எண்ட்ரி கொடுக்கும் போதெல்லாம் தன் திறன் பற்றி நமக்கு நினைவூட்டுவதை வழக்கமாக வைத்திருக்கும் சூனியன் இந்த அத்தியாயத்தையும் அப்படியே ஆரம்பித்து வைக்கிறான். இரவு ராணி மலரோடு வரும் கோவிந்தசாமியை மடக்கி திசைதிருப்ப பார்க்கிறான். ஆனால், இருவருக்குமிடையே குற்றச்சாட்டுகளாகவும், சமாதானமாகவும் நிகழும் உரையாடல் கோவிந்தசாமிக்கு நிறைவைத் தரவில்லை. சூனியனைச் சபித்து விட்டு ஓடத் தொடங்குகிறான். அந்த ஓட்டம் எங்கு, எப்படி முடியும்? என்பதையும் சூனியனே நமக்குச் சொல்கிறான்.
கையோடு எடுத்து வந்த இரவுராணிமலரை சாகரிகாவிடம் கொடுக்க உதவும்படி ஷில்பாவிடம் கோவிந்தசாமி கேட்பான். அவளோ, மலருக்கெல்லாம் சாகரிகா மயங்கமாட்டாள். அவள் பெயரில் ஒரு சமஸ்தானத்தை ஆரம்பித்து அவள் புகழ் பாடத் தொடங்கு. அதைக் கண்டு ஒருவேளை அவள் உன்னை மன்னிக்கக்கூடும் என யோசனை சொல்வாள். கோவிந்தசாமிக்கு இது போதாதா? புதிய சமஸ்தானத்துக்கான அனுமதியைப் பெற்று அதை வெண்பலகையிலும் பதிவேற்றுவான்.
”சாகரிகா கோவிந்தசாமி ரசிகர் வட்டம்” என்ற பெயரை பார்த்ததும் சாகரிகா கோபமடைந்து நிழலை முத்தத்தால் வீழ்த்தி, காதல் மயக்கத்தில் ஆழ்த்தி அதனிடம் கை துப்பாக்கியைக் கொடுத்து ஒரு அசைன்மெண்டையும் சொல்வாள். நிழலை வைத்து நிஜத்தை வீழ்த்த முடிந்ததா? அடுத்தடுத்த அத்தியாயங்களில் தெரிய வரும்.
நாவல் நிறைவை நோக்கி நகர்ந்து வருவதால் கதாபாத்திரங்கள் தீவிரமாக அணிவகுத்து நேரடி மோதலுக்காக களமிறங்குவார்கள் என நினைத்து வாசிக்க ஆரம்பித்தேன். தலைப்பு கூட அதற்கு ஏற்றாற் போலவே இருந்தது. ஆனால், வாசித்து முடிக்கையில் ஆப்கானில் வடக்கு கூட்டணி படை கமாண்டர்களை முல்லா ஒமர் ஒழித்துக் கட்டிய பாணி தான் நினைவுக்கு வந்தது. முல்லா ஒமரின் பிளானை சூனியன் கையில் எடுக்கிறானோ? என நினைக்கத் தோன்றுகிறது.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.