யதி: ஒரு மதிப்புரை – இரா. அரவிந்த்

சிறு வயதிலிருந்தே நாம் ஆச்சரியமாகவும் புதிராகவும் காண்பது துறவிகளை அல்லது சாமியார்களை. கடவுளிடம் அதீத பக்தி கொள்ளுதல், பெரும் பொருளியல் இழப்பை சந்தித்தல், காதல் தோல்வி அடைதல், குடும்பக் கஷ்டங்களைத் தாங்க முடியாமை போன்றவை துறவைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுவான காரணங்களாகச் சொல்லப்படுகிறது.

யாராலும் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலாத நம் அக ஓட்டம், மேற்சொன்ன காரணங்களுக்கு அப்பாலும், பல்வகை காரணிகளால் துறவை தேர்ந்தெடுக்கக் கூடும் என்பது ஆச்சரியமான உண்மை. அப்படி, பல விசித்திரமான காரணங்களால் துறவைத் தேர்ந்தெடுத்த நால்வரைக் கொண்டு துறவுலகின் பல்வகை அம்சங்களை விளக்குவதோடு அதையும் கடந்த உண்மையான துறவை எடுத்துக்காட்டுவதே, பா. ராகவன் அவர்களின் “யதி” என்ற புதினம்.

திருவிடந்தையில் ஒரு எளிய நடுத்தர பிராமண குடும்பத்தின் புதல்வர்களான விஜய், வினய், வினோத், விமல் நால்வரும் அக்குடும்ப வரலாற்றைக் கூறும் ஒரு நாடிச் சுவடி வரிகளுக்கேற்ப வரிசையாகத் துறவியாகிவிட, பெற்றோரும் அவர்கள் மாமாவும் துன்பத்தில் தவிக்கின்றனர்.

அந்த நால்வரும் தங்கள் அன்னை மரணம் அடைந்த போது வரும் சமயத்தில், அவர்கள் வாழ்வில் அடைந்தவை, இழந்தவை, அவர்களைத் திகைக்க வைக்கும் குடும்பத்தின் ரகசியங்கள், நாடிச் சுவடி உருவாக்கியதன் பின் உள்ள மர்மம் என பரபரப்பாகச் செல்லும் புதினம் ஆங்காங்கு பல தத்துவங்களையும் அனாயாசமாகத் தூவிச் செல்கிறது.

சன்னியாசிகளை, பசி, காமம் உட்பட அனைத்தையும் கடந்தவர்களாக மிரட்சியோடு பார்க்கும் நாம், இந்த நால்வகை துறவிகளின் வாயிலாக சன்னியாச உலகின் வெவ்வேறு பக்கங்களை அறிந்து அவர்களும் நம்மைப் போன்ற சதை எலும்புகளால் ஆனவர்களே என்பதை உணர்ந்து திகைக்கிறோம். நோய் உட்பட இக உலகப் பிரச்சனைகளைத் தீர்க்க அவர்களை கடவுளாகக் கருதி அணுகும் நாம் உணர வேண்டியது, ‘மருந்தாக மாறத் தெரிந்த வைத்தியன் கடவுளாகிவிடுகிறான்’ போன்ற நாத்திக சன்னியாசியான விமலின் ஆழ் அனுபவ கண்டடைதல்களையே.

ஒரு சராசரி குடும்பஸ்தன் சந்திக்கும் காமம், பொறாமை, பயம், குழப்பம் உட்பட அனைத்து சிக்கல்களும் சன்னியாசிகளிடம் அப்படியே இருப்பதை உணர்ந்து நாம் நிலை குலையும் தருணங்கள் நூலை வாசிக்கும்போது பல முறை ஏற்படுவது உறுதி.
கிருஷ்ண பக்தனாக மனதை ஒரு நிலையில் குவிக்கும் முயற்சியில் வெல்ல இயலாமல், காமத்தால் மாபெரும் அலைக்கழிவுகளுக்கு உள்ளாகும் வினோத், மற்றவர்களுக்குக் கிருஷ்ண மந்திரத்தை உபதேசிப்பது; தன் ஆணவம் புண்பட்டதால் கொலையையும் தயங்காமல் செய்யும் வினய், சக்தி உபாசகனாகத் தனது இறுதி இலக்கை அடையும் தருவாயில் சிறிய சந்தேகத்தால் அடையும் தோல்வி என அனைவரும் சாதாரண மனிதர்களாகவே சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

கையில் துளியளவு பணமோ, வங்கிக் கணக்கோ இன்றி, உலகின் பெரிய மனிதர்களின் சிக்கல்களை மதிநுட்பத்தால் தீர்க்கும் எளிய நாத்திகனாக, இக உலக சுகங்கள் அனைத்தையும் சுதந்திரமாக அனுபவிக்கும் கதை சொல்லி விமலின் துறவு சார்ந்த தத்துவங்கள் நம் வாழ்வின் பொருள் குறித்த ஆழ்ந்த சிந்தனைகளை தூண்டுபவை.
அப்படிப்பட்ட அவனது சுதந்திரமான சன்னியாச வாழ்வின் அடித்தளம் கூட, புன்னகையுள் மறைந்துள்ள தன் அன்னையின் கண்ணீரை எதிர்கொள்வதன் மீதான அச்சத்தின் மீதே கட்டப்பட்டது என உணரும்போது வியப்பின் எல்லையை அடைகிறோம்.
‘எங்கேருந்துடா அந்தப் பாசம் வரும்? லிப்ஸ்டிக்கா அது? ரத்தம்டா! நெஞ்சுலேருந்து விழற துளி’ போன்ற கேசவன் மாமாவின் உருக்கமான உணர்வுகள் தாய்மையின் வீரியத்தை நம் நெஞ்சில் விதைப்பவை.

ஹடயோகியாக காற்றையே வசப்படுத்தி, எங்கும் எந்த உருவத்திலும் இருக்கும் மூத்த அண்ணன் விஜய், தன் தம்பிகளுக்கு வாழ்வு முழுதும் வெவ்வேறு இக்கட்டான சமயங்களில் தக்க உதவிகளைச் செய்து, அனைத்தும் அறிந்த ஒரு மர்ம யோகியாகவே திகழ்கிறான். அவனால் கூட, காமத்தை துச்சமென தூக்கியெறிந்த இல்லத்து யோகியின் கண்களை நேரே சந்திக்க இயலாமல் வெட்கி எடுத்த இறுதி முடிவு, மொழியின் குழந்தை என்று போற்றப்படும் விமலையே சொல்லற்று கண்ணீர் விட வைக்கையில் சாதாரண வாசகர்களால் கண்ணீரால் அவளுக்கு அஞ்சலி செய்வதை விடுத்து வேறென்ன செய்து விட முடியும்?

‘சொற்களை இறைக்காதவரை ஆளுமை கட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது’ என தனது ஆளுமையை பெருமையாகக் கருதும் விமல், தன் சொற்களோடு உணர்வுகளையும் மறைத்து, பாசத்தோடு பயங்கர ரகசியங்களைத் தன் உயிரோடும் புன்னகையோடும் கொண்டு செல்லும் ஆளுமையின் பிரம்மாண்டம் கண்டு செயலற்றுப் போவதில் ஆச்சரியம் என்ன?

‘திருவானைக்கா சொரிமுத்து, திருப்போரூர் சாமிகள், கோவளத்து பக்கிரி, ஹடயோகி விஜய் போன்ற நம் புரிதலுக்கு அப்பாற்பட்ட புதிர்களைப் பூரணங்களாகக் கருதி நம் நிம்மதியை கெடுத்துக் கொள்ளத்தான் வேண்டுமா?’ என விமலோடு சேர்ந்து நம்முள்ளும் எழும் வினாவிற்கான விடையை இறுதி அத்தியாயத்தில் காணலாம். நிறைகுறைகளின் சரி விகிதக் கலவையான நம் வாழ்வை, நிறைகள் சார்ந்த அகங்காரமும் குறைகள் சார்ந்த குற்ற உணர்வும் இன்றி, அணைவரையும் சரி சமமாக அரவணைத்த இக்கதை அன்னையாகவும், அதனால் பூரண மகிழ்வை எய்திய விமலாகவும் வாழும் பக்குவம் பெறலாம்.

இரா. அரவிந்த்

Share

Discover more from Pa Raghavan

Subscribe to get the latest posts sent to your email.

By Para

தொகுப்பு

Random Posts

Recent Posts

Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

Subscribe via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

error: Content is protected !!

Discover more from Pa Raghavan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading