பாடுபொருள்

என்னிடம் உள்ள நூற்றுக் கணக்கான கெட்ட பழக்கங்களுள் ஒன்று, பிறகு பார்க்கலாம் என்று தள்ளி வைப்பது. எதையெல்லாம் அப்படித் தள்ளி வைக்கிறேனோ, பெரும்பாலும் அது பிறகு நடப்பதே இல்லை. இந்தத் தள்ளிப் போடுவதில் முதன்மையானது, யாரையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்து, அதைத் தள்ளிப் போடுவது.

சென்ற சென்னை புத்தகக் காட்சி நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள் கண்காட்சியில் இருந்து விரைவாக வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். மறுநாள் படப்பிடிப்புக்கு எழுத வேண்டிய அவசரம். வழியில் உயிர்மை அரங்கு வாசலில் மனுஷ் இருந்தார். ஒரு ஹலோ. ஒரு வணக்கம். நலமா என்று ஓரிரு சொற்கள். அவர் உட்காரச் சொன்னார். நேரமில்லை, நாளை பார்ப்போம் என்று சொல்லிவிட்டு உண்மையிலேயே ஓடிப் போனேன்.

மறுநாள் அவரைப் பார்க்க முடியவில்லை. கண்காட்சி முடியும் வரையிலுமே அவர் பிறகு கண்ணில் படவில்லை. அதன் பிறகு பலமுறை போனில் பேசிவிட்டேன். ஆனால் சரியாக ஒரு வருடம் முடிந்து ஒரு மாதமும் ஓடிவிட்டது. இன்னும் பார்க்கவில்லை. நேரில் பேசுவதற்கென்று போனில் பேசாமல் சிலவற்றை ஒதுக்கி வைப்போம் அல்லவா? அப்படிச் சேர்த்து வைத்ததே நாலைந்து விஷயங்களாகிவிட்டன. மனுஷ் என்றல்ல; பலர் விஷயத்தில் இப்படித்தான் ஆகிவிடுகிறது. இந்த உலகில் என்னைவிட மோசமான ஒரு பொறுப்புத் துறப்பாளி இருக்க மாட்டான் என்று எப்போதும் தோன்றும். ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நாமே முடிவு செய்தாலும் அது நமது பொறுப்பாகிவிடுகிறதல்லவா? பொறுப்புகளை ஒத்தி வைப்பதில் நான் விற்பன்னன்.

நேற்று முழு நாளும் வேலைப் பளு. இரவு வரை ஃபேஸ்புக் பக்கமே வரவில்லை. வந்து திறந்தபோது முதலில் இதுதான் கண்ணில் பட்டது.

//” மனுஷ் நான் தான் வந்திருக்கிறேன்
கதவைத்திற”
என பகலில் யாரோ
கதவு தட்டுகிறார்கள்
திறந்து பார்த்தால்
வெய்யிலைத்தவிர
யாருமில்லை
“ஹமீத் நான்தான் வந்திருக்கிறேன்
கதவைத்திற”
என இரவில் யாரோ
கதவு தட்டுகிறார்கள்
திறந்துபார்த்தால்
இருளைத்தவிர
வேறு யாருமில்லை
யாரோ வர நினைத்து
வர முடியாமல்
அவர்கள் குரல் மட்டும் வந்து
கதவு தட்டுகிறது போலும்//

என் வாழ்நாளில் நான் ஒரு பாடுபொருளானது மகிழ்ச்சிக்குரிய சம்பவம்தான். ஆனால் இப்படி ஒரு மோசமான காரணத்துக்காக அது நிகழ்ந்திருக்க வேண்டாம்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி