ரொம்ப நல்லவர்கள்

மனிதர்கள் பொதுவாக இரண்டு வகைப்படுவார்கள். நல்லவர்கள், கெட்டவர்கள். ரொம்பக் கெட்டவர்கள் என்று யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ரொம்ப நல்லவர்கள் என்னும் துணைப்பிரிவு ஒன்று இருக்கிறது. இந்தப் பிரிவில் இருப்பவர்களிடம் என்ன ஒரு சிக்கல் என்றால், இவர்களது நல்ல குணம் எம்மாதிரியான விதத்தில், எப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் வெளிப்படும் என்று எளிதில் தெரிந்துகொண்டுவிட முடியாது. இரணிய கசிபுவை காலி பண்ணுவதற்காகத் தூணைப் பிளந்துகொண்டு தோன்றிய பரமாத்மாவைத் தவிர இதற்கு வேறு உதாரணமும் சொல்ல முடியாது. பரமாத்மா நல்லவர். ஆனால் இரணிய கசிபுவை அவர் தீர்த்துத்தான் கட்டினார். இவர்கள் பரமாத்மாவைவிட நல்லவர்கள். இரணியனாக இல்லாதுபோனாலும் அதைத்தான் செய்வார்கள். இந்த வகைப்பிரிவினரை நான் தெரிந்துகொண்ட அனுபவம் சுவாரசியமானது. விளக்குகிறேன்.

பகுதிவாழ் மக்களுக்கு அப்போது நான் மிகவும் புதியவன். வேறு பிரதேசத்திலிருந்து வந்து சேர்ந்த ஜந்து. பொதுவில் அறிமுகமில்லாத மனிதர்களோடு வலியப்போய் பேசி சிநேகிதமாகும் நல்ல வழக்கம் இல்லாதபடியால் வீட்டுக் கதவை இழுத்துச் சாத்திக்கொண்டு வெட்டி இலக்கியம் அல்லது உலக இலக்கியம் படைத்துக்கொண்டிருப்பது வழக்கம். வெளியே கிளம்பும்போது சட்டை, பேண்ட் அணிவதுபோல் வீட்டிலேயே ஹெல்மெட்டை மாட்டிக்கொண்டுதான் கதவைத் திறப்பேன். எனவே அக்கம்பக்கத்தாருக்கு என் முகப்பரிச்சயம் அப்போது இன்னும் ஏற்பட்டிருக்கவில்லை.

திடீரென்று ஒருநாள் ஹெல்மெட் இல்லாமல் கீழே இறங்கியபோது அடுக்குமாடிக் குடியிருப்பின் கீழ்த் தளத்து பார்க்கிங் பகுதியில் ஒரு மாநாடு நடந்துகொண்டிருப்பதைக் கண்டேன். மூன்று நாரீமணிகள். ஒரு வயதான மனிதர். தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றிக்கொண்டிருந்த பெண்மணி என்னைக் காட்டிலும் உருண்டையாக இருந்தார். என்னைக் காட்டிலும் வயதானவர். என்னைக் காட்டிலும் தலை நரைத்தவர். என்னைக் காட்டிலும் ரொம்ப நல்லவர். என்னைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தார்.

குடிவந்து ஒரு மாதமாகிவிட்டது. யார், என்ன, எங்கு வேலை பார்க்கிறார் என்றே தெரியவில்லை. சில நாள் எட்டரைக்கு வெளியே போகிறார். சிலநாள் பத்துக்குப் போகிறார். சில நாள் பதினொன்று. திரும்பி வரும் நேரத்திலும் ஓர் உறுதிப்பாடு இல்லை. சில நாள் மதியமே வந்துவிடுகிறார். சிலநாள் இரவு. சில நாள் வருவதேயில்லை. வலிய பேசக் கூப்பிட்டாலும் அவர் மனைவி வாய் திறப்பதேயில்லை. என்ன மர்மமோ ஏதோ?

அடக்கடவுளே, என் பொருட்டு சில ஜீவன்கள் இத்தனை அக்கறை எடுத்துக்கொள்கின்றனவே? நான் இப்படிப் பொறுப்பில்லாமல் இருப்பது தவறு.

மறுநாள் பக்கத்து போர்ஷன்காரரிடம் என்னைப் பற்றிய சில விவரங்களை நானாகச் சொல்லிவைத்தேன். முதல்நாள் மாநாட்டின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரே ஆண் பிரதிநிதி அவர் என்பதால் எப்படியும் விவரங்கள் பொதுக்குழுவுக்குச் சென்றுவிடும் என்ற நம்பிக்கை.

நம்பிக்கை வீண் போகவில்லை. ஓரிரு தினங்கள் கழித்துக் காய்கறிக் கடையில் பார்க்க நேர்ந்த செயற்குழு உறுப்பினர் ஒருவர், சிரித்துவிட்டு வணக்கம் சொன்னார். பதில் வணக்கம் சொன்ன உடனே, ‘ஏன் சார், ரைட்டர்ஸுக்கெல்லாம் மாசம் சுமாரா என்ன சார் வருமானம் வரும்? ரெண்ட்டு, மளிகை, காய்கறி, பாலுக்கு சரியா இருக்கும்ல?’ என்றார்.

இதை அநாகரிகம் என்று நினைத்தால், நீங்கள் கெட்டவர். நான் நல்லவன் என்பதால் அப்படி நினைக்கவில்லை. மாறாக ஒரு சிறந்த, விலைமதிப்பற்ற புன்னகையை மட்டும் அவருக்கு பதிலாக அளித்துவிட்டு இடத்தைவிட்டு நகர்ந்தேன். ஏனெனில் அவர் ரொம்ப நல்லவர்.

மறுநாள் கீழ்த்தளத்து பார்க்கிங் மாநாட்டில் மீண்டும் என் தலை ஹெல்மெட்டுடன் உருட்டப்பட்டுக்கொண்டிருந்தது. கர்வம் மிகுந்த எழுத்தாளர்கள் உருப்பட்டதாக சரித்திரமே இல்லை.

எனக்குக் கோபம் வரவில்லை. அந்த உருண்டைப் பெண்மணி என்னை மிகவும் வசீகரித்துக்கொண்டிருந்தார். அவர் எந்த போர்ஷனில் குடியிருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. எப்போதும் பார்க்கிங் பிரதேசத்தில் ஒரு நாற்காலி போட்டு அமர்ந்திருப்பார். எப்போதும் அவரைச் சுற்றி இரண்டு மூன்று பேர் இருப்பார்கள். அடுக்ககத்துக்கு வரும் சிறு வியாபாரிகள், வேலைக்காரிகள், இஸ்திரிக் கடைக்காரர், தையல்காரர் என ஒவ்வொருவராக அவரை அணுகி சுல்தானுக்குப் பணியும் சேவகன் பாணியில் சலாமிட்டுத் தகவல் ஒலிபரப்புப் பணியாற்றிக்கொண்டிருப்பார்கள். தனக்குக் கிடைக்கும் தகவல்களின் சுவாரசியத்தின் அளவைக் கணக்கிட்டு, தேவைக்கேற்ப உப்பு, மிளகாய்ப் பொடி, அஜினமோட்டோ சேர்த்து அவர் தமது செயற்குழு உறுப்பினர்களுக்கு வழங்குவார். அவர்கள் அதைப் பொதுக்குழுவுக்கு எடுத்துச் செல்வார்கள்.

மாலைப் பொழுதுகளில் வீட்டுக்கு வெளியே விளையாட வரும் குழந்தைகளையும் அவர் விட்டுவைப்பதில்லை. ‘நேத்து சாயங்காலம் உன்னை விட்டுட்டு உங்கப்பாவும் அம்மாவும் மட்டும் வெளிய போனாங்களே, உனக்கு என்ன வாங்கிட்டு வந்தாங்க?’ என்று அழகாகக் காவியத்துக்குப் பாயிரம் போல் ஆரம்பிப்பார் அம்மணி. என்ன வாங்கி வந்தார்கள் என்பதல்ல அவரது அறிதலின் விழைவு. எங்கு போனார்கள் என்று தெரிந்தாகவேண்டும். இல்லாவிட்டால் விக்கிரமாதித்தனுக்கு வேதாளம் இட்ட சாபம்போல் சுக்குநூறு ஆகிவிடும் அவர் தலை.

‘உங்க பக்கத்து ஃப்ளாட் அஞ்சு வீட்டுல நேத்து என்ன விசேஷம்? ஒரே புகையா வந்ததே?’

‘அவங்க குட்டி பாப்பாக்கு ஆயுஷ்ஹோமம் ஆண்ட்டி’

‘ஓ, அதான் வாழைமரம் மொட்டையடிச்சிருக்கா? பால்கனில ஆடற இலையெல்லாம் டெனண்டுக்கு சொந்தம்னு நினைச்சிக்கிட்டாங்க போலருக்கு.’

காலனியின் ஒரு அபார்ட்மெண்டில் சில திருமணமாகாத இளைஞர்கள் குடியிருக்கிறார்கள். காலை ஏழரைக்குப் புறப்பட்டு வேலைக்குப் போய், இரவு நேரம் கழித்துத் திரும்புகிறவர்கள். உருண்டைப் பெண்மணியின் பெருங்கவலை அவர்களைப் பற்றியதுதான். யார் யாரோ வருகிறார்கள். நேரம் கெட்ட நேரத்தில் வருகிறார்கள். கதவை மூடிக்கொண்டு உள்ளே கூத்தடிக்கிறார்கள். யார் குடியிருப்பது, யார் வந்துபோவது என்றே தெரிவதில்லை. ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆனால் யார் பொறுப்பு?

செயற்குழுவில் அவர் அடிக்கடி கவலைப்படுகிற விஷயம் இது. அந்த இளைஞர்கள் தினமும் விடிந்து எழுந்து கதவைத் திறப்பதற்கு முன்னால் அவர்கள் வீட்டு வாசலில் போடப்பட்டிருக்கும் செய்தித் தாளை முதலில் எடுத்துப் பார்த்துவிடுபவர் அம்மணிதான். கீழ்த்தளத்தில் வசிப்போர் அத்தனை பேரும் வாங்கும் செய்தித் தாள்களையும் அவர்தான் முதலில் வாசிப்பார். அடுக்குமாடிக் குடியிருப்புக் கவலைகள் மட்டுமல்ல. அரசியல், சமூக, பொருளாதார அக்கறைகளும் மிக்க ஒரு பொறுப்புள்ள பிரஜை என்பதால், ஊர்க்கவலைப் படவும் அவருக்குக் கடமை இருக்கிறது.

பாடப்புத்தகத் தாமதங்களால் பள்ளிக்கூடப் பிள்ளைகள் படிக்கிற வழக்கத்தையே மறந்துவிட்டார்கள். எப்பப்பார் விளையாட்டு, ஊர் சுற்றல். இந்த அன்னா ஹசாரேவுக்குப் பெண்டாட்டி, பிள்ளைக்குட்டிகள் யாருமில்லையா? எண்பது வயதில்கூடப் பிரபலமாக ஒரு வழி கண்டுபிடித்துவிட்டார் பாருங்கள். உண்ணாவிரதம்னா, சாப்ட்டு வந்துதான் உக்காருவாங்களாமே? அழகிரி பிள்ளை இப்பல்லாம் படமே எடுக்கறதில்லை, கவனிச்சிங்களா? அம்பது பர்சண்ட் ஆடித்தள்ளுபடின்னு வர்ற விளம்பரமெல்லாம் ஃப்ராடு. கொள்ளையடிக்கறான் உஸ்மான் ரோடிலே.

வாழ்வில் என்றாவது ஒருநாள் இந்தப் பெண்மணி குடியிருக்கும் போர்ஷன் எதுவென்று கண்டிப்பாகத் தெரிந்துகொள்வேன். அவர் வீட்டில் அவரைத் தவிர வேறு யார் உள்ளார்கள் என்பதையும் தெரிந்துகொள்வேன். அவர்கள் தமது தற்காப்புக்காகத்தான் இவரை பார்க்கிங் பிரதேசத்தில் நாற்காலி போட்டுக் குடியமர்த்தியிருக்கிறார்களா என்று அவசியம் கேட்பேன்.

இவரது செயற்குழுத் தோழர்கள் பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். செய்திகள், வம்புகள், விவகாரங்களை அலசி ஆராய்வதிலாகட்டும், சக அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகள் குறித்த புலனாய்வுப் பணிகளிலாகட்டும், இதர சமூக நலப்பணிகளிலாகட்டும். மேற்படி உருளைப் பெண்மணியளவுக்கு இவர்கள் கைதேர்ந்தவர்களில்லை. பெரும்பாலும் வீட்டு வேலை செய்யும் பெண்களின் உதவியுடன் தான் இவர்கள் ஒற்றுப்பணியாற்றுகிறார்கள். பாடுபட்டுப் பலவீட்டு ஜன்னல்களோரம் நின்று இவர்கள் செய்தி சேகரித்துக்கொண்டுபோய் செயற்குழுவில் சமர்ப்பிக்கும்போது அவையெல்லாம் ஏற்கெனவே உருளைப் பெண்மணிக்குத் தெரிந்த செய்தியாகவே இருந்துவிடுகின்றன.

புதிய தகவல்களுக்குச் சற்று மெனக்கெடவேண்டும் நண்பர்களே.  தபால் காரர்களும் கூரியர்காரர்களும் வந்து அவரவர் புறாக்கூண்டுகளில் கடிதங்களைப் போட்டுவிட்டுப் போய் எத்தனை மணிநேரங்கள் கழித்து, உரியவர்கள் வந்து எடுக்கிறார்கள்? இடைப்பட்ட நேரங்களில் எடுத்துப் பார்த்து ஆராய்வது நமது சமஸ்தானத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுள் ஒன்றுதான். பி பிளாக் ஏழாம் நம்பர் வீட்டுக்கு இதுவரை இரண்டுமுறை வணிக வரித்துறை நோட்டீஸ் வந்திருக்கிறது. கவனித்தீர்களா? ஏதோ விவகாரம் இருக்கிறது அங்கே. டி9க்கு வந்துகொண்டிருந்த க்ரெடிட் கார்ட் பில்கள் இப்போது வருவதில்லை. ஆபீஸ் முகவரிக்கு மாற்றிவிட்டார்களென்று நினைக்கிறேன். கரண்ட் பில்களைப் பார்க்கிறீர்களா? போனமாதம்வரை எழுநூறு ரூபாய் ஆகிக்கொண்டிருந்த சி பிளாக் கல்யாணிக்கு இம்முறை முன்னூறுதான் ஆகியிருக்கிறது. மைக்ரோவேவும் ஏசியும் ரிப்பேர் என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் மீட்டரில் ஏதோ கோளாறு. ஆர் ஃபோர் தாமரைக்கனியின் அம்மா இக்காலத்திலும் தபால் கார்டில் கடிதம் எழுதுகிறார். பதினைந்தாம் தேதி இங்கே வருகிறாராம். பத்து நாள் இருக்கப்போகிறாராம். எப்படியும் மாமியார் மருமகள் முட்டல் மோதல் இல்லாமல் போகாது.

இந்த விவகாரம் தெரிந்த மறுகணம் நான் செய்த நல்ல காரியம் எனக்கான அஞ்சல்களுக்கு வேறு ரகசிய முகவரியை அளித்துவிட்டதுதான். பாவப்பட்ட தமிழ் எழுத்தாளனின் வியாசங்களைப் படித்து உருகி உருகி வாசகர் கடிதம் எழுதும் பெண்கள் யாரும் கிடையாது என்றாலும் நாயே பேயே என்று நல்ல வார்த்தையில் திட்டி எழுத நாலு பேர் எனக்கும் உண்டு. அதையெல்லாம் இந்த ரொம்ப நல்லவரான செயற்குழுத் தலைவர் பெண்மணி வாசித்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?

இப்போதைக்குத் திமிர் பிடித்தவன் என்கிற அளவோடு தனது மதிப்பீட்டினை நிறுத்திக்கொண்டிருப்பவர், நாளைக்குத் தீவிரவாதி என்று முடிவு செய்து போலிஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துவிடும் அபாயம் இருக்கிறதல்லவா?

அன்புள்ள புதிய தலைமுறை ஆசிரியர் அவர்களுக்கு,

இக்கட்டுரை பிரசுரமாகும் புதிய தலைமுறை இதழின் பிரதியை தயவுசெய்து எனக்குத் தபாலில் அனுப்பிவைக்காதீர்கள். நானே அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்கிறேன்.

இவண்,

இவன்.

Share

10 comments

 • எல்லா குடியிருப்புகளிலும் நீங்கள் சொன்ன நாரீமணிப்போன்ற குணசித்திரங்கள் இருக்கின்றன. என்ன அவர்களின் நீள அகல அளவுகள் மட்டும் மாறுபடும்.நீங்கள் நாகரிகம் (பயம்) கருதி சொல்லாமல்விட்ட ரெண்டு.
  1)அவர்கள் எப்போதும் துவந்த யுத்தனுக்கு தயாராய் இருப்பதுப்போல் இருப்பார்கள்.
  2)எப்படி எம்பெருமான் தன் அர்ச்சையை கலைத்து திருவிளக்கு பிச்சனிடம் பேசினானே அது போல் இவர்களும் தனக்குதானே பேசிக்கொள்வார்கள்.

 • இவை போல சில சம்பவங்களை எனது வாழ்க்கையிலும் சந்தித்திருக்கிறேன்

 • பதில் பழிக்கு இரண்டு வழிகள் பா ரா.
  1.அனைத்து மாதாந்திர பத்திரிகைகளையும் e-Paper ஆக மாற்றி விடுங்கள்.
  2. மற்று மொழி இலவச பத்திரிகைகளை தருவியுங்கள், மலையாளம் அல்லது கன்னட மொழி சால சிறந்தது.
  இன்னும் அவர் தபால் மேய்வதை நிறுத்தவில்லை என்றால் ஒரு ” Tamil Paper” அச்சு பதிப்பை கொண்டு வந்து உங்கள் தபால் பெட்டில் போடுங்கள், காத தூரம் ஓடுவார் அந்த நாரீமணி.காரணம் அவ்வளவு திராபை அது.

 • சார் கலக்கல் 🙂

  //வாழ்வில் என்றாவது ஒருநாள் இந்தப் பெண்மணி குடியிருக்கும் போர்ஷன் எதுவென்று கண்டிப்பாகத் தெரிந்துகொள்வேன். அவர் வீட்டில் அவரைத் தவிர வேறு யார் உள்ளார்கள் என்பதையும் தெரிந்துகொள்வேன். அவர்கள் தமது தற்காப்புக்காகத்தான் இவரை பார்க்கிங் பிரதேசத்தில் நாற்காலி போட்டுக் குடியமர்த்தியிருக்கிறார்களா என்று அவசியம் கேட்பேன்.//

  ஹா ஹா ஹா

  //அதையெல்லாம் இந்த ரொம்ப நல்லவரான செயற்குழுத் தலைவர் பெண்மணி வாசித்தால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்?//

  சார் இதைப்படித்தால் கவுண்டர் “இதை பார்த்தால் எதிர்க்கட்சிக்காரன் என்னை என்ன நினைப்பான்?” என்று கூறுவதைப்போல உள்ளது 🙂

  சார் அட்டகாசம். ரொம்ப ரசித்துப் படித்தேன்.

 • சையத்தின் கடைசி வரியே அதிகம் சிரிக்க வைத்தது……

 • இது போன்ற ஒரு அம்மணி இருப்பது நல்லது தான் சார். ஏன்னா திருடனும் வர பயப்படுவான். சென்னையில பக்கத்து வீட்டுல என்ன நடந்தாலும் கவலைப்படமாட்டாங்க, யாரு இருந்தாலும் கவலைப்படமாட்டாங்க, தெரிஞ்சிக்கவும் மாட்டாங்க, கொலை விழுந்தாலும் கவனிக்க மாட்டாங்க கேள்விப்பட்டிருக்கிறேன். இப்படி ஒரு பெண்மணியா ? இருந்தாலும் கொஞ்சம் ஜாக்கிரதையா தான் இருக்கணும். இது போன்ற ஆளால் பக்கத்து போர்ஷன் காரர்களுக்கு நன்மைகள் குறைவு கஷ்டங்களும் தர்மசங்கடங்களும் அதிகம்.

 • சார்,

  ஏன் எப்போதும் புலம்பிகொண்டே இருக்கிறீர்கள். சிலசமயம் போரடிக்கிறது. நடைய மாத்துங்க. content ஐயும் மாத்துங்க.

  மற்றபடி apartment வாங்கலாம்னு பாத்தேன், ஆனா அதில இவ்வளவு பிரச்சனைகள் இருக்கா? கொஞ்சம் பயமாத்தான் இருக்கு!

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter