எழுத்தை நேசிக்கும் ஒருவனுக்கு, எழுத்தாளனை நேசிக்கும் ஒருவனுக்கு, எழுத்தை தனதாக்கிக்கொள்ள விரும்பும் ஆரம்ப நிலை எழுத்தாளனுக்கு…
மிக சிறிய புத்தகம் என்றாலும் இந்தப் புத்தகத்தின் வழியாக பா.ராகவன் கற்றுக்கொடுக்கும் வழிமுறைகள் ஏராளம். நிச்சயம் இது எனக்கான புத்தகம், எனக்கான வழிகாட்டிகளில் ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை. ஒரு புத்தகம் தனக்கானது என வாசகன் உணரும்போதே அது வெற்றிபெற்று விடுகிறது. (அவ்வகையில் இப்புத்தகம் எனக்கு மிக நெருக்கமானதாகிறது). அப்படி இல்லையென்றாலும் அது குறித்து கவலைகொள்ளும் ஆள் நான் இல்லை எனக்கு வேலைகள் ஏராளாம் இருக்கின்றன என்கிறார் பா.ரா. இந்த புத்தகத்தின் மூலம் அவர் கூற விரும்பும் உட்கருத்தும் அதுவே.
சமீப காலங்களில் ஒன்றை பரிசோதித்துப் பார்த்தேன், எழுத்தின் முதல் புள்ளியை வைத்துவிட்டு அது எங்கெல்லாம் இட்டுச் செல்கிறது என்று பார்ப்பது. அந்த முதல் புள்ளி மட்டுமே என் சிந்தனையில் இருந்திருக்கும், அதன் பின் எழுதிய யாவும் மனம் போன போக்கில் எழுதியவையே. (நல்லவேளையாக அவற்றை பொதுவெளியில் வெளியிடவில்லை. பரிசோதனை முயற்சியை வெளியில் சொல்லலாம். சோதிக்கும் முயற்சிகளை கமுக்கமாக வைத்துக்கொள்வதே நலம்.)
மனம் போன போக்கில் எழுதாதே என்கிறார் பா.ரா. அசை போடுதல் எழுத்தாளனுக்கு எத்தனை முக்கியம் என்பதை வலியுறுத்திச் சொல்கிறார்.
மனம் போன போக்கில் எழுதினேன் என்று கூறினேன் இல்லையா, அப்படி எழுதுவதற்காக ஆன கால அளவைவிட, இதைத்தான் எழுதப்போகிறேன் என்று ஆரம்பம் முதல் முடிவு வரை ஓட்டிப் பார்த்துவிட்டு எழுதிய பதிவுகளை மிகக் குறைந்த கால அளவில் நிறைவாகவும், நன்றாகவும், ஆத்மார்த்தமாகவும் எழுதியிருக்கிறேன். அப்படியிருக்க ஓர் (ஆரம்பநிலை) எழுத்தாளன் எதை செய்ய வேண்டும்; எதைவிட வேண்டும்; எழுத்தில் எத்தகைய பயிற்சி அவசியம் என்பதை கோடிட்டுக் காட்டுகிறார். அந்த கோடுகள் மிக முக்கியமானவை.
எஸ்.ரா.வினுடைய ஒருநாள் சிறுகதை முகாம் ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்திருந்தது. அது நடந்து பலவருடங்கள் ஆகியிருக்கும். அதில் எஸ்.ரா ஒன்றை கூறினார். எழுதும் தருணங்களில் என்னை யாரேனும் கவனித்தால் நிர்வாணமாக உணர்கிறேன் என்று. கிட்டத்தட்ட எனக்கு அதே போன்ற உணர்வுதான் இப்போது வரைக்கும் ஏற்படுகிறது. நான் எழுதும் தருணங்களில் யாரும் என்னை பார்த்துவிடக்கூடாது. அப்படிப் பார்த்துவிட்டால் தொடர்ந்து என்னால் எழுத முடியாது. இதற்கே எனக்கும் அம்மாவுக்கும் பலமுறை சண்டை நடந்தது உண்டு. அந்த சிறுகதை முகாம் இன்று வரை எனக்கு மறக்காமல் இருப்பதற்கான காரணம் எஸ்.ரா கூறிய அந்த ஒரு வாசகம்.
அதேபோல் ஒரு எழுத்தாளனின் கணங்களை புத்தகம் முழுக்க பதிவு செய்திருக்கிறார் பா.ரா. என்னை கேட்டால் பா.ராகவன் கணித சூத்திரத்திற்கான எளிய புத்தகத்தை போல எழுத்திற்கான எளிய புத்தகமாக எனக்காக வடிவமைத்துக் கொடுத்ததைப் போலவே உணர்கிறேன். இதனை வாசித்ததும் ஒருவித கொண்டாட்டமான மனநிலை. எழுத்தின் மீது எண்ணத்த எழுதி எண்ணத்த கிழிச்சி என்ற சோர்வேற்படும் போதெல்லாம் இதனை ஒரு ரிப்ரெஷிங் கேப்ஸ்யூலாக உபயோகிக்கலாம் என்று இருக்கிறேன். வந்தனம் ஆசானே.
வித்தையை கற்றுக்கொடுக்கும் ஆசான் கிடைப்பது அரிதினும் அரிது. அதை புரியும்படி கற்றுக்கொடுப்பது அதைவிட அரிது. அவ்வகையில் இந்த புத்தகம் நிச்சயம் – அரிதாகக் கிடைத்த மாபெரும் பொக்கிஷமே. Feeling Blessed.