இந்து தமிழ் திசையில் கடந்த அறுபது நாள்களாக தினமும் வெளியாகிக்கொண்டிருந்த ‘கணை ஏவு காலம்’ இன்று நிறைவு கண்டது. நடுவே ஆயுத பூஜைக்கு ஒரு நாள், தீபாவளிக்கு ஒருநாள் பத்திரிகை வெளியாகவில்லை. மற்றபடி நாள் தவறாமல் வெளியாகி நிறைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
இந்த நாள்களில் இதைத் தவிர அநேகமாக வேறு எதையும் சிந்திக்கக் கூட முடியவில்லை. எப்போதும் படிப்பு, எழுத்து என்று இந்தத் தொடரோடு மட்டுமே வாழும்படி ஆனது. ஒவ்வொரு நாளும் அத்தியாயத்தை வாசித்துவிட்டு வாசகர்கள் அனுப்பிய மின்னஞ்சல்களே இதனை எழுதுவதற்கான சக்தியை அளித்தன. அவர்களுக்கு என் நன்றி.
எப்போதும் போல நான் என்ன எழுதினாலும் எதிர்ப்பதற்குச் சிலர் இம்முறையும் இருந்தார்கள். ஏசி அறையில் உட்கார்ந்துகொண்டு போரைக் குறித்து எழுதுகிறேன் என்று ஒரு குற்றச்சாட்டு. சரித்திரத்தை இப்படியா எழுதுவது என்கிற வழக்கமான இன்னொரு குற்றச்சாட்டு. இவர்கள் யாரும் தவறிப் போய் ஓர் அத்தியாயத்தைக் கூட முழுதாகப் படித்திருக்க மாட்டார்கள் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அதனாலேயே இத்தகு விமரிசனங்களைப் பொருட்படுத்துவதும் இல்லை.
காஸாவில் நடைபெறும் யுத்தக் காட்சிகள் யூட்யூப் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. போதாக் குறைக்கு மத்தியக் கிழக்கு செய்தி ஊடகங்கள் இன்ஸ்டாக்ராம் ரீல்களைப் போலத் துண்டு துண்டாக எடுத்துப் போட்டுக்கொண்டே இருக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களே நேரடியாக வெளியிடும் விடியோக்கள் தனி. இவற்றையெல்லாம் மீறி நாம் என்ன போர்க்கள ரிப்போர்ட் எழுதுவது?
உண்மையில் அது என் நோக்கமோ விருப்பமோ அல்ல. மிக நிச்சயமாக அல்ல. தவிர நான் ஒரு ரிப்போர்ட்டரும் அல்ல. இஸ்ரேல் பாலஸ்தீன் பிரச்னையின் மிக நீண்ட வரலாற்றைப் பேசிய நிலமெல்லாம் ரத்தத்தின் இரண்டாவது பாகத்தைத்தான் இப்போது எழுதினேன். எழுதத் தொடங்குவதற்கு முன்னரே இதைத் தெளிவாகக் குறிப்பிட்டும் இருந்தேன். யாசிர் அர்ஃபாத்தின் மரணம் வரை நீண்டு நிறைந்தது நிலமெல்லாம் ரத்தம். இந்தத் தொடர், இரண்டாயிரமாவது ஆண்டின் தொடக்கம் முதல் இன்றைய ஹமாஸ்-இஸ்ரேல் யுத்தத்தின் தொடக்கம் வரையிலான காலம் வரையிலான வரலாற்றைப் பேசுவது. எவ்வளவோ வாய்ப்பிருந்தும் யுத்தத்தைக் குறித்துப் பேசுவதை முற்றிலும் தவிர்த்தேன். பாலஸ்தீனத்தின் சமகால சரித்திரத்தைச் சொல்வதற்கு இந்த யுத்தம் ஒரு காரணம் மட்டுமே.
எதிர்ப்பாளர்களுக்கு ஒரு விஷயம் புரிவதில்லை. அவர்களுக்குப் பாலஸ்தீன் அல்ல பிரச்னை. அதை நான் எழுதுவதும், இந்துவில் எழுதுவதும் மட்டுமே பிரச்னை. என்னை எதிர்ப்பதன் மூலமாக அவர்கள் வரலாற்றாலும் சமகால அரசியலாலும் தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டு வரும் பாலஸ்தீனத்து முஸ்லிம்களைத்தான் எதிர்க்கிறார்கள். அவ்வகையில் அமெரிக்கா தொடங்கி இந்தியா வரையிலான இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் நிலைபாட்டின் உதிரிப் பிரதிநிதிகளாக வெளிப்பட்டுவிடுகிறார்கள்.
பாரா என்றால் பார்ப்பான். இந்து என்றால் இஸ்லாமிய விரோதப் பத்திரிகை. இந்த ஒற்றைப் பரிமாணத் தட்டைப் பார்வை ஒரு விதமான மன ஊனத்தின் வெளிப்பாடே ஆகும். இக்கணம் வரை ஹமாஸைத் தீவிரவாத இயக்கம் என்றே குறிப்பிட்டு வரும் இந்து, அவ்வியக்கம் ஏன் ஒரு தீவிரவாத அமைப்பல்ல; எதனால் விடுதலை இயக்கம் மட்டுமே ஆகும் என்று தெள்ளத் தெளிவாக எடுத்துக் காட்டிய என் தொடரை வெளியிடத் தயங்கவில்லை. அப்படி இருக்க, வெளியானதைப் படித்துப் பார்க்கக் கூட விருப்பமின்றித் தீர்ப்பெழுதும் பிரகஸ்பதிகளை என்ன செய்வது?
பொதுவாக நான் ஒன்றும் செய்வதில்லை. ஏனெனில் இது இன்றைய பிரச்னை அல்ல. நான் எழுத ஆரம்பித்த காலம் தொட்டு இருந்து வருவதுதான். கூக்குரலிடுவோர் மாறுவார்கள். கூக்குரல்களின் சுருதி மாறும். ஆனால் அது இருக்கும். சில எழுத்தாளர்கள் பாட்டு கேட்டுக்கொண்டே எழுதுவார்கள். நான் இவற்றைக் கேட்டுக்கொண்டு எழுதுகிறேன். அவ்வளவுதான்.
நிற்க. இந்தத் தொடருக்குத் தமிழ் வாசகர்கள் வழங்கிய ஆதரவும் வரவேற்பும் மிகுந்த மன நிறைவை அளித்தது. இதற்காக மேற்கொண்ட சிரமங்கள் எதுவும் அதன் முன் ஒன்றுமேயில்லை. நமக்கு இங்கே முற்றிலும் தவறாகச் சித்திரித்துக் காட்டப்படுகிற ஒரு சமகால எரியும் பிரச்னையின் சரியான முகத்தை அரிதாரங்களின்றிக் காட்டியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். அந்த நிறைவொன்றே எனக்குப் போதும்.
இந்து தமிழ் திசைக்கும் அசோகனுக்கும் வாசக நண்பர்களுக்கும் மீண்டும் என் நன்றி.