திரையும் கதையும்

சிறந்த திரைக்கதைகள் என்று கமலஹாசன் அளித்த பட்டியலொன்றை பாஸ்டன் பாலாஜி வெளியிட்டிருக்கிறார். அது பற்றி ஆர்வி இங்கொரு குறிப்பு எழுதியிருக்கிறார். இதனை வைத்துக்கொண்டு விவாதிப்பதைவிட, ஒவ்வொருவரும் தமக்குச் சிறந்ததெனத் தோன்றும் திரைக்கதைகளைப் பற்றிப் பேசுவது பலன் தரும். எந்தத் தனிநபரின் ரசனையும் உலகப்பொதுவாக இயலாது. அனைவருக்கும் உண்டு, வேண்டுதல் வேண்டாமை.

சினிமாவை, பொழுதுபோக்காக அல்லாமல் தீவிரமாக கவனிக்கத் தொடங்கும் ஒவ்வொருவரும் தமக்கென இம்மாதிரி ஒரு பட்டியல் வைத்திருப்பார்கள். முற்றிலும் ரசனை சார்ந்து உருவாகும் அப்பட்டியல், பெரியவர்கள் சிபாரிசு செய்யும் பட்டியலுக்குச் சற்றும் தொடர்பின்றி இருந்தாலும் தன்னளவில் ஒரு முழுமையையும் அக விரிவையும் பெற்றிருக்கும்.

திரைப்படம் என்றில்லை. எந்த ஒரு கலைவடிவமும் ரசிகனின் கைகளுக்குச் சென்று சேர்ந்துவிட்டால், அவன் போடுவதுதான் மார்க். அவன் அளிப்பதுதான் தகுதி, தராதரம் எல்லாம். விமரிசகர்கள் பொருட்டில்லை, வாசிப்பவர் /காண்பவர் / கேட்பவர் யாரும் பொருட்டில்லை, ரசிப்பவர் முக்கியமில்லை, என் படைப்பின் தரம் எனக்குத் தெரியும் என்று சிலர் கருதலாம். அதிலும் பிழையில்லை. ஆனால் காலத்தின் முன்னால் எது ஒன்று நிற்கிறது என்கிற ஒரு புராதன அளவுகோல் இருக்கிறது. நாம் நூற்றாண்டு சரக்குகளின் பக்கமே போகவேண்டாம். சென்ற வருடம் வெளியான எத்தனை திரைப்படங்கள், நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் நமக்கு இப்போது நினைவிருக்கின்றன என்று ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தாலே போதும். புரிந்துவிடும். ரசிகர்கள் பெருவாரியாக விரும்புகிற திரைப்படங்களுக்கு ஒரு கூடுதல் சலுகை கிடைக்கும். அவர்கள் நாலு பேருக்கு எடுத்துச் சொல்வது. இதைப் பார். நன்றாக இருக்கிறது. அதைப் பார்க்காதே. திராபை.

எனக்கு சினிமா பிடிக்கும். எத்தனை பிடிக்கும் என்றால் ஃப்ளூயிட் மெக்கானிக்ஸ் தேர்வு தினத்தன்று, ஆப்சண்ட் விழுந்தாலும் பரவாயில்லை; அரியர்ஸ் எழுதிக்கொள்ளலாம் என்று அன்று ரிலீஸான நாடோடித் தென்றலை அன்றே பார்த்துவிட பறங்கிமலை ஜோதிக்குச் சென்ற அளவுக்குப் பிடிக்கும்.

தொடக்கம் முதலே எனக்கு வெகுஜன சினிமா, உலக சினிமா பாகுபாடெல்லாம் இருந்ததில்லை. இரண்டு தரப்பிலும் தொடர்ந்து பார்ப்பேன். இரண்டிலும் பிடித்தவை, பிடிக்காதவை அநேகம். இந்திப் படங்கள் அதிகம் பார்த்ததில்லை. எனக்கு இங்கிலீஷ் புரியுமளவு இந்தி புரியாது என்பதும், இந்தி புரிந்தால் மட்டுமே இந்தி சினிமாவை ரசித்துப் பார்க்க முடியும் என்னும்படியாகத்தான் அந்தத் திரைக்கதைகள் பல எழுதப்பட்டிருக்கின்றன என்பதும் இதற்கான காரணங்கள்.

ஆனால் ஒரு நல்ல திரைப்படத்துக்கு மொழியின் துணை அநாவசியம். மொழிப் பிரச்னையில்லாமல், ம்யூட் செய்துவிட்டுப் பார்த்தாலும் புரியக்கூடிய, அள்ளிக்கொள்ளக்கூடிய படங்களே நல்ல திரைக்கதைகளைக் கொண்டவை என்பது எனக்கு நான் வைத்துக்கொண்ட எளிய அளவுகோல். மிகப்பல ஆண்டுகளுக்கு முன்னர் புதுதில்லி சர்வதேசத் திரைப்பட விழா ஒன்றில் பார்த்த ‘கேபே’ என்கிற இரானியத் திரைப்படம் கிட்டத்தட்ட ஒருவாரம் அதிசயத்தைவிட்டு அகலாமல் என்னைக் கட்டிப்போட்டிருந்தது நினைவுக்கு வருகிறது.

ஆனால் பெரும்பாலான தமிழ்ப் படங்கள் இந்திப் படங்களைப் போலவே இன்றுவரை நாடக வடிவின் திரைப்பிரதியாகவே இருக்கின்றன. திரைக்கதை என்பது வசனங்கள் நிறைந்த காட்சியின் எழுத்துப் பிரதி என்பதாகவே பலபேர் நம்புகிறார்கள், செயல்படுத்தியும் வருகிறார்கள்.

என் நண்பர் ஒருவர் உதவி இயக்குநர். அவர் முன்னர் வேலை பார்த்த ஒரு பெரிய இயக்குநரைப் பற்றிச் சொல்லும்போது அடிக்கடி ஒரு விஷயத்தைத் தமாஷாகக் குறிப்பிடுவார். ‘யோவ் அடுத்தவாரம் ப்ரொட்யூசருக்குக் கதை சொல்லணும்யா. இன்னும் டயலாகே ரெடியாகல.’ சினிமா என்பது வசனம் என்பது அந்தப் பெரிய இயக்குநரின் தீர்மானமான கருத்து. இன்றைக்கும் அவரது படங்களில் அதுவே பிரதானம். ஆனாலும் என்ன? அவரும் ஒரு சூப்பர்ஹிட்  டைரக்டர்தான். சினிமா என்பது வசனமும் கூட!

எனக்குத் தமிழில் மிகவும் பிடித்த இயக்குநர், பாக்யராஜ். அவரது படங்கள் அனைத்தும் நாடக வடிவிலேயே எடுக்கப்பட்டிருந்தாலும், அவரது திரைக்கதை நேர்த்தி பிரமிப்பூட்டக்கூடியது. ஒவ்வொரு காட்சியும் தனித்தனியே ஒரு சிறுகதை போலிருக்கும். தொடுக்கும் நேர்த்தியில் அதுவே ஒரு நாவலாக விரியும். பாக்யராஜின் படங்களில் வசனம் நிறைய இருக்கும் என்றாலும், அவர் வசனத்தை நம்பும் இயக்குநரல்லர். திரைக்கதைதான் அவரது பலம். சொல்ல வரும் விஷயம் எங்கே சரியாகப் புரியாமல் போய்விடுமோ என்கிற பதற்றமே அவரை அதிக வசனம் எழுத வைக்கிறது என்று ஒவ்வொரு படத்திலும் எனக்குத் தோன்றும்.

தாவணிக் கனவுகள் என்று நினைக்கிறேன். [தான். இப்போது சந்தேகமில்லை.] கதாநாயகன், தனது சகோதரிகளுடன் சினிமா பார்க்க தியேட்டருக்குப் போவான். உள்ளே நுழைந்ததும் பெட்டிக்கடைக்குச் சென்று நாலணாவை எடுத்து நீட்டுவான். கடைக்காரன் ஒரு மாதிரி பார்த்துவிட்டு என்ன வேணும் என்பான். கதாநாயகன், ‘அஞ்சு அஞ்சு பைசா வேணும்’ என்று கேட்பான்.

அந்தக் கணத்துக்கு அது நகைச்சுவைக் காட்சி. ஆனால் அடுத்தக் காட்சியில் அதுவே உறையச் செய்துவிடும். படத்தில் ஏடாகூடமாக ஏதாவது காட்சி வந்தால் அஞ்சு காசைக் கீழே போட்டுவிட்டு சகோதரிகளைக் குனிந்து தேடச் சொல்வான் கதாநாயகன். வயது வந்த தங்கைகள். திருமண வயது வந்தும் அதற்கு வழியில்லாதவர்கள். ஒரு  ‘பொறுப்புள்ள’ டிபிகல் லோயர் மிடில் க்ளாஸ் அண்ணனாக லட்சணமாக அவன் செய்யக்கூடியது அதுதான்!

ஆனால் துரதிருஷ்டவசமாக அப்படியான ஓர் ஏடாகூடக் காட்சியில் அவனே லயித்துவிட, கடைசித் தங்கை நினைவூட்டுவாள், ‘அண்ணே, அஞ்சு பைசா போடல?’

அண்ணன் தங்கை உறவு, அதிலுள்ள நெருக்கம், பாசப்பிணைப்பு, பொறுப்புகள், கையாலாகாத்தனம், வாழ்வின் அதி உன்னத அபத்தக் கணங்கள் பற்றிய மௌன விமரிசனம் அனைத்தும் அந்த ஒரு ஷாட்டில் வெளிப்பட்டுவிடும்.

பாக்யராஜின் தோல்வியுற்ற படங்களில்கூட இம்மாதிரியான அழகிய காட்சிகள் ஏராளமாக இருக்கும். படத்தின் தோல்விக்கு என்ன காரணம் என்பதைக் கூட அவரது திரைக்கதையை மனத்துக்குள் ஒருமுறை திரும்ப ஓட்டினாலே புரிந்துவிடும். ரசிகர்களால் ஓடுவது, பாடல்களால் ஓடுவது, டெக்னிக்குகளால் ஓடுவது, பிரம்மாண்டங்களால் ஓடுவது, ஸ்டார் வேல்யுவினால் ஓடுவது, மசாலாவினால் ஓடுவது என்றெல்லாம் இல்லாமல் திரைக்கதையால் மட்டுமே ஓடிய – திரைக்கதையால் மட்டுமே ஓடாத படங்களைத் தமிழில் தந்த ஒரே இயக்குநர் அவர் என்பது என் அபிப்பிராயம்.

பாக்யராஜுக்குப் பிறகு வெகுஜன சினிமாவில் சரியான திரைக்கதைக்காக அதிகம் மெனக்கெடுபவர் கே.எஸ். ரவிகுமார். எஸ்.பி. முத்துராமன் வரையிலான காலக்கட்டத்துக்குப் பிறகு கமலஹாசனுக்குப் பெரும்பாலான வெற்றிப்படங்களை அளித்தது ரவிகுமார்தான் என்று நினைக்கிறேன். கிரேசி மோகன் மேலோங்கித் தெரியும் அவரது பல நகைச்சுவைப் படங்களிலேயே ரவிகுமார் இயக்கியவை வெற்றிப்படங்களாகவும் பிறர் இயக்கியவை அத்தனை பெரிய வெற்றியை அளிக்காதவையாகவும் இருப்பதை சினிமா புள்ளிவிவரம் அறிந்தவர்கள் எடுத்துச் சொல்லலாம்.

ரவிகுமாரின் திரைக்கதைகள் பாக்யராஜ் பாணித் திரைக்கதைகள் அல்ல. இவரும் கமர்ஷியலாகச் சிந்திப்பவர்தான். கேளிக்கை என்பதுதான் பிரதானம். ஆனால் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு துளி புத்திசாலித்தனம் இருக்கும்.  அஜித்தை வைத்து அவர் இயக்கிய வரலாறு என்ற படத்தை, காட்சி காட்சியாக நிறுத்தி, பார்த்தை அப்படியே எழுதிப் பார்த்திருக்கிறேன். மிக நீளமான, ஏராளமான முடிச்சுகள், சஸ்பென்ஸ் கொண்ட அந்தக் கதையை ஓரடி கூட போரடிக்காதபடிக்கு எழுதியிருப்பார். இத்தனைக்கும் பாக்யராஜ் செய்கிற சிலிர்ப்பூட்டக்கூடிய சிறுகதை வடிவமெல்லாம் ரவிக்குமாரிடம் கிடையாது. அவரது தோல்விப்படங்களுள் ஒன்றான ‘முத்துக்குளிக்க வாரீகளா’ நல்ல கமர்ஷியல் திரைக்கதை வடிவத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. அந்தப் படம் தோற்றதற்குக் காரணம், ரவிக்குமாரே முக்கிய வேடத்தில் நடித்தது. தசாவதாரத்தை ரவிகுமார் தவிர்த்து வேறு யாராவது இயக்கியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று எண்ணிப்பார்க்கவே கலவரமாக இருக்கிறது.

இன்றைக்கு சினிமாவில், பழைய காலம்போல, பக்கம் பக்கமாகப் பேசவேண்டுமென்று யாரும் நினைப்பதில்லை. நாங்கள் சமீபத்தில் வெளியிட்ட மிஷ்கினின் சித்திரம் பேசுதடி திரைக்கதை நூலையும் விரைவில் வெளியிடவிருக்கிற சுப்ரமணியபுரம், நாடோடிகள், பசங்க ஆகிய படங்களின் திரைக்கதைகளையும் படித்துப் பார்க்கும்போது தமிழ்சினிமா இன்னும் கொஞ்ச காலத்துக்கு சுபீட்சமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.

சுவாரசியத்துக்குக் குறைவில்லாமல், கேளிக்கை அம்சங்களில் பழுதில்லாமல், அதே சமயம் அழுத்தமான ஒரு கதையை, ஒரு செய்தியை, குறைவான சொற்களில், பெரிதும் காட்சி ரூபத்தில் நேர்த்தி குன்றாமல் தருகிற திரைக்கதைகள் நிறையவே வருகின்றன.

ராதாமோகனின் மொழி, அபியும் நானும் இரண்டுமே சமீபத்தில் வெளிவந்தவற்றுள் நல்ல திரைக்கதைகளாக எனக்குத் தோன்றின. அபி தோற்றதற்கு ராதாமோகன் காரணமில்லை. அபிதான் என்பது என் அபிப்பிராயம்! தவிரவும், ஒரு கட்டத்துக்குப் பிறகு பிரகாஷ்ராஜின் குணசித்திரம் ஒரு கார்ட்டூன் போல் மாறிவிடுவதும் அந்நியப்பட்டுவிடுகிறது. ஆனால் திரைக்கதை பயில இவரது இந்த இரண்டு படங்களுமே வெகுவாக உதவும்.

கீழே என்னைக் கவர்ந்த சில தமிழ்ப் படங்களின் திரைக்கதைகளைப் பட்டியலிட்டிருக்கிறேன். நல்ல படம், சிறந்த படம், மோசமான படம், ஓடியது, ஓடாதது, குப்பை, கோமேதகம் என்று படம் பற்றிய மொத்த அபிப்பிராயத்தை இந்தப் பட்டியலுக்கு தயவுசெய்து கொண்டுவராதீர்கள். இவை, எடுத்துக்கொண்ட கதைக்கு வலு சேர்க்கும் விதமாக எழுதப்பட்ட விறுவிறுப்பான, சுவாரசியமான திரைக்கதைகள்  என்று எனக்குத் தோன்றுகிறது. அவ்வளவே. இவை எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது. அது அவசியமும் இல்லை. இம்மாதிரி ஒவ்வொருவரும் ஒரு பட்டியல் தயாரித்தால் ஒரு தோராய சிறந்த திரைக்கதைகள் பட்டியலை அதிலிருந்து நாம் உருவாக்க இயலும்.

1. சிந்து பைரவி [கே.பாலசந்தர்] 2. மறுபடியும் [ பாலுமகேந்திரா] 3. இருவர் [மணி ரத்னம்] 4. இது நம்ம ஆளு [ கே. பாக்யராஜ்] 5. ராசுக்குட்டி [ கே. பாக்யராஜ்] 6. டார்லிங் டார்லிங் டார்லிங் [கே. பாக்யராஜ்] 7. ஹே ராம் [கமல் ஹாசன்] 8. குருதிப்புனல் [கோவிந்த் நிஹலானி – கமல்ஹாசன்] 9. மொழி [ ராதா மோகன்] 10. அபியும் நானும் [ராதா மோகன்] 11. சுப்பிரமணியபுரம் [சசிக்குமார்] 12. நாடோடிகள் [ சமுத்திரக் கனி] 13. முதல் மரியாதை [பாரதிராஜா] 14. பாய்ஸ் [ ஷங்கர்] 15. நாட்டாமை [ கே.எஸ். ரவிக்குமார்] 16. கோபாலா கோபாலா [ ஆர். பாண்டியராஜன்] 17. பாட்ஷா [ சுரேஷ் கிருஷ்ணா] 18. ஆத்மா [ பிரதாப் போத்தன்] 19. நள தமயந்தி [ கமல் ஹாசன்] 20. சூரிய வம்சம் [ விக்கிரமன்] 21. சிவகாசி [ பேரரசு] 22. போக்கிரி [ பிரபுதேவா] 23. தூள் [ தரணி] 24. சென்னை 28 [வெங்கட் பிரபு] 25. பூவெல்லாம் கேட்டுப்பார் [ வஸந்த்]

சற்றும் யோசிக்காமல் மனத்தில் மேலோங்கி வந்த முதல் 25 திரைக்கதைகளின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். யோசித்தால் இன்னும் பல சேரும். அதை நீங்களும் செய்யலாம்.

Share

20 comments

  • சிந்தனை குதிரையைத் தட்டிவிட்ட சுவாரசியமான பதிவு. நிதானமாக எதிர்வினை செய்யணும். தூங்கப் போகுமுன்னாலே ரெண்டொரு பாய்ண்ட்டுகள்.

    1. இந்திப்படமெல்லாம் இப்ப, முந்தி போல இல்லை. நீரஜ் பாண்டே (A வெட்னஸ்டே ), அனுராக் காஷ்யப் ( தேவ் டி, நோ ஸ்மோக்கிங்), விஷால் பரத்வாஜ் ( கமினே) , இம்தியாஸ் அலி ( லவ் ஆஜ் கல்) , ஸ்ரீராம் ராகவன் ( ஜானி கத்தார்) போன்றவர்களை பரிந்துரை செய்கிறேன்.

    1.பட்டியலும் ஒத்துப் போகிறேன், ஒண்ணைத் தவிர. ஆத்மா ???????

    • பிரகாஷ், நன்றி. ஆத்மாவை நான் குறிப்பிட்டதற்குக் காரணம் உண்டு. அந்தப் படம் பார்த்து எப்படியும் 15 ஆண்டுகளாகியிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரே ஒருமுறைதான் பார்த்தேன். அதுவும் ரிலீஸுக்கு நான்கைந்து தினங்களுக்கு முன்னர். ஆனால் இன்றுவரை ஒவ்வொரு காட்சியும் துல்லியமாக நினைவிருக்கிறது. சரியான திரைக்கதை அமையாது போயிருந்தால் இது சாத்தியமில்லை. அதனால்தான்!

    • விட்டுப்போன இன்னொரு பதில் – பிரகாஷுக்கு. நீரஜ் பாண்டே சரி. தேவ் டி பார்த்தேன். படம் நன்றாக இருக்கிறது என்றாலும் திரைக்கதை சரியானதாகத் தோன்றவில்லை. பல காட்சிகளுக்கு ஆல்டர்நேட் தோன்றிக்கொண்டே இருக்கிறது. அறிவுஜீவித்தனம் வெளிப்படையாகத் தெரிந்தால் அது நல்ல திரைக்கதை அல்ல 😉 நீங்கள் குறிப்பிட்ட மற்ற இருவரை நான் இன்னும் பார்க்கவில்லை.

  • பாரா மேற்குறிப்பிட்டவற்றுடன் இவற்றையும் சிறந்த திரைக்கதைகள் பட்டியலில் தாராளமாக சேர்க்கலாம்:
    1. நாயகன் – மணிரத்னம்
    2. மெளனராகம் – மணிரத்னம்
    3. அக்னி நட்சத்திரம் – மணிரத்னம்
    4. தளபதி – மணிரத்னம்
    5. ரோஜா – மணிரத்னம்
    6. பம்பாய் – மணிரத்னம்
    7. அலைபாயுதே – மணிரத்னம்
    8. கன்னத்தில் முத்தமிட்டால் – மணிரத்னம்
    9. தசாவதாரம் – கமல்ஹாசன்
    10. விருமாண்டி – கமல்ஹாசன்
    11. தேவர் மகன் – கமல்ஹாசன்
    12. மகாநதி – கமல்ஹாசன்
    13. இந்தியன் – ஷங்கர்
    14. முதல்வன் – ஷங்கர்
    15. அந்நியன் – ஷங்கர்
    16. ஹவுஸ்ஃபுல் – ரா.பார்த்திபன்
    17. ரமணா – ஏ.ஆர்.முருகதாஸ்
    18. பருத்தி வீரன் – அமீர்
    19. அழகி – தங்கர்பச்சான்
    20. ஆட்டோகிராஃப் – சேரன்
    21. தவமாய்த் தவமிருந்து – சேரன்
    22. காதல் – பாலாஜி சக்திவேல்
    23. சுப்ரமணியபுரம் – சசிகுமார்
    24. வெண்ணிலா கபடி குழு – சுசீந்திரன்
    25. அஞ்சாதே – மிஷ்கின்

    • சிஎஸ்கே, உங்கள் பட்டியலுக்கு நன்றி. ஆனால் இந்த 25ல் எனக்கு ரமணா மட்டுமே ஒத்துவருகிறது 😉

  • முன்னர் எப்பவோ எழுதினது. http://pitchaipathiram.blogspot.com/2006/09/blog-post.html

    ‘இந்தியாவிலேயே மிகச் சிறந்த திரைக்கதை படைப்பாளி’ என்று பாக்யராஜைப் பற்றி வெகுஜன பத்திரிகைகள் பல நேரங்களில் சிலாகிப்பதுண்டு. ஒரு பொய்யை திரும்ப திரும்பச் சொன்னால் அது உண்மையாகி விடும் என்பதற்கு இது ஒர் சிறந்த உதாரணம்.
    அசட்டுத்தனமான நகைச்சுவையையும் பாலியல் உணர்வுகளையும் ஏதோவொரு நூதனமான சதவிகிதத்தில் கலந்து தருவதே அவரது பாணி.

    ()

    என்னைப் பொறுத்தவரை இந்தியாவிலேயே மிகச் சிறந்த திரைக்கதை படைப்பாளி என்றால் மணிரத்னத்தைத்தான் குறிப்பிடுவேன். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்க வைக்காத ஒவ்வொரு முறையும் புது பரிமாணங்களை தருகிற படங்களே சிறந்த திரைக்கதையை உள்ளடக்கியது என்பது என் அளவுகோல். உள்ளடக்கத்தில் உள்ள விமர்சனங்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால் மணிரத்னத்தின் பெரும்பாலான படங்கள் இதில் அடங்கி விடும். மிக வேகமான திரைக்கதையுடன் கூடிய தமிழ்படம் என்றால் உடனே நினைவுக்கு வருவது, தரணியின் ‘கில்லி. என்னாலும் ஒரு பட்டியல் இட முடியுமா என்று பார்க்கிறேன்.

    • சுரேஷ், கில்லி திரைக்கதை அதன் தெலுங்கு வடிவத்தைப் பெரும்பாலும் அப்படியே பின்பற்றியது. எனவே தரணியுடையதாகச் சொல்லத் தோன்றவில்லை. தவிர வேகம் மட்டுமே ஒரு நல்ல திரைக்கதையைத் தீர்மானிக்கும் அம்சம் அல்ல அல்லவா? பாக்யராஜ் குறித்த உங்கள் கருத்து வேறு பலருக்கும் உண்டு. நான் முருங்கைக்காயை எடுத்து வைத்துவிட்டு சாம்பார் சாதம் சாப்பிடுகிறவன்.

  • Tamil film industry has a long history.If someone misses the name of Sridhar in such a list or ignores the earlier films of Balachander or omits the name of Jayakanthan what can one say of his/her knowledge about tamil films. Bhim Singh, KSG,
    APN have been successful at different times but have had their own share of failures. How about the film scripts of movies like Parashakthi, Koondu Kili or Malai Kallan?. How about the scripts of Karpagam or Sarada or Oru Nadigai Natakam Parkiral or Kaval Deivam?. The problem with Prakash (icarus) and Suresh Kannan is that they are clueless about tamil cinema as they perhaps know of tamil films from the late 70s/80s only. What is a good script and how to make a good film from a good script. A good script can turn out to be a silly movie if the director and others fail to make a good film out of it. Some scripts may be readable but as movies based on them lack the finesse. Bhagyaraj made so many films and except some all his films were failures. In fact after Moondru Muditchu all the films directed by him did not do well in box office?. Some were duds.

  • மலையாளத்தில்…
    1.தனியாவர்த்தனம்
    2.கிரீடம்
    3.சுஹ்ருதம்
    4.மணிசித்திரதாழ்
    5.மிதுனம்
    6. சித்ரம்
    7. சதயம்
    8.பரதம்
    9.தேவாசுரம்
    10. யாத்ரா

  • //நான் முருங்கைக்காயை எடுத்து வைத்துவிட்டு சாம்பார் சாதம் சாப்பிடுகிறவன்//

    அந்தக் கண்றாவிக்கு முருங்கைக்காய் இல்லாமலேயே சாம்பாரை வைத்து தொலைக்கச் சொல்ல வேண்டியது தானே! முருங்கைக்காய் செலவாவது மிச்சமாகும்.

  • @filmfan : நான் எங்கே அய்யா அப்படிச் சொன்னேன்? பா.ரா போட்டிருக்கிற பட்டியல் சரி என்று சொன்னேன், ஆனால் அதுதான் முழுமையானது என்றா சொன்னேன்?

    //The problem with Prakash (icarus) and Suresh Kannan is that they are clueless about tamil cinema as they perhaps know of tamil films from the late 70s/80s only//

    எனக்கு சுரேஷ்கண்ணனின் தமிழ்ச்சினிமா புரிதல் / புரியாமை குறித்து அவ்வளவாகத் தெரியாது. [இப்பதிவில், அவர் பாக்யராஜ் குறித்து எழுதிய அபிப்ராயத்தில் துளியும் உடன்பாடு கிடையாது. ]ஒருவேளை, அது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம் ஆனால், என்னைப் பற்றி இந்த முடிவுக்கு எப்படி வந்தீரோ புரியவில்லை.

    நீர் சொல்லுகிற ஸ்க்ரிப்ட்டும், நவீன சினிமா யுகத்திலே , திரைக்கதை எனப்படுகிற வஸ்துவும் வேறு வேறானவை. ஸ்ரீதர் , கே.எஸ். கோபாலகிருஷ்ணன், பீம்சிங், நீலகண்டன், பந்துலு படங்கள் எடுத்த காலத்திலே, திரைக்கதை என்கிற வார்த்தையே புழக்கத்தில் கிடையாது. சினேரியோ என்று டைட்டில் கார்டில் போடுவார்கள். ரைட்டர் / ஸ்க்ரிப்ட் ரைட்டரின் முக்கியமான பணியே, படத்தின் கதையை எப்படி சுவாரசியமான காட்சிகள் மூலம் கோர்வையாகச் சொல்வது என்பதுதான். கதை, ஸ்கிரிப்ட் , வசனம் ஆகிய மூன்றும் தனித்தனியான வரைமுறை இல்லாமல், ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுபவை.

    ஒரு பாவமன்னிப்பையோ, பாதாள பைரவியையோ, பதிபக்தியையோ, பஞ்சவர்ணக்கிளியையோ, ரிவர்ஸ் எஞ்சினியரீங் செய்து எழுதினால், ஒரு நல்ல சிறுகதையோ, குறுநாவலோ கிடைத்துவிடும். ஏனெனில் அவை கதைகளைக் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ஸ்க்ரிப்ட்டுகள். ஆனால், இப்பொழுது திரைக்கதை என்று சொல்கிற விஷயம் வேறு. கதை எந்தக் கண்ணராவியாக இருந்தாலும், அதை, வெறுமனே காட்சிப்படுத்துதல் மூலமாகவே எப்படிச் சுவாரசியமாகச் சொல்வது என்பதுதான் திரைக்கதையின் அம்சம். அந்த அம்சம் எந்தப் படங்களில் இருக்கிறது என்பதுதான் இந்தப் பதிவின் அடிப்படையே தவிர, தமிழ்சினிமாவின் வரலாற்றை ஆய்ந்தறிந்து எவை சிறந்த படங்கள், எவை மோசமான படங்கள் என்று பட்டியல் போடுவதல்ல.

    வல்லவனுக்கு வல்லவன், மூன்றெழுத்து, நான் ஆகிய படங்களை மிஞ்சிய ஒரு மசாலாப் படமில்லை. உண்மை. காதலிக்க நேரமில்லை, சபாபதி, கலாட்டாக் கல்யாணம் ஆகிய படங்களை மிஞ்சிய ஒரு காமெடிப்படமில்லை. அதுவும் உண்மை. ஆனால், இப்போது , திரைக்கதை என்று அலப்பறை செய்கிற இலக்கணத்துக்கு ஒத்துவருகிற படங்கள் இல்லை அவை. இப்பொழுது திரைக்கதைக்காகத் தூக்கிப் பிடிக்கிற படங்களும் நாளை, அப்பொழுதைய திரைப்படப் போக்குக்கு ஏற்றார் போலக் காணாமல் போகும். ஆகவே, என்ன சொல்கிறேன் என்று புரியாமல் குதிக்கவேண்டாம்.

  • பா.ரா : நானும் முதல்நாளே ‘ஆத்மா’ பாத்தேன், அதானாலே தான் அத்தனை கேள்விக்குறிகள் 🙂 ரொம்ப மொக்கை போல ஞாபகம். பத்து நாளிலே கடவுள் வருவார்னு கெளப்பிவிட்டு, கடைசி காட்சியிலே கடவுள் தோன்றுவார்னு நினைவு. வாத்யாரோட தேவன் வருகையை நினைவூட்டினது. படம் அவ்வளவாப் பிடிக்கலை, காட்சிகளும் நினைவில்லை. விசித்ராவாடோ, ‘வெளக்கு வைப்போம் , வெளக்கு வைப்போம்’ தவிர 🙂

  • நல்ல சுவாரசியமான பதிவு. Objective-ஆ சிறந்த வெற்றி பெற்ற திரைக்கதைன்னு ஒரு பட்டியல் போடலாம். ஆனால் பிரச்சினை என்னவென்றால் தமிழில் இருக்கும் சிறந்த படங்களின் மூலங்கள் பெரிதும் கடன்வாங்கப்பட்டவையாக இருக்கின்றன.

    ஒரு காலத்தில் பாலுமகேந்திராவின் ‘அழியாத கோலங்கள்’ம் பார்த்து மிகவும் பாதிப்படைந்து இருக்கிறேன். கடந்த வாரம் Summer 42 என்றப் பழைய படம் பார்த்த பொழுது அந்த பிரமிப்பு கரைந்து போனது. அப்பட்யே அந்த கதையை அப்படியே உருவி லோக்கலைஸ் பண்ணிவிட்டார் பாலு. அவருடைய ஜூலி கணபதி கூட Misery என்றப் படத்தின் சீன்-பை-சீன் ரீமேக்தான். அவர் அதை ஒப்புக் கொண்டிருக்கிறாரா என்று தெரியாது. உங்கள் பட்டியலில் இருக்கும் ‘மறுபடியும்’ மகேஷ் பட்டின் ’அர்த்’ படமே. அவருடைய சில சிறுகதைகள் குறிப்பிடத் தக்கவை என்பதை மறுக்க முடியாது.

    பாலசந்தரின் ஆரம்பகாலப் படங்களில் சிலதும் (நூற்றுக்கு நூறு போன்றவை) சொல்லலாம். ஆனால் என்றாவது அதன் ஒரிஜினலைப் பார்க்க நேரிடுமோ என்ற பயம் உண்டு.

    மணிரத்னமும், கமலும் ஹாலிவுட் தாக்கத்தில் நிறைய திரைக்கதைகள் செய்திருக்கிறார்கள். தேவர்மகன் அப்படியே காட்ஃபாதர் – 1 ஐ நினைவில் கொண்டு வரும் படம். மணி ரத்னத்தின் ’இருவர்’ஐ குறிப்பிட்டிருந்தீர்கள். அது ஒரு தோல்வியடைந்த திரைக்கதையாகத்தான் எனக்குத் தெரிந்தது. திராவிட இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களின் வாழ்வை இப்படி ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாத முறையில் சொல்ல முடியுமா என்ன்? நிறைய காம்ப்ரமைஸ் செய்து கொண்டு தேவையி்ல்லாத aberrations கொண்ட படம்.

    நீங்கள் சொன்ன மாதிரி பாக்யராஜ் ஒரு சிறந்த திரைக்கதாசிரியர்தான். அவருடைய ஆக்கங்களில் ‘அந்த 7 நாட்கள்’ என்னை மிகவும் கவர்ந்தது. அவரிடம் பிடித்தது அவருடைய கதைகள் பெரும்பாலும் ஒரிஜினலாகத் தெரியும். சிலது கொஞ்சம் மொக்கையாக இருந்தாலும். தமிழ் / ஹிந்தி சூழலுக்கு ஏற்ற வகையில் சிறப்பான திரைக்கதைகள் செய்திருந்தார்.

    நிறைய படங்கள் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். விடுபட்டுப் போன குறிப்பிடத்தக்க படங்கள் என்று நான் நினைப்பது கமல் (ராகிர)ன் ‘மகாநதி’ மற்றும் ருத்ரைய்யாவின் ’அவள் அப்படித்தான்’. ஹரிஹரனின் ‘ஏழாவது மனிதன்’ அதிகமாக ஞாபகங்களில் இல்லை. ஆனால் சில நல்ல உத்திகளைக் கையாண்டிருந்தார் என்று நினைவு.

    பி்ரகாஷ் சொன்ன கருத்துகள் அருமை. இன்றைய தமிழ் சினிமா ஆதார கதை எதுவும் இல்லாமல் மொக்கையாக திரைக்கதை என்கிற ‘சீன் பிடிப்பதை’ முக்கியமாக செய்கிறார்கள். அம்முறையில் வெற்றி பெற்றப் படங்கள்தான் தற்பொழுது அதிகம். பார்க்கிறவர்களும் கதையைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.

  • டான் ப்ரௌனின் டா வின்சி கோட் படிக்குமுன்னரே அந்தக் கதையை திரைப்படமாக்க போகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். படிக்கும்போதே காட்சியாக விரியும் கதை. ராபர்ட் லாங்க்டனாக டாம் ஹாங்க்ஸை கண் முன்னே பார்த்துக் கொண்டே படிக்கும் உணர்வு. இது போல் பல வெற்றிப்படங்கள் நாவல்களிலிருந்து ஆக்கப்பட்டிருக்கிறது.

    தமிழில் ‘மோகமுள்’ படம் பார்க்கும்போது கண்களில் இரத்தம் வடியாத குறை.

  • //Suresh Kannan is that they are clueless about tamil cinema//

    film fan,

    பயப்படாதீர்கள். இரண்டு நாள் படப்பிடிப்பை தூரததில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு பத்தொரு பதிவுகள் சினிமா பற்றி எழுதி விட்டு ‘எனக்கு சினிமா பற்றி தெரிந்துவிட்டது’ என்று பிலிம் (?!) காட்ட மாட்டேன். ஏனேனில் பாராவின் இந்தப்பதிவில் ஆதாரமாக எழுதப்பட்டு விவாதிக்கப்பட வேண்டிய ‘திரைக்கதை’ என்னும் சமாச்சாரத்தைப் பற்றி பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே புரியவில்லை. (உதாரணம்: அனந்துவின் ‘சிகரம்; லெனினின் ‘சொல்லத்துடிக்குது மனசு போன்றவை). வசனம் என்பதை தனியாக எழுதத் தேவையில்லை, அது திரைக்கதையோடு பின்னிப் பிணைந்த சமாச்சாரம் என்பது கூட பலருக்குத் தெரியவில்லை. ஆக.. நானெல்லாம் எம்மாத்திரம்.

    மேலும் என்னுடைய பின்னூட்டத்தில் ‘இயன்றால் நானும் ஒரு பட்டியல் அளிக்கிறேன்’ என்று தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறேன். அதையும் பார்த்த பின்னால் நீங்கள் உங்கள் கருத்தை சொல்லியிருக்கலாம். இவ்வாறான விவாதங்களும் குறிப்புகளும் பாராவே விவரித்திருப்பது போல் முழுக்க முழுக்க தனிமனித ரசனை சார்ந்தது. எனவே ‘நீ சொன்னது சரியில்லை’ என்று யாரும் கொடிபிடிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் குறிப்பிட்டிருக்கிற கால படங்களிலும் திரைக்கதை இருந்தது. ஆனால் அதனின் டெக்னிக்கல் பெயர் வேறாக இருந்திருக்கலாம். எஸ்.பாலசந்தரின் ‘பொம்மை’ சிறந்த திரைக்கதையை உள்ளடக்கியது என்பது என் புரிதல். ஒரு சுவாரசியமான கதையை சினிமாவிற்கு ஏற்றாற் போல் மாற்றுவதுதான் திரைக்கதையின் என்கிற அடிப்படையை மாத்திரம் புரிந்து வைத்திருந்தால் போதும். அதனின் பல பரிணாமங்களான பிளாஷ்பேக், self narration, நான் லீனியர் போன்றவைகளெல்லாம் தயிர்வடையின் மீது தூவப்படும் காராபூந்தி போன்றவைதான். கதை என்கிற சமாச்சாரமே கூட இல்லாமல் ஒரு திறமையான இயக்குநரால் ஒரு சுவாரசிய திரைப்படத்தை உருவாக்க முடியும். சட்டென நினைவுக்கு வருவது .. எஸ்.ஜே. சூர்யாவின் ‘குஷி.’ (அடிக்க வராதீர்கள்!) 🙂

  • //5. ராசுக்குட்டி [ கே. பாக்யராஜ்] // ராசுகுட்டி லிஸ்டில் பார்த்தவுடன் ஒரு பல்பு எரியுதே, நீங்க நம்ம ஆளுதான்.

  • பாக்யராஜ், ரவிக்குமார் முற்றிலும் உண்மை.

    ரசிக்கவேண்டும் என்பவர்களுக்கு மட்டுமல்ல “ஜாலக்கு” வித்தைகள் என்பதை நீங்கள் சொன்னதுபோல் விட்டேத்தியாக பார்த்துக்கொண்டே வந்தாலும் சுவராசியப்படுத்தி விடுகிறார்கள்.

    அதிலும் பாக்யராஜ் தொடக்கம் முதல் அவர் வாழ்க்கை முதல் இன்று வரையிலும் நிறைய விசயங்கள் பார்த்த போது இந்த நிமிடம் வரைக்கும் அவருடைய திறமைகள் அத்தனையும் மிகச் சிறப்பு (நேற்று கூட முந்தானை முடிச்சு)

    இந்த மலையாளம் பக்கம் போகவே முடியாமல் தேர்ந்து எடுக்கத் தெரியாமல் தவித்துக்கொண்டுருந்ததேன். நண்பருக்கு நன்றி.

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி