பொலிக! பொலிக! 67

பொழுது விடிகிற நேரம் அவர்கள் காஞ்சிபுரத்தின் எல்லைக்கு வந்து சேர்ந்தார்கள். அதே சாலைக் கிணறு. அதே நீர் இரைக்கும் பெண்கள். அங்கிருந்து தென்பட்ட அதே கோபுரம்.

ராமானுஜர் கைகூப்பி வணங்கினார். விவரிப்பில் அடங்காத பெரும் பரவசமொன்று மனத்தை நிறைத்து நின்று சுழன்றது. பேரருளாளா, உன்னை விட்டு நகர்ந்துபோய் எத்தனைக் காலமாகிவிட்டது! நீ தூக்கிக் கொண்டு வந்து போட்ட இதே சாலைக் கிணற்றங்கரைக்கு இன்று நானே மீண்டும் வந்து நிற்கிறேன். அன்று நான் ஒன்றுமறியாச் சிறுவன். இன்று உன்னைத் தவிர ஒன்றுமில்லை என்று உணர்ந்த மனிதன். நீ என்னை மீட்டுக் கொண்டுவந்ததே திருவரங்கத்துக்கு அனுப்பிவைக்கத்தான் என்று எண்ணிக்கொள்கிறேன். உன்னை விட்டுச் சென்றதாக நினைப்பதைக் காட்டிலும் இது சற்று ஆறுதல் தருகிறது.

‘சுவாமி, ஏன் அப்படியே நின்றுவிட்டீர்கள்?’ அருகில் இருந்த அருளாளப்பெருமான் எம்பெருமானார் கேட்டார்.

‘ம்? ஒன்றுமில்லை. உம்மையும் என்னையும் இணைத்தவன் இருக்கிற இடத்துக்கு வந்துவிட்டோம் பாருங்கள்! இவன் இல்லாவிட்டால் நானும் இல்லை, நீங்களும் இல்லை என்பதை நினைத்துப் பார்த்தேன். வாரும், நல்லது செய்தவனுக்கு நன்றி சொல்லப் போவோம்.’

காலைக் கடன்கள் முடித்துவிட்டு அங்கேயே குளித்தெழுந்து திருமண் தரித்து உடையவரும் சீடர்களும் கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள்.

‘உடையவரே, உங்களை எங்களுக்கு அளித்த மண் இது. அந்த விதத்தில் திருவரங்கத்தின் மண்ணைக் காட்டிலும் இதுவே எங்களுக்குப் புனிதமானது’ என்றான் கிடாம்பி ஆச்சான்.

‘நான் பெரியவனல்ல ஆச்சான்! நம் அனைவரைக் காட்டிலும் மிகப் பெரியவர் ஒருவர் இந்த ஊரில் இருக்கிறார். நீங்களெல்லாம் அவரை தரிசிக்க வேண்டும்.’

‘அருளாளப் பெருமானைத்தான் தரிசிக்கப் போகிறோமே சுவாமி!’

‘நான் சொல்லுவது அவனைக் காட்டிலும் பெரியவர்.’

திகைத்துவிட்டார்கள் சீடர்கள். பரிவாரம் கோயிலை நெருங்கிக்கொண்டிருந்தது. சட்டென்று ராமானுஜர் ஒரு மடத்தின் வாசலில் நின்றார். ‘ஒரு நிமிடம் காத்திருங்கள்’ என்று சொல்லிவிட்டு, படியேறி உள்ளே போனார்.

‘சுவாமி..’

காற்றுக்கு வலிக்காமல் மெல்லிய குரலில் அழைத்தார். உள்ளே ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்த உருவம் விழித்தது. ‘யாரது?’

‘அடியேன் ராமானுஜன்.’

வாரிச் சுருட்டிக்கொண்டு அவர் எழுந்த கணத்தில் தடாலென்று அவர் தாள் பணிந்தார் ராமானுஜர்.

‘ஆஹா, தாங்களா! வரவேண்டும், வரவேண்டும் உடையவரே. உம்மை நினைக்காத நாளே கிடையாது எனக்கு. எப்படி இருக்கிறீர்கள்? தனியாகவா வந்தீர்கள்? என்னைக் காணவா இத்தனை தூரம்?’

‘சுவாமி, நீங்கள் இல்லாமல் நான் ஏது? திக்குத் தெரியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தவனைச் சரியான பாதையில் செலுத்தி அருளியவர் தாங்களே அல்லவா?’

‘அடடா, என்ன இப்படிச் சொல்லுகிறீர்கள்? உமக்கு வழிகாட்டியவன் அருளாளனே அல்லவா?’

‘உம்மூலமாக அணுகியதால்தானே அந்த வழி எனக்குத் திறந்தது? அதை விடுங்கள். திருவரங்கத்தில் இருந்து திருப்பதி போய்க்கொண்டிருக்கிறோம். தங்களை தரிசிக்காமல் காஞ்சியை எப்படிக் கடப்பேன்? வெளியே நமது மாணாக்கர்கள் காத்திருக்கிறார்கள். தாங்கள் அனுமதி கொடுத்தால்…’

அவர் உற்சாகமாகிப் போனார். ‘இதோ நானே வருகிறேன்!’ என்று ஓரடி எடுத்து வைத்தார். முதுமை அவரது செயல்வேகத்தைச் சற்று முடக்கியிருந்தது. ராமானுஜர் அவர் தோளில் கை வைத்துப் பிடித்துக்கொண்டார். மடத்தை விட்டு இருவரும் வெளியே வர, சீடர்கள் கைகூப்பி வணங்கினார்கள்.

‘பிள்ளைகளே, இவர்தான் நான் சொன்ன திருக்கச்சி நம்பி. இவரின்றி நானில்லை. இவரின்றி அந்தப் பேரருளாளனே இல்லை. ஒரு பாகவதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் இவரிடம் பயின்றேன். சிறந்த பக்தன் எப்படி இருப்பான் என்பதை இவர்மூலம் அருளாளன் உலகுக்குக் காட்டிக்கொண்டிருக்கிறான். நானறிந்து இவரினும் பெரியவர் இவ்வுலகில் இல்லை’ என்றவர், சட்டென்று திருக்கச்சி நம்பியிடம் திரும்பி, ‘சுவாமி! இவர்கள் அத்தனை பேரும் அரங்கன் சேவையில் தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டவர்கள். இவர்களுக்கு சாதி கிடையாது. பேதம் கிடையாது. பொருள்களின்மீது பற்று கிடையாது. தமக்காக வாழ்வோர் யாரும் இவர்களில் கிடையாது. சரீரம் இருக்கிறவரை சமூகத்துக்காக உழைக்கிற சீலர்கள். உங்கள் ஆசி இவர்களை இன்னும் உயர்த்தும்’ என்றார்.

திருக்கச்சி நம்பி கண்ணீர் மல்கக் கரம் கூப்பிப் பேரருளாளனை வணங்கினார். அவன் கருணையின்றி இந்த அதிசயம் ஏது?

‘ராமானுஜரே, அவன் மிகச் சரியாகக் கணக்கிட்டுத்தான் உம்மைத் தேர்ந்தெடுத்துத் திருவரங்கத்துக்கு அனுப்பியிருக்கிறான். வைணவ தருமம் தழைக்க வையம் முழுதும் பிரதிநிதிகளை உருவாக்கி அமர்த்திவரும் உமது திருப்பணிக்கு என்றும் என் ஆசி உண்டு. வாருங்கள், நாம் அவனைச் சென்று முதலில் சேவித்து வருவோம்’ என்று அழைத்துக்கொண்டு கோயிலுக்குப் புறப்பட்டார்.

உடையவரின் சீடர்களுக்குத் திருக்கச்சி நம்பியைச் சந்தித்தது பெரிய பரவசத்தை அளித்தது. இவரா, இவரா என்று வியந்து வியந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். சக மனிதர்களுடன் பேசுவது போல இறைவனுடன் பேசுகிற மகான். எத்தனை பேருக்கு அது வாய்க்கும்?

‘அதுவும் ஒருமுறை இருமுறை அல்ல பிள்ளைகளே. தினசரி கோயில் நடை சாத்துவதற்கு முன்னால் நம்பியிடம் பேசாமல் அருளாளனுக்குப் பொழுது முடியாது. நாம் பக்தர்களாக இருப்போம். பரம பாகவதர்களாக இருக்க முயற்சி செய்வோம். ஆயுள் முழுதும் அவனுக்கு அடிமை செய்து வாழப் பார்ப்போம். ஆனால் ஆண்டவனுக்கு நண்பராக இருப்பது யாரால் முடியும்? திருக்கச்சி நம்பியால் மட்டுமே அது முடியும்’ என்றார் ராமானுஜர்.

சன்னிதியில் அன்று அர்ச்சனை பிரமாதமாக நடந்தது. ராமானுஜரும் சீடர்களும் பிரபந்தம் பாடினார்கள். தீர்த்தப் பிரசாதங்கள் வாங்கிக்கொண்டு அவர்கள் வெளியே வந்தபோது ராமானுஜர் திருக்கச்சி நம்பிக்கு அருளாளப் பெருமான் எம்பெருமானாரை அறிமுகப்படுத்தினார்.

‘சுவாமி, இவர் வைணவ தரிசனத்துக்குக் கிடைத்த இன்னொரு யாதவப் பிரகாசர்!’

திருக்கச்சி நம்பி அவரை அன்போடு பார்த்தார். ‘உம்மைப் பற்றி அருளாளன் சொன்னான். இரண்டு நூல்கள் எழுதியிருக்கிறீராமே?’

திகைத்துவிட்டது திருக்கூட்டம்.

‘சுவாமி, நீண்ட காலமாகத் தங்களைக் காணாமல் ஏங்கிக்கிடந்தேன். இன்று அந்த ஏக்கம் தீர்ந்தது. திருப்பதி சென்று திரும்பும்போதும் தங்களை வந்து தரிசித்துப் போவேன். இப்போது எனக்குத் தாங்கள் விடைகொடுக்க வேண்டும்’ என்றார் உடையவர்.

‘நல்லது ராமானுஜரே. நீங்கள் அரங்கநகரில் இருந்தாலும் திருமலைக்குச் சென்றாலும் அருளாளன் உம்மோடு எப்போதும் இருப்பான். சென்று வாருங்கள்!’ என்று ஆசீர்வதித்து அனுப்பிவைத்தார்.

(தொடரும்)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!