கனகவேல் காக்க செப்டெம்பரில் ரிலீஸ் ஆவது உறுதியாகியிருக்கிறது. ஆயிரம் ப்ரிண்டுகள், அகிலமெங்கும் ரிலீஸ், கோடி சம்பள ஹீரோ, அசகாயத் தொழில்நுட்ப சாகசங்கள் என்று கதைவிட ஒன்றுமில்லை. கதை பலத்தை நம்பி வெளிவரும் விறுவிறுப்பான கமர்ஷியல் திரைப்படம். கதைக்குக் கரண், கனவுக்கு ஹரிப்ரியா, காரத்துக்குக் கோட்டா சீனிவாசராவ். பாங்காக்கில் கனவுப்பாடல், பாண்டிச்சேரியில் பாம் ப்ளாஸ்ட் சீக்வன்ஸ், சஸ்பென்ஸ், ஆக்ஷன், செண்டிமெண்ட், காமெடி, கலகலப்பு, பரபரப்பு. போதாது?
டைரக்டர் கவின்பாலா, இயக்குநர் சரணின் மாணவர். என் புத்தகங்களைப் படித்துவிட்டு என்னை எழுதக்கேட்டு வந்தவர். முன்னதாக முழுப் படத்துக்கான ஸ்கிரிப்டையும் தயாராக வைத்திருந்தார். மூன்று மணிநேரம் கதை சொன்னார். இரண்டொரு நாள் இடைவெளிவிட்டு இன்னொரு முறை கேட்டேன். அதோடு சரி. எழுத, பத்து நாள்கள். தீர்ந்தது விஷயம்.
உலகில் ஒருநாள் கூட ஷூட்டிங் ஸ்பாட் செல்லாத ஒரே எழுத்தாளன் நானாகத்தான் இருப்பேன். க்ளைமேக்ஸ் படப்பிடிப்பின்போது சில முக்கியமான வசனங்களை எஸ்.எம்.எஸ்ஸில் எல்லாம் அனுப்பி அவரைக் கொடுமைப்படுத்தியிருக்கிறேன். எதற்கும் கோபிக்காத புன்னகை மன்னன்.
ஓர் இயக்குநருக்கும் எழுத்தாளனுக்குமான அலைவரிசை எந்தப் புள்ளியில் சரியாக இணையும் என்று சொல்லமுடியாது. அப்படி இணைந்துவிட்டால் மாதக்கணக்கில் – சமயத்தில் வருடக்கணக்கில் நீளும் படப்பிடிப்பில் எழுத்தாளன் கூடவே இருந்தாக வேண்டிய அவசியமில்லை. அவர் கேமராவில் பார்க்கிற படத்தை எழுதுபவன் மிகச் சரியாக மனத்துக்குள் முன்னதாகப் பார்த்துவிட முடியும். ஆளுக்கொரு விதமாகப் பார்த்தால்தான் சிக்கல்.
இந்தப் படத்துக்கு எழுதியது தனிப்பட்ட முறையில் எனக்கு சந்தோஷமான அனுபவம். அழுத்தமான கதை, விறுவிறுப்பான திரைக்கதை. எழுத்தில் சற்றும் தலையிடாத இயக்குநர், தோழமையுடன் பழகிய குழுவினர், அனைத்துக்கும் மேல் படத்தை முடித்துத் தொகுக்கத் தொடங்கிய நிமிடத்திலிருந்து வருபவர் போகிறவரிடமெல்லாம் வசனங்களைப் பற்றி இன்றுவரை பேசிக்கொண்டே இருக்கும் எடிட்டர் சுரேஷ் அர்ஸ். ‘சுரேஷ் சொன்னார்’ என்ற அறிமுகத்துடனேயே இதுவரை ஆறு பேர் வந்துவிட்டார்கள். என்றைக்காவது நான் மெரினாவில் நிலம் வாங்கினால் அவருக்கொரு சிலை உறுதி.
பத்தே நாளில் முழுப்படத்துக்கும் எழுதி முடித்துக் கொடுத்துவிட்டேன். பிறகு ஒரு நாள் உட்கார்ந்து திருத்தங்கள். அதோடு சரி. அந்தப் பக்கமே போகவில்லை. முழுக்க முடித்து, கொஞ்சம் இடைவெளிவிட்டு இப்போது விஷுவலாகப் பார்க்கும்போது எழுத்து எப்படி உயிர் பெற்று எழுந்து நடமாடுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
‘கோல்டன் பீச் வாசல் கேட்டுக்கு நேரெதிரே, ரோடுக்கு அந்தப்பக்கத்திலிருந்து ஒரு ட்ரை சைக்கிள் கலர் கலராகத் தண்ணீர்க் குடங்களுடன் தள்ளாடி வருகிறது. இந்தப் பக்கம் பேய் வேகத்தில் டேங்கர் லாரி. அந்தப் பக்கம் பிசாசு வேகத்தில் பைக்கில் வருகிற கனகவேல். தண்ணீர் சைக்கிளில் பைக் மோதி ஆறு குட்டிக்கரணம் மேல்நோக்கி அடித்து எழுந்து டேங்கர் லாரியின்மீது விழுகிறான். துரத்தி வருகிற போலீஸ் ஜீப், விளக்கடி கண்டதும் கால் தூக்கும் நாய் போல் இரண்டு டயரில் தேய்த்துக்கொண்டே ஐம்பதடி ஓடிப்போய் அப்படியே யூ டேர்ன் எடுக்கிறது’ என்று எழுதுவதற்கு இருபத்திரண்டு வினாடிகள். எடுப்பதற்கு?
ஆக்ஷன் ப்ளாக்ஸ் அனைத்தும் மிரட்டலாக வந்திருக்கின்றன. கரணுக்கு இது மிகச் சரியான இன்னொரு ஓப்பனிங்காக இருக்கும் என்று நினைக்கிறேன். வெறும் சண்டை ஹீரோவாக அல்லாமல் மிக அழுத்தமான குணச்சித்திரமாக இருக்கிறார்.
‘சாமி’யில் கலக்கிய கோட்டா சீனிவாசராவ் இந்தப் படத்தில் வில்லன். அமைச்சர் வேஷம். சிந்துநதியைத் தமிழ்நாட்டுக்குத் திருப்பச் சொல்லி உண்ணாவிரதம் இருக்கிற அக்மார்க் அரசியல்வாதி. ராதாவுக்குப் பிறகு காமெடி கலந்த வில்லத்தனம் செய்ய ராவ்காருவைவிட்டால் ஆளில்லை.
இந்தப் படத்தின் மையக்கதை ஒரு குறிப்பிட்ட ஆயுதத்தை முக்கியப் பொருளாகக் கேட்டது. ஒரே ஒரு நிபந்தனை. இந்திய ராணுவம், காவல்துறை, இந்தியாவில் இருக்கக்கூடிய தீவிரவாத அமைப்புகள் யாரிடமும், எங்கேயும் அந்த ஆயுதம் இருக்கக்கூடாது! இங்கே கேள்விப்பட்டிருக்கக்கூடக் கூடாது என்று இயக்குநர் சொன்னார்.
எனவே இந்திய ராணுவத்திடம் என்னென்ன இருக்கிறது என்பது முதலில் தெரிந்தாக வேண்டும். படாதபாடு பட்டு அந்த விவரங்களைச் சேகரித்தபிறகு, அந்த இல்லாத ஆயுதத்தைத் தேட ஆரம்பித்தேன்.
இறுதியில், தடை செய்யப்பட்ட ஒரு ரஷ்யத் தயாரிப்பு மெஷின் கன்னைப் பிடித்தேன். 80களில் ஆப்கன் – சோவியத் யுத்தத்தின்போது அது பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிந்தது. அதுகூட ஒரிஜினல் அல்ல. டூப்ளிக்கேட். தடை செய்யப்பட்டிருந்த அந்த ரஷ்ய மாடல் இயந்திரத் துப்பாக்கியின் உள்ளடக்கத்தினை அப்படியே திருடிக்கொண்டு போய் பெல்ஜியத்தில் வைத்துத் தயாரித்து அனுப்பியிருக்கிறார்கள்.
ஆப்கன் யுத்தத்துக்குப் பிறகு அந்த மாடல் வழக்கொழிந்துவிட்டது. வேறு என்னென்னவோ வந்துவிட்டது. இப்போது அதை எங்கே போய்ப் பிடிப்பது?
ஒரு சில புகைப்பட ஆதாரங்கள் மட்டுமே இருந்தன. அதை வைத்து ஆர்ட் டைரக்டர் அந்தத் துப்பாக்கியை மீண்டும் செய்துகொடுத்தார். படத்தில் அது ஒரு ‘சைலண்ட்’ ஹீரோ என்பது அழகிய முரண்.
அப்புறம் பாடல்கள். நான் சொல்ல என்ன இருக்கிறது? ஏற்கெனவே இணையத்தில் பணியாரக் கொண்டைக்காரி வந்துவிட்டாள். இசை, விஜய் ஆண்டனி என்றால் போதும் அல்லவா?
தலைப்பை வைத்து வேல் எதைக்குறிக்கிறது என்று இப்போதே படம் வரைந்து பாகம் குறிக்கத் தொடங்கிவிட்டவர்களை எம்பெருமான் மன்னிப்பார். கதையைச் சொன்னால் விளங்கும். ஆயினும் சொல்லுகிலேன்.
செப்டெம்பருக்கு அதிகநாளில்லை என்பதறிக.
//உலகில் ஒருநாள் கூட ஷூட்டிங் ஸ்பாட் செல்லாத ஒரே எழுத்தாளன் நானாகத்தான் இருப்பேன். //
அப்படியே இருங்கள். நல்லது
வாழ்த்துக்கள் 🙂 வேலுண்டு வினை இல்லை. திருச்செந்தில் ஆண்டவர் துணை
தல,
ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு. காக்க, காக்கன்னு எவ்வளவு நாள் காய வெச்சுட்டாங்க? கடோசியில, அப்பாடி, நெசமாவே வாரும்கறது சந்தோசம். நானும் அங்க இருப்பேன் அப்பங்கறது டபுள் சந்தோசம். கட்அவுட்டு, கமருகட்டு, கனகாபிசேகம், கரகாட்டம் அல்லாம் ரெடி பண்ணிடறேன்.
ரொம்ப ஃப்பிலிங்ஸ்ல கீறன். வோணாம், அழுதுடுவேன்.
எக்கச்சக்கமான வாழ்த்துகளுடன், எதிர்பார்ப்புகளுடன்,
லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்
வாழ்த்துக்கள் சார். பலநாட்களாய் வலைபதிவில் எழுதாமல் இருந்தவரை இந்த பட ரிலீஸ் எழுத வைத்ததில் மிக்க மகிழ்ச்சி. அடுத்த படம் எப்போது?
//‘கோல்டன் பீச் வாசல் கேட்டுக்கு நேரெதிரே, ரோடுக்கு அந்தப்பக்கத்திலிருந்து ஒரு ட்ரை சைக்கிள் கலர் கலராகத் தண்ணீர்க் குடங்களுடன் தள்ளாடி வருகிறது. இந்தப் பக்கம் பேய் வேகத்தில் டேங்கர் லாரி. அந்தப் பக்கம் பிசாசு வேகத்தில் பைக்கில் வருகிற கனகவேல். தண்ணீர் சைக்கிளில் பைக் மோதி ஆறு குட்டிக்கரணம் மேல்நோக்கி அடித்து எழுந்து டேங்கர் லாரியின்மீது விழுகிறான். துரத்தி வருகிற போலீஸ் ஜீப், விளக்கடி கண்டதும் கால் தூக்கும் நாய் போல் இரண்டு டயரில் தேய்த்துக்கொண்டே ஐம்பதடி ஓடிப்போய் அப்படியே யூ டேர்ன் எடுக்கிறது’ //
திரைக்கதை என்றால் இப்படிதான் இருக்குமா? பேப்பரை இரண்டாக மடித்து இடது வலதாக எழுதுவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். விளக்கவும்.
பாரா பெயர் வரும்பொழுது பூசணிக்காய் உடைக்காமல் விடறதா இல்லை. 😀
//திரைக்கதை என்றால் இப்படிதான் இருக்குமா?//
இப்படியும் இருக்கலாம். திரையில் என்ன வரவேண்டும் என்பதற்கான எழுத்து வடிவ நோட்ஸ். இயக்குநருக்கு நாம் எழுதுவது தெளிவாகப் புரியவேண்டும். மனத்தில் காட்சி விரியவேண்டும். அவ்வளவுதான். மிச்சத்தை அவர் பார்த்துக்கொள்வார்.
//அடுத்த படம் எப்போது?//
தம்பி வெட்டோத்தி சுந்தரம். முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. கன்யாகுமரி மாவட்டத்தில் நடக்கிற கதை. இது பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். ஆர்க்கைவில் சினிமா பிரிவில் பாருங்கள். இரண்டாம் கட்டப்படப் பிடிப்பு செப்டெம்பரில் தொடங்கும். அநேகமாக நவம்பர் – டிசம்பரில் படம் வெளியாகக் கூடும்.
வாழ்த்துக்கள்.
\\இந்தப் படத்துக்கு எழுதியது தனிப்பட்ட முறையில் எனக்கு சந்தோஷமான அனுபவம். அழுத்தமான கதை, விறுவிறுப்பான திரைக்கதை. எழுத்தில் சற்றும் தலையிடாத இயக்குநர், தோழமையுடன் பழகிய குழுவினர்,\\
எல்லாரும் சொல்றதத்தான் நீங்களும் சொல்லியிருக்கீங்க…!
🙂
மற்றபடி, வாழ்த்துக்கள் ஸார்.
பாரா! பதிலுக்கு நன்றி. ஆனால் நான் கேட்ட இரண்டாவது கேள்விக்கு பதில் இல்லையே? பேப்பரை உயரவாக்கில் இரண்டாக மடித்து இடவலமாக எழுதுவதுதான் விதிமுறையா? இடப்பக்கம் குறிப்பு, வலபக்கம் வசனம் என்று எழுதவேண்டுமா?
Kumaresan L. V,
கம்ப்யூட்டர்ல எழுதறவர்கிட்டே பேப்பரைப்பற்றிக் கேட்டா என்ன தெரியும்? இப்போதைக்கு அவருக்குத் தெரிஞ்ச பேப்பர்ல்லாம் இந்த வலைப்பதிவுதான் (’பாரா பேப்பர்’) 😉
பாரா,
வாழ்த்துகள், பெங்களூருக்கு ஸ்பெஷல் ப்ரிவ்யூ உண்டுதானே? 😉
– என். சொக்கன்,
பெங்களூர்.
அன்புள்ள திரு குமரேசன்:
நீங்கள் திரைக்கதை எழுத ஆர்வமாயிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்த்துகள். நான் சொன்னதுபோல், எழுத்து வடிவம் ஒரு பொருட்டே இல்லை. சொல்ல வரும் விஷயம் இயக்குநருக்குத் தெளிவாகப் புரியவேண்டும் என்பது மட்டும்தான் முக்கியம். நீங்கள் பேப்பரை மடித்து எழுதினாலும் மடிக்காமல் எழுதினாலும் விஷயம் மட்டுமே முக்கியம்.
தாளை இரண்டாக மடித்து எழுதுவது அந்நாளைய வழக்கம். இடப்பக்கம் காட்சிக்குறிப்புகள், வலப்பக்கம் வசனம் என்றிருந்தால் படிக்க வசதி. ஷாட் பிரிக்க வசதி. பெரும்பாலும் இப்போதும் இம்முறையைத்தான் இயக்குநர்கள் விரும்புகிறார்கள்.
ஆனால் இது முறையான திரைக்கதை வடிவமல்ல. இது நாடக எழுத்து வடிவம். திரைக்கதை எழுதுவதற்கென சில நல்ல மென்பொருள்கள் இருக்கின்றன. நான் Celtx உபயோகிக்கிறேன். என்னைப்போல் ஒருவர் மூவி மேஜிக் உபயோகிக்கலாம். இவற்றில் இந்த இடவலப் பிரிவினை கிடையாது. காட்சி எண், உள்/வெளி விவரங்களை மட்டும் நீக்கிவிட்டால் ஒரு நாவல் போலவே படித்துக்கொண்டு செல்லலாம். மலையாளத்தில் நாவடகம் என்றொரு வடிவம் உண்டு. கிட்டத்தட்ட அதற்கு இணையாக இந்த வடிவத்தைச் சொல்ல முடியும்.
ஆனால் இதெல்லாமும் அத்தனை முக்கியமில்லை. நான் சொன்ன ‘புரிதல்’ ஒன்றுதான். பெரும்பாலான இயக்குநர்கள் கணினி பயன்படுத்துவதில்லை. அவர்களுக்கு ப்ரிண்ட் அவுட் தேவைப்படும். [நான் கொடுக்கும் ப்ரிண்ட் அவுட்டையே ஒரு அசிஸ்டெண்டிடம் கொடுத்து கையால் காப்பி செய்யச் சொல்லிப் படிக்கும் இயக்குநர் ஒருவர் இருக்கிறார்]
ஒரு சரியான கதை, அதற்குரிய காட்சிகளுடன் உங்கள் மனத்துக்குள் வந்துவிட்டால், அது தன்னால் தேர்ந்தெடுக்கும் வடிவத்துக்கு விட்டுவிடுங்கள். எழுதுவது – நன்றாக எழுதுவது ஒன்றுதான் முக்கியம். பேப்பரை எப்படி மடிக்கிறோம் என்பதல்ல.
இதுதான் என்னோட ஒரிஜினல் கமெண்ட் 🙁
லக்கி, பதற்றம் வேண்டாம். டூப்ளிகேட் கமெண்டுகள் தன்னைத்தானே இனம் காட்டும். தானே டெலீட்டும் ஆகிவிடும். 😉 எச்சரிப்பதற்காகவே தனியே கூப்பிட்டுச் சொன்னேன்.
திரு. குமரேசன்,
ரொம்ப சிம்பிள்! ‘ஹாலிவுட் அழைக்கிறது’ வாங்கிப் படியுங்கள்! கிழக்கு பதிப்பக வெளியீடு தான் 😉
advance congrats and best wishes for Kanagavel Kakka’s success.
MovieMagic as you are aware has quite a few inherent issues. Try Final Draft (7.0) and you will love using it.
warm regards
era.mu
முருகன், நன்றி. எவ்வளவோ பாத்துட்டோம் . இதையும் பாத்துருவமே? யூனிகோட் விரோதி ஃபைனல் டிராஃப்ட்தானே? முயற்சி செய்கிறேன். நிற்க. என்னுடைய செல்டெக்ஸ் அனுபவங்களைத் தனியே ஒரு கட்டுரையாக எழுத நினைத்துக்கொண்டிருந்தேன். இன்றே செய்யலாம் என்று உங்கள் குறுங்கடிதம் சொன்னது. நமது பெருந்துயரங்கள்தானே பிறருக்கு நல்ல நகைச்சுவையாகிறது? 😉
ராம், இது நீங்கள் எழுதியிருக்கவேண்டியது! 😉
Hello Raghavan Sir,
Iam happy about you are part of a film.
Iam expecing the movie.
All the best.
ராம் பரவாயில்லை. புத்தகத்தின் பெயரை மட்டும் சொன்னார். நீங்கள் புத்தகம் வாங்க Linkயும் சேர்த்து கொடுத்திருப்பதை என்ன சொல்லுவது….! ‘Marketing’ தெரிந்த ஆள் நீங்கள்… 🙂
படம் வெற்றி பெற வாழ்த்துகள் !!
வாழ்த்துக்கள் பாரா. படம் வெற்றிக்கும்!
மயிலாடுதுறை சிவா…