பொலிக! பொலிக! 05

ஜடாயுவுக்கு ராமர் இறுதிச் சடங்கு செய்து மோட்சம் கொடுத்த தலம் அது. திருப்புட்குழி என்று பேர். விஜயராகவப் பெருமாளின் பேரழகைச் சொல்லி முடியாது. வலது தொடையில் ஜடாயுவையும் இடது தொடையில் மரகதவல்லித் தாயாரையும் ஏந்தியிருக்கும் எம்பெருமான். பாடசாலை முடிந்தபிறகு தினமும் கோயிலுக்குப் போய் சேவித்துவிட்டு வரலாம் என்கிற எண்ணமே ராமானுஜருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

ஆனால் திருப்புட்குழி யாதவப் பிரகாசர் விஜயராகவப் பெருமாளைச் சேவிக்கிற வழக்கம் கொண்டவரல்லர். அவர் அத்வைதி. சிவனைத் தவிர அவருக்கு வேறு தெய்வமில்லை.

ஊர்க்காரர்களுக்கு அவரைத் தெரியும். பெரிய ஞானஸ்தன். வேதம் படித்த விற்பன்னர். பிராந்தியத்தில் அவரளவு வேதத்தில் கரை கண்டவர்கள் யாரும் கிடையாது. பயம் அளிக்கிற மரியாதை என்பது ஒரு விலகல்தன்மையை உடன் அழைத்து வரும். யாதவர் விலகியிருந்தார். கனிவில் இருந்து. சிநேகங்களில் இருந்து. சக மனித உறவுகளில் இருந்து.

நினைவு தெரிந்த தினம் முதல் தனது தந்தை கேசவ சோமயாஜியிடமே பாடம் படித்து வந்த ராமானுஜரை அவரேதான் யாதவப் பிரகாசரிடம் கொண்டுவந்து விட்டுப் போனது.

‘சுவாமி, வேதங்களில் நான் கற்ற மிகச் சொற்பப் பாடங்களை இவனுக்குச் சொல்லிக்கொடுத்திருக்கிறேன். ஆனால் அகக்கண் திறந்துவிடும் அளவுக்கல்ல. அதை நீங்கள்தான் செய்ய முடியும்.’

இளையாழ்வாரை நிமிர்ந்து பார்த்தார் யாதவப் பிரகாசர். தகிக்கும் வெய்யோனின் கன்னத்தில் துளி கிள்ளி எடுத்து வந்து வைத்தாற்போன்ற அவரது கண்களின் சுடர் அவரது வேறெந்த மாணவர்களிடமும் இல்லாதது. தவிரவும் அந்தச் சுடரின்மீது கவிந்துநின்ற விலை மதிப்பற்ற சாந்தம். ஞானத்தின் பூரணத்தை அடைந்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமான அபூர்வம். இந்தப் பையனுக்கு எப்படி இது? அவருக்குப் புரியவில்லை.

‘உமது மகனுக்கு விவாகம் ஆகிவிட்டதா?’

‘ஆம் சுவாமி. சமீபத்தில்தான்.’

‘சொந்த ஊர் காஞ்சிதானா?’

‘இல்லை. திருப்பெரும்புதூர். பிள்ளை வரம் கேட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை வேண்டி, யாகம் செய்து பிறந்தவன் இவன். பிறப்பின் பொருள் படிப்பில் அல்லவா உள்ளது? அதனால்தான் தங்களைத் தேடி வந்திருக்கிறேன்.’

‘நல்லது. விட்டுச் செல்லுங்கள்.’

அது தமிழகத்தில் சோழர்களின் கொடி பறந்துகொண்டிருந்த காலம். மாமன்னன் ராஜேந்திர சோழனும் அவனது மகன் இளவரசர் ராஜாதிராஜ சோழனும் மாநிலத்தின் இண்டு இடுக்கு விடாமல் தமது அதிகாரத்தை நிலைநிறுத்தி ஆட்சி புரிந்துகொண்டிருந்த சமயம். தஞ்சைக்கு அருகே கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. வடக்கே ஆந்திரம் வரை நீண்டிருந்தது நாட்டின் எல்லை. மைசூர் முதல் ஈழம் வரை வென்றெடுத்த பிராந்தியங்கள் யாவும் குறுநிலங்களாக அறியப்பட்டன. நிலத்துக்கொரு பிரதிநிதி. நீடித்த நல்லாட்சி. ஆனால் சைவம் தவிர இன்னொரு மதத்துக்குப் பெரிய இடம் கிடையாது. கோயிலற்ற ஊரில்லை, சிவனற்ற கோயிலில்லை.

யாதவப் பிரகாசர் போன்ற மகாபண்டிதர்களுக்கு மிகப்பெரிய செல்வாக்கு இருந்தது. அரசு மானியங்கள் இருந்தன. மாலை மரியாதைகள் இருந்தன. வீதியில் தமது சீடர் குழாத்துடன் நடந்து போனால் மக்கள் தாள் பணிந்து ஒதுங்கி நிற்பார்கள். அது கல்விக்கான மரியாதை. ஞானத்துக்கான மரியாதை.

ஆசூரி கேசவ சோமயாஜிக்குத் தனது மகன் ஒரு சரியான குருகுலத்தில் சேர்ந்துவிட்ட திருப்தி. திருமணத்தை முடித்துவிட்டார். காலக்கிரமத்தில் வேதப்பாடங்களையும் நல்லபடியாகக் கற்றுத் தேறிவிடுவான். இதற்குமேல் என்ன? தள்ளாத உடலத்தைத் தள்ளிக்கொண்டு போக சிரமமாக இருக்கிறது. நான் விடைபெற்றுக்கொள்கிறேன் என்று ஒருநாள் அமரராகிப் போனார்.

கடைசிவரை அவருக்குத் தெரியாது. பாடசாலைக்குப் போக ஆரம்பித்த சிறிது காலத்திலேயே ராமானுஜருக்கும் யாதவருக்கும் முட்டிக்கொண்ட சங்கதி. வியாதியின் படுக்கையில் கிடந்தவர் காதுகளுக்கு ராமானுஜர் இதை எடுத்துச் செல்லவில்லை. மனத்துக்குள் ஓர் இறுக்கம் இருந்தது. குருவுக்கும் தனக்கும் சரிப்பட்டு வராமல் போய்க்கொண்டிருக்கிற வருத்தம். பாடசாலையில் மற்ற மாணவர்கள் அப்படியில்லை. சொல்லிக்கொடுப்பதை அப்படியே ஏந்திக்கொண்டுவிடுகிறவர்களாக அவர்கள் இருந்தார்கள். தனக்கு மட்டும் ஏன் வினாக்கள் எழுகின்றன? தனக்கு மட்டும் ஏன் வேறு பொருள் தோன்றுகிறது? மனத்தில் உதிப்பதைச் சொல்லாமலும் இருக்க முடிவதில்லை. ஆசிரியர் போதிக்கிற எதுவும் எளிய விஷயங்களல்ல. வேதத்தின் ஒவ்வொரு பதமும் ஒரு தீக்கங்கைத் தன்னகத்தே ஏந்தியிருப்பது. உரித்தெடுத்து உள்வாங்குவது எளிதல்ல.

அது பிரம்மம் உணரச் செய்கிற பாதை. பிழைபடுவது தவறல்லவா?

தந்தையின் மறைவுக்குப் பிறகு சிறிதுகாலம் ராமானுஜர் பாடசாலைக்குப் போகாமல் இருந்தார். போய் என்ன செய்வது? தினமும் விவாதம், தினமும் தர்க்கம். ஆசிரியரின் மனக்கசப்புக்கு இலக்காவது. பிழைபட்ட பொருள்களை அவர் தீவிரம் குறையாமல் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருக்கிறாரே என்கிற ஏக்கம்.

‘ஆனால் அவன் வகுப்புக்கு வராததை நாம் நிம்மதி என்று எடுத்துக்கொண்டு விடமுடியாது குருவே. பயல் வெளியே போய் அத்வைத துவேஷம் வளர்ப்பான். வேதங்களுக்கு நீங்கள் எடுத்துச் சொல்லும் அரும்பொருளையெல்லாம் நிராகரித்து, தன் இஷ்டத்துக்கு வேறு அர்த்தம் சொல்லுவான். அதையும் தலையாட்டி ஏற்க ஒரு கூட்டம் தயாராக இருக்கும்.’

யாதவரின் சீடர்கள் ஓய்வுப் பொழுதில் ஓதி விட்டார்கள். யாதவருக்கே அந்தக் கவலை இருந்தது. தனது கருத்துகளை மறுத்துச் சொல்லும் ராமானுஜருடன் ஒருநாளும் அவரல் எதிர்வாதம் புரியமுடிந்ததில்லை. வாயை மூடு என்று அடக்கிவிடத்தான் முடிகிறது. இயலாமைக்குப் பிறந்த வெற்றுக் கோபம்.

அந்த அடக்குமுறை பிடிக்காதபடியால் மாணவன் விலகிப் போயிருக்கிறான். அப்படியே விட்டுவிடவும் முடியவில்லையே?

அவருக்குத் தெளிவாகத் தெரிந்தது. இவன் சாதாரணமான மாணவன் அல்ல. பிராந்தியத்தில் தனது புகழை அழித்துத் தனியொரு தேஜஸுடன் தனியொரு ஞான சமஸ்தானம் நிறுவும் வல்லமை கொண்டவன். அத்வைத சித்தாந்தத்தின் அடிப்படைகளையே அசைத்து ஆட்டம் காணச் செய்துவிடக்கூடியவன்.

‘அவன் எதற்கு இருக்கவேண்டும்?’ என்றார்கள் அவரது அருமைச் சீடர்கள்.

யாதவப் பிரகாசர் யோசித்தார். மிகத் தீவிரமாக.

‘சரி, அவனை சமாதானப்படுத்தி திரும்ப அழைத்து வாருங்கள். நாம் அவனையும் அழைத்துக்கொண்டு காசிக்கு யாத்திரை செல்வோம்.’

‘ஐயா காசிக்கு எதற்கு இப்போது?’

அவர் சில வினாடிகள் கண்மூடி அமைதியாக இருந்தார். கொலையுள்ளம் என்றாலும் குரு முகமல்லவா? எப்படிப் புரியவைப்பது? மிகக் கவனமாகச் சொற்களைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டார்.

‘கங்கை பாவங்களைக் கரைக்கவல்லது. மூழ்கி இறந்தோருக்கு மோட்சம் தரவல்லது.’

(தொடரும்)

Share

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds