நீங்கள் இலக்கியம் என்று சொல்லுங்கள். இல்லை என்று மறுத்துப் பேசுங்கள். கவிதை என்று சொல்லுங்கள். சொற்குப்பை என்று தூக்கிக் கடாசுங்கள். வெறும் புலம்பல் என்று சான்றளியுங்கள். காவியச் சுவை கொண்ட கவிதைகள் என்று சிலிர்த்துக்கொள்ளுங்கள். எல்லாம் உங்கள் இஷ்டம்.
ஆனால் ஒன்றை ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும். இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு வந்த தலைமுறைக்குத் (வாசிக்காதவர்களையும் சேர்த்தேதான் சொல்கிறேன்.) தமிழ்க் கவிஞன் என்றால் மனுஷ்யபுத்திரன் மட்டும்தான். அவர்களுக்கு வேறு நவீன கவிஞர்களின் பெயர்கள் தெரிவதில்லை.
அவரும் இரண்டாயிரம் பக்கத்தில் ஒரே தொகுப்பாக வெளியிட்டாலும் சரி; இருநூறு இருநூறு பக்கங்களாகப் பத்து தொகுப்புகள் வெளியிட்டாலும் சரி. முன்சொன்ன குழவிகளுக்கு, வருவது ‘மனுஷ் புக்’. அவ்வளவுதான். சென்ற புத்தகக் காட்சியில் உயிர்மை என்கிற பிராண்டையே ‘மிஸ் யூ’ என்கிற பிராண்ட் தூக்கி விழுங்கி செரித்ததை நேரில் கண்டேன். ஒவ்வொரு படைப்பாளிக்கும் அது ஒரு வாழ்நாள் கனவாக இருக்கும். மனுஷ் சென்ற வருடத்தைக் காட்டிலும் இந்த வருடம் குண்டாகியிருப்பதன் உண்மைக் காரணம் அதுதான்.
இந்த வருடம் மனுஷ் பன்னிரண்டு தொகுப்புகளுடன் வருகிறார். உடன், கவிதை மொழியில் எழுதப்பட்ட ஒரு நாவல்.
இலக்கிய உலகம் பொதுவாக யாரையும் மனம் விட்டு வாழ்த்தாது. வாங்கி வந்த வரம் அப்படி. நாம் வாழ்த்துவோம்.
அடித்து ஆடுங்கள் மனுஷ்.