எங்கு செல்லும் இந்த யுத்தம்?

இருபது நிமிடங்களில் ஐயாயிரம் ஏவுகணைகள் என்பதைக் கண்ணால் அல்ல; மனக்கண்ணால் கூட முழுதாகப் பார்த்து முடிக்க முடியாது. அக்டோபர் ஏழாம் தேதி இஸ்ரேலின் காஸா பகுதியில் இருந்து (அது ஹமாஸின் அதிகார வரம்புக்கு உட்பட்ட, முஸ்லிம்களின் பிராந்தியம்.) சீறிப் பாய்ந்த இந்த ஏவுகணைகள் இஸ்ரேலிய ராணுவத் துருப்புகளைக் குறி வைத்து அனுப்பப்பட்டதாகப் பொதுவில் சொல்லப்பட்டாலும் இந்த நூற்றாண்டு காலப் பகையின் தற்கால சாட்சியாக இஸ்ரேலில் வாழும் சாதாரண மக்கள் (யூதர்கள்) சுமார் எண்ணூறு பேராவது தற்போது வரை இதில் கொல்லப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. மறு புறம் இஸ்ரேல் தனது பதில் தாக்குதலைத் தொடங்கியதன் விளைவாக காஸா நகரம் மீண்டும் ஒரு பேரழிவுக்கு ஆயத்தமாகிவிட்டது. ஹமாஸ் முகாம்கள் என்று சொல்லிக்கொண்டு பெரும்பாலான குடியிருப்புப் பகுதிகளில்தான் குண்டு வீசப்படுகிறது. அந்தப் பக்கத்து மரணங்கள் பற்றிய தோராயக் கணக்கு கூட இன்னும் சரியாக வரவில்லை. கண்ணில் படும் தகவல்களெல்லாம் வெறும் ஊகங்கள் மட்டுமே.

ஹமாஸ் தாக்கத் தொடங்கியதுமே இரண்டு விஷயங்கள் தீவிரமாக அலசப்படத் தொடங்கின.

1. இது உக்ரைன் போர் போல இன்னொரு முடிவற்ற போர் ஆகுமா?

2. இஸ்ரேலிய உளவுத் துறை மொசாட் உலக அளவில் பிரபலம். சர்வ சக்தி பொருந்திய அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏவின் செல்லக் குழந்தை. காஸாவில் இருந்து ஹமாஸ் தாக்கப் போகிறது என்பதை அவர்களால் முன்கூட்டிக் கண்டறிந்திருக்க முடியாதா? எப்படிக் கோட்டை விட்டார்கள்?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டு மற்ற கதையைப் பார்க்கப் போவோம்.

முதலாவது, இஸ்ரேல்-பாலஸ்தீன் பகை என்பது மிகவும் புராதனமானது. குறிப்பாக ஒரு காலக்கட்டத்தைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பீர்களானால் 1948ம் ஆண்டு இஸ்ரேல் என்கிற நாடு உருவானதில் இருந்து நடக்கிற போர் அது. உண்மையில் அதற்கெல்லாம் வெகு காலம் முன்பிருந்தே அந்நிலமெல்லாம் ரத்தம்தான். ஜெருசலேம் என்று ஒரு நகரம். முஸ்லிம்களுக்கு அது மெக்காவுக்கு அடுத்தபடி. கிறித்தவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். யூதர்களுக்கும் அது புனித நகரம். வம்பு வழக்குக்கு இந்த ஒன்று போதாதா?

ஜெருசலேம் இப்போது இஸ்ரேலின் பிடியில் இருக்கிறது. இப்போது என்ன. எப்போதும் அப்படித்தான். அதனால்தான் எப்போதெல்லாம் நினைத்துக்கொள்கிறார்களோ, அப்போதெல்லாம் போர் தொடங்கிவிடுகிறது. கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் தொடங்கியிருக்கும் போர் இதன் தொடர்ச்சியே. குறிப்பாக ஒரு புதிய காரணம் என்று ஏதும் இதுவரை சொல்லப்படவில்லை என்பதைக் கவனியுங்கள்.

இரண்டாவது கேள்வி, மொசாட் தொடர்பானது. அதெப்படி மொசாட் கோட்டை விட்டது? மொசாட்டால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் திட்டம் தீட்டிச் செயல்படுத்தும் அளவுக்கு ஹமாஸ் பெரிய தாதாவா?

கேள்வி நியாயமானதுதான். ஆனால் இதற்கான பதிலை ஆதாரபூர்வமாக முன்வைக்க சாத்தியமில்லை. பொதுவாகவே உளவு அமைப்புகளின் செயல்பாடுகளுக்குக் குத்து மதிப்பாகத்தான் பொருள் புரிந்துகொள்ள முடியும். நூறு சதம் சரியான பதிலைக் கண்டுபிடிப்பது நடைமுறை சாத்தியமற்றது.

மேற்படி விவகாரத்தில் மொசாட் கோட்டை விட்டதா என்றால் அதற்கு இரண்டு பதில்களைச் சொல்ல முடியும்.

1. ஆம், கோட்டை விட்டது.

2. இல்லை. திட்டமிட்டு அவர்கள் ஹமாஸ் தாக்குதலைத் தொடங்க வழிவிட்டு ஒதுங்கி நின்றிருக்கிறார்கள்.

ஏனெனில், ஒவ்வொரு போரையும் இஸ்ரேல்தான் தொடங்கியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் அவர்கள்தாம் முதல் வேட்டையாடிகளாக இருந்திருக்கிறார்கள். பாலஸ்தீனிய முஸ்லிம்கள் இண்டிஃபாதா என்று ஊர்வலம் போவார்கள், கிளர்ச்சி கோஷம் எழுப்புவார்கள். கல் வீசுவார்கள், தீ வைப்பார்கள் எல்லாம் செய்வார்கள்தான். ஆனால் யுத்தம் என்கிற பெரிய வட்டத்துக்குள் அவர்களை இழுத்துப் போட்டு அடிப்பது இஸ்ரேலிய ராணுவமாகத்தான் இருக்கும். இது சரித்திரம்.

இம்முறை அதைச் சற்று மாற்றினால் என்ன? முதல் தாக்குதல் ஏன் ஹமாஸினுடையதாக இருக்கக் கூடாது?

இதற்குச் சில நுணுக்கமான அரசியல் காரணங்கள் இருக்கின்றன. பொதுவாகவே பாலஸ்தீனியர்களின் போராட்டங்களுக்கு இதர அரபு நாடுகள் உதவாது. அரபு சகோதரத்துவம் அது இதுவென்று பேசுவார்களே தவிர, போர் என்று வந்தால் நீ யாரோ நான் யாரோதான். ஏனெனில், இஸ்ரேலைப் பகைத்துக்கொண்டு மத்தியக் கிழக்கில் குப்பை கொட்ட முடியாது. அது ஏனெனில், இஸ்ரேலுக்கு ஒன்றென்றால் மறுகணம் அமெரிக்கா வரிந்து கட்டிக்கொண்டு வந்து நிற்கும்.

என்ன பெரிய இஸ்ரேல். தமிழ்நாட்டின் பரப்பளவில் ஆறில் ஒரு பங்கோ, ஏழில் ஒரு பங்கோ உள்ள சிறிய நிலப்பரப்புதான். மொத்த அரபு நாடுகளும் சேர்ந்து ஒரு அமுக்கு அமுக்கினால் ஜல சமாதி ஆகிவிடும். ஆனால் நெருங்க மாட்டார்கள். புரிந்துகொள்ளுங்கள். இஸ்ரேல் என்பது அமெரிக்காவின் மத்தியக் கிழக்கு கெஸ்ட் ஹவுஸ். பாலஸ்தீனிய அரேபியர்களைத் தாக்குவதற்கென்றே பத்து காசு வாங்காமல் வண்டி வண்டியாக இன்று வரை ஆயுதங்களை அள்ளித் தந்துகொண்டிருக்கிறது அமெரிக்கா. பதிலுக்கு அவர்கள் ஒரு சிறந்த அடியாளாக அமெரிக்காவுக்குக் கேட்பதையெல்லாம் செய்து தருவார்கள்.

கணப் பொழுது சிந்தித்துப் பாருங்கள். இந்தப் பக்கம் பாகிஸ்தான் தொடங்கி, அந்தப் பக்கம் எகிப்து, லெபனான், சிரியா, துருக்கி வரை மிச்சம் மீதி இல்லாமல் மொத்த நிலப்பரப்பிலும் வாழ்பவர்கள் முஸ்லிம்கள்தாம். இஸ்ரேலில் மட்டும்தான் யூதர்கள். இதில் எண்ணெய் வள நாடுகள் என்று எடுத்துக்கொண்டால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பித்து, இரான், இராக், சவூதி அரேபியா, ஏமன், ஓமன், மாமன், மச்சான் என்று எவ்வளவோ வரும். இவர்களில் போரால் பாதிக்கப்பட்ட ஒன்றிரண்டு தேசங்களைக் கழித்துக் கட்டினாலும் இதர நாடுகள் பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு உதவ முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். அமெரிக்க பயம்.

முதல் முறையாக இப்போது இரான் இந்த விவகாரத்தில் ஹமாஸை ஆதரித்திருக்கிறது. நேரடியாக அல்ல. பின்னால் இருந்து இயக்குபவர்களாக.

கடந்த சில மாதங்களாகவே இஸ்ரேலுக்கு எதிரான இரானின் நிலைபாடு குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்து வந்ததையும் இரண்டு நாடுகளும் நட்புறவுடன் பழக வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அவ்வப்போது நீதி போதனை வகுப்புகள் எடுத்ததையும் செய்தியில் கண்டிருக்கலாம். அவ்வளவு தூரம் இரான் இறங்கி அடிக்க ஆயத்தமாகிறது என்னும்போதே, அது ஹமாஸின் பின்னால் நின்று இயக்கப் போகிறது என்பது இஸ்ரேலுக்குத் தெரியாதா அல்லது மொசாட்டுக்குத் தெரியாதா? கொஞ்சம் கூடவா ஆயத்தமாகியிருக்க மாட்டார்கள்?

இதனால்தான் சந்தேகம் வருகிறது. நூறு இருநூறு பேர் தம் தரப்பில் செத்தாலும் பரவாயில்லை, போரை அவர்கள் தொடங்கினார்கள் என்று இருக்கட்டும். நாம் திருப்பித் தாக்கி, மொத்தமாக அழித்தொழிப்போம்.

இப்படியும் முடிவெடுத்திருக்கலாம் அல்லவா?

இதில் இன்னொரு விஷயம் உண்டு. முஸ்லிம் சகோதரத்துவம் என்றெல்லாம் பேசினாலும் ஷியாக்களும் சுன்னி முஸ்லிம்களும் மத்தியக் கிழக்கில் ஒன்றுபட்டு நின்ற சம்பவங்கள் என்று சரித்திரத்தில் பெரிதாக ஒன்றும் கிடையாது. இந்த விவகாரத்தில், இரான் ஒரு ஷியா பெரும்பான்மை நாடு. பாலஸ்தீனத்து முஸ்லிம்கள் – குறிப்பாக ஹமாஸ் ஒரு சுன்னி முஸ்லிம் இயக்கம். எனவே, இப்போது நடப்பது, உண்மையிலேயே ஒரு சரித்திரச் சம்பவம்.

இரான் ஹமாஸைப் பின்னால் நின்று ஆதரிப்பதனால் இஸ்ரேலின் இன்னொரு ஜென்ம எதிரியும் அதன் அண்டை நாடான லெபனானின் கொண்டையில் சூடிய குண்டும் ஆன ஹெஸ்பொல்லா (ஷியா இயக்கம்) பகிரங்கமாகவே இப்போது ஹமாஸை ஆதரிக்க முன்வந்திருக்கிறது.

இதனாலெல்லாம் நூற்றாண்டு அவலம் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என்றோ, பாலஸ்தீனியர்கள் தமது சுதந்தர மண்ணில் கொடியேற்றி மிட்டாய் சாப்பிடுவார்கள் என்றோ சொல்ல முடியாது. சிக்கல் இன்னும் பெரிதாகத்தான் வாய்ப்பு அதிகம் தெரிகிறது.

இஸ்ரேல்-பாலஸ்தீன் யுத்தம் என்று பொதுவில் பேசப்பட்டாலும் எந்த உலக வரைபடத்திலும் பாலஸ்தீன் ஒரு தனி நாடாகக் காட்டப்படாது. ஏனெனில், இக்கணம் வரை அது தனி நாடாக அங்கீகரிக்கப்படவில்லை. சென்ற நூற்றாண்டின் முதல் நாற்பது ஆண்டுகள் வரை, அது அரபு மண்ணாகத்தான் இருந்தது. இரண்டாம் உலகப் போரின் விளைவுகளுள் ஒன்றாக, யூதர்களுக்குத் தனிநாடு என்று ஆரம்பிக்கப் போக, 1947ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ஒரு திட்ட வரைவை முன்வைத்தது. அதே நிலம்தான். கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி யூதர்களுக்கு; மீதிக்கு மீதி பாலஸ்தீனியர்களுக்கு என்று படம் வரைந்து காட்டினார்கள். 48 இல் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்டது. அது பிரிட்டன் சகாயத்தால் நடந்தது. அவ்வளவுதான். அதன் பிறகு அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரேபியர்களைத் தாக்கி, அதே கொஞ்சம் கொஞ்சமாக நிலங்களை அபகரித்து, மொத்த பரப்பளவையும் இஸ்ரேல் என்று ஆக்கிக்கொண்டார்கள்.

இன்றைக்கு பாலஸ்தீன் என்பது தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் ஒரு நிலப்பரப்பு மட்டுமே. அதிலும் மேற்குக் கரை என்று சொல்லப்படுகிற ஜோர்டன் நதிக்கரை ஓர நிலப்பரப்பு கொஞ்சம். அந்தப் பக்கம் காஸா என்கிற இன்னொரு கைக்குட்டையளவு நிலப்பகுதி. அதில் கால்வாசி எகிப்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும். இந்தப் பாலஸ்தீனத்தை மம்மூத் அப்பாஸ் என்பவர் ஆள்கிறார். பிரசிடெண்டென்றுதான் சொல்வார்கள். தனி நாடு போலத்தான் தெரியும். ஆனால் ஐநா இன்னும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ஐநாவின் நூற்றுத் தொண்ணூற்று மூன்று உறுப்பு நாடுகளுள் 139 நாடுகள் மட்டுமே இதுவரை பாலஸ்தீனை அங்கீகரித்திருக்கின்றன. இதர நாடுகளுக்கு உதறல் பிரச்னைகள். எனவே இப்போதைக்கு ‘non-member observer state ‘ என்று குத்துமதிப்பான, உபயோகமில்லாத அந்தஸ்து கொடுத்து உட்கார வைத்திருக்கிறார்கள். பூரண சுதந்தரம் என்பதெல்லாம் இப்போதைக்கு சாத்தியமில்லாதது.

ஏனென்றால் இஸ்ரேல் அதற்குச் சம்மதிக்காது. 1948ம் ஆண்டு முதல் இன்றுவரை போரடிக்கும் போதெல்லாம் போர் செய்து தான் பிடித்து வைத்திருக்கும் பாலஸ்தீனத்து நிலப்பரப்பில் அரை அங்குலத்தைக் கூட அவர்கள் விட்டுத் தரத் தயாராக இல்லை. பாலஸ்தீனியர்களோ, 1967ம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்துக்கு முன்னால் தங்கள் நிலப்பரப்பு என்னவாக இருந்ததோ, அதை அப்படியே தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்கிறார்கள் (பார்க்க: வரைபடம்).

பாலஸ்தீனத்தை ஆளும் தரப்பும் அதைத்தான் கேட்கிறது, அங்கே காஸாவில் தனியாவர்த்தனம் செய்துகொண்டிருக்கும் ஹமாஸும் அதைத்தான் கேட்கிறது. சிக்கல் என்னவென்றால் மம்மூத் அப்பாஸ் தரப்புக்கு ஹமாஸ் ஆகாது. பாலஸ்தீன் விடுதலை முன்னணியும் அதன் நட்பு இயக்கங்களும் ஒரு பக்கம் என்றால் ஹமாஸ் தனிப் பக்கம். என்னதான் காஸாவும் மம்மூத் அப்பாஸின் சமஸ்தானத்துக்கு உட்பட்ட நிலப்பரப்பு என்றாலும் அங்கே அவரது அரிசி பருப்புகள் எடுபடாது. ஹமாஸ் வைத்ததுதான் அங்கே சட்டம்.

புரிகிறதா? இவர்கள் அனைவரும் சுன்னி முஸ்லிம்கள். அதாவது, மேற்குக் கரை மம்மூத் அப்பாஸ் தலைமையிலான பாலஸ்தீன் அரசுக்கு உட்பட்டு இயங்கும் இயக்கங்களும் சரி, காஸாவில் இருந்து செயல்படும் ஹமாஸும் சரி. எல்லோரும் ஓரினம். எல்லோரும் ஓர் குலம் வகையறா. ஆனால் ஒருத்தரோடு ஒருத்தருக்கு ஒத்துப் போகாது. மம்மூத் அப்பாஸ் வகையறாக்களின் அரசியல் ரீதியிலான நடவடிக்கைகள், ராஜதந்திரங்கள், பேச்சு வார்த்தைகள், அமைதி நடவடிக்கைகள் உள்ளிட்ட எதுவும் ஹமாஸுக்கு உடன்பாடானவை அல்ல. இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை என்பதை அடியோடு நிராகரிக்கும் அமைப்பு, ஹமாஸ். இஸ்ரேலை ஒரு நாடாகவே அவர்கள் ஏற்பதில்லை, ஒப்புக்கொள்வதில்லை. அப்பாஸோ, எதையாவது செய்து பாலஸ்தீன் என்கிற தனிச் சுதந்தர நாட்டைக் கண்டுவிட மாட்டோமா என்று போராடிக்கொண்டிருக்கும் குழுவினரின் தலைவர்.

பாலஸ்தீனியர்களின் தன்னிகரற்ற தலைவராக இருந்து இறந்து போன யாசிர் அரஃபாத்தும் அப்படித்தான். ஓஸ்லோ ஒப்பந்தம் அது இது என்று என்னென்னவோ செய்து பார்த்துத் தோற்றவர். அவரது வழி, வேலைக்கு ஆகாது என்பதே ஹமாஸின் நிலைபாடு. அடி அல்லது அழி. இரண்டில் ஒன்று.

இப்போது சிந்தியுங்கள். பாலஸ்தீன் விடுதலை இயக்கங்கள் அனைத்தும் சுன்னி முஸ்லிம் இயக்கங்கள். அவர்கள் அனைவரும் ஒரு பக்கம் இருக்க, ஹமாஸ் இப்போது தனியாக இஸ்ரேல் அரசை எதிர்த்துக் கிளம்பியிருக்கிறது. இந்தச் சமயத்தில் ஹெஸ்பொல்லா என்கிற ஷியா இயக்கம் ஹமாஸுக்குப் பக்க பலமாக வருகிறதென்றால் இங்கே சகோதரச் சண்டை இன்னும் பெரிதாகாமல் வேறென்ன ஆகும்?

இருக்கட்டும். போர் போன்ற ஒன்று மீண்டும் தொடங்கிவிட்டது. இரான் பின்னால் இருக்கும் வரை ஹமாஸால் இந்தப் போரைத் தொடர முடியும். ஆனால் இஸ்ரேலின் பாதுகாவலனான அமெரிக்கா இரானை அப்படியெல்லாம் விட்டு வைக்குமா என்றால், வாய்ப்பே இல்லை. இப்போதுதான் அவர்கள் சவூதி அரேபியாவை இஸ்ரேலுடன் சமரசமாகப் போகச் சொல்லி ஆற்றுப்படுத்தி ஓய்ந்திருக்கிறார்கள். கேட்டுப் பார்த்தும் மசியாத இரான், இப்போது இப்படி ஒரு காரியத்தை ஆரம்பித்திருக்கிறது. இதன் விளைவு நிச்சயமாக மோசமாகத்தான் இருக்கும்.

இரான் மீதான தடைகள், எச்சரிக்கைகள், மிரட்டல்கள் எல்லாம் இனி வரிசையாக வரும். போர் அபாயம் வரை அது போகுமானால் இரான் பின்வாங்கவேண்டி வரலாம். ஏனென்றால் நவீன காலத்தில் யுத்தம் என்றால், நடக்கும் இடத்தில் சம்பாத்தியத்தில் மண் என்று மட்டுமே பொருள். எனவே, இரான் அப்படியொரு தற்கொலை முயற்சிக்கு முன் வருவது சந்தேகமே. இரான் அடங்கிப் போனால் ஹெஸ்பொல்லாவும் வாலைச் சுருட்ட வேண்டி வரும். அப்போது ஹமாஸ் தனித்து விடப்படும்.

அனைத்தையும் இணைத்து யோசித்தால் இது ஒரு முழு நீள யுத்தமாகும் சாத்தியத்தைக் காட்டிலும், பாலஸ்தீனியர்கள் குறுகிய காலத்தில் நிறைய இழப்புகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலையே வரும் என்று தோன்றுகிறது. அவர்களது சுதந்தர பாலஸ்தீன் கனவு நனவாகும் நாள் இன்னும் சிறிது ஒத்திப் போடப்படும்.

பரிதாபப்படுவது தவிர செய்வதற்கு வேறு ஒன்றுமில்லை.

(ஆனந்த விகடன் அக்டோபர் 18, 2023 இதழில் வெளியான கட்டுரை)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!