் படுத்திருப்பதை வழக்கமாக்கிக்கொண்டான். மனிதர்களின் உறக்கத்தை மாய இறப்பாகவே கருதிவிடுகிற சக மனிதர்கள். தன்னிலை மறந்து ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள இரவுப் பொழுதுகளையே அவர்கள் பெரிதும் நம்புகிறார்கள்.

கோவிந்தன் நினைத்தது பிழையல்ல. அன்று அது நடந்தது.

‘நாம் எப்போது கங்கைக் கரையை அடைவோம்?’

‘இன்னும் இருபது நாள்கள் ஆகலாம் என்று குருநாதர் சொன்னார்.’

‘அதற்குமேல் தாங்காது. சென்றடைந்த மறுநாளே ராமானுஜன் கதையை முடித்துவிடவேண்டும்.’

கோவிந்தனுக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. அவர்கள் உறங்கும்வரை காத்திருந்தான். பிறகு பாய்ந்து சென்று ராமானுஜரைத் தட்டி எழுப்பினான்.

‘அண்ணா, நீங்கள் ஒரு கணம்கூட இனி இங்கே இருக்கக்கூடாது. உங்களைக் கொல்ல சதி நடக்கிறது. ஓடிவிடுங்கள்’

‘ஐயோ, நீ?’ என்றார் ராமானுஜர்.

‘நீங்கள் காணாமல் போனது பற்றிக் கதைகட்டிவிடவாவது நான் இங்கே இருந்தாக வேண்டும். என்னை நான் பார்த்துக்கொள்வேன். நீங்கள் உடனே கிளம்புங்கள்.’

இறைவன் சித்தம் என்று ராமானுஜருக்குத் தோன்றியது.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter