காலத்தைக் கடந்து வாழும் ஒரு மாயப் பூனையின் கண்கள் வழியே கலைஞர்களையும் படைப்புகளையும் அவர்களின் சூழலையும் பேசும் ஒரு உலகத்தை, வாசகர்களின் கண்முன்னே விரிவடையச் செய்கிறது இந்த “பூனைக்கதை” நாவல்.
வரலாற்றின் முந்தைய அத்தியாயங்களில் ஒரு காலத்தில் வாழ்ந்த கலைஞர்களை, அவர்கள் விரும்பும் கலையின் பொருட்டு அவர்கள் வாழ நேர்ந்த சூழலை,பல்வேறு நெருக்கடிகளுக்கு நடுவிலும் அவர்களை உயிர்ப்போடு வைத்திருக்கும் கலையின் ஆன்மாவை விரிவாகக் குறிப்பிடும் முதல் பகுதியில், அந்தக் கால கலைஞர்கள் அனுபவித்த வர்ணாசிரம அடுக்குகளின் துயரத்தையும் இந்த நாவல் பேசுகிறது.
இந்தப் பகுதியில் கலைஞர்களுடன் பூனை நிகழ்த்தும் உரையாடல்கள், பெரும் உருக்கொள்ளும் அதன் உருவகங்கள் என தளம் விரிவடைகிறது.
இரண்டாம் பகுதியில் நாம் அதிகம் கேள்விப்படாத தொலைக்காட்சி நெடுந்தொடர் துறையில் பணிபுரியும் கலைஞர்கள் படும் அவலங்கள், அதன் கடைசி அடுக்கில் உழலும் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பாடுகள் என பலவும் விரிவாகப் பேசப்படுகின்றன.
வெவ்வேறு காலகட்டங்களில் இயங்கும் இந்த இரண்டு உலகங்களில் உண்டாகும் விளைவுகளின் ஒற்றுமையை, முற்றிலும் மாறுப்பட்ட, தனக்கேயுரிய தன்மையில் சிறப்பான மொழிநடையில் எழுதி இருக்கிறார் எழுத்தாளர் பா. ராகவன்.
“ஒரு கலைஞன் உண்மையாக இல்லையெனில், எப்படி ஒரு நல்ல இலக்கியம் உருவாகும்?” என்ற கேள்வியை முன்வைத்து காலங்களுக்கு இடையேயான வெளியில், பூனையின் வால் பற்றி தொடர்ந்து நகர்கிறது நாவல்.
எக்காலத்திலும் கலைஞனும் படைப்பும் கடந்து வரும் பாதை, ஒரு நல்ல படைப்பை உருவாக்க வேண்டும் என்ற தாகம் கொண்ட கலைஞர்கள், அதன் பொருட்டு அவர்கள் வாழ விதிக்கப்படும் சூழல் என்ற விஷயங்கள் இரண்டு தளத்திலும் எப்படிக் கையாளப்பட்டுள்ளது என்பதும் நாவலின் சிறப்பு.
காலத்தைக் கடந்து நிற்கத் தக்க படைப்புகளை உருவாக்கும் கலைஞர்களின் மறுபக்கத்தை பேசும் ஓர் நாவல். அது எந்தக் காலம் என்றாலும் கலைஞன் பல்வேறு காரணங்களால் ஒரு அடைப்பட்ட சூழலில் இயங்குகிறான் என்பதை, இரு வேறு காலத்தில் வைத்துப் பேசும் படைப்பு இது.
இதில் பூனை என்பது பல வகைகளில் ஒரு மாய யதார்த்த உருவமாகி, இரண்டு வேறுபட்ட உலகங்களுக்குள்ளும் அந்த அந்த காலத்துக்கான யதார்த்தத் தேவைகளுக்குள் பயணமாகி, வெளிவந்து கேள்விகளை நம்முன் இறைத்து நகர்ந்து கொண்டே இருக்கிறது.
இத்தகையதொரு சிறந்த படைப்பை இவ்வாண்டின் சிறந்த நாவலாகத் தேர்ந்தெடுப்பதில் வாசகசாலை மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது. எழுத்தாளர் பா.ராகவனுக்கும், வெளியிட்ட கிழக்கு பதிப்பகத்திற்கும் வாசகசாலையின் மனமார்ந்த வாழ்த்துகள்.