அங்காடித் தெரு

வலையில் என்னவாவது எழுதியே ஆகவேண்டுமென்று எனக்கு எப்போதும் ஒரு தீவிரம் இருந்ததில்லை. அதனாலேயே அவ்வப்போது எழுதாமலிருப்பேன். அவசியம் இருந்தாலோ, எழுதிப்பார்க்கும் எண்ணம் இருந்தாலோ மட்டுமே எழுதி வந்திருக்கிறேன். பல சமயம் வேலைகள் எழுத விடாமல் தடுக்கும். இந்த முறையும் அப்படியே. மற்றபடி, ஏன் எழுதவில்லை என்று தினசரி கேட்கிற பிரதீப் குமாருக்கும், என்ன ஆயிற்று என்று சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் கேட்கும் பிற நண்பர்களுக்குமாக இது.

சற்றுமுன் வசந்தபாலனின் அங்காடித் தெரு திரைப்படத்தைப் பார்த்தேன். எழுது என்று உந்தித் தள்ளுகிற படமாக இருக்கிறது. சுப்பிரமணியபுரத்துக்குப் பிறகு இந்தளவு நான் ஒன்றிப் பார்த்த திரைப்படம் வேறில்லை.

வசந்தபாலனின் ஆல்பம் படத்தைப் பார்த்தபோது எனக்குக் குறிப்பாக எந்த அபிப்பிராயமும் ஏற்படவில்லை. அதனாலேயே அவருடைய வெயிலை வெகுநாள் தவறவிட்டேன். அது ஒரு நல்ல படம் என்று ஊர் முழுக்க சொல்லிவிட்ட பிறகுதான் பார்த்தேன். சந்தேகமில்லை. நல்ல படம்தான். ஆனால் சிறந்த படம் என்று சொல்லத் தோன்றவில்லை.

அப்படிச் சொல்வதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ‘அங்காடித் தெரு’வின் மூலம் இப்போது அவர் வழங்கியிருக்கிறார்.  இயல்பான, நெஞ்சைத் தொடும் திரைப்படம்.மிக வலுவான கதையம்சம் உள்ளபடியினாலேயே படத்தின் சுமாரான [ஒளிப்பதிவு], மோசமான [பின்னணி இசை], தாங்கவொண்ணாத [எடிட்டிங்] அம்சங்கள் ஒரு பொருட்டில்லாமல் ஆகிவிடுகின்றன. சற்றும் பதறாமல், அநாவசிய வேகம் காட்டாமல் வெகு இயல்பாக, ஆத்மார்த்தமாகக் கதை சொல்லியிருக்கிறார். இதை நீளம் என்று சொல்பவர்கள் ரசனையில்லாதவர்களாக இருக்கக்கூடும். கொஞ்சம் தொய்வு உண்டு. அது எடிட்டிங் பிரச்னை. ஆனால் இதையெல்லாம் மீறி இந்தப் படம் தமிழ் சினிமாவின் நல்ல முகத்தை வெளியோருக்கு எடுத்துச் சொல்லும் தரத்தைச் சார்ந்து நிற்கிறது. அதற்காக வசந்தபாலனைப் பாராட்டியே ஆகவேண்டும்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பலமாடி பல்பொருள் அங்காடி ஒன்று இந்தக் கதையின் களமாகவும், படம் சொல்லாமல் புரியவைக்கும் பல்வேறு விஷயங்களின் குறியீடாகவும் இருக்கிறது. அங்கு வேலை பார்க்கும் இளைஞர்கள் மற்றும் யுவதிகளின் வாழ்க்கை திரையில் விரிகிறது. நவீன கொத்தடிமைகளாகத் திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து பிடித்துக்கொண்டு வரப்படும் இந்தக் கூட்டம் வருமானத்துக்காகச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிற அவலங்கள் சொல்லி மாளாது.

பாலாவின் நான் கடவுளில் கண்ட பிச்சைக்காரர்களின் உலகம் அவ்வப்போது நினைவுக்கு வந்ததைத் தவிர்க்க முடியவில்லை. களமும் காட்சியும் வேறானாலும் உணர்வும் வதையும் அதே விதமானவை. ஒரு வித்தியாசம் உண்டு. வசந்தபாலன் வன்முறையைப் பெரிதும் நம்பாமல் வார்த்தைகளை இதில் நம்பி முதலீடு செய்திருக்கிறார். ஆணியடித்த மாதிரி சில இடங்களில் நெஞ்சில் இறங்கும் ஜெயமோகனின் வசனங்கள், ஒரு நல்ல எழுத்தாளன் உடனிருந்தால் ஒரு திரைப்படம் பெறக்கூடிய இன்னொரு பரிமாணம் எத்தகையது என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது. உதாரணமாக எந்த ஒரு வசனத்தையும் இங்கே எடுத்துக்காட்ட நான் விரும்பவில்லை. படம் பார்க்கும்போது அவை உண்டாக்கக்கூடிய நியாயமான, அவசியமான அதிர்ச்சியை அது தடுத்துவிடும் என்று கருதுகிறேன்.

எனக்குப் பெரிய ஆச்சர்யம், அஞ்சலி இந்தப் படத்தில் வெளுத்து வாங்கியிருப்பது. நான் எழுதிக்கொண்டிருக்கும் வெட்டோத்தி சுந்தரத்தில்கூட அஞ்சலிதான் கதாநாயகி. இந்தப் பெண் இத்தனை பெரிய திறமைசாலியாக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. முன்னர் ஏதோ ஒரு படம் பார்த்த நினைவிருக்கிறது. சுமாராகத்தான் செய்திருந்தார். இந்தப் படத்தில் கனி என்னும் சேல்ஸ் பெண்ணாகவே வாழ்ந்திருக்கிறார். அந்தக் குறும்பும் சீற்றமும் சோகமும் கண்ணீரும் புன்னகையும் பார்வையும் அப்படியே அள்ளிக்கொண்டுவிடுகின்றன.

ஏழைமையால் உந்தித் தள்ளப்பட்டு எங்கெங்கோ கிராமங்களிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து இத்தகு பிரம்மாண்டமான பல்பொருள் கடைகளில் வேலை பார்ப்பவர்களின் வாழ்க்கை அந்தக் கடைகளின் பளபளப்புக்கு நேரெதிரானது என்பதைக் காட்டுவதுதான் இயக்குநரின் நோக்கம். நூற்றுக்கணக்கான சாத்தியங்கள் இருந்தும் இதில் சினிமாத்தனங்களைத் தவிர்த்து, அவர்களுடைய வாழ்க்கையை அதன் சகல துர்நாற்றங்களுடனும் நறுமணங்களுடனும் சேர்த்து, மிகையில்லாமல் காட்சிப்படுத்தியிருப்பதன்மூலம் தமிழ் சினிமாவின் வெகு நிச்சயமான நம்பிக்கை நட்சத்திரமாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறார் வசந்தபாலன்.

மூலக்கதைக்குத் தொடர்பில்லாத சில சிறுகதைகள் படத்தில் இருக்கின்றன. மிகக் கவனமாகப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அந்தக் குட்டிக்கதைகள் மூலம் திரைக்கதையின் மையத்தை அவ்வப்போது இயக்குநர் தொடாமல் தொட்டுக்காட்டும் சாமர்த்தியம் புரியும். கனியின் தங்கை வயதுக்கு வருகிற தருணம், சோற்றுக்கு வழியில்லாமல் திரிபவன் பொதுக் கழிப்பிடத்தைக் கழுவிவிட்டு உட்கார்ந்துகொண்டு காசு வசூலித்து வாழ்க்கைத் தரத்தை மாற்றிக்கொள்ளும் தருணம், ரங்கநாதன் தெருவில் திரியும் ஊனமுற்ற மக்களின் குறியீடாகக் காட்டப்படும் ஒரு பாத்திரத்தின் மனைவி பிரசவம் முடித்து வருகிற தருணம் போன்றவை சில உதாரணங்கள்.

நிச்சயமாக இரண்டு முறை பார்க்க வேண்டிய படம் இது. ரசிப்பதற்காக ஒருமுறை. லயிப்பதற்காக ஒரு முறை.

வசந்தபாலனுக்கு வாழ்த்துகள்.

Share

34 comments

 • தவம் கலைந்து ஆட்டம் ஆரம்பம்!!தொடர்ந்து படிப்பவர்களுக்கு சிலரின் எழுத்தை படிக்காமல் இருப்பது ஒரு வித அவஸ்த்தை என்றே சொல்லாம்!குறிப்பாக மதிப்பிற்குரிய எழுத்தாளர்கள் முத்துலிங்கம்,எஸ் ரா,பா ரா ,தியோடர் போன்றவர்களை சொல்லாம்.இது எல்லாம் எங்க(வாசகர்கள்)சமாச்சாரம் ஜயா!!!

 • நேற்று கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஆனந்த் திரையரங்கில் அங்காடித்தெரு பார்த்தேன். இந்த ஆண்டு வந்த படங்களில் இதுதான் டாப். இதுவரையாரும் சொல்லாத கதைக்களன். பல்பொருள் அங்காடிகளில் வேலை பார்ப்பவர்களின் நிலையை யதார்த்தமாகச்சொல்லியிருந்தார்கள். இந்த படத்தைப்பார்த்துவிட்டு பல்பொருள் அங்காடி சென்று பொருட்களை வாங்கச்செல்பவர்கள் அங்கு பணியாற்றும் சேல்ஸ் மேன்/கேர்ள்களிடம் கண்டிப்பாக இனி மரியாதையாதயுடன் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது சில காட்சிகளின் கண்ணீர் திரையிடுவதை தவிர்க்க முடியாமற் போனது. ஜெயமோகனின் இயல்பான வசனத்துக்காக இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும். வசந்தபாலனின் முயற்சி பாராட்டுக்குரியது.
  -திருவட்டாறு சிந்துகுமார்

 • ஜெமோவுக்கு பர்ஸ்ட் ஹிட்! 🙂 அவருக்கு வாழ்த்துகள்.
  கனகவேலும் விரைவில் வெற்றிக்கொடி நாட்ட உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!

  • யுவகிருஷ்ணா: கனகவேல் காக்க இந்த ரகப் படமல்ல. அது, ஒரு கமர்ஷியல் மசாலா. ஒப்பிடுவது முறையல்ல.

 • 😉 இன்னொருவாட்டி என்னோடு
   

 • உங்கள் விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது. நன்றி..தங்களின் நிலமெல்லாம் ரத்தம் புத்தகம் சமீபத்தில் தான் படிக்க நேர்ந்தது. பற்றி எரியும் பூமியின் முழு வரலாறும் புரிந்தது. எழுத்தும் மிக எளிமையாய் இருந்தது.ஒரு பிரதி வாங்கி என் இல்ல நூலகத்தில் இணைத்து விட்டேன். மிக்க நன்றி. நீங்கள் வலைப்பூ எழுதுவது இப்போதுதான் தெரியும் இனி அடிக்கடி வருகிறேன்.

 • //ஆணியடித்த மாதிரி சில இடங்களில் நெஞ்சில் இறங்கும் ஜெயமோகனின் வசனங்கள், ஒரு நல்ல எழுத்தாளன் உடனிருந்தால் ஒரு திரைப்படம் பெறக்கூடிய இன்னொரு பரிமாணம் எத்தகையது என்பதைத் துல்லியமாகக் காட்டுகிறது//
   
  எவ்வளவு தாராளமாய்ப் பாராட்டுகிறீர்கள்!!
   
  இதுவரை வந்த எல்லா விமர்சனங்களும் பெரிதாய்ப் பாராட்டியே வந்திருக்கின்றன. குறைகளைக் கண்டுகொள்ளவே இல்லை. மாறாக அதைக் கண்டுகொள்ளக்கூடாது என்று சொல்லும் அளவு இதன் தரம் இருக்கிறது. நமது ஜெயமோகனின் உழைப்பு வெல்லும் நேரமிது.

 • Comment by யுவகிருஷ்ணா

  ஜெமோவுக்கு பர்ஸ்ட் ஹிட்! அவருக்கு வாழ்த்துகள்.
  ******************************************************************
   
  அட … இவரே ஜே மோ வை பாராட்டுகிறார் என்றால், நல்லாத்தான் இருக்கும்னு தோணுது ( ஆமா.. உங்க இலக்கிய குரு கோவிச்சுக்கலையா )

 • /–இது எல்லாம் எங்க(வாசகர்கள்) சமாச்சாரம் ஜயா!!!–/

  ரொம்ப சரியா சொன்னீங்க பிரதீப்… நானும் உங்க கேஸ் தான்.

 • பா.ரா சார்,
  ஒரு வேண்டுகோள்.உங்களின் ஒவ்வொரு புத்தகமும் எப்படி உருவாயின?அந்த புத்தகம் எழுத தூண்டுகோள் என்ன?எப்படி எல்லாம் புள்ளி விவரங்கள் எடுத்தீங்க?அப்போது நடைபெற்ற சுவையான சம்பவங்கள் குறித்து பதிவு இட்டால் படிப்பவர்களுக்கும் சுவையாக இருக்குமே!

 • குறிப்பாக ஆசிரியரின் பார்வையில் புத்தகத்தை புரிந்து கொள்ள மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

 • நேற்று இரவு "அங்காடித் தெரு" படம் பார்த்தேன்.இந்த உலகில் உங்களுக்கான
  சந்தோஷம்,அழுகை,துக்கம்,செயல்கள் யாவும் உண்மையில் உங்களுடையவை
  இல்லை.யாரோ ஒருவருக்காகவும்,யாருக்காகவும்,ஏன் உங்களுக்காகவும் கூட
  நீங்கள் வாழவில்லை.பின் படம் என்ன சொல்ல வருகிறது.பல சுயநலவாதிகள் ஒன்று
  கூடி இந்த உலகத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு தனி
  மனிதர்கள் யாரும் தங்களை உணர்ந்துவிடாமல் மிக கவனமாக அடிமைப் படுத்தி
  அவர்களாக இல்லாமலும்,நீங்களாக இல்லாமலும் உணர்வுப்பூர்வமற்ற ஜடத்தைவிட
  கேவலமான ஒரு வாழ்வை வாழ வகை செய்கிறார்கள்.இதை அவசர உலகம் என்பதைவிட
  நரமாமிசம் உண்டு மீதமிருக்கும் எலும்பின் ம்ஜ்ஜையில் ரத்தம் உறிஞ்சும்
  மிருகக் கூட்டத்தைவிட மிக மோசமான அரக்கக் கூட்டம்.அந்த வலி நிறைந்த பதிவை
  எடுக்க ஒரு துணிவு வேண்டும்.வசந்தபாலனுக்கு கோடான கோடி
  வாழ்த்துக்கள்.மனித மனங்களின் அக உண்ர்வை உணரவே ஒரு வாழ்க்கை
  போதாது,அதிலும் குறிப்பாக இளைஞர்களின் அக உணர்வு  காதலும் வேகமும்
  நிறைந்தவை.தமிழ்த் திரையுலகில் இத்திரைப்படம் மிகச் சரியானதொரு பதிவு.ஒரு
  கணம் அந்த கொடுமையான வாழ்வினின்றும் தப்பிதோம் என்றே எண்ணத்
  தோன்றியது.அதுதான் உண்மையும்கூட.

 • அண்ணாச்சிகளின் மறுபக்கத்தை கிழித்து தொங்க விட்டிருக்கிறார் வசந்தபாலன் ,ரங்கநாதன் தெருவிலேயே !!!!!!!!!!!

 • திரைப்படம் பற்றிய உங்கள் பார்வை அற்புதமாக இருக்கிறது. நானும் பார்க்க வேண்டும் என்ற உணர்வை உருவாக்கிவிட்டீர்கள். உணர்வுகளை பகிர்ந்து கொண்டதற்க்கு நன்றி.
   

 • அதெல்லாம் சரி. தோலை உரிச்சு தொங்கவிட்டுவேன் தொனியில் முகத்தை உர் என்று வைத்துக் கொண்டு ஒரு புகைப்படம் தேவையா, ஸ்மைல் ப்ளீஸ் 🙂

 • எனக்குப் பெரிய ஆச்சர்யம், அஞ்சலி இந்தப் படத்தில் வெளுத்து வாங்கியிருப்பது. நான் எழுதிக்கொண்டிருக்கும் வெட்டோத்தி சுந்தரத்தில்கூட அஞ்சலிதான் கதாநாயகி. இந்தப் பெண் இத்தனை பெரிய திறமைசாலியாக இருப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. முன்னர் ஏதோ ஒரு படம் பார்த்த நினைவிருக்கிறது. சுமாராகத்தான் செய்திருந்தார்
   
  அவர் சி.சுந்தருடன் நடித்த படத்தைப் பார்த்துவிட்டீர்கள் போலிருக்கிறது.அதில் அவருக்கு செய்ய பெரிதாக ஒன்றுமில்லை. கற்றது தமிழில் பிரமாதமாக நடித்திருப்பார்.

 • பாரா சார்

  நானும் படம் பார்த்தேன்

  ஏதோ ஒரு நெருடல்…. முழுதும் ஒட்ட முடியவில்லை. ஒரு கடையை மட்டுமே காட்டியது சரியா தவறா என்று தெரியவில்லை

 • அய்யா!
  தங்கள் விமர்சனம் கண்டு தோழர் ஒருவரோடு படம் பார்த்தோம். தாங்கவில்லை.
  டிக்கெட் செலவான ரூபாய் நூற்றி அறுபதையும், படம் பார்த்து வெம்பிப்போய் பீர் அடித்த செலவான ரூபாய் முன்னூறையும், மேலும் ஏற்பட்டிருக்கும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக தாங்களே குத்துமதிப்பாக ஒரு தொகையை கணக்கிட்டு உடனடியாக எங்கள் வங்கி கணக்கில் சேர்க்குமாறு தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.
  இப்படிக்கு
  மொக்கை படம் பார்த்தே, விமர்சனம் எழுதி
  மகிழ்ச்சியாக வாழ்வோர் சங்கம்

  • லக்கி – அதிஷா: உங்கள் ரேஞ்சுக்கு கச்சேரி ஆரம்பம்தான் சரி என்பதை மறந்துவிட்டது என் தவறு. பிராயச்சித்தமாக, திருத்தணி ரிலீஸாகும்போது என் செலவில் உங்கள் இருவருக்கும் டிக்கெட் வாங்கிக் கொடுத்துவிடுகிறேன்.

 • தயவு செய்து வாங்கித்தரவும்.. அங்காடித்தெரு பார்த்து அடைந்த மன உளைச்சலை பேரரசுவால் மட்டுமே நீக்க முடியும். உழைக்கும் தோழர்களின் உற்ற தோழன் பேரரசு மட்டுமே என்பதையும் இங்கே பதிவு செய்து கொள்கிறேன்.
   

 • பாரா,
  முதலில் வந்த விமரிசனங்களின் படி, இந்த படத்தை மிஸ் பன்னக்கூடாது என்று தான் நினைத்தேன். ஆனா, இப்பொழுது வந்து கொண்டிருக்கும் விமரிசனங்களை படிக்கும் போது, இந்த படம் என்னை போன்றவர்களை வேதனை படுத்தும் என்ற நினைப்பே படம் பார்ப்பதை தள்ளி போடும் படி சொல்கிறது.

 •  
  பாரா , உங்கள் விமர்சனம் அருமை. நெல்லை மாவட்டதுகாரனாகிய எனக்கு இந்த படம் ஒரு புது உலகத்தை அறிமுகபடுத்தியது .
  இங்கே,எனது பல நண்பர்கள் சார்பாக இதை சொல்ல விரும்புகிறேன்:இந்த அதிஷவும் ,லுக்கியும் சரியான விசிலடிச்சான் குஞ்சுகள் ! குடிகாரனின் உளறல் போல இருந்தன அவர்கள் விமர்சனம்.

 • எனக்கு படம் பிடிக்கவில்லை. வெயில் வந்த போது  தவமாய் தவமிருந்து செய்த தாக்கம் இருந்தது மக்கள் ரசித்தார்கள்…  தோல்விகளை ஓவராக ஆராதனை செய்வது தேவையில்லை. காசு கொடுத்து பார்ப்பவர்களுக்கு மசாலா இல்லாவிட்டாலும் ஒரு சின்ன மெசேஜ் வைத்தால் ( கொஞ்சம் வெற்றியும் கூட ) நன்று.

  நீங்கள் ட்ராபிக் சிக்னல் (ஹிந்தி) பார்த்திருக்காவிட்டால், பாருங்கள் ஒரு முறை… அது ஏற்படுத்திய தாக்கம், வலி இதில் கொஞ்சம் கூட இல்லை.

  அங்காடி தெரு பார்த்த பிறகு, ட்ராபிக் சிக்னல் இரண்டு முறை பார்த்துவிட்டேன். கலை. 🙂
  இரண்டு விக்கிபீடியா ஆர்டிகிள் வைத்து ஒரு புத்தகமே உலகத்தரமாக எழுதிவிடும் இந்த காலத்தில், எங்காவது இன்ஸ்பிரேசன் எடுத்திருந்தால், அதற்கு இணையாக உழைப்பு வேண்டும்.

  யோகி ஒரு விதிவிலக்கு.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe to News Letter