சீரடிக்குச் சென்ற பூச்சாண்டி

நண்பர்களோடு இரண்டு நாள் சீரடி சென்று திரும்பினேன். இந்த இரண்டு நாள்களும் எழுத்து வேலை, தொலைபேசி அழைப்புகள் இரண்டும் இல்லை. படப்பிடிப்புகளுக்கும் பத்திரிகைகளுக்கும் தேவையானதை முன்கூட்டியே எழுதிக் கொடுத்துவிட்டுப் போனதால் இது சாத்தியமானது.

பயணமோ, தரிசனமோ சிரமமாக இல்லை. உணவுதான் சற்றுப் படுத்திவிட்டது. எனது வழக்கமான ஒரு வேளை உணவு என்பதைக் கடைப்பிடிக்க முடியவில்லை. மதியம் கிடைத்ததை உண்டு, இரவு பாதாம் சாப்பிட்டு சமாளித்தேன்.

என்ன பெரிய வடக்கத்தி மாநிலம்? உருப்படியாக ஒருத்தனுக்கும் ஒரு பனீர் டிஷ் சமைக்கத் தெரியவில்லை. எதைச் செய்தாலும் சோள மாவு அல்லது கடலை மாவைக் கொட்டிக் கவிழ்த்துவிடுகிறான்கள். தவிரவும் சகட்டுமேனிக்கு சூரியகாந்தி எண்ணெய். பார்த்தாலே பயங்கரமாக இருக்கிறது.

முதல் நாள் எனக்குக் கிடைத்த பனீர் க்ரேவியில் பனீர்த் துண்டுகளை மட்டும் கவனமாகப் பொறுக்கி எடுத்து உண்டேன். சாலட் இருந்ததால் சமாளிக்க முடிந்தது. நேற்று பனீர் டிக்கா மசாலா என்று சொல்லி ஒரு படு பயங்கரமான ஐட்டத்தைக் கொண்டு வந்து வைத்தான். அதில் ஒரு மண்டி மிளகாய் அரைத்துக் கொட்டி, பத்தாத குறைக்கு அரைக்கிலோ ரீஃபைண்ட் ஆயிலைக் கவிழ்த்திருந்தான்.

பனீரையே தவிர்த்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் காய் எதுவும் கிடைக்கவில்லை. சப்ஜி என்ற பெயரில் பருப்புக் கூட்டுகள்தாம் கிடைத்தன. அதுவும் வெண்டைக்காயைப் பருப்புக் கூட்டாகச் செய்தால் எவன் தின்பான்? அதுவே கொழகொழா. பருப்பில் குழைந்து மேலும் வழவழா. உவ்வே.

வட இந்தியர்களுக்கு பேலியோ தெரியாது. ஜிம்முக்கு வழக்கமாகப் போவதாகச் சொன்ன டிராவல் ஏஜெண்ட்கூட lchfஐப் புரிந்துகொள்ள மறுத்தார். ஒரு சப்பாத்திகூட உண்ணாமல் ரொம்ப நாள் உயிர் வாழவே முடியாது என்று சூடம் அணைத்து சத்தியம் செய்தார். ஒரு கப் வெண்ணெய் கிடைக்குமா என்று கேட்டு வாங்கி உண்டதைக் கண்ட ஓட்டல் சிப்பந்தி, நாலு பேரைக் கூப்பிட்டு, பூச்சாண்டி பார் என்று என்னை வேடிக்கை காட்டினார்.

என் நேரம் பாருங்கள். இம்முறை பாதுகாப்புக்கு வாங்கிச் சென்ற ரோஸ்டட் பாதாம் [அசோக்நகரில் ஒரு சேட்டு மாமியிடம்] எக்கச்சக்கமாக வறுபட்டு, ருசி குன்றியதாக இருந்தது. [ஒழுங்காக வீட்டில் வறுத்து எடுத்துச்சென்றிருக்கலாம். விதி யாரை விட்டது?]

ஏழெட்டு பிரசாத பூந்தித் துகள்கள், வறுத்த வேர்க்கடலை கால் பிடி, பாதி பழுத்த ஒரு கொய்யா, என்னதான் வடிகட்டினாலும் வற்றாத ஊற்றாக உணவெங்கும் விரவிக்கிடந்த எண்ணெய் என்று இரு தினங்களும் கொஞ்சம் கச்சடாவாகிவிட்டன. இன்று மதியம் ஒழுங்காக வீட்டில் சாப்பிட்டுவிட்டு ஒரு 34 மணி நேர ஃபாஸ்டிங் போகிறேன். நாளைக் காலை ஒரு மணி நேரம் நடந்து, பதினைந்து நிமிடங்களுக்கு ஓடிச் சற்றுப் பிராயச்சித்தம் செய்ய வேண்டும்.

ஆயிரம் சொல்லுங்கள். வெளியே சாப்பிடுகிற வெஜிடேரியன் பேலியர்களுக்கு சங்கீதா ஒன்றுதான் சரியான புகலிடம். வேறெங்கு போனாலும் சர்வநாசம்.

Share

Add comment

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி