பொலிக! பொலிக! 04

‘நான் உங்களை இனி மாமா என்று அழைக்க முடியாதல்லவா? பேரருளாளனே உங்களை யதிராஜன் (துறவிகளின் அரசர்) என்று சொல்லிவிட்டான்!’

தாசரதி தயங்கித் தயங்கித்தான் பேசினான். ராமானுஜர் புன்னகை செய்தார். வாய் திறந்து அவர் சொல்லவில்லை. துறந்தேன், துறந்தேன், துறந்தேன் என்று மும்முறை சொல்லி மூழ்கி எழுந்தபோது ‘முதலியாண்டானைத் தவிர’ என்று அவர்தம் மனத்துக்குள் சொல்லிக்கொண்டதை நினைத்துப் பார்த்தார். வைணவத்தை வாழ்க்கையாக ஏற்றதில் அவன் ராமானுஜருக்கு முன்னோடி. தமக்கையின் மகன். சிறு வயதில் இருந்தே ராமானுஜரின் நிழலாகத் தொடர்ந்து வருகிறவன். அவரது ஞானத்தின் ஜீவப் பிரவாகம் பெருக்கெடுக்கும்போதெல்லாம் முந்தி வந்து முக்குளித்தவன்.

‘முதலியாண்டான்! உறவென்பது நமக்கு இனி அவன் ஒருவனோடு மட்டுமே. ஆனால் அவன் உலகம் உண்ட பெருவாயனாக இருக்கும்போது உறவில்லை என்று யாரைச் சொல்ல முடியும்?’

தாசரதியிடம் மேலும் சில வினாக்கள் இருந்தன. அவற்றுள் முதன்மையானது, துறவு ஏற்ற மறுகணம் அவர் யாரை நினைத்தார் என்பது. தன்னையா? தன்னைக் காட்டிலும் உயர்ந்த பாகவதோத்தமரான கூரத்தாழ்வானையா? அல்லது தமது இன்னொரு தமக்கையின் மகனான வரத தேசிகனையா?

மூவருமே ராமானுஜர் துறவு கொண்டதும் முதல் முதலில் வந்து சீடர்களானவர்கள். அவரது உயிர் மூச்சேபோல் உடனிருப்பவர்கள். இரவும் பகலும் அவர்களுக்கு யதிராஜரைத் தவிர வேறு நினைவே கிடையாது. அவருக்குச் சேவை செய்வதைக் காட்டிலும் வேறு திருப்பணி கிடையாது. ராமானுஜர் துறவுக் கோலம் கொள்வதற்கு முன்பிருந்தே அப்படித்தான். அது ஞானத்தின் காந்த வடிவம். ஈர்க்கும் வல்லமை இயல்பிலேயே உண்டு.

‘தயவுசெய்து சொல்லுங்கள். ஒருவேளை வேறு யாரையாவது நினைத்தீர்களோ?’

தனது மானசீகத்தில் என்றோ குருவாக வரித்துவிட்ட ஆளவந்தாரையேகூட ராமானுஜர் எண்ணியிருக்கலாம். எப்பேர்ப்பட்ட தருணம்! எத்தனை பேருக்கு இதெல்லாம் வாய்க்கும்!

‘ஆனால் சொல்லிவிடுங்கள். நீங்கள் யாரை நினைத்தீர்கள்?’

மீண்டும் புன்னகை. அர்த்தம் பொதிந்த பேரமைதி. சொல்லலாமா? முதலியாண்டான் கேட்கிறான். என்னிடம் இருக்கிற பதில் அவனை எவ்விதமாக பாதிக்கும்? அவர் கண்மூடி, தன் நினைவில் மூழ்கத் தொடங்கினார்.

கண்ணுக்குள் மிதந்து வந்தது கோவிந்தனின் உருவம். கோவிந்த பட்டராகக் காளஹஸ்தியில் சிவஸ்மரணையில் கிடக்கிற பூர்வாசிரமத்துத் தம்பி. சித்தி மகன். ஒரு கணம் ராமானுஜருக்கு சிலிர்த்துவிட்டது. கோவிந்தன் இல்லாவிட்டால் அவர் கிடையாது. பதினெட்டு வயதிலேயே கங்கையில் போயிருக்கக்கூடும்.

‘ராமானுஜா, எழுந்திரு. உடனே என்னோடு வா. இவர்கள் உன்னைக் கொல்லத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள்.’

அசரீரிபோல் உட்செவியில் மீண்டும் ஒலிக்கிற அதே குரல்.

கோவிந்தனைக் கடைசியாகப் பார்த்தது அன்றைக்குத்தான். குருவும் சீடர்களுமாகப் புனித யாத்திரை போய்க்கொண்டிருந்த தினங்களில் ஒரு நள்ளிரவுப் பொழுது. தன்னை எழுப்பி, தப்பிக்கவைத்து அனுப்பிவிட்டுத் திரும்பிச் சென்ற கோவிந்தன். அதன்பிறகு அவன் திரும்பவேயில்லை. ஒரு செய்தி மட்டும் வந்தது.

‘ராமானுஜா! உன் சித்தி மகன் கங்கையில் குளிக்கிறபோது அவனுக்கு ஒரு சிவலிங்கம் கிடைத்ததாம். திரும்பி வருகிற வழியில் அவன் காளஹஸ்தியில் பெருமானைச் சேவித்து, அங்கேயே கைங்கர்யம் செய்யத் தீர்மானித்து இருந்துவிட்டான்’

இது எப்படி, எப்படி என்று ராமானுஜருக்கு ஆறவேயில்லை. தன்னினும் உயர்ந்த வைணவசீலராக கோவிந்தன் வரக்கூடுமென்று அவர் நினைத்திருந்தார். சட்டென்று எங்கோ தடம் மாறிவிட்டது.

எத்தனை முறை பேசியிருப்பேன்! எத்தனை விவாதித்திருப்போம்! அத்வைதமும் அதன் ஏற்கவியலாத எல்லைப்பாடுகளும்.

யாதவப் பிரகாசரிடம் ராமானுஜர் பாடம் படிக்கச் சென்றபோது கோவிந்தனும் அதே பள்ளியில் வந்து சேர்ந்தவன்தான். காஞ்சியில் யாதவரைக் காட்டிலும் சித்தாந்தங்களில் கரைகண்டவர் யாருமில்லை என்று ஊரே சொல்லிக்கொண்டிருந்தது. என்னவோ, ராமானுஜருக்கு மட்டும் ஆசாரியருடன் ஆரம்பத்தில் இருந்தே ஒத்துப் போகவில்லை. கோவிந்தனுக்கு அது தெளிவாகப் புரிந்தது. இவன் வேறு. இவன் சிந்தனை வேறு. இவனது வார்ப்பு வேறு. ஒரு சுயம்புவை ஆராய்ந்து அறிவது கடினம்.

அன்றைக்கு சாந்தோக்ய உபநிடதப் பாடம் நடந்துகொண்டிருந்தது. யாதவப் பிரகாசர் வரி வரியாகச் சொல்லி பொருள் விளக்கிக்கொண்டிருந்தார். கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த ராமானுஜருக்குச் சட்டென்று ஓரிடத்தில் ஆசிரியர் விளக்கிய பொருள் திடுக்கிட வைத்துவிட்டது.

கப்யாஸம் புண்டரீகம் ஏவ மக்ஷிணி.

‘கப்யாஸம் என்றால் குரங்கின் பின்புறம்’ என்றார் யாதவப் பிரகாசர். அவர் படித்தது அதுதான். பிழை அவர்மீதல்ல. வழி வழியாகச் சொல்லித்தரப்பட்ட அர்த்தம்.

‘ஆனால் குருவே, இது அனர்த்தமாக அல்லவா உள்ளது? கப்யாஸம் என்பதை கபி ஆஸம் என்று ஏன் பிரிக்கிறீர்கள்? அதை கம் – பிபதி – இதி – ஆஸ: என்று பிரித்துப் பாருங்கள். இது சுடர்மிகு சூரிய மண்டலத்தில் உறையும் பரம்பொருளின் நயனங்களுக்கு உவமை சொல்லும் விதமாகப் புதுப்பிறப்பு எடுக்கும். கதிரவனைக் கண்டு தாமரை மலர்வது போல விரிந்தவை பரமனின் கண்கள் என்கிறது அந்தப் பதம்.’

யாதவர் திடுக்கிட்டுப் போனார். ‘இங்கே நான் குருவா? நீ குருவா?’ என்று கேட்டார்.

மீண்டும் வேறொரு நாள். இப்போது தைத்திரிய உபநிடதம்.

‘சத்யம் ஞானம் அனந்தம் பிரம்ம’ என்றார் யாதவர். சத்தியம், ஞானம் உள்ளிட்ட அனைத்தும் பிரம்மத்தை மட்டுமே பொருளாகக் கொண்டவை என்பது அவரது விளக்கம்.

‘இல்லை ஐயா. அவை பிரம்மத்தின் பொருளாக இருக்க இயலாது. அவை பிரம்மத்தின் பல்வேறு குணங்கள்.’

‘எப்படிச் சொல்கிறாய்?’

‘ஒரு பூ வெள்ளை வெளேரென்று இருக்கலாம். கமகமவென்று மணப்பதாக இருக்கலாம். பார்த்தாலே பரவசமூட்டும் பேரழகு உடையதாக இருக்கலாம். ஆனால் மணம் மட்டும் பூவல்ல. நிறம் மட்டும் பூவல்ல. அழகு பூவல்ல. பன்மைத்தன்மை பூவின் இயல்பு. ஆனால் பூ ஒன்றுதான். அதே மாதிரிதான் இதுவும். சத்யம், ஞானமெல்லாம் பிரம்மத்தின் பண்புகள். ஆனால் பிரம்மம் ஒன்றுதான். அதுதான் மூலம். அதுதான் எல்லாம்.’

அன்றைக்கே யாதவப் பிரகாசருக்கு ராமானுஜரைப் பிடிக்காமல் போய்விட்டது. ஒன்று இவன் இருக்கவேண்டும். அல்லது நான் இருக்கவேண்டும்.

‘ஐயோ எங்களுக்கு நீங்கள் வேண்டும் குருவே. நாம் அவனைக் களைந்துவிடலாம்’ என்றார்கள் மாணவர்கள்.

அதுதான் சரி என்று யாதவர் முடிவெடுத்த சமயத்தில் ராமானுஜரின் தந்தை இறந்துபோனார்.

(தொடரும்)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!