நண்பர்களுக்கு வணக்கம்.
இந்தக் குறிப்பை நான் இன்னும் சில தினங்கள் முன்னதாக எழுதியிருக்க வேண்டும். சில சொந்தப் பிரச்னைகளால் முடியாமல் போய்விட்டது.
கடந்த ஆண்டு [2016] ஜூலை 23ம் தேதி வெஜ் பேலியோ கடைப்பிடிக்க ஆரம்பித்தேன். டாக்டர் ப்ரூனோ எனக்கு அடிப்படைகளை விளக்க, திரு. சங்கர்ஜி எனக்கு ஆரம்ப டயட் கொடுத்தார். மூன்று மாதங்களில் வாரியருக்கு இடம் பெயர்ந்தேன். அப்போது முதல் திரு சவடன் என்னைக் கவனிக்கத் தொடங்கினார். எப்போதேனும் வரும் சந்தேகங்களை செல்வன் மெசஞ்சரில் தீர்த்தார். டாக்டர் ஹரி, கோகுல் குமரன், டாக்டர் ராஜா ஏகாம்பரம், மனோஜ் எனப் பலபேர் எனக்குப் பல்வேறு உதவிகள் செய்தார்கள். குறிப்பாக கோகுலும் ராஜா ஏகாம்பரமும் அளித்த புத்தகங்கள் பல என் கண்ணைத் திறந்தன. கோடி கொடுத்தாலும் கிடைக்காத பொக்கிஷங்கள் அவை.
அது பெரிதல்ல. இந்த ஓராண்டில் என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதைத் தெரியப்படுத்தவே இக்குறிப்பை எழுதுகிறேன்.
பேலியோ தொடங்குமுன் எனது HbA1c 6.2 ஆக இருந்தது. விளிம்புநிலை நீரிழிவு. இப்போது அது அது 5.6 ஆகியிருக்கிறது. நீரிழிவு இப்போது அறவே இல்லை.
முன்னர் உயர் ரத்த அழுத்தம் இருந்தது. மூன்று மாத்திரைகள் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். இன்று இல்லை.
அன்று ஃபேட்டி லிவர் பிரச்னை இருந்தது. GGT எண் 86. இன்று அது 11. டிரைகிளிசிரைட் 154 இருந்தது. இப்போது 86. விட்டமின் டி, அயன், பி12 அனைத்துமே சென்ற வருடம் இருந்ததைக் காட்டிலும் மிகக் கணிசமாக ஏறியிருக்கிறது. இரண்டு ரிப்போர்ட்டுகளிலும் உள்ள டிரைகிளிசிரைட் / எச்டிஎல் ரேஷியோவைப் பார்த்துவிட்டு இரும்பிலே ஒரு இருதயம் இருக்குது என்று செல்வன் சொன்னார். சந்தோஷமாக இருந்தது.
நான் ஆறாங்கிளாசில் இருந்து கண்ணாடி அணிபவன். சோடாபுட்டி பவர். ஆனால் பேலியோவுக்குப் பின் என் மைனஸ் பவர் கணிசமாகக் குறைந்திருக்கிறது.
விஷயம் இதுதான். என்னைப் போன்ற ஒரு பரிபூரண ஒழுங்கீனவாதி யாரும் இருக்க முடியாது. என்னாலேயே இந்தளவுக்கு உடல் நலன் சார்ந்து ஒழுங்கு நடவடிக்கைகள் சிலவற்றை எடுக்க முடிந்து, சரியான பலனும் கிட்டியிருக்கிறது என்னும்போது மற்றவர்களுக்கு அது இடது கை வீச்சில் சாத்தியமாகக் கூடியதே.
வெஜ் பேலியொவில் பெரிய பலன்கள் இராது என்று நான் தொடங்கும்போது பலபேர் சொன்னார்கள். எனக்கு சிறிய பலன் இருந்தால்கூடப் போதும் என்று நினைத்துத்தான் ஆரம்பித்தேன். ஆனால் கிடைத்திருப்பது பெரிதினும் பெரிது.
இந்த ஓராண்டுக் காலத்தில் 28 கிலோ எடை குறைந்திருக்கிறது. நிற்க, நடக்க, ஓட முடிகிறது. முன்னைக்காட்டிலும் குறைந்தது இருநூறு மடங்கு சுறுசுறுப்பாக இருக்கிறேன். தவிரவும் மேற்படி உடம்பு சொஸ்தங்கள்.
எனவே வெஜ் பேலியோவில் பலனில்லை என்று யாராவது சொன்னால் நம்பாதீர். நல்ல பலன் இருக்கிறது. என்ன ஒன்று, அரசியல்வாதி மாதிரி கட்சி மாறிக்கொண்டே இருக்கக்கூடாது. இந்த ஓராண்டுக் காலத்தில் நான் மொத்தமாக இரண்டு முறை மட்டுமே கார்ப் உணவு எடுத்தேன். அதுவும் நப்பாசைப்பட்டு அல்ல. உடலுக்கு ஒரு கார்ப் ஷாக் கொடுப்பதன் மூலம் எடைக்குறைப்பு சாத்தியங்களை அதிகரிக்க முடியுமா என்று பார்ப்பதற்காக மட்டும்.
இது வேண்டாம் என்று செல்வன் சொன்னார். அவர் சொல்லியும் கேட்காமல் செய்தேன். முதல் முறை அறுபது வாட்ஸ் பல்பு. இரண்டாம் முறை ஓரளவு பலன் [2.5 கிலோ குறைந்தது] இப்போது யோசிக்கும்போது இந்த இரண்டரை கிலோவுக்காக அப்படியொரு கஷ்டம் பட்டிருக்க வேண்டாம். ஒரு வேளை கார்ப் உணவு உட்கொண்டு, அதன்பின் 48 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்தேன்.
அதற்கு பதில் நான் எப்போதும் மேற்கொள்ளும் 23:1 வாரியர் விண்டோவே எனக்கு சௌகரியமாக இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களாக ஒருவேளை உணவுதான். ஆனால் முழு 1300 கலோரி உணவு.
இந்த மிகக் குறைந்தபட்ச ஒழுங்கு மட்டும் இருந்துவிட்டாலே சரியான பலன் கிடைக்கிறது என்பதை நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வது கடமை என்று கருதுகிறேன். தைரியமாகச் செய்யுங்கள், நேர்மையாகச் செய்யுங்கள். என்றென்றும் ஆரோக்கியம் உங்களுடன் இருக்கும்.
கடைசியாக ஒருவருக்கு நான் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யவேண்டும். திரு. சவடன். இந்த மனிதரை எனக்கு போன வருடத்துக்கு முன்னால் தெரியாது. இங்கே பழக்கமானவர்தான். எனக்கு வாரியர் கலையைக் கற்றுத்தந்ததோடு மட்டுமல்லாமல், எனது தினசரி நடவடிக்கைகளைக் கேட்டு அவர் குறித்து வைத்துக்கொள்வார். [நமக்கு இந்த டயட் டைரி எழுதும் வழக்கமெல்லாம் கிடையாது.] என்றைக்கு நான் என்ன சாப்பிட்டேன் என்பதில் இருந்து எத்தனை நடந்தேன், என்ன செய்தேன் என்பது வரை அவரிடம் தயாராக இருக்கும். என் அவ்வப்போதைய பிழைகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டி, திருத்தம் சொல்லி, வழிமுறைகளில் மாற்றம் செய்து – மறக்க முடியாத மனிதர்.
பல சமயம் அவர் சொன்ன பல ஆலோசனைகளை நான் நிர்த்தாட்சண்யமாக நிராகரித்திருக்கிறேன். அதெல்லாம் முடியாது போங்க சார் என்று எழுந்து போயிருக்கிறேன். ஆனால் ஊரைச் சுற்றி, உலகு சுற்றி கடைசியில் அவர் வழிக்குத்தான் வந்து நிற்பேன். அதன் விளைவே இன்றைய எனது ரத்தப் பரிசோதனை அறிக்கையின் நம்பிக்கை தரும் எண்களாகியிருக்கின்றன.
வெஜ் பேலியோ குறித்த நம்பிக்கையை எனக்கு உண்டாக்கியது என். சொக்கன். அவன் என் நண்பன். இதைப் பயிற்சி செய்து கணிசமாக அவன் இளைத்திருந்ததைக் கண்டபிறகுதான் நான் ஆரம்பித்தேன். ஆரோக்கியம் நல்வாழ்வு குழுவை எனக்கு அறிமுகப்படுத்தி படிக்கச் சொன்னது என் மனைவி. அன்று படிக்க ஆரம்பித்ததுதான். இன்றைக்கு வெஜ்ஜில் கீட்டோ எவ்வளவு தூரம் சாத்தியம் என்று ஆராய்ச்சியில் ஈடுபடும் அளவுக்கு என்னை இழுத்துக்கொண்டு போயிருக்கிறது.
நன்றி, அனைவருக்கும். அனைத்துக்கும்.