நகைச்சுவை

ஆடி அடங்கும் வாழ்க்கையடா

அம்மன், வேப்பிலை, கூழ், கூம்பு ஸ்பீக்கர், மஞ்சள் டிரெஸ், சாமியாட்டம் என்று வழக்கம்போல் இந்த ஆண்டும் ஆடி மாதம் அமர்க்களமாக வந்துபோய்விட்டது. வீட்டு வாசலில் ஓர் அம்மன் கோயில் இருக்க விதிக்கப்பட்டவன், இது விஷயத்தில் எம்மாதிரியான உளவியல் நெருக்கடிக்கு உள்ளாகக்கூடும் என்று உங்களால் கற்பனை பண்ணிக்கூடப் பார்க்க முடியாது. கடந்த மாதம் முழுதும் தினசரி கனவில் எனக்கு யாரோ நாக்கில் அலகு குத்தி, முகத்தில் விபூதியடித்துத் தும்மல் வரவழைத்துக்கொண்டே இருந்தார்கள். நள்ளிரவுக்குப் பிறகு கூம்பு ஸ்பீக்கருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு கோயில் பூசாரி வீட்டுக்குப் போனபிறகும் எல்லாரீஸ்வரி என் காதுகளுக்குள் ஓயாமல் செல்லாத்தா செல்ல மாரியாத்தா என்று சொல்லிக்கொண்டே இருந்தார். அம்பிகையாகப்பட்டவள் எத்தனையோ பரம சாதுவானவளும்கூட. இப்படியெல்லாம் படு உக்கிர பக்திதான் உனக்கு என்று அழிச்சாட்டியம் பண்ணினால் அவள்தான் பாவம் என்ன செய்வாள்? கூம்பு ஸ்பீக்கரின் ஒலியைத் தாண்டிய கிலியூட்டும் கிறீச்சிடல் வேறொன்றுமல்ல; அவளது அபயக்குரல்தான்.

இந்த ஆடியில் வீட்டு வாசல் கூம்பு ஸ்பீக்கரிடமிருந்து பெருமளவு தப்பிப்பதற்காக அநேகமாக தினசரி மாலை ஆனதும் வெளியே புறப்பட்டுவிடுகிற வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டேன். இருட்டி இரண்டு ஜாமம் கழிந்த பிறகுதான் வீட்டுக்கு வருவது என்று யோசனை.

விதியின் கோர விளையாட்டை என்னென்பது? என்னால் இரண்டு ஜாமம் அல்ல. இரண்டு மணிநேரம்கூட வெளியே சுற்றிக்கொண்டிருக்க முடியாமல் போய்விட்டது. அம்மன், ஆடித் தள்ளுபடிக் கூட்டமாக என்னை ஆக்கிரமித்துக்கொண்டுவிட்டாள். எந்தச் சாலையில் நடந்தாலும் எதிரே ஒரு பெருங்கூட்டம். பக்கவாட்டில் ஒரு குறுங்கூட்டம். வியந்து நின்றால் பின்புறம் ஒரு இடி. தள்ளாடி விழுந்தால் எதிரே ஒரு வசவுச் சொல். நடந்துகொண்டேவாவது இருக்க முடிகிறதா என்றால் அதுவும் அத்தனை எளிதல்ல. ஒரு சீக்குப் பிடித்த எருமை மாட்டைப் போலத்தான் நடந்தாகவேண்டும். சாலையின் ஒவ்வோர் அங்குலமும் நம் பாதம் படுவதற்காகக் காத்திருக்கின்றன. தாண்டிப் போய்விடுவதாவது?

ஆடி என்றால் அம்மன் மட்டுமல்ல. தள்ளுபடியும்கூட. இந்தத் தள்ளுபடியம்மன் மிகுந்த சக்தி வாய்ந்தவள் என்பது பத்திருபது வருஷங்களுக்கு முன்னமே தமிழர்களுக்குத் தெரிந்துவிட்டது. வருடம் முழுதும் காத்திருந்து, ஆடி வந்ததும் ஓடி வந்து கடைவீதிகளை நிரப்பத் தொடங்கிவிடுவார்கள். உயர உயரமான பித்தளை அடுக்குகளில் கட்டுசாதமெல்லாம் கட்டிக்கொண்டு வருகிற கூட்டத்தைக் கண்டு இம்முறை நெஞ்சு கலங்கிப் போனேன்.

எதை எடுத்தாலும் தள்ளுபடி பத்து முதல் ஐம்பது சதம் என்றால் யாருக்குத்தான் ஆசை வராது? சில வள்ளல்கள் அறுபது சதத் தள்ளுபடியும் தருவார்கள். அவ்வளவு ஏன், இரண்டு வாங்கினால் ஒன்று இனாமாகவே கிடைத்துவிடும் சாத்தியங்களும் சில சந்துகளில் உண்டு.

தெற்கு உஸ்மான் சாலையில் ஒரு மாலை நேரம் கணக்கு வைத்துக்கொண்டு ஒவ்வொரு கடையாகக் கவனித்தபடி நடக்க ஆரம்பித்தேன். சுதந்தர தின அணி வகுப்பில் பிரதமரைத் திரும்பிப் பார்த்த கழுத்தைத் திருப்பாமல் விரைப்பு நடை போட்டு வீரர்கள் போவது மாதிரி என் கழுத்து ஒரே பக்கமாக இருக்கும்படி வைத்துக்கொண்டேன். இந்த மூலையிலிருந்து அந்த மூலைக்கு ஒரு நடை. அபவுட் டர்ன். திரும்பவும் அந்த மூலையிலிருந்து இந்த மூலைக்கு அந்தப் பக்கம் திருப்பிய கழுத்துடன் இன்னொரு நடை.

கழுத்து வலியைக் காட்டிலும் இந்தத் தள்ளுபடிகள் என்னை அத்தனை வசீகரித்தன. துணிக்கடைகளில் தள்ளுபடி. செருப்புக் கடைகளில் தள்ளுபடி. பாத்திரக் கடைகளில் தள்ளுபடி. நகைக்கடைகளில் தள்ளுபடி. ஏசி, ஃபேன், ஃப்ரிட்ஜ், மிக்சி, கிரைண்டர், அரிவாள் மணை, வத்திப்பெட்டி, படுக்கைகள், தரை விரிப்புகள், மேசை, நாற்காலி, சோபா செட்டுகள், பிளாஸ்டிக் ஸ்பூன், தகர டப்பா அனைத்திலும் தள்ளுபடி.

மொபைல் போன்கள் தனி உலகம். அபாரத் தள்ளுபடிகளுடன் அசகாய இலவசங்களும் உண்டு. போன் வாங்கினால் காதில் மாட்டிக்கொண்டு தானாகக் கேட்கும் கருவி இலவசம். கருவி வேண்டாமா? சரி. சூட்கேஸ் இலவசம். பழைய மொபைல் போனைப் போட்டுவிட்டுப் புதியது எடுக்கிறீர்களா? ரொம்ப விசேஷம். இரண்டும் இலவசம். போதாதென்றால் இடக்கரத்துக்கு ஒரு வாட்ச் இலவசம். அடடே, மனைவியுடன் வந்துவிட்டீர்களே. உங்களை ஏமாற்றுவது தகாத செயல். ஒரு ஜோடி கைக்கடிகாரம் இலவசம். பேட்டரி மட்டும் நீங்களே போட்டுக்கொள்ள வேண்டும்.

அந்தப் பக்கம் ஒரு ரியல் எஸ்டேட் கடைக்காரர், அரை கிரவுண்டு நிலத்துக்குத் தங்க மோதிரம் இலவசம் என்று பலகை எழுதி வைத்திருந்தார். தங்கம் விற்கிற விலைவாசியில் எத்தனை பரோபகார சிந்தனை இவருக்கு! அரை கிரவுண்டு நிலமும் சகாய விலைதான். பஸ் ஏறிப் புறப்பட்டால் போய்ச்சேரத்தான் ஒன்றரை நாள் ஆகும். அதெல்லாமா ஒரு பிரச்னை? விரைவில் உங்கள் நிலத்துக்கு அருகே விமான நிலையம் வந்துவிடப்போகிறது. பெரிய பொறியியல் கல்லூரி வந்துவிடப்போகிறது. பன்னாட்டுக் கார் நிறுவனம் ஆரம்பிக்கப்போகிறார்கள். நீங்களும் வந்துவிடுங்கள். முந்துங்கள், முந்துங்கள். மோதிரம் தீர்ந்துவிடுவதற்குள் முன்பணம் செலுத்திவிடுங்கள்.

எனக்கு ஒரு பிளாஸ்டிக் டப்பா வாங்கவேண்டியிருந்தது. கைவசம் இருக்கும் குறுந்தகடுகளையெல்லாம் போட்டு வைப்பதற்கு ஒரு டப்பா. அதன் பொருட்டு ஒரு பெரிய கடையினுள் நுழைந்தேன். ஆடியின் அட்டகாசங்கள் கடையின் ஒவ்வொரு அணுத்துகளிலும் ஆக்கிரமித்திருந்தன. மலை மலையாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருள்கள். தட்டுகள். கூடைகள். டப்பாக்கள். குடங்கள், பானைகள், பாத்திரங்கள். விதவிதமான வடிவங்களில், கண்ணைப் பறிக்கும் நிறங்களில் உலகம் பிளாஸ்டிக்கால் மட்டுமே ஆனது என்றது அந்தக் கடை. எதைத் தொட்டாலும் தள்ளுபடி. குடம் வாங்கினால் மூடி இலவசம். தட்டு வாங்கினால் தம்ளர் இலவசம். தவிரவும் உண்டு ஆடித் தள்ளுபடி. அந்தந்தப் பொருளின் கழுத்திலேயே எத்தனை சதம் என்று எழுதித் தொங்கவிடப்பட்டிருக்கும்.

நான் தேடிய டப்பா கிடைப்பதற்கு முன்னால் என் கண்ணில் ஒரு நல்ல மேசைக் கிண்ணம் அகப்பட்டது. வலுவான பிடிமானமுள்ள அகன்ற கிண்ணம். ஒன்று வாங்கிவிடலாமே? எதையாவது போட்டு வைக்கப் பயன்படும். அடடே, இந்த பேனாக் கோப்பை அழகாக இருக்கிறதே? விலையும் படு மலிவு. பேனாவில் எழுதுவதை நிறுத்திப் பல ஆண்டுகாலம் ஆகிவிட்டாலும் இப்படியொரு கண்கொள்ளாக் கோப்பை இனியொருதரம் கிடைப்பது அரிது. வாங்கிவிடுகிறேன். அதோ மேசைக் காலுக்குப் போடுகிற குப்பி அல்லது தொப்பி. எங்கே கிடைக்கிறது இதெல்லாம்? இருப்பது ஒரு மேசையே ஆனாலும் எதற்கும் இருக்கட்டும் என்று ஒரு டசன் குப்பிகள் வாங்கிவிடுகிறேன். மேலும் சிலபல பிளாஸ்டிக் பொருள்களை வாங்கிச் சேர்த்துக்கொண்டு ஒருவழியாக நான் தேடிய டப்பாவைக் கண்டுபிடித்து எடுத்து, பில் கவுண்ட்டருக்குப் போனேன்.

நம்பமுடியாத தள்ளுபடிதான். நாற்பது ரூபாயில் முடிந்திருக்க வேண்டிய கொள்முதல். ஆயிரத்தி எண்ணூறு ரூபாய்க்குச் சென்று தள்ளுபடி போக ஆயிரத்தி நாநூற்று ஐம்பதில் வந்து நின்றது. எல்லாம் ஆடியம்மனின் அருள்.

எனக்குக் கடைக்காரர்கள் தள்ளுபடி அறிவிப்பதில் பிரச்னை ஏதும் இல்லை. ஐம்பதல்ல; தொண்ணூறு சதமே தள்ளுபடி அறிவித்தாலும் அவரவருக்குரிய லாபங்கள் இல்லாமல் வியாபாரம் என்ற ஒன்று இல்லை. என் மண்டைக் குடைச்சல் எல்லாம், இந்தத் தள்ளுபடிக்கும் ஆடிக்கும் என்ன சம்பந்தம் என்பதுதான்.

எங்கள் கடையில் சேதார விகிதத்தைப் பாரீர் பாரீர் என்று நகைக்கடைகள் அலறும்போதெல்லாம் பகீர் பகீரென்கிறது. யாராவது சேதார சமாசாரங்களை பகிரங்கமாக அறிவிப்பார்களா? நகையுலகில் மட்டும்தான் அது சாத்தியம். சேதாரம் குறைவு. செய்கூலி இலவசம். கோயம்பேடில் வெங்காயம் வாங்குகிற கூட்டம் மாதிரி இந்தக் கடைகளில் ஜிமிக்கிக்கும் வளையலுக்கும் செயினுக்கும் குவியும் கூட்டத்தைப் பார்த்தால் இந்தியா ஒரு ஏழை நாடு என்று யாரும் சொல்லமாட்டார்கள். ஒரு நகைக்கடையில் விற்பனைப் பிரதிநிதி கொத்தாக நூறு நூற்றைம்பது செயின்களை ஒரு கையில் செத்த எலிபோல் தூக்கிப் பிடித்துக் கொண்டுவந்து மேசையில் வீசிய காட்சியைப் பார்த்து அரைமணி பிரமை பிடித்து நின்றுவிட்டேன். அந்த அரை மணிக்குள் அவை அத்தனையும் விற்றுத் தீர்ந்துவிட்டது என்பது அடுத்த அதிர்ச்சிக்கானது.

விடுங்கள். ஆடிக்கு வரலாம். பொதுவாக விதைப்பதற்கு ஏற்ற மாதம் என்று விவசாயப் பெருங்குடி மக்களும் வயலும் வாழ்வும் நடத்துபவரும் சொல்லுவார்கள். ஆடியில் திருமணம் கூடாது என்பதற்குச் சொல்லப்படும் காரணம், காலக்கிரமத்தில் எல்லாம் நல்லபடியாக நடந்து முடிந்தால் சித்திரையில் குழந்தை பிறந்துவிடும்; வெயிலில் அவஸ்தைப்படும் என்பதாகப் பெரியவர்கள் சொல்லுவார்கள். மற்றபடி அம்மன், கூழ், இருக்கவே இருக்கிறது கூம்பு ஸ்பீக்கர்.

தள்ளுபடி?

இதே தள்ளுபடியை ஒரு மாதம் முன்னால் ஆனியில் கொடுத்தால் மக்கள் வேண்டாம் என்றுவிடுவார்களா? அல்லது ஆவணிதான் என்ன பாவம் செய்தது?

பொதுவில் ஆடி மாதம் எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள் என்றொரு நம்பிக்கை இந்தப் பக்கம் உண்டு. அதாவது மனிதப் பிறவிகள் தமக்கு என்று எதையும் பண்ணிக்கொள்ளாமல் அம்மன் சிந்தையுடன் ஊருக்குக் கூழ் வார்க்கும் வழக்கத்தை எக்காலத்திலோ யாரோ தொடங்கியிருக்கிறார்கள். வருஷம் ஒரு மாதமாவது நல்ல காரியம் பண்ணட்டுமே என்று நினைத்திருக்கலாம். தப்பில்லை.

இதை விட்டுவிடுவதாவது? அப்புறம் அஹம் பிரம்மாஸ்மிக்கு அர்த்தம் கெட்டுப் போய்விடுமல்லவா? அதனால்தான் வியாபாரிகள் ஆடியில் தள்ளுபடித் திருவிழாவைத் தொடங்கியிருக்க வேண்டும். அம்மன் இருக்கட்டும், அம்பது சதத் தள்ளுபடியல்லவா முக்கியம்?

கண்மூடித்தனமாக வேண்டியது, வேண்டாதது என்று அனைத்தையும் வாங்கிச் சேர்த்துக்கொள்ளும் வழக்கத்தை இந்தத் தள்ளுபடிக் கலாசாரம் தொடங்கிவைத்திருக்கிறது. இது எங்கேபோய் முடியும் என்று யோசித்தபடி வீடு திரும்புகையில் ஒரு சைக்கிள் ரிப்பேர் கடையில் போர்டு பார்த்தேன்.

ஆடித் தள்ளுபடி. பின் சக்கரத்துக்குப் பஞ்சர் பார்த்தால் முன் சக்கரப் பஞ்சர் இலவசம்.

வலியத் தேடி ஒரு முள்ளை எடுத்து முன் சக்கரத்தில் குத்திக்கொண்டாவது போய் இலவச பஞ்சர் பார்த்துக்கொள்ள நாட்டில் நபர்கள் இருப்பார்கள் போலிருக்கிறது!

Share

13 Comments

 • //கண்மூடித்தனமாக வேண்டியது, வேண்டாதது என்று அனைத்தையும் வாங்கிச் சேர்த்துக்கொள்ளும் வழக்கத்தை இந்தத் தள்ளுபடிக் கலாசாரம் தொடங்கிவைத்திருக்கிறது.// yeah like “sales” abroad !!

 • சில வள்ளல்கள் அறுபது சதத் தள்ளுபடியும் தருவார்கள். அவ்வளவு ஏன், இரண்டு வாங்கினால் ஒன்று இனாமாகவே கிடைத்துவிடும் சாத்தியங்களும் சில சந்துகளில் உண்டு.
  First case – discount = 60%
  Second case- discount=1/3=33.33%. இதற்கு எதற்கு அவ்வளவு ஏன்?

 • அருமையாக எழுதியிருக்கிறீர்கள். அத்தனை தொல்லையையும் நானும் தான் அனுபவித்தேன்; ஆனால் எழுதத் தெரியவில்லை. ஒரே ஒரு சின்ன சமாச்சாரம்.

  //எதை எடுத்தாலும் தள்ளுபடி பத்து முதல் ஐம்பது சதம் என்றால் யாருக்குத்தான் ஆசை வராது? சில வள்ளல்கள் அறுபது சதத் தள்ளுபடியும் தருவார்கள். அவ்வளவு ஏன், இரண்டு வாங்கினால் ஒன்று இனாமாகவே கிடைத்துவிடும் சாத்தியங்களும் சில சந்துகளில் உண்டு.// எதற்காக அங்கே ஒரு “அவ்வளவு ஏன்” ? இரண்டு வாங்கினால் ஒன்று இனாம் என்றால், அது வெறும் 33.3% தானே!

 • நீங்கள் எழுதியிருக்கும் ‘அம்மன் தொல்லையை’கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன். இதில் ‘வசூல்’ தொல்லைகள் உமக்கு இல்லையோ? என்னுடைய வீடு தான் (அதிலும் என் அறைதான்) எங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பில் அம்மனுக்கு அருகில் இருப்பதால் அதிகத் தொல்லை எனக்குத்தான்.
  ஆடி மாதத்தில் திருமணங்கள் நடப்பதில்லை ஆகையால் பட்டு மற்றும் நகைக் கடைக்காரர்கள் இந்த தள்ளுபடி விஷயத்தைத் துவக்கி வைத்தார்களோ என்னவோ.

 • //கண்மூடித்தனமாக வேண்டியது, வேண்டாதது என்று அனைத்தையும் வாங்கிச் சேர்த்துக்கொள்ளும் வழக்கத்தை இந்தத் தள்ளுபடிக் கலாசாரம் தொடங்கிவைத்திருக்கிறது.//
  இது தான் விஷயம். பார்ப்பது எல்லாம் உபயோகமாக இருப்பது போல் தோன்றும். பிறகு வீட்டில் அது எங்கே போய் ஒளிந்து கொண்டது என்று கூட தெரியாது. அல்லது மிதியடி ரேஞ்சுக்கு இறைபடும். தள்ளுபடியில் குறைந்த விலையில் வாங்கிவிட்டதாக நினைப்பு. அதனால் அவ்வளவு தான் மவுசு.

  தள்ளுபடியில் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கினால் தப்போ தப்பில்லையோ தெரியாது. துணிகள் வாங்குவதை தவிர்த்து விடுதல் புத்திசாலித்தனம். ஒரு முறை துவைத்தால் பல துணிகளும் பிறகு தரை துடைக்கக் கூட உதவாது.

  அம்மனுக்கு ஆடிப் போயிட்டீங்களே. இன்னும் கார்த்திகை on the way . சபரி மலை ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பம். அபஸ்வரத்தில் உச்சஸ்தாயில் seasonal பாடகர்கள் வாயில் விழுந்து ஐயப்பன் படும் அவஸ்தையில் கொஞ்சம் நாமும் பட்டு தானே ஆக வேண்டும். குருமார்கள் பெரும்பாலும் கட்டு கட்ட அம்மன் கோயிலையே ச்வீகாரம் பண்ணிக் கொள்வதால் கார்த்திகைக்கு இப்போவே ப்ளான் பண்ணிக் கொண்டு விடுங்கள். அக்கம் பக்கம் யாரவது கன்னி பூஜை போடுகிறார்களா என்பதை முன் கூட்டி செயற்குழு உறுப்பினர்கள் மூலம் தெரிந்து கொள்வது நலம்.

 • திரு.பாரா அவர்களே. ஆடி தள்ளுபடி முதன்முதலில் தொடங்கபட்டது தென்மாவட்டம், குறிப்பாக திருநெல்வேலி பகுதியில், காரணம் அன்றைய காலங்களில் மக்களின் மிக முக்கிய உற்ப்பத்தி பொருள் பனைகருப்பட்டி ஆனி,ஆடி,ஆவணி மாதங்களில் அதற்குறிய சீசன் அதனிலும் ஆடி உச்சம். ஆக பணம் புரளும் மாதம் எனவேதான் திருவிழாக்கள் அம்மாதங்களில் அமைக்கபட்டன. பின்னாளில் கிறிஸ்தவ ஆலயதிருவிழாக்கள் கூட இம்மாதத்தில் கொண்டாடபடுகின்றன். நெல்லை ஜவுளி கடைகளில் தொடங்கபட்ட தள்ளுபடி, பின்னாளில் அம்மக்கள் சென்னையில் குடியேறியதால் கணிப்பொறிவரை தள்ளுபடியம்மன் இன்று அங்கேயும் பயங்கர ஆட்டம் ஆடுகிறாள். உங்களுக்கும் பொருள்வாக்கு தருகிறாள்

 • உங்களுக்கு பரவாயில்லை சார். சீசனல் அம்மன் பாட்டு தான். அதுவும் எல்லாரீச்வரி பாட்டு கேக்க கிக்கா இருக்கும். எங்கள் வீட்டுக்கு எதிரில் சர்ச். ஸ்ருதியும்,லயமும் இழந்த அனாதையான சங்கீதம். வருஷம் பூராவும் அதை கேக்கனும்னு தலயில் எழுதியிருக்கு .அதுவும் சண்டே என்றால் டபுள் தலைவலி.

 • “ஆடித்தள்ளுபடி – புத்தம்புது வரவுகள்” இப்படி விளம்பரம் – எப்படித்தான் புத்தம்புது வரவுகளை 40-50 சதம் தள்ளுபடியில் தரமுடியும் என்று யோசிக்கவேண்டாமா?

 • ”ஆடி அடங்கும் வாழ்க்கையடா”ன்னு கவிஞர் சுரதா சொல்லீருக்காரே. அதுக்கு இதுதான் பொருளோ! 🙂 அப்பவும் பாருங்க “பொருள்” வந்துருது. 🙂

  ஒரு வாட்டி வெள்ளித்தட்டு வாங்கப் போனேன். தில்லானா மோகனாம்பாள் படிச்ச நினைவுல ”கூஜால்லாம் இப்ப வர்ரதில்லையா”ன்னு தெரியாமக் கேட்டுட்டேன். இப்ப வர்ரதில்லைன்னு சொன்னவரு… ஒடனே, ”ஒங்களுக்கு வேணுமா சார். சொல்லுங்க. ஆர்டர் பண்ணி கொண்டு வந்துர்ரோம். இப்ப யாரும் கேக்குறதில்லைன்னுதான் கடைல வைக்கலை. நீங்க சொன்னீங்கன்னா ஒரு வாரத்துல ஒங்க வீட்டுலயே வந்து குடுத்துர்ரோம்”னு அடுக்கத் தொடங்கீட்டாரு. எங்க.. கூஜா தூக்க வெச்சிருவாரோன்னு இருக்கட்டுங்கன்னு சொல்லீட்டு வந்துட்டேன்.

 • கிழக்கில் ஆடித்தள்ளுபடி இல்லையா?:)புத்தகங்களுக்கும் ஆடித்தள்ளுபடி கொடுத்திருந்தால் நீவிர் அலுவலகத்தில் 30 நாட்களும் 24 மணி நேரம் இருந்திருப்பீர்.புத்தகமும் விற்றிறுக்க்ம் வீண் செலவும் இருந்திராது.

 • 50 பர்செண்ட் தள்ளுபடின்னா அதோட விலையை 100 பர்செண்ட் ஏத்தி இருக்காங்கன்னு அர்த்தம் இது ஏன் இந்த அப்பாவி மக்களுக்கு புரிய மாட்டேங்குது. விக்காம இருக்குறது தேங்கிப்போன சரக்கு இதை விக்கிறத்துக்கு தள்ளுபடியெல்லாம் ஒரு வியாபார தந்திரம் என்பது சிலருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இனி சித்திரை தள்ளுபடி பங்குனி தள்ளுபடி என்று கிளம்பினாலும் கிளம்பிடுவாங்க !!

 • //அந்தப் பக்கம் ஒரு ரியல் எஸ்டேட் கடைக்காரர், அரை கிரவுண்டு நிலத்துக்குத் தங்க மோதிரம் இலவசம் என்று பலகை எழுதி வைத்திருந்தார்.//

  நியாயமா பார்த்தா, தங்க மோதிரம் வாங்கினால் அரை கிரவுன்டு நிலம் இலவசம்னு இல்லை பலகை எழுதியிருக்கனும்?

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி