
ஊர்வன – கிண்டிலில் ஜூலை 3ம் தேதி வெளியாகவிருக்கும் என் புதிய புத்தகம். இது ஒரு குறுநாவல். 1998ம் ஆண்டு கல்கியில் இதனை எழுதினேன். அப்போது இக்கதைக்கு ‘ஒளிப்பாம்புகள்’ என்று தலைப்பிடப்பட்டது.
மேலோட்டமான பார்வையில் இக்குறுநாவல் பேசுகிற விஷயம் பாலியல் சார்ந்ததாகத் தென்பட்டாலும் இதன் உள்ளடுக்குகள் தொடுகிற உயரங்கள் வேறு. ஒரு மலைக் கிராமத்தில் ஒரு சாமியார் நடத்தும் பள்ளிக்கூடத்துக்குத் தலைமை ஆசிரியராகப் பணியாற்ற வரும் ஒருவனின் அனுபவங்களின் ஊடே தாந்திரிகப் புதிர்ப்பாதையின் அபாயகரமான ஆழங்களைத் தொட்டுக்காட்டுகிறது இது.
அக்காலக்கட்டத்தில் பல சாமியார்களுடன் எனக்குத் தொடர்பு இருந்தது. நிறுவனமயமானவர்கள், தனி மனிதர்கள், தேசாந்திரிகள், இடத்தை விட்டு நகராதவர்கள், இறுதிவரை எதற்காக இருந்தார்கள் என்றே புரிபடாமல் சும்மா இருந்துவிட்டுப் போனவர்கள், இறந்த பின்பு பலவற்றைப் புரியவைத்தவர்கள்… எத்தனையோ பேர்; எத்தனையோ விதமானவர்கள்.
அவர்களுள் ஒருவரை மனத்தில் இருத்தித்தான் இக்குறுநாவலை எழுதினேன். பின்னாளில் ‘யதி’ எழுதுவேன் என்று அப்போது எண்ணிப் பார்த்ததுகூட இல்லை.
இருபத்திரண்டு வருடங்களுக்குப் பின்பு முதல் முறையாக மீள் பிரசுரமாகும் இக்குறுநாவலை இப்போது சிறிது திருத்தி எழுதியிருக்கிறேன் என்பது தகவலுக்காக.
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.