பொலிக! பொலிக! 79

‘சுவாமி, தாங்கள் சற்று நேரம் உறங்கினால் நல்லது. காலை விடியும் முன் நாம் புறப்பட்டால்தான் திருக்குறுங்குடி சென்று சேர வசதியாக இருக்கும்’ என்றார் வடுக நம்பி.

நம்மாழ்வாரின் அவதாரத் தலத்தில் இருந்து புறப்பட்டு திருக்கோளூர் சென்று, அங்கிருந்து சிரிவரமங்கை தெய்வநாயகனைத் தரிசித்துவிட்டு அடுத்த திவ்யதேசத்துக்குக் கிளம்பத் தயாராகியிருந்தார் ராமானுஜர். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான அனுபவங்கள். எத்தனைப் பேர் வாதம் புரிய வருகிறார்கள்! வைணவம் என்பது வெறும் தத்துவமல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி. இதைப் பண்டிதர்களுடன் வாதாடி விளங்க வைப்பதே உடையவருக்குப் பெரிய வேலையாக இருந்தது. அவர் போகுமிடமெல்லாம் பண்டிதர்கள் வாதத்துக்கு வந்துவிடுவார்கள். வாதம் என்று தொடங்கினால் நாள் கணக்கில் நீண்டுவிடும். பொறுமையாக, நிதானமாக, ஒவ்வொன்றாக எடுத்து விளக்கி வாதிட வந்தவர்களை வசப்படுத்தி வைணவத்தை ஏற்கச் செய்யும்வரை ராமானுஜர் விடமாட்டார்.

‘நமது பணி இதுவே அல்லவா? உலகெல்லாம் வைணவம் தழைக்கிற காலம் என்று வரும் என்று தெரியாது. ஆனால் உயிர் இருக்கிறவரை அதற்காக உழைப்பதற்காகத்தான் எம்பெருமான் என்னைப் படைத்திருக்கிறான்’ என்பார்.

‘பெருமான் நினைத்தால் கணப் பொழுதில் அதைச் சாதித்துவிட முடியாதா?’ என்றார் வடுக நம்பி.

ராமானுஜர் புன்னகை செய்தார். ‘வடுகா! தானே அனைத்தையும் செய்துவிடுவதென்றால் அவன் நம்மையெல்லாம் எதற்குப் படைத்து உலவவிட வேண்டும்? நமது இருப்பின் நியாயத்தை நாம் நிலைநாட்ட வேண்டாமா? உண்பதும் உறங்குவதும் சந்ததி விருத்தியும் மற்றதும் அனைவருக்கும் பொது. படைக்கப்பட்ட அத்தனை உயிரினங்களும் இதைத்தான் செய்கின்றன. ஒரு மனிதப் பிறப்பாக நாம் என்ன செய்கிறோம் அதற்கு மேலே? அதுவல்லவா முக்கியம்?’

‘நீங்கள் அதைச் செய்யுங்கள் சுவாமி. எனக்கு உங்களை கவனித்துக்கொண்டால் போதும்!’ என்றார் வடுக நம்பி.

உடையவர்களின் சீடர்களில் அவர் ஒரு தனிப் பிறவி. தனது ஆசாரியரைத் தவிர அவருக்கு தெய்வம் என்று தனியே ஒன்றில்லை. பொழுது விடியும்போது அவரது பணி தொடங்கும். ராமானுஜர் உறங்கும்வரை நிழல் மாதிரி உடன் இருப்பார். ராமானுஜருக்கு நூற்றுக்கணக்கான சீடர்கள் இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு இதோ என்று உடனே வந்து நிற்பவர் அவர்தாம். மற்ற சீடர்கள் கோயிலுக்குப் போவார்கள். திருவரங்கம் தவிர மற்ற திவ்ய தேசங்களுக்குச் செல்ல வாய்ப்புக் கிடைத்தால் தவறாமல் போவார்கள். நாலாயிரம் சேவிப்பார்கள். கோயில் திருப்பணி ஏதேனும் இருந்தால் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள். ஆனால் வடுக நம்பிக்கு ராமானுஜரைக் கவனித்துக்கொள்வது தவிர வேறு திருப்பணி ஏதும் கிடையாது.

‘வடுகா, நாளை நாம் திருவெள்ளறை புறப்படுகிறோம். திருவாராதனப் பெருமாளை எடுத்து வைத்துக்கொள்’ என்று ஒரு சமயம் ராமானுஜர் சொன்னார்.

‘உத்தரவு சுவாமி.’

சொல்லிவிட்டு ராமானுஜரின் பூஜைக்குரிய பெருமாளை எடுத்து ஒரு பையில் வைத்துக்கொண்டவர், அதனோடுகூட அவரது கட்டைச் செருப்பையும் சேர்த்து எடுத்து வைத்தார்.

ஊர் போய்ச் சேர்ந்த ராமானுஜர், குளித்து முடித்து பூஜைக்கு அமர்ந்து, ‘வடுகா, திருவாராதனப் பெருமாளை எடு’ என்றபோது அவரது செருப்புகளை வெளியே எடுத்து வைத்துவிட்டு அதன்பின் பெருமாளை வெளியே எடுத்தார் வடுக நம்பி.

திடுக்கிட்டுவிட்டார் உடையவர். ‘ஐயோ இதென்ன அபசாரம்! திருவாராதனப் பெருமாளுடன் எனது செருப்புகளை ஏன் சேர்த்து வைத்தாய்?’

‘நல்ல கதையாக இருக்கிறதே? உங்களுக்கு உங்கள் பெருமாள் என்றால் எனக்கு என் பெருமாள்!’

ராமானுஜருக்கு அது நினைவுக்கு வந்தது. முகத்தில் முறுவல் பூத்தது.

‘சுவாமி, தங்களை உறங்கச் சொன்னேன்.’

‘சரியப்பா. நீயும் போய்ப் படுத்துக்கொள்’

மறுநாள் காலை உடையவரும் சீடர்களும் சிரிவரமங்கையில் இருந்து புறப்பட்டுத் திருக்குறுங்குடி போய்ச் சேர்ந்தார்கள். உடையவரை வரவேற்க ஊரே திரண்டுவிட்டது. சன்னிதிக்குள் நுழைய முடியாத அளவுக்கு மக்கள் முண்டியடித்தார்கள். வடுக நம்பி முன்னால் வந்து அனைவரையும் நகர்ந்து நிற்கச் சொல்லி ராமானுஜர் சன்னிதிக்குள் செல்ல வழியமைத்துக் கொடுத்தார்.

நம்மாழ்வாராக அவதரித்த நம்பி. நம்பாடுவான் என்னும் மலைவாசி பக்தனுக்கு தரிசனம் தருவதற்காகத் தனது கொடி மரத்தைச் சற்று நகர்த்தி வைத்துக்கொண்ட நம்பி. நின்ற, நடந்த, இருந்த, கிடந்த, அமர்ந்த கோலங்களில் காட்சியளிக்கிற நம்பி. எப்பேர்ப்பட்டவருக்கும் பார்த்த கணத்தில் மோட்சமளிக்கிற நம்பி. எனக்கு மோட்சம் வேண்டும் என்று திருமங்கையாழ்வார் திருவரங்கப் பெருமானிடம் கேட்டபோது, ‘அதற்கு நான் பொறுப்பாளியல்ல ஆழ்வாரே! நீர் திருக்குறுங்குடிக்குச் செல்லும். நம்பியிடம்தான் மோட்சத்தின் வாசல் சாவி இருக்கிறது’ என்று சொல்லியிருக்கிறான்.

வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனைக் கொன்றபிறகு மகாவிஷ்ணு தனது பயங்கரமான வராக ரூபத்தைக் குறுக்கிக்கொண்டு வந்து அமர்ந்த மண் அது. அதனாலேயே அது குறுங்குடி ஆனது. நம்மாழ்வாரும் பெரியாழ்வாரும் திருமழிசை ஆழ்வாரும் திருமங்கையாழ்வாரும் பாடிய திருத்தலம்.

ராமானுஜர் பக்திப் பரவசத்துடன் கைகூப்பிக் கண்மூடி நின்றார். ‘கரண்ட மாடு பொய்கையுள் கரும்பனைப் பெரும்பழம் புரண்டுவீழ வாளைபாய் குறுங்குடி நெடுந்தகாய், திரண்ட தோள் இரணியன் சினங்கொள் ஆகம் ஒன்றையும் இரண்டுகூறு செய்துகந்த சிங்கமென்பது உன்னையே’

மனத்துக்குள் திருமழிசை ஆழ்வாரின் வரிகள் ஓடிக்கொண்டிருந்தன. ஏகாந்தம். முழு நிசப்தம். எம்பெருமானே, என்னை ஆட்கொள்ள வருவீர்.

சட்டென்று அர்ச்சகரின் குரல் அனைவரையும் கலைத்தது.

‘ஓய் உடையவரே, நானும் எத்தனையோ அவதாரங்கள் எடுத்துப் பார்த்துவிட்டேன். எவ்வளவோ நல்லது சொல்லிப் பார்த்துவிட்டேன். இந்த மனிதர்களைத் திருத்திப் பணிகொள்வது சிரம சாத்தியமாகவே இருக்கிறது. உமக்கு எப்படி இது எளிதாகக் கைவருகிறது? ஆயிரம் ஆயிரமாக ஜனங்களைத் திரட்டி நல்வழிப் படுத்திக்கொண்டிருக்கிறீரே, அந்த சூட்சுமத்தை எனக்கு சொல்லித்தாரும்!’

திடுக்கிட்டுப் பார்த்தார்கள் சீடர்கள். கோயில் அர்ச்சகரின் வழியாகப் பேசுவது குறுங்குடி நம்பியேதானா?!

‘அட ஆமாமப்பா, நானேதான். உமது ஆசாரியரின் உத்தியை எனக்குக் கற்றுத்தரச் சொல்லுங்கள்!’

ஒளிவில்லை, மறைவில்லை. அர்ச்சகர்தான் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் கேட்டது அவர் குரலல்ல. அது தெய்வத்தின் குரல். உடையவர் புன்னகை செய்தார்.

‘என்ன சிரிப்பு? சொல்லுமய்யா!’

‘அதற்கென்ன, சொல்லித்தரலாமே? ஆனால் நீர் கேட்கும்படி கேட்டால் நாம் சொல்லித்தருகிறபடி சொல்லித்தருவோம்!’

இந்த பதிலை, குறுங்குடி நம்பியல்ல; உடையவரின் சீடர்களே எதிர்பார்க்கவில்லை. என்ன நடந்துகொண்டிருக்கிறது இங்கே?

(தொடரும்)

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!