அனுபவம் நகைச்சுவை

மானம் போகும் பாதை

உலகிலேயே மிகவும் கஷ்டமான காரியம் எது?

என்னைக் கேட்டால் காய்கறி வாங்குவதுதான் என்று சொல்வேன். இது அத்தனை துல்லியமான பதில் இல்லை. இன்னும் சரியாகச் சொல்லுவதென்றால் மனைவி குறை கண்டுபிடிக்காதபடிக்குக் காய்கறி வாங்குவது.

திருமணமாகி ஒரு முழு வனவாசகாலம் கடந்துவிட்ட பிறகும் இந்தக் கலையில் நான் ஒரு பெரிய இந்திய சைபர் என்பது என் மனைவியின் தீர்மானம். அநேகமாக இதைப் படித்துக்கொண்டிருக்கும் அத்தனை உத்தமோத்தமக் கணவர்களின் மனைவிகளும் அவ்வண்ணமே தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கக்கூடும். அவர்களுக்கெல்லாம் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆனால் இந்த சுண்டைக்காயும் வெண்டைக்காயும் என்னைப் படுத்துகிற பாடு கொஞ்சநஞ்சமல்ல. ஒரு மகாப்பெரிய எழுத்தாளனை இப்படியெல்லாம அவமானப்படுத்தலாமா என்கிற தார்மிக சிந்தனை அவற்றுக்கு லவலேசமும் கிடையாது. ஒவ்வொரு முறை கடைக்குப் போகும்போதும் போட்டு சாத்து சாத்தென்று சாத்திவிடும் சனியன்கள்.

என் மனைவியாகப்பட்டவள் சாதாரணமாகப் பேசுவதே ரொம்ப எச்சரிக்கையாக பேட்டி கொடுக்கும் புத்திசாலி அரசியல்வாதியின் பேச்சு மாதிரி இருக்கும். உதிரும் ஒவ்வொரு வார்த்தையும் குறைந்தது ஒரு கிலோ கன அளவு கொண்டதாக இருக்கும். இதை எளிதில் விளங்கவைக்க முடியாது. உதாரணமாக ஒரு காலைக்காட்சியைப் பாருங்கள்:

‘வீட்ல காய் எதுவும் இல்ல’ – இதுதான் அநேகமாக முதல் வரியாக இருக்கும். இதற்கு ‘ஓஹோ’ என்று பதில் சொல்லக்கூடாது. ‘சரி போய் வாங்கிட்டு வாயேன்’ என்றும் சொல்லிவிட முடியாது. ‘ஏன் இது உனக்கும் வீடுதான்’ என்று டமாரென்று ஒரு ஸ்கட் விடுவாள். அதெல்லாம் நமக்கு ஆகாது. எனவே நல்ல பிள்ளையாக, ‘நான் வேணா வாங்கிட்டு வரட்டுமா?’ என்று கேட்டுவிடுவேன். என் காய் வாங்கும் திறன் குறித்த பூரணஞானம் அவளுக்கு உண்டென்பதால், ‘வேண்டாம், நானே போறேன்’ என்று சொல்வதற்கான சிறு சாத்தியம் அதில் தொக்கி நிற்குமல்லவா? அதற்காக அந்த பதில்.

சில சமயம் என் ஊகம் பலிக்கும். அவளே போய்விடுவாள். ஆனால் அத்தகு பொற்தருணங்கள் அபூர்வம். பெரும்பாலும் ‘உனக்கு சரியா வாங்கத் தெரியாதே’ என்பதுதான் அடுத்த பதிலாக இருக்கும். ‘ஆமாமா. நீயே போயிட்டு வந்துடு’ என்று இப்போதும் சொல்ல முடியாது. ‘இவ்ளோ வயசாகி என்ன பிரயோஜனம்? கேவலம் ஒரு கத்திரிக்கா பாத்து வாங்கத் துப்பில்ல. எப்பவும் சொத்தை காயா தேடி வாங்கிட்டு வர’ என்று குத்தீட்டி ஒருபுறம் குத்தும். ‘அவன் சொல்ற விலைய குடுத்துட்டு வருவியா? ரெண்டு ரூபா குறைச்சுக்கேட்டா என்ன குறைஞ்சு போயிடுவ? கோயம்பேடுல ஏழு ரூபாதான். இவன் பன்னெண்டு சொல்றான்னா கொள்ளைன்னு அர்த்தம். பதில் பேசாம வாங்கிண்டு வந்து நிக்கற.’

தங்கம் நிகர்த்த கத்திரிக்காய் கோயம்பேடு சந்தையில் ஏழு ரூபாய்க்குத்தான் விலை போகிறது என்பதைப் புறப்படும்போதே சொல்லி அனுப்பக்கூடாதா என்றால், மாட்டாள்! போய் வந்தபிறகுதான் கோடாரியும் தாக்கிப் பிளக்கும். விலை விஷயத்தில் தாக்க வசதியில்லையென்றால் இருக்கவே இருக்கிறது சொத்தை, முத்தல், வத்தல்.

இம்மாதிரியான அபாயங்களைக் கருத்தில் கொண்டு, ஓர் உலக உத்தமனாக என்னை வரித்துக்கொண்டு நானே அன்பொழுக, ‘குடு, நானே போயிட்டு வரேன். இன்னிக்குப் பாரு. நீயே பாராட்டற குவாலிடில காய்கறி வந்து சேரும்’ என்று ஏகப்பட்ட நம்பிக்கைகள் சொல்லி, புறப்பட்டுவிடுவேன். பின்னால் வரக்கூடிய அபாயங்களின் சதவீதத்தை இம்மாதிரியான முன்னெட்டுகள் சற்றுக் குறைக்கும் என்பது அனுபவம் தந்த பாடம் அல்லது பப்படம்.

கறிகாய்க் கடையில் கத்திரிக்காய் ஒவ்வொன்றாக எடுத்து, ஒரு ஜகதீஷ் சந்திர போஸ் அளவுக்குத் திருப்பித் திருப்பிப் பார்த்து ஆராய்ச்சி செய்து எடைக்குக் கொடுப்பேன். ஓட்டை இருக்கிறதா, முற்றியிருக்கிறதா, பூச்சி அரித்திருக்கிறதா என்று எதோ எனக்குத் தெரிந்த குறைபாடுகள் அனைத்தையும் பார்த்து கவனமாகத்தான் தேர்ந்தெடுப்பது வழக்கம். அப்படியும் கடைக்கார தாமு ஒன்றிரண்டு காய்களை அவனே ரிஜக்ட் செய்வான். ‘பாத்து எடு சார். அப்பறம் ஏண்டா இத குடுத்தன்னு அக்கா என்ன திட்டும்’ என்பான்.

ஊரில் உள்ள அத்தனை அக்காக்களிடமும் அவன் திட்டு வாங்கிப் பழக்கப்பட்டவனோ என்று எண்ணிவிட முடியாது. குறிப்பாக என் மனைவி விஷயத்தில் அவன் கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டுதான் காய்கறிகளை எடை போட்டுக் கொடுப்பான். ஒரு தர்ம தேவதையாக, சிறுமை கண்டு பொங்குபவளாக, தரம் குறைந்த எதையும் தொடாத தாரகையாகப் பிராந்தியத்தில் அவள் வெகு பிரசித்தம்.

ஒரு கத்திரிக்காய், ஒரு கேரட் அல்லது ஒரு கீரை, கொஞ்சம் கொத்துமல்லி கருவேப்பிலை. தீர்ந்தது. வெற்றிகரமாக அன்றைய ஜனநாயகக் கடமை முடிந்தது என்று காய்கறிப் பையை ஒரு வெற்றிக் கோப்பையாக ஏந்திக்கொண்டு வீட்டுக்குப் போவேன். டேபிளில் கொட்டிப் பார்த்ததும் கண்டிப்பாக அவள் முகம் சுளித்துவிடுவாள்.

‘என்ன ஆச்சு? பாத்துதானே வாங்கினேன்? எதுவுமே சொத்தை இல்லையே?’ பரிதாபமாகக் கேட்டால் வரக்கூடிய பதில் இப்படியாக இருக்கும்:

‘சொத்தை இல்லனா? எல்லாம் நேத்து காய். புதுசா மூட்டைல வந்து வாசல்ல வெச்சிருப்பானே? அதுலேருந்து எடுக்கவேண்டியதுதானே?’

‘மூட்டை எதும் இல்லியே?’

‘அப்ப வேற காய் வாங்கறது?’

இதற்கு பயந்தே பிரச்னையில்லாத உருளைக்கிழங்கை அடிக்கடி நாடுவேன். அதற்கும் அம்பு வரும். ‘உனக்கு வேற எதுவுமே கண்ணுல படாதா?’

கீரை வாங்கினால் பூச்சி அரித்தது என்பாள். வெண்டைக்காய் என்றால் முற்றல் என்பாள். பீன்ஸ் என்றால் பழையது என்பாள். தக்காளி என்றால் அதுங்கியது என்பாள். வெங்காயம் எனில் விலை ஜாஸ்தி என்பாள். வாழைக்காய் என்றால் உடம்புக்கு ஆகாதென்பாள். அவரை என்றால் நேற்றும் இதானே என்பாள்.

வாழ்வில் ஒருமுறையாவது என் மனைவி குறைசொல்லாதபடிக்குக் கறிகாய் வாங்கிவிட வேண்டும் என்று நானும் வருடக் கணக்காக முயற்சி செய்துகொண்டிருக்கிறேன். இன்றுவரை முடிந்தபாடில்லை. எனவே குறுக்குவழியில் அவளை மடக்கிவிடலாம் என்று முடிவு செய்து ஓரிரு சமயம் அவள் வாங்கி வந்த காய்கறிகளைத் தேடியெடுத்து என்னவாவது குறையிருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்து பார்த்திருக்கிறேன்.

ஒரு சமயம் வசமாகச் சிக்கியது. டேபிளின் மீதிருந்த காராமணிக்காய் கொஞ்சம் பழையதுபோல் தோன்றியது. உடனே வீறுகொண்டு, ‘நீ மட்டும் என்ன பெரிசா காய் வாங்கிக் கிழிச்ச? பாக்க சகிக்கல’ என்று இடதுசாரி எம்.பி மாதிரி எம்பிக் குதித்தேன். ஒரு முறை முறைத்தாள். ‘அது பக்கத்துவீட்டு ஆண்ட்டி குடுத்தது. தானம் கொடுத்த மாட்ட பல்ல பிடிச்சிப் பாக்காத’ என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.

இந்த அவலம் தீர்ந்தபாடே இல்லை. நாற்பது வயதாகியும் நல்லதாகப் பார்த்துக் காய் வாங்கத் தெரியாத புருஷனாக இருப்பது பற்றிய குற்ற உணர்ச்சி எனக்கு நாளுக்கு நாள் மேலோங்கியபடிதான் இருக்கிறது. என்னதான் தீர்வு?

ரொம்ப யோசித்து ஒரு வழி கண்டுபிடித்தேன். ‘வீட்ல காய் இல்ல’ என்று அவள் ஆரம்பிக்கும்போதே, ‘நானும் கவனிச்சேன். வரியா ரெண்டு பேரும் ஜாலியா வாக்கிங் மாதிரி போய் வாங்கிண்டு வந்துடலாம்?’ என்பது ஒரு சரியான பதிலாக இருக்கக்கூடும். பெண்களுக்கு இம்மாதிரி உப்புப்பெறாத காரியங்களுக்குக்கூட ஜோடி போட்டுக்கொண்டு உலா செல்வது ரொம்பப் பிடிக்கும்; தவிரவும் கூண்டிலேற்றிக் குற்றம் சாட்டவும் முடியாது. முருங்கைக்காயை எடுக்கும்போதே, ‘இத பாரு. ஃப்ரெஷ்ஷா, பிஞ்சா இருக்கில்ல?’ என்று கேட்டு சம்மதம் பெற்று வாங்கலாம்.

ஆனால் ஒரே ஒரு அபாயம் இதிலும் இருக்கிறது. ‘நீ சும்மா இரு சார். எல்லாம் அக்கா கரெக்டா எடுக்கும்’ என்று கடைக்கார தாமு சேம்சைட் கோல் போடமாட்டான் என்பதற்கு உத்தரவாதமில்லை.

மானம் ஒரே இடமாகப் போவதுதான் மனுஷனுக்கு அழகு.

Share

18 Comments

 • பழைய கதை ஒன்று தெரியாதா? கணவன் வாங்கி வந்த வெண்டைக்காயை முத்தல் என்று முதல் நாள் மனைவி கூறினாள். அவளை இம்ப்ரெஸ் செய்வதற்காக இரண்டாம் நாள் மிகவும் இளசாக வெண்டைக்காய் வாங்கி வந்தான். இவ்வளவு இளசாகவா வாங்குவார்கள் என்ற கமெண்ட் தான் கிடைத்தது. மூன்றாம் நாள் மிகவும் கவனமாக சரியான பதத்தில் வெண்டைக்காய் வாங்கி வந்தான்.மனைவி சொன்னாள்: “உங்களுக்கு வெண்டைக்காய் தவிர வேறு காயே வாங்கத் தெரியாதா?”
  உங்கள் அனுபவம் இதைத்தான் நினைவூட்டுகிறது.

 • வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி …நான் மட்டும் தான் என்று நினைத்தேன். இதற்கு ட்ரைனிங் school ஏதாவது இருக்கா ?

 • Typical household, thankless chore for husbands! Hmmm. ‘Veetuku Veedu Vasapadi’! Please ensure that your academic accomplishments like this humorous skit are not known to your wife. She might find some grammatical errors! Better to be safe than sorry, right?

 • //நீ மட்டும் என்ன பெரிசா காய் வாங்கிக் கிழிச்ச? பாக்க சகிக்கல’ என்று இடதுசாரி எம்.பி மாதிரி எம்பிக் குதித்தேன்// மிகவும் ரசித்தேன். 🙂

 • பா ரா சார். இதுக்குதான் நான் தினத்துக்கு ஒரு காய்னு முடிவே பண்ணிட்டேன். வேற வேண்டும் என்றால் நீயே போய் வாங்கிடுன்னு சொல்லிடுவேன்

 • 1962 கல்கி தீபாவளி மலரில் வந்த கட்டுரையோ?

 • எப்போதோ படித்த ஒரு பழைய ஜோக் ஞாபகத்துக்கு வருகிறது…

  பையன் அம்மாவிடம்: அம்மா, கறிகாய் கடையில் வீணாகப் போகும் காய்கறிகளை எல்லாம் என்ன செய்வார்கள் ?

  அம்மா: உன் அப்பா தலையில் கட்டி விடுவார்கள் 🙁

 • இந்த மாதிரி 5 நாட்களில் 6 கட்டுரைகள் அடித்தால் புதிதாக வாங்கிய லேப்டாப் சீக்கிரம் புட்டுக்காதா? 🙂 சீக்கிரம் புட்டுக்க வேண்டும் என்பது கூட எண்ணமாக இருக்குமோ? 🙁

 • பேசாம நம்ம வேற வீட்டுல புருஷனா பிறந்து இருக்கலாம், பாரா.

 • நானும் உங்களை என்னமோ நினைச்சேன் நீங்களும் வீட்ல எலி வெளியில புலி யா ? மனைவியால் டார்ச்சர் அடையும் கணவர் சங்கம் ஆரம்பிச்சிங்கன்னா நான் தான் கொ.ப.செ. இருந்தாலும் இப்படி அடங்கி போறதிலயும் ஒரு சுகம் இருக்கு தான். என்ன சொல்றீங்க ??

 • எப்படிங்க இப்படியெல்லாம் யோசிச்சு எழுத முடியுது. பயங்கரமா சிரிச்சு வாய் கோணிடுச்சு.

 • என் மனைவியாகப்பட்டவள் சாதாரணமாகப் பேசுவதே ரொம்ப எச்சரிக்கையாக பேட்டி கொடுக்கும் புத்திசாலி அரசியல்வாதியின் பேச்சு மாதிரி இருக்கும். உதிரும் ஒவ்வொரு வார்த்தையும் குறைந்தது ஒரு கிலோ கன அளவு கொண்டதாக இருக்கும்.

  All husbands accept this. Only PaRa can write like this in a fantastic manner.

 • அப்ப மானே தேனே கமண்டுகள மட்டும்தான் போடுவீங்க…….

 • இப்பிரச்னைகளை சமாளிப்பதற்கு ஒரு எளிய வழி இருக்கிறது..

  ஆனால் என்ன…அந்தத் தீர்வு உங்களுக்கு இனிமேல் செல்லுபடியாகுமா என்று தெரியவில்லை…

  கல்யாணம் பண்ணிக் கொள்வதற்கு முன்னால் இரண்டு ஆண்டுகளாவது பிரம்மசாரிக் குடும்பியாக சமையல் செய்து சாப்பிட்டுப் பார்த்தால் எல்லாம் தன்னால் தெரிந்து விடுகிறது!

  மேலும் தங்கமணிகளுக்கே அட்வைஸ் செய்யும் அளவில் எக்ஸ்பர்ட்டாகி விடக் கூடிய பம்பர் லாட்டரி அடிக்கும் வாய்ப்பும் இருக்கும்…

  அந்த நிலையில் இந்தக் கட்டுரையை அப்படியே பால் மாற்றி எழுதலாம்..சற்று நினைத்துப் பாருங்கள்,எவ்வளவு தித்திப்பாக இருக்கும் ! :))

  இப்பவும் ஒன்றும் கெட்டு விடவில்லை..ரங்க மணியை இரண்டு மாதம் பிறந்தகத்திற்கு அனுப்பவும்…

  (சமையல்) களத்தில் இறங்கவும்..வெற்றி நமதே..ஜெய் அனுமான் !!!

  (ஒரே ஒரு எச்சரிக்கை:தங்கமணியின் ஆஃப்சண்டில் உங்கள் சமையல் தீரங்களால் குழந்தைகள் பயங்கரமாகப் பாதிக்கப்பட்டு,இப்போது தங்கமணியின் அர்ச்சனைகளைப் போல் இரு மடங்குக்கு அவர்கள் ஆரம்பிக்கவும் வாய்ப்பிருக்கிறது..அதை மட்டும் நினைவில் வைக்கவும்!)

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி