நிரந்தரமானவன் [தே. குமரன்]

ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது வானில் மிதக்கும் அனுபவமும், அது துண்டிக்கப்பட்டு திடீரென்று கீழே விழுந்த அனுபவமும் ஒரே நேரத்தில் வாய்க்கும் என எவரேனும் சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன்.
 
உடலின் ஒவ்வொரு அணுவிலும் நிறைந்துள்ள, ‘நிரந்தரத்தை’ (அழிவின்மையை) நோக்கிய ஆன்மாவின் ஏக்கமாக உணர்கிறேன்.
 
எட்வின் இறந்தவுடன், ஆப்ரஹாம் ஹராரி ஜன்னல் வழியாக வெளியேறுவது அடுத்த ஆன்மாவை நோக்கியா தெரியவில்லை.
 
இது ஒரு உச்சகட்ட வாசிப்பனுபவம். நேற்று இரவு வாசிக்கத் தொடங்கினேன். கனவிலே இந்த நாவலை ஒரு ஊசலை போல் கண்டேன்… வானுக்கும் பூமிக்குமாக இயங்கும் ஒரு தனி ஊசலைப் போல இந்நாவல் தோன்றியது.
 
பின்னர் காலை எழுந்ததும் தொடர்ச்சியாக வாசித்து முடித்தேன். வாசித்த போது உருவான உணர்வுகளை இழந்துவிடுவோமோ எனும் பயத்தில் மதிய உணவு வரை யாரிடமும் பேசாமல் இருந்தேன் (காலை உணவும் உட்கொள்ளவில்லை). இத்தகைய ஒரு அனுபவம் ஒரு நாவலுக்கு உருவாவது இதுவே முதல் முறையாகும்.
 
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் (அல்லது குறைந்தபட்சமாக எனக்குள்ளும்) அந்தரங்கமாக ஒரு கனவு இருக்கும். அந்தக் கனவின் உச்சமாக இந்த புத்தகத்தை நான் கருதுகிறேன்.
 
 
இக்கதையில் யூத தேவாலயத்திற்கு செல்லும் கனவு ஒரு பிரம்மாண்ட சிம்பொனி அமைப்பது ஆகிறது. நாயகனின் மேதமை, கடவுளுக்கு அருகாமையில் இருக்கும் நிலை அங்கீகரிக்கப்படுகிறதா? முன்னதாக ரபி அவரை அங்கீகரிக்காத போதே நமக்கு தெரிகிறதா?…. முழுமையடையாத அந்த தேவாலயம் தான் அங்கீகரிக்கப்படாத இந்த சிம்பொனியா…‌ என்னைப் பொருத்தவரை நம் ஒவ்வொருவரும் காணும் கனவின் உச்சம் இதுவே…
 
ஜான்வியின் பாத்திரப்படைப்பு அபாரம். இத்தகைய ஒரு தொழுனரை விரும்பாத தெய்வம் ஏதேனும் உலகில் இருக்கக் கூடுமா?.. அல்லது அந்த தெய்வமே தான் இந்த மேதையைத் தோழனாக பெற இறங்கி வந்ததா!!! என்ன ஒரு அற்புதம் இந்த ஜான்வி.
 
மரியாவின் முதல் பாடல் ஒலிப்பதிவானவுடன் நாயகன் அவளை செருப்பால் தன் தலையில் அடிக்க சொல்வது ஒரு மறக்க முடியாத சித்திரத்தைத் தருகிறது… பிறிதொரு நாளில் மரியாவை தேடி நாயகன் வரும்பொழுது மரியாவின் உடைய திருமண செய்தியை பத்திரிக்கையில் காண்பது என்ற இரண்டையும் இணைக்கும் பொழுது ஒரு பிரம்மாண்ட சித்திரம் உருவாகிறது.
 
ஒரு தேவாலயத்தில் சென்று இயேசுவாக சிலுவையில் நிற்கும் காட்சி மறக்க முடியாதது. இயேசு சிலுவையை சுமந்து போல் தன்னுடைய இசையை சுமந்துகொண்டு உள்ளாரா?
 
இந்த நாவல் முழுவதும் நீங்கள் ஆங்காங்கே தெரிவித்திருந்த பாடல்கள் மற்றும் இசை வடிவங்களை அந்த தருணத்திலேயே உடனடியாக யூடியூபில் கேட்டுவிட்டு இந்நாவலை தொடர்ந்து வாசித்தேன். உங்களின் இசை ஆர்வம் இதில் தெரிந்தது. நீங்கள் சொல்லிய ஹிந்தி பாடல்கள் முதல் கிலெஸ்மர் வரை இப்பொழுதுதான் நான் முதன் முதலில் கேட்கிறேன்.
 
சமர்ப்பணம், அதைத்தொடர்ந்து முதல் பகுதியில் எதுவும் எழுதாமல் விட்டிருக்கிறீர்கள். ஏதும் அற்ற தன்மை அல்லது வெறுமை அல்லது அனைத்துமான ஒன்றைத்தான் அவ்வாறு விட்டு இருக்கிறீர்களோ என தோன்றுகிறது.
 
தங்களுடைய புத்தகங்களில் நிலமெல்லாம் ரத்தம், எக்ஸலணட், அலகிலா விளையாட்டு, கொசு மற்றும் யதி போன்ற சில நூல்களை வாசித்துள்ளேன். என்னளவில் வாசிப்பனுபவத்தை உச்சம் என்றால் இந்த நாவல் தான். என் தயக்கத்தை உடைத்து உங்களுக்கு கடிதம் எழுத உந்துதல் அளித்தது இந்த வாசிப்பனுபவமே..
 
எவ்வளவு எழுதினாலும் என் உணர்வுகளை வார்த்தையால் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறேன்.
 
இந்த நாவல் எழுதிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.
 
நன்றிகளுடன்
தே குமரன்
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி