உதிரி

உறவினர்களைப் பற்றி உயர்வான அபிப்பிராயம் வைத்திருக்கும் ஒரு சென்னைவாசியைக்கூட நான் கண்டதில்லை. என்னையும் சேர்த்தேதான் சொல்லத் தோன்றுகிறது. என் நண்பர்களில் பலபேர் மதுரைக்காரர்கள். சிலர் திருநெல்வேலிக்காரர்கள். திருச்சிப் பக்கம் சிலர் இருக்கிறார்கள். இவர்களில் யாரும் தமது உறவினர்களைக் குறித்து எதிர்மறையாக என்னிடம் ஏதும் சொன்னதில்லை. மாறாக தாய்மாமன், அத்தை, சித்தப்பா, பங்காளி உறவு முறையில் உள்ளவர்களைப் பற்றிப் பல சமயம் பெருமையுடன் பேசக் கேட்டிருக்கிறேன். எனக்கு அதெல்லாம் வினோதமாக இருக்கும்.

காரணம், மிகப்பெரிய உறவினர் படை உள்ள நான் அவர்களில் யாருடனும் நெருங்கிப் பழகியதில்லை. அதற்கான சந்தர்ப்பமோ தேவையோ வந்ததில்லை என்பது எளிய, தப்பித்தல் காரணம்தான். அடிப்படையில் உறவினர்களின் மீதான அச்சம் எனக்கு உண்டு என்று நினைக்கிறேன். ஒரு ஹரிக்கேன் விளக்கை உடைத்துவிட்ட காரணத்துக்காகப் பாட்டி தன்னைத் துரத்தித் துரத்தி அடிக்க வந்தாள் என்றொரு கதையை அம்மா என் சிறு வயதில் சொல்லியிருக்கிறாள். காட்சி ரூபமாக அந்தக் கதை என் மனத்தில் ஆழமாகப் பதிந்தது. நினைவு தெரிந்து நான் என் பாட்டியை மதித்ததே இல்லை. எண்பது வயதில் அவர் இறந்தபோது அழவும் இல்லை.

பாட்டிக்கு இறந்தவை போக மூன்று பிள்ளைகள், மூன்று பெண்கள். என் தந்தை அவருக்கு மூன்றாவது மகன். உத்தியோக நிமித்தமாக அவர் வெளியூர்களிலேயே சுற்றிக்கொண்டிருந்துவிட்டதால் பாட்டி வீட்டுத் தொடர்பு எனக்கு அதிகம் இருந்ததில்லை. மாதம் ஒருமுறை சைதாப்பேட்டையில் உள்ள பெரியப்பா வீட்டுக்குப் போவோம். பாட்டி பெரியப்பாவுடன்தான் இருந்தார். அனைத்து உறவினர்களும் அங்கே வருவார்கள். பண்டிகைகளைச் சேர்ந்தேதான் கொண்டாடுவார்கள். பாட்டி அப்போது என் அம்மா உள்ளிட்ட மருமகள்களுக்கு மாமியாராக அல்லாமல் அனைவருக்குமே ஒரு பாட்டியாக மட்டும் இருந்தார். அனைவரிடமும் அன்பாகப் பேசுவார். குழந்தைகளை அவ்வளவு கொண்டாடுவார். இருந்தாலும் நான் நெருங்கியதில்லை. பாட்டியுடன் நெருக்கமாக இருந்த காரணத்தினாலேயே மற்ற உறவினர்களிடம் இருந்தும் விலகிப் போனேன். பிறகு அது பழகிவிட்டது.

இது தந்தை வழி உறவின் நிலை. தாய் வழியிலும் எனக்கு ஏராளமான உறவினர்கள் உண்டு. மூன்று மாமன்கள், நான்கு சித்திகள். அவரவர் வாரிசுகள் என்று மொத்தமாக எண்ணினால் ஒரு முப்பது உருப்படி தேறும். இங்கே வேறொரு சிக்கல் இருந்தது. என் அம்மா வழிப் பாட்டி, தனது இரண்டாவது மகனைத் தனது அண்ணனுக்கே தத்துக் கொடுத்திருந்தார். வாரிசில்லாத, நான் பார்த்திராத அந்தக் கிழவனார் தனது தத்துப் பிள்ளைக்கு நிறைய சொத்துகளை விட்டுச் சென்றிருந்தார். அந்தச் சொத்தில் பங்கு கேட்டு சகோதர சகோதரிகள் அங்கே அடித்துக் கொண்டதன் தொடர்ச்சியாகக் குடும்பத்தில் இரண்டு கட்சிகள் உருவாகியிருந்தன. இதில் யாரும் எந்தக் கட்சியிலும் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். திடீர் திடீரென இரு தரப்பு ஆட்களும் இடம் மாறி நின்று பேசுவார்கள். வம்பே வேண்டாம் என்று என் தந்தை அந்தப் பக்கம் போவதையே பெரும்பாலும் குறைத்துக்கொண்டார். அவர் போகாததால் நானும் போனதில்லை. போனது அதிகமில்லை என்பதால் நெருக்கமும் இல்லாமல் போனது.

ஆனால் இந்த இரு தரப்பு உறவுகள் அனைத்தும் எங்கள் வீட்டைத் தேடி வந்த தருணம் ஒன்று உண்டு. அது நான் கல்லூரிப் படிப்பில் தோல்வியடைந்து, வேலைக்குப் போவதாகச் சொல்லிவிட்டு ஊரைச் சுற்றிக்கொண்டிருந்த நாளில் நிகழ்ந்தது. ஒருவர் விடாமல் என் அம்மாவிடம் என்னைக் குறித்துத் துக்கம் கேட்பார்கள். வெளியே பார்த்தால் கேட்பார்கள். வீட்டுக்கு வந்தும் கேட்பார்கள். திருமணம் போன்ற விசேடங்களுக்குப் போக நேர்ந்தால் அங்கும் இதைப் பற்றியே பேசுவார்கள். இதனாலேயே என் அம்மா குடும்ப நிகழ்ச்சிகளைத் தவிர்க்க ஆரம்பித்தார். அப்போது நாங்கள் எங்கள் பெரியப்பா குடும்பத்துடன் இணைந்து கூட்டுக் குடித்தனத்தில் இருந்தோம். அம்மா வம்படியாக ஏதேதோ கதை சொல்லி பெரியப்பா குடும்பத்தைப் பிரித்து அனுப்பிவைத்தாள்.

இப்போது எண்ணிப் பார்க்கிறேன். மிக நிச்சயமாக அது என்னால் நிகழ்ந்த துயரம்தான். ஆனால் ஒரு துயரத்தைத் திருவிழாவாக்கும் மனநிலையில் இருந்த உறவினர்களைவிட ஒன்றும் அம்மா அன்று மோசமாக நடந்துகொண்டுவிடவில்லை.

காரணங்களைக் கண்டுபிடிப்பது அர்த்தமற்ற செயல். எப்படியோ உறவினர்களிடம் இருந்து விலகி நிற்கத் தொடங்கிவிட்டேன். எப்போதாவது சந்திக்க நேர்ந்தால் உரையாடல் தொடங்கும்போதே நைந்து போய்விடுகிறது. இரண்டாம், மூன்றாம் தலைமுறையினரின் பெயர்கள் நினைவில் இல்லை. யாருக்கு எத்தனைக் குழந்தைகள், எது யாருடைய குழந்தை என்பதெல்லாம் எப்போதுமே குழப்பம் தருகின்றன.

இது எதுவும் பெருமைக்குரியதோ, சிறுமைக்குரியதோ அல்ல. தேவைகளே உறவுகளைத் தீர்மானிக்கும் என்று ஆகிப் பலகாலம் ஆகிவிட்டது. உறவு தேவையா இல்லையா என்பதே அதன் தொடர்ச்சிதான். எனக்குச் சில நண்பர்கள் இருக்கிறார்கள். எப்போதாவது பேசிக்கொள்வோம். தெரிந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். பார்க்கும்போது ஒரு ஹலோ சொல்வோம். வெறும் புன்னகையுடன் கடக்கும் நபர்கள் அதிகம். முகம் மட்டும் தெரியும் என்று பொருள். ஃபேஸ்புக்கில், வாட்சப்பில் சிலருடன் உரையாடுகிறேன். உரையாடல் இல்லாவிட்டாலும் சிலர் எழுதுவதை ரசிக்கிறேன். அபூர்வமாகச் சிலரை மெசஞ்சரில் அழைத்து நன்றாக எழுதியிருந்தீர்கள் என்று சொல்கிறேன். ஓரிருவரிடம் மட்டும் மோசமாக எழுதுவதையும் சுட்டிக் காட்டுகிறேன். நான் மோசமாக எழுதும்போது சுட்டிக்காட்டவும் ஓரிருவர் இருக்கிறார்கள். மற்றபடி எனக்கு நடக்கும் எதற்கும் அல்லது அவர்களுக்கு நிகழும் எதற்கும் இரு தரப்பும் எப்போதும் பொறுப்பாவதில்லை. தெரியும். அவ்வளவுதான்.

இப்போதெல்லாம் மனித குலமே உதிரிகளின் பண்ணை என்றுதான் தோன்றுகிறது. அது இல்லை என்றாலும் நான் உதிரி.

O

ஃபேஸ்புக்கில் சாம்நாதன் தமது உறவினர்களைப் பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தார். அதைப் படித்ததால் இதை எழுதத் தோன்றியது.

 

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி