ஒரு A1B Positive சரித்திரம்

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு மத்தியில் முதல் முதலில் தொலைக்காட்சித் தொடருக்கு எழுத ஆரம்பித்தேன். இரண்டாயிரத்து இருபது வரை இடைவெளியின்றி எழுதிக்கொண்டிருந்தேன். கிழக்கில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது மாலைப் பொழுதுகளுக்கு மட்டும் அந்த எழுத்து என்று இருந்தது. முழு நேரமான பின்பு இரவுகளில் மட்டும் இதர வேலைகளுக்கு வாய்ப்பு என்றானது. கசப்புக்கோ இனிப்புக்கோ அங்கே ஒன்றுமில்லை. அது ஒரு பணி. என் தனிப்பட்ட இலக்குகள், திட்டங்களுடன் தொடர்பற்றது. ஆனால் என் செயல்பாடுகள் சரிவர நடப்பதற்குத் தேவையான பொருளாதார சுதந்தரத்தை அந்தத் துறை எனக்கு அளித்தது.

ஆனால் ஒன்றை என்னால் மறக்க முடியாது. இனி உன்னால் நாவலோ மற்றதோ எழுதவே முடியாது என்று என்னை அறிந்த அத்தனை பேரும் அப்போது சொன்னார்கள். குறிப்பாக ஒரே சமயத்தில் இரண்டு, மூன்று, நான்கு தொடர்களுக்கெல்லாம் நான் பேய் பிடித்தாற்போல எழுதிக்கொண்டிருந்தபோது எனக்கேகூட அந்த அச்சம் சிறிது இருந்தது. இப்போது தோன்றுகிறது. பொருளாதாரக் காரணங்களுக்காக நான் தேர்ந்தெடுத்த அந்தப் பாதை ஒரு மலைப் பாம்பைப் போல என்னைச் சுருட்டி விழுங்கிவிடாதிருக்க என்னென்ன விதங்களில் என்னை அதிலிருந்து விலக்கி வைத்துக்கொள்ள முடியுமே அனைத்தையும் செய்தேன். என் வாழ்வின் தலைசிறந்த படைப்பூக்கத் தினங்களை அக்காலங்களில்தான் கண்டடைந்தேன். முன்னெப்போதும் எழுதியிராத அளவுக்கு நாவல்கள் எழுதினேன். பூனைக்கதை, யதி, புல்புல்தாரா, இறவான் எல்லாம் தீவிரமாகத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதிக்கொண்டிருந்த காலத்தில் எழுதப்பட்டவைதாம். இந்தத் துறையில் இதற்குமுன் வேறு யாரும் அதனைச் செய்ததில்லை.

செய்ய முடியாது என்பதுதான் விஷயம். காரணம், எளிது. அத்துறையில் பணி நேரம் என்ற ஒன்று கிடையாது. ஓய்வு நாள் என்று ஒன்றில்லை. ஒரு நாளில் இவ்வளவுதான் எழுத வேண்டியிருக்கும் என்ற கணக்கெல்லாம் வைத்துக்கொள்ள முடியாது. ரத்தம் சுண்டச் சுண்ட எழுதித் தள்ளி முடிக்கும்போது தன்னியல்பாக உடல் உதிர்ந்து விழுந்துவிடும். நான் எப்படிச் செய்தேன் என்றால், அப்படி சக்கையாகப் பிழியப்படுவதே சிலிர்த்தெழுந்து நாவல் எழுதத்தான் என்று எண்ணிக்கொள்வேன்.

மேலோட்டமான பார்வையில் இரண்டும் எழுத்துப் பணி. இரண்டிலும் சொற்களே கருவி. அது உண்மைதான். ஆனால் இரண்டுக்கும் நான் வேறு வேறு சொல் வங்கிகள் வைத்திருந்தேன். கலந்ததேயில்லை. இதுவேறு, அது வேறு. என்றைக்குமே குழப்பம் இருந்ததில்லை. விட்ட இடத்தில் தொடங்கி விறுவிறுவெனப் பத்துப் பக்கங்கள் எழுதிவிட்டுத்தான் தூங்கச் செல்வேன்.

அந்தப் பதினைந்தாண்டு கால சின்னத்திரை அனுபவங்களை ஒரு கட்டுரைத் தொகுப்பாக எழுத வேண்டும் என்று எண்ணியிருந்தேன். எழுதினால் சினிமா துறை சார்ந்த புத்தகங்களைக் காட்டிலும் விறுவிறுப்பும் சுவாரசியமும் கொண்ட புத்தகமாக அது இருக்கும். நிதானமாகச் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தபோது சட்டென்று என்னையறியாமல் அதன் ஒரு கண்ணியைக் கிள்ளியெடுத்துப் பூனைக்கதையாக எழுதினேன். பிறகு, ‘இது தொகுப்புக்கு துரோகமல்லவா. இனி இந்தத் துறையைப் பற்றி எழுதவே கூடாது’ என்று எண்ணிக்கொண்டு சில வருடங்கள் அமைதியாக இருந்தேன்.

கடந்த ஆண்டு நண்பர் மனுஷ்யபுத்திரன் உயிர்மையில் ஒரு தொடர் எழுதச் சொன்னபோது மீண்டும் மனம் அந்தத் துறையின் பக்கமே சென்று நின்றது. ஆனால் கவனமாகத் துறை சார்ந்த தகவல்களைத் தவிர்த்துவிட்டு, ஒரு நாவலாசிரியன் தொலைக்காட்சித் தொடர்களில் சிக்கிக்கொண்டு படுகிற தனிப்பட்ட பாடுகளை மட்டும் எழுதத் தீர்மானித்தேன். நவத்துவாரங்களிலும் ரத்தம் மட்டுமே வரவழைக்கச் செய்கிற பணி அது. அதன் வலியை வெளிக்காட்டாமல் நகைச்சுவையாக எழுதிவிடுவது என்று முடிவு செய்து தொடங்கினேன்.

சரியாக ஓராண்டுக் காலம் இது உயிர்மையில் தொடராக வெளியானது. இது கதையா, கட்டுரையா என்று கண்டுபிடிக்க வழியில்லை. தன் வரலாற்றுப் பாணியில் எழுதியிருப்பதால் என் சொந்தக் கதை என்றே எடுத்துக்கொள்வதில் எனக்கு ஆட்சேபம் இல்லை. ஆனால் இதிலுள்ள புனைவின் சதவீதத்தை என்றுமே வெளியிடப் போவதில்லை. உங்களுக்கு ஆர்வம் இருந்தால் ஒருவேளை அடுத்த ஆண்டு வெளிவரக்கூடிய – முன்சொன்ன கட்டுரைத் தொகுப்புடன் ஒப்பிட்டு நீங்கள் அதனை அளந்துகொள்ளலாம்.

ஆனால் எல்லாவற்றையும் அளந்து அளந்து அறிந்தென்ன ஆகப் போகிறது? இந்தக் கணம் இதனைப் படித்தால் நீங்கள் மனம் விட்டுச் சிரிக்கலாம். இப்போதைக்கு இவ்வளவுதான்.

இதனைத் தொடராக வெளியிட்ட உயிர்மை ஆசிரியர் மனுஷ்யபுத்திரனுக்கும் இப்போது புத்தக வடிவில் வெளியிடும் எழுத்து பிரசுரம் ராம்ஜி, காயத்ரி இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

O

வீட்டோடு மாப்பிள்ளை – புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே செல்க.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி