தன்னை கதாபாத்திரம் என்று சூனியன் கூறியதால் விசனமடைந்து கோபமடைந்திருந்த கோவிந்தசாமி அது காதல் மனதுக்கு சரிபடாது என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொள்வதோடு காதலுக்கும், காமத்திற்கும் பெண்களின் விருப்பத்திற்குரியவனாக, கவிதையில் பாரதிக்குப் பிந்தைய மகத்தான கவிஞனாக தான் இருப்பதாக தனக்குத் தானே நினைவுபடுத்திக் கொள்கிறான்.
ஷில்பா சாகரிகாவிடம் கோவிந்தசாமியைச் சந்தித்த விபரத்தைக் கூறுகிறாள். நிழலை வைத்து நிஜத்தை போட்டுத் தள்ள தான் செய்திருக்கும் ஏற்பாட்டை சாகரிகா கூறுகிறாள். சூனியன் கோவிந்தசாமியிடம் சொன்னதைப் போல ஷில்பாவும் நீயும், பா.ரா.வும் என்னுடைய கதாபாத்திரங்கள் என்று கூறியதைக் சாகரிகா கோபம் கொள்கிறாள். புதிய சமஸ்தானத்துக்கான வேலைகளை ஆரம்பித்து வைத்த கையோடு இரவுராணி மலரை ஏந்தி சாகரிகாவை சந்திக்கும் கோவிந்தசாமி கெஞ்சி, உருகி அவளிடம் மலரைக் கொடுத்ததோடு அதை நுகர்ந்து பார்க்கவும் வைத்து விடுகிறான்.
தன் இலட்சியம் நிறைவேறப் போகிறது என்ற நினைப்பில் நெக்குருகி நின்ற கோவிந்தசாமியிடம் விலகலுக்கான நியமங்களை பேசும் ஒரு கவிதையைச் சொல்லி விட்டு சாகரிகா அங்கிருந்து போய்விடுகிறாள். அந்தக் கவிதைக்கு சொந்தக்காரன் மனுஷ்யபுத்ரன் என்பதை ஷில்பா மூலம் அறியும் கோவிந்தசாமிக்கு மகாகவிஞனான தன்னை சாதாரண கவிஞனான மனுஷ்ய புத்திரன் தோற்கடித்து விட்டானே என்ற துயரமும் சேர்ந்து கொள்ள வழக்கம் போல அழ ஆரம்பிக்கிறான். பாரதியின் நினைவு தினத்தில் மகாகவிஞனையும், சாதாகவிஞனையும் மோதவிட்டு பா.ரா. விலகிக் கொண்டார் போலும்!
”அழித்துவிடுகிறேன்” என்ற அறச்சீற்ற்த்தோடு கிளம்பும் கோவிந்தசாமி எடுக்கும் முடிவு என்ன? என்பதே அடுத்த எதிர்பார்ப்பு. போகிற போக்கைப் பார்த்தால் சூனியன் VS பா.ரா. என்பது போய் சூனியன் VS ஷில்பா என கபடவேடதாரிக்கான தலைமை அமையுமோ? என்ற சந்தேகம் வருகிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.