தூணிலும் இருப்பான் : நிழல் உலகின் நிஜ தரிசனம் (இரா. அரவிந்த்)

சமீப காலங்களில் பெரும்பாலும் எழும் பேச்சு, கருப்புப் பணத்தை மீட்டெடுத்துவிட்டால் ஏழ்மை ஒழிந்து நாடு சுபிக்ஷம் அடைந்து விடும் என்பது.

குறிப்பாகத் தேர்தல் சமயங்களில் இக்கருத்துகள் பெரும் விவாதம் ஆகி ஏதோ ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் கருப்புப் பணம் பூட்டி வைக்கப்பட்டது போலும், அவற்றைத் திறந்து விட்டால் உலகெங்கும் பாலாறும் தேனாறும் ஓடும் என்பது போன்றும் சொல்லப்படுவதைக் கேட்டு பலர் நம்பியும் இருப்பார்கள்.

உண்மையில் கருப்புப் பணம் என்பது ஓர் இடத்தில் புதைந்து கிடப்பது அல்ல. அதன் ஊற்றான கருப்புப் பொருளாதாரமே உலகப் பொருளாதாரத்தின் பெரும் பங்கு என்பதையும் பொருளியலையும்  உலக அரசியலையும் ஆள்வதே கணக்கில் வராத இப்பொருளாதாரத்தின் செயல்பாடுகள்தாம் என்பதையும் மிகச் சிலரே உணர்ந்துள்ளனர்.

“ஆண்டவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” என்பது போல உலகின் அனைத்துத் துறைகளிலும் வியாபித்திருக்கும் இக்கருப்புப் பொருளாதாரத்தின் அடிப்படை இந்தப் புதினத்தில் மிக எளிதாகப் புரியவைக்கப்படுகிறது. அவ்வகையில் ‘தூணிலும் இருப்பான்’ ஒரு முக்கியமான படைப்பு ஆகிறது.

சென்னையின் “பர்மா பஜார்” பகுதியே கதையின் களம்,.
ஆதியிலிருந்தே படிப்பும் சேர்க்கையும் சரியாக அமையாத கதையின் நாயகன் ஐயனார், வீட்டிலிருந்து வெளியேறி பர்மா பஜாரில் தேநீர் கொடுப்பதில் ஆரம்பித்து கள்ளக் கடத்தல் நுணுக்கங்களில் தேறி, நிழலுலக  முதலாளிகளால் அரசியல் பதவி, புது தொழில் முதலிய பல ஆசைகளால் அலைக்கழிக்கப்பட்டு எந்த எல்லை வரை செல்கிறான் என்பதே கதையின் சுருக்கம்.

கல்விக் கூடங்களில் முதல் வரிசையில் அமரும் நன்கு படிப்பவர்கள் மாத சம்பளக்காரர்களாகவும், இரண்டாம் வரிசையான சுமார் படிப்பாளிகள் அவர்களுக்குச் சம்பளம் தரும் முதலாளிகளாகவும், மூன்றாம் வரிசையின் சரியாகப் படிக்காதவர்கள் முதலாளிகளை ஆளும் அரசியல்வாதிகளாகவும் பின் வரிசையில் உள்ள படிப்பே வராதவர்கள் அனைவரையும் ஆட்டுவிக்கும் நிழலுலக தாதாக்களாகவும் வருவார்கள் என்ற நகைச்சுவையை குறுஞ்செய்திகளில் பெற்று ஃபார்வேர்டு செய்திருப்போம்.

இதன் நிதர்சனத்தை உணர்த்துவது, தனக்கென்று வீடே இல்லாமல் மேன்ஷனில் தங்கி, கள்ளக் கடத்தலின் உலகளாவிய அமானுஷ்ய வலைப்பின்னலால் பயன்பெறும் அரசியல்வாதிகள், புறட்சியாளர்கள், தொழிலதிபர்கள், கஸ்டம்ஸ் ஊழியர்கள், போலீஸ் என அனைவரையும் சரிக்கட்டி ஆளும் பஜாரின் கடவுளாக விளங்கும் முதலாளி மீனாட்சி சுந்தரம் என்ற ஆளுமை.

இவ்வளவு பலம் பெற்றவர், ஐய்யனாரிடம் “நாம போர்ட்டர் ஜோலி பார்க்கறோம். நமக்குக் கிடைக்கிறது சுமைகூலி மட்டும்தான்!” என்பதும், அவருக்கு மேல் உள்ள ஏஜன்டுகள், சிறிய சாமிகள், பெரிய சாமிகள் என வலைப்பின்னலை விளக்குவதும் கள்ளக் கடத்தலின் விஸ்வரூபத்தை நாம் உணர்ந்து வாய் பிளக்கும் தருணங்கள்.

இச்சந்தையில் வாழும் சூழ்நிலைக் கைதிகளின் அவலத்தைப் புரிந்துகொள்ள உதவுவது, ஐயனாரிடம் தனபால் கூறும், “நாத்தம் புடிச்ச வாழ்க்கையைப் பணத்தோட வாசனையாலதான் மறைக்கணும்” என்ற வைர வரி.

இங்குள்ள அனைவரையும் ஏமாற்றுக்காரர்களாகவும் பேராசைக்காரர்களாகவும் எண்ணினால், “குடும்பத்துக்கு மூணுவேளை சோறு, பண்டிகைக்குப் புதுத்துணி, எந்திரிச்சா நிம்மதி, ஹஜ்ஜூக்கு போவணும்” என்ற எளிய ஆசைகளோடு வாழும் சஜாத்தின் வாப்பா போன்றோரும், அவரை மதித்து அவர் கடையை பதுக்கலுக்காக உபயோகிக்காத ஐயனாரின் பண்பும் நெகிழ்ச்சியின் கணங்கள்.

நகரிக்குச் செல்லும் ஐயனாரை வீழ்த்தப்போவது அவனால் கைவிடப்பட்ட பழைய காதலி மீனாட்சியா? அவனின் நம்பிக்கை துரோகத்திற்கு ஆளான முதலாளியா? அவனுடன் கூட வரும் நண்பர்களா? பின்னால் வருவேன் என்று சொன்ன தனபாலா? என பரபரப்பாக நகரும் புதினத்தின் இறுதிப் பக்கங்கள் யாரும் எதிர்பார்க்காத முடிவைக் கொடுப்பது எழுத்தாளரின் தனி முத்திரை.

இவர்களை மீட்கவோ நெறிப்படுத்தவோ நம்மால் முடியாது என்ற போதிலும் இவர்களையும், உலகைக் கட்டி ஆளும் இச்சந்தையையும் தெளிவாகப் புரிந்துகொள்ள ஆரம்பப் புள்ளியாக விளங்கக் கூடியது இந்நாவல்.

இரா. அரவிந்த்

தூணிலும் இருப்பான் – கிண்டிலில் வாசிக்க இங்கு செல்லவும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி