பொலிக! பொலிக! 08

 

அற்புதங்கள் எப்போதேனும் நிகழ்கின்றன. அதற்கான நியாயங்களும் காரணங்களும் இறைவனால் தீர்மானிக்கப்படுகின்றன. ஒளியும் நீரும் படைக்கப்பட்டது ஓர் அற்புதமென்று எண்ண முடியுமானால் ஒளிந்திருந்து ஆடும் ஆட்டங்களின் உள்ருசியை உணர்வது சிரமமாக இராது.

ராமானுஜர் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தார். தனக்கு நேர்ந்த அற்புத அனுபவத்துக்கு யாருக்கு நன்றி சொல்லுவது? ஒரே இரவில் விந்திய மலைச் சாரலில் இருந்து காஞ்சிமாநகரத்துக்கு வந்து சேர்வதென்பது கற்பனையிலும் நடக்காத காரியம். ஆனால் நடந்திருக்கிறது. அந்த வேடுவ தம்பதிக்கு நன்றி சொல்வதா? வேடுவர் வடிவில் காஞ்சிப் பேரருளாளனும் பெருந்தேவித் தாயாருமே தனக்கு வழித்துணையாக வர வழி செய்தது எது? யாதவர் மட்டும் காசி யாத்திரைக்கு அழைத்திராவிட்டால் இப்படியொரு அனுபவம் வாய்த்திருக்குமா? அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டுமா? களைப்பு கொடுத்த அயற்சியில் அந்த இரவு தூங்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறேன். தனக்காக விழித்திருந்து காப்பாற்றிய கோவிந்தன் இல்லாது போனால் இது நடந்திருக்குமா? அவனுக்கு இல்லாத களைப்பா? அவனும் கால் கடுக்க நடந்தவன் தான். உண்மையில் நன்றிக்குரியவன் அவந்தானா?

‘தேவரீர் இன்னும் என் வினாவுக்கு விடை சொல்லவில்லை’ என்று மெல்ல நினைவூட்டினான் தாசரதி.

நினைவு மீண்ட ராமானுஜர் மீண்டும் புன்னகை செய்தார். துறவுக் கோலம் பூண்டிருந்த தருணம். தாசரதி என்கிற முதலியாண்டானையும், கூரத்தாழ்வானையும் முதலிரு சீடர்களாக ஏற்று அமர்ந்திருந்த நேரம். துறவு கொண்ட கணத்தில் யாரை நினைத்தீர்கள் என்று முதலியாண்டான் கேட்கிறான். என்ன பதில் சொல்வது? காளஹஸ்தியில் தங்கிவிட்ட கோவிந்தனை மீட்டுக் கொண்டு வந்து பக்கத்தில் இருத்திக்கொண்டாலொழிய எந்த பதிலும் பூரணமடையாது. அது தம்பி உறவு கொடுத்த பாசமல்ல. தடம் மாறிச் சென்றவனை மீட்டாக வேண்டுமென்கிற கடமையுணர்ச்சி கொடுத்த பரிதவிப்பு.

உண்மையில் அது கடமைதானா? விந்தியக் காடுகளில் தடம் மாறிச் சென்ற தன்னை வேடுவர் தம்பதி காஞ்சிக்குக் கொண்டு வந்து சேர்த்ததது அவருக்கு நினைவுக்கு வந்தது. கடமையின்மீது சற்று அன்பைத் தெளித்தால் அது கருணையாகிவிடுகிறது. என்றால், தன்மீது மட்டும் அப்படியொரு கருணைப் பெருமழையைப் பொழிய என்ன காரணம்?

அவரால் அப்போதும் நம்ப முடியவில்லை. அந்தக் கிணற்றுக்கு சாலைக் கிணறு என்று பேர். காஞ்சியில் இருந்து நாலு கல் தொலைவு (ஏழு கிலோ மீட்டர்). செவிலிமேடு என்று அந்த இடத்தைக் குறிப்பிடுவார்கள்.

‘அதோ பாருங்கள். வரதர் கோயில் விமானம் தெரிகிறதா?’ அந்தப் பெண்கள் சுட்டிக்காட்டியபோதுதான் ராமானுஜருக்கு நடந்தது புரிந்தது. ஓரிரவில் ஒரு ஒளியாண்டையே கடந்தாற்போன்ற அனுபவம். யாரிடம் சொல்ல முடியும்? யாருக்குப் புரியும்?

‘எனக்குப் புரிகிறது மகனே!’ என்றார் காந்திமதி.

வீட்டுக்கு வந்து நடந்ததை விவரித்தபோது ராமானுஜரின் தாயார் தாங்கமுடியாத பரவசப் பெருவெள்ளத்தில் திக்குமுக்காடிப் போனார். தஞ்சம்மாவுக்குக் கணவர் வீடு திரும்பியதே பெரிய விஷயமாக இருந்தது. அதுவும் ஒரு கொலை முயற்சியில் இருந்து தப்பித்து வந்து சேர்ந்திருக்கிற மனிதர்.

‘வேண்டாம். இனி அந்த குருகுலத்துக்கு தயவுசெய்து போகாதீர்கள்! கற்றது போதும். இனி எனக்குக் கணவராக மட்டும் இருங்கள்!’

ராமானுஜர் புன்னகை செய்தார்.

கற்பதற்கு அளவேது? போதுமென்ற நிறுத்தற்குறி ஏது?

‘ஆனால் அந்த இடம் வேண்டாம் என்றுதான் எனக்கும் தோன்றுகிறது மகனே. நீ உடனே கோயிலுக்குச் சென்று திருக்கச்சி நம்பியைப் பார். அவர் உனக்கு வழி காட்டுவார்’ என்றார் காந்திமதி.

ஆ! திருக்கச்சி நம்பி, அருளாளனின் அன்பரல்லவா? அவரோடு உரையாடக்கூடிய வல்லமை கொண்ட மகான் அல்லவா? தாயார் சொல்வது சரி. அவர்தான் இனி தன்னை வழி நடத்த வேண்டும்.

அன்றே, அப்போதே கிளம்பினார் ராமானுஜர்.

வரதர் கோயிலில் அதே ஆலவட்ட கைங்கர்யம் செய்துகொண்டிருந்த திருக்கச்சி நம்பியை நெருங்கி சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார்.

‘ஐயா, என்னைச் சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள். எனக்கு வழி காட்டுங்கள். வேறு போக்கிடம் ஏதும் எனக்கு இனி இல்லை.’

‘எழுந்திருங்கள் இளையாழ்வாரே! நீங்கள் யாதவருடன் காசிக்குச் சென்றிருப்பதாக அல்லவா சொன்னார்கள்?’

ஒரு கணம் யோசித்த ராமானுஜர் திடமாக நடந்ததை மாற்றிச் சொன்னார். ‘ஆம் ஐயா. ஆனால் வழி தவறிவிட்டேன். எனவே பாதியில் திரும்பும்படியாகிவிட்டது.’

கொலை நோக்கம் கொண்டவரென்றாலும் குருவாகிவிட்டவர். அவர் பெற்றிருக்கிற பெயருக்குக் களங்கம் சேர்ப்பானேன்? பொய்மையும் வாய்மை இடத்து.

திருக்கச்சி நம்பி நீண்ட நேரம் யோசித்தார்.

‘தேவரீர் எனக்குக் கருணை காட்டமாட்டீர்களா? பேரருளாளனின் நிழலில் வாழ்பவர் நீங்கள். உமது நிழலில் நான் இளைப்பாறக்கூடாதா? எனக்கு அதற்கு இடமில்லையா? அத்தனைக் கீழ்மகனா நான்?’

பதில் இல்லை.

‘சரி போகட்டும். அருளாளனுக்குச் செய்யும் கைங்கர்யமாகவேனும் எனக்கு எதையாவது ஒதுக்கிக் கொடுங்களேன்?’

‘கேட்டுச் சொல்கிறேன், நாளை வாரும்’ என்று சொல்லிவிட்டார் திருக்கச்சி நம்பி.

அன்றிரவு நடை சாத்தும் நேரத்துக்கு முன்பாக ஆலவட்ட கைங்கர்யத்தை முடித்துவிட்டு அவர் அருளாளனிடம் பேச்சுக் கொடுத்தார்.

‘ராமானுஜர் இன்று என்னைச் சந்தித்தார். என்னை குருபீடம் ஏற்கச் சொல்கிறார். உமக்குக் கைங்கர்யம் செய்யவும் பிரியப்படுகிறார். நான் என்ன பதில் சொல்வது?’

பேசும் தெய்வம் வாய் திறந்தது.

‘அவரைச் சிலகாலம் சாலைக் கிணற்றில் இருந்து திருமஞ்சனத்துக்கும் (அபிஷேகம்) திருவாராதனத்துக்கும் (சமையல்) தினசரி நீர் எடுத்து வரச் சொல்லும். தாயாருக்கு உகந்த தீர்த்தம் அது. அவருக்கேற்ற ஆசாரியர் விரைவில் வந்து சேர்வார்.’

மறுநாள் காலை விடியும் நேரமே திருக்கச்சி நம்பியின் இருப்பிடத்துக்குச் சென்றுவிட்டார் ராமானுஜர்.

‘அடியேன், பேரருளாளனின் உத்தரவென்ன என்று தெரிந்து செல்ல வந்தேன்.’

‘தாயாருக்கு உகந்த சாலைக் கிணற்றிலிருந்து உம்மை தினசரி திருவாராதனத்துக்கும் திருமஞ்சனத்துக்கும் ஒரு குடம் நீர் எடுத்து வரச் சொல்லி உத்தரவாகியிருக்கிறது.’

சாலைக் கிணறு. தாயாருக்கு உகந்த தீர்த்தம்.

அந்தக் கணத்தில்தான் ராமானுஜருக்கு அது விளங்கியது. வந்த வேடுவர் தம்பதி வேறு யாருமில்லை. பேரருளாளனும் பெருந்தேவித் தாயாருமேதான். எம்பெருமானே! இந்த அற்பன்மீதா இத்தனைக் கருணை!

தன்னை மறந்து அவர் கைகூப்பி நின்றார். அவரது கண்களில் இருந்து கரகரவென நீர் சுரந்தபடியே இருந்தது.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி