மதிப்புரை வலையுலகம்

யோசித்து நேசிப்போம்

இங்கே கொரோனாவைவிட வேகமாக இன்னொரு அபாயம் பரவிக்கொண்டிருக்கிறது. அது வாசிப்பு குரூப்புகள்.

எனக்கு இந்தக் குழு வாசிப்பாளர்களைப் பார்த்தாலே திரைப்படங்களில் கண்ட கேங் ரேப் காட்சிகள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. அபூர்வமாக ஒன்றிரண்டு நல்ல மதிப்புரைகள் வந்தாலும் பெரும்பாலும் இக்குழுக்களில் எழுதப்படும் உரைகள் குறிப்பிட்ட புத்தகத்துக்கோ, எழுத்தாளருக்கோ தர்ம சங்கடம் தரக்கூடியவையாகவே இருக்கின்றன. எழுத்தாளர் தமது புத்தகத்தில் எதை உயிர் என்று கருதுவாரோ, கவனமாக அதை உருவிக் கடாசிவிடுவதில் இம்மதிப்புரையாளர்கள் சமர்த்தர்களாக இருக்கிறார்கள்.

அதுகூடப் பரவாயில்லை. புத்தகம் சொல்ல வருவதற்கு முற்றிலும் எதிரான ஒரு புரிதல் புரட்சியை மதிப்புரையாளர் நிகழ்த்திக் காட்ட, உடனே ‘சிறப்பான பதிவு தோழர்’, ‘நேசிக்கத் தூண்டும் வாசிப்பு தோழர்’ என்றும் நூற்றுக்கணக்கானவர்கள் பின்பாட்டு பாடுவது திகிலூட்டுவதாக இருக்கிறது.

சில நாள்களுக்கு முன்னர் பதினெட்டாவது அட்சக்கோட்டுக்கு யாரோ ஒரு குழுக் குழந்தை மதிப்புரை எழுதியிருந்தது. படித்தால், அது ஏதோ ஒரு நகரம் தன் வரலாறு கூறுகிற புத்தகத்துக்கு எழுதப்பட்ட மதிப்புரை போல இருந்தது. அதையும் விடாமல் ‘அற்புதமான படப்பிடிப்பு அன்பே’ என்று ஆசிகூறச் சிலர் இருந்தார்கள்.

இவையெல்லாவற்றையும்விட அபாயகரம், ஒவ்வொரு புத்தகத்துக்கும் மதிப்புரை அடித்துக் கடாசியதும் பிடிஎஃப் எங்கு கிடைக்கும் என்று தவறாமல் ஒவ்வொரு போஸ்டிலும் சில கமெண்ட்கள் வந்துவிடுகின்றன. கர்ம சிரத்தையாகச் சிலர் அவற்றுக்கு பதிலும் சொல்கிறார்கள்.

எனக்கு இரண்டு தலைமுறை இளையவரான எழுத்தாளர் நண்பர் ஒருவர் நேற்று ஒரு சங்கதி சொன்னார். ‘சார், வாசிப்பு மாரத்தானில் நான் கலந்துகொண்டாக வேண்டும். கைவசம் உங்கள் புத்தகம் இல்லை. உடனே பிடிஎஃப் அனுப்புங்கள்’ என்று அவரிடமே கேட்டிருக்கிறார் யாரோ பிரகஸ்பதி. ‘தூக்குப் போட்டுக்கொள்ளலாம் போல இருந்தது சார்’ என்றார் நண்பர்.

‘நீங்கள் எதற்கு மெனக்கெட்டுப் போட்டுக்கொள்ள வேண்டும்? பிடிஎஃப் அனுப்புங்கள். அவர் போட்டுவிட்டு விடுவார்’ என்று சொல்லி ஆற்றுப்படுத்தினேன்.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி