ஒரு ஞாநியும் மூன்று பானைகளும்

எதிர்பாராத சில காரணங்களால் இன்றைக்குக் கண்காட்சிக்கு மிகவும் தாமதமாகத்தான் செல்ல முடிந்தது. எல்லோரும் கூட்டம் இல்லை, இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தாலும் என் கண்ணுக்கு நியாயமான கூட்டம் இருந்ததாகவே தெரிந்தது. ஒரு வேலை நாளில் இதைவிட அதிகக் கூட்டம் இருப்பது சாத்தியமில்லை. வருகிற கூட்டத்தில் பாதியை வாசலிலேயே ஈட்டிக்காரர்கள் மாதிரி மடக்கி உட்கார வைக்கிற அராஜகத்தைப் பற்றி மட்டும் ஏன் யாரும் ஒன்றும் சொல்லுவதில்லை என்பதுதான் புரியவில்லை. நாளை முதல் விடுமுறை தினங்கள். காலை 11 முதல் கண்காட்சி தொடங்கிவிடும். நல்ல கூட்டமும் பிரசன்னா மகிழக்கூடிய விற்பனையும் அவசியம் இருக்கும்.

ஜே.எஸ்.ராகவன், பாமாஜி, வேதா கோபாலன்

இன்று நான் அதிகம் சுற்றவில்லை. நுழையும்போதே என் மதிப்புக்குரிய நண்பர்களான பாமா கோபாலன், வேதா கோபாலன் தம்பதியரைப் பார்த்தேன். பாமாஜி, பழம்பெரும் பத்திரிகையாளர். குமுதத்தில் அவருடைய பொழுதுபோகாத பொம்முவின் ரசிகனாக இருந்து, அவரை வீடு தேடிச் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டது இருபதாண்டுகளுக்கு முன்பு. அவரும் குரோம்பேட்டைக்காரர். ஒரு காலத்தில் ஞாயிறுதோறும் அவர் வீட்டுக்குச் சென்றுவிடுவேன். ஆர்வம் மிக்க இளைஞனை அக்கறையுடன் நெறிப்படுத்தத் தம் ஓய்வுநாள்களை முழுவதுமாகத் தியாகம் செய்வார்கள்.

நான் பத்திரிகையாளனான பிறகு சந்திப்புகள் குறையத் தொடங்கின. நான் குமுதம் சென்றபோது அவர் அங்கே இல்லை. ஓய்வு பெற்றிருந்தார். நேர்ப்பேச்சு குறைந்து தொலைபேசிப் பேச்சுகள் மட்டும் கொஞ்சநாள் தொடர்ந்தது. பிறகு அதுவும் குறைந்து எப்போதாவது ரயில்வே ஸ்டேஷனில் பார்க்கும்போது பேசுவது என்றானது. அதுவும் போனது. ஏதாவது திருமணங்களில், விழாக்களில் மட்டும் பார்த்துக்கொள்ளத் தொடங்கினோம். ஒவ்வொரு சந்திப்பிலும் மாமி ஒரு செல்லத் திட்டுடன் தான் ஆரம்பிப்பார். இன்றும் அப்படியே.

பாமாஜி, ஜே.எஸ். ராகவனுடன் வந்திருந்தார். கொஞ்சநேரம் பழங்கதை பேசிக்கொண்டிருந்தோம். அதற்குள் கிழக்கு ஸ்டாலுக்கு லலிதா ராம் வந்துவிட்டார். ராமிடம் அவர் முன்னின்று உழைத்து உருவாக்கிய ஜி.என்.பி. மலர் ஒரு காப்பி வேண்டும் என்று ரொம்பநாளாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். இன்று கிடைத்தது. மணியம் செல்வனின் அற்புதமான அட்டைப் படத்துடன் மழமழவென்று ஆர்ட் பேப்பரில், 375 ரூபாய் விலை கொண்ட புத்தகம்.

லலிதா ராம்

எனக்கு ஜிஎன்பி பாட்டு பிடிக்கும். அவரைப் பற்றி நிறைய ‘சிறுகதை’களும் கேள்விப்பட்டிருக்கிறேன். ராம் எழுதி விகடன் வெளியீடாக வந்த ஜிஎன்பி புத்தகம் ஓரளவு முழுமையானது என்றாலும் என் பசிக்கு அது போதுமானதாக இல்லை. இந்தப் புத்தகம் [Gandharva Ganam – GN Balasubramaniam Centenary Commemorative Volume என்ற இங்கிலீஷ் டைட்டிலுடன் நடுநடுவே தமிழ்க் கட்டுரைகளுடன்.] ஜி.என்.பி. என்னும் இசை ஆளுமையின் பல்வேறு சாதனைகளைப் பல பேர் மிக நுணுக்கமாக அணுகி அலசிய கட்டுரைகளை உள்ளடக்கியது. அவரே எழுதிய ஒரு சில கட்டுரைகளும் இருக்கின்றன. [முழுக்கப் படித்துவிட்டு விரைவில் விரிவாக எழுதுகிறேன்.]

அதைவிட முக்கியம், உள்ளே இணைப்பாக உள்ள பல அபூர்வமான ஆவணங்கள், புகைப்படங்கள், ஒரு சிடி. ஜிஎன்பியை வைத்துப் படமெடுத்த தயாரிப்பாளர் முதல் முதலில் போட்ட ஒப்பந்த நகல் முதற்கொண்டு இதில் இருக்கிறது. [அந்நாளில் 25000 ரூபாய் சம்பளம் பேசியிருக்கிறார்கள்!] பிலிப்ஸ் ரேடியோவுக்கு ஜிஎன்பி விளம்பர மாடலாக இருந்திருக்கிறார் என்பது தெரியுமா?

ராமிடம் ஜிஎன்பி போன்ற வேறு பல பெரிய சங்கீத ஆகிருதிகளைப் பற்றிய புத்தகங்கள் வரவேண்டியது குறித்துச் சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் இந்த மாதிரி மொழுமொழு குண்டு சைஸ் புத்தகமாகவே அவர் யோசித்துக்கொண்டிருந்தால் மக்களுக்குப் போய்ச்சேராது என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கிறேன். 2011ல் அவர் வீறுகொண்டு எழுந்து நிறைய எழுத எம்பெருமான் அருளவேண்டும்.

ஓட்டுப் போடுவதற்காக ஞாநியின் ஸ்டாலுக்குச் சென்றேன். நான் போன வேளை அவர் கிழக்குக்கு வந்திருந்தார். ஞாநியின் [அவர் சொற்களில், ‘மக்களின்’] மூன்று பானைகளை ஒரு போட்டோ எடுத்துக்கொண்டேன். சென்ற புத்தகக் கண்காட்சியின்போதே இந்த மூன்று பானைகளைப் பற்றி ஒரு சிறுகதை தோன்றியது. எழுத நினைத்து மறந்துவிட்டது இப்போது நினைவுக்கு வந்தது. மிகப் புராதனமான காலத்தில் கிரேக்க தேசத்தில் இந்த மாதிரி மண் பானைகளை வைத்துத்தான் மக்கள் ஓட்டு போடுவார்கள். பிடித்த கேண்டிடேட் என்றால் ஒரு பானையில் இலையைப் போடவேண்டும். பிடிக்காத கேண்டிடேட் என்றால் இன்னொரு பானையில் பீன்ஸைப் போடவேண்டும். இப்படியொரு வழக்கம் இருந்திருக்கிறது.

ஞாநியின் பானைகள்

ஞாநியின் ஒரு பானைக்குள் ஒரு குறிப்பிட்ட கட்சியின் தொண்டன் ஒரு பீன்ஸையும் ஒரு கடிதத்தையும் போட்டுவிட்டுப் போய்விடுகிறான். அதிலுள்ள மறைமுக ஆதாரங்களின் அடிப்படையில் அந்த இளைஞனை ஞாநி தேடிப்பிடிப்பதும், அதன்பின் இருவருக்குமான உரையாடல்களுமாக அந்தக் கதை போகும். பார்க்கலாம், இந்த வருஷம் எழுத முடிகிறதா என்று.

நான் திரும்பவும் கிழக்குக்கு வந்தபோது ஞாநி அங்கே இருந்தார். என்னைப் பார்த்ததும் ‘இப்போதுதான் பிரசன்னாவிடம் பேசி முடித்தேன். இன்றைக்கு அவர் இட்லிவடையில் எழுத ஒரு மேட்டர் கொடுத்துவிட்டேன். உங்களுக்குக் கிடையாது’ என்றார். அதனாலென்ன? பிரசன்னா எழுத முடியாத ஒரு ஞாநி பிட்: 1959ம் ஆண்டிலிருந்து 1969ம் ஆண்டிலிருந்து அவர் ஜிப்பா போடுகிறார். பள்ளியிறுதித் தினங்கள் தொடங்கி. சிறப்புக் காரணம் ஒன்றுமில்லை. வசதியாக இருப்பது ஒன்றைத் தவிர.

லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிகை ஆசிரியர் கிரிஜா ராகவன் வந்திருந்தார். கிழக்கு, ப்ராடிஜி மற்றும் மினிமேக்ஸ் சமையல் புத்தகங்களை வெகுநேரம் சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். ஐயங்கார் சமையல் மட்டும் இருக்கிறதே, மாத்வர் சமையல் ஏன் இல்லை என்று கேட்டார். எனக்குத் தெரிந்த மாத்வர்கள் தினமும் பருப்புக் குழம்பும் உருளைக் கிழங்குப் பொறியலும்தான் சாப்பிடுகிறார்கள். ஒரு சேஞ்சுக்கு சப்பாத்திக்கு மாறினாலும் தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கை விடமாட்டேனென்கிறார்கள். வெரைட்டி இருக்கிறதா என்ன.

கிரிஜா ராகவன்

விகடன் பப்ளிகேஷன்ஸ் ஆசிரியர் வியெஸ்வியிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். இந்த வருட கிழக்கு ஸ்டால் அமைப்பை, இட வசதியைப் பாராட்டினார். புதிய புத்தகங்களில் எவையெல்லாம் நன்றாகப் போகின்றன என்று விசாரித்தார். [விகடனின் புதிய வெளியீடுகளில் எவையெல்லாம் நன்றாகப் போகின்றன என்று நான் பதிலுக்குக் கேட்கவில்லை. நானே பார்த்துத் தெரிந்துகொண்டுவிட்டேன்.] வியெஸ்வி பிரமாதமான சங்கீத ரசிகர். விகடனில் அவர் எழுதும் இசைவிழாக் கட்டுரைகளை வாசித்திருப்பீர்கள். கிழக்குக்கு முன்பு அவர் எம்.எஸ். குறித்து எழுதிய புத்தகம் என் நிரந்தர ஃபேவரிட்களுள் ஒன்று.

இன்று வலைப்பதிவாளர்களை அதிகம் சந்திக்கவில்லை. வழக்கம்போல் மாம்ஸ். வழக்கம்போல் டாக்டர். வழக்கம்போல் இருவர். ட்விட்டர் நண்பர் கவிராஜனை இன்று முதல் முறையாகப் பார்த்தேன். காக்னிஸண்டில் வேலை பார்க்கும் ஒரு தீவிர வாசகியை இரண்டாம் முறையாகச் சந்தித்தேன். பொங்கலுக்கு ஊருக்குப் போகிற அவசரத்திலும் அந்தப் பக்கம் ஒருநடை ஓடிவந்து விடுபட்ட புத்தகங்களை அள்ளிக்கொண்டு போனார். ‘எப்பவும் கமெண்ட் போட்டதில்லை சார். ஆனால் எந்த ப்ளாகையும் படிக்காம விடறதில்லை’ என்று சொன்னார். அவர் மட்டுமல்லாமல் அவரது அலுவலக சகாக்கள் சுமார் இருபதுபேர் தீவிரமான வலைப்பதிவு வாசகர்களாம்.

பின்னூட்ட ஜல்லிகள், முழ நீள வாசகர் கடிதங்கள் எழுதாதவர்கள்தான் பெரும்பாலும் புத்தகம் வாங்குகிறார்கள் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இந்த காக்னிஸண்ட் வாசகி சமீபத்திய உதாரணம்.

Share

18 thoughts on “ஒரு ஞாநியும் மூன்று பானைகளும்”

 1. //தீவிரமான வலைப்பதிவு வாசகர்களாம் எந்த ப்ளாகையும் படிக்காம விடறதில்ல//

  இது எனக்கு மட்டும் – ஆபீஸ் போனா வேலையே பாக்குறதில்லை சார் – அப்படின்னு சொன்ன மாதிரியே படிக்கறச்ச தோணுது எனக்கு எதுவும் பிரச்சினையோ?:)

 2. நீங்க ஒண்டிதான் பாக்கி. இப்ப ரசிகைத் தொல்லை உங்களுக்கும் வந்தாச்சா?

  //குமுதத்தில் அவருடைய பொழுதுபோகாத பொம்முவின் ரசிகனாக இருந்து//

  நன்றி!!

 3. புத்தகக் கண்காட்சி நன்றாக இருந்தது! மெரினாவில் காதலர்கள் கூடுவது போல,புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர்களும், ப்லாக்கர்களும் கூடுவார்கள் போல!

 4. Pingback: சென்னை புத்தகக் கண்காட்சி 2011 – இணையப் பதிவுகளின் தொகுப்பு « மனம் போன போக்கில்

 5. பா.ரா…..! நான் ஜிப்பா போடுவது 1959லிருந்து அல்ல. அப்போது எனக்கு வயது 5 தான். 1969லிருந்து. ஞாநி

  1. ஞாநி: அவசர டைப்பிங்கில் அன்றலர்ந்த பிழை. சுட்டியமைக்கு நன்றி. திருத்திவிட்டேன்.

 6. பின்னூட்ட ஜல்லிகள், முழ நீள வாசகர் கடிதங்கள் எழுதாதவர்கள்தான் பெரும்பாலும் புத்தகம் வாங்குகிறார்கள் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.
  //
  இல்லைங்க ……….. புத்தகம் வாங்கறவங்க எல்லாரும் படித்து விடுவதில்லை . யாருக்கு தேடல் அதிகம் இருக்கிறதோ அவர்கள் அதிகம் வாசிக்கிறார்கள் . அவரவர் பசிக்கு அவரவர் உணவு உட்கொள்கிறார்கள் . கதே அளவிற்கு எல்லா எழுத்தாளர்களும் இருக்கவேண்டும் கம்பனையும் பாரதியையும் போல நயம் உரைக்கும் கவிகள் வேண்டும் கண்ணதாசனை போல மடை திறந்த வெள்ளமாய் சிந்தனை கொட்டும் ஆற்றல் கொண்டவர் வேண்டும் , தாஸ்தாவெஸ்கி போல உள்ளத்தை கடந்து பார்க்கும் துணிவுடைய உறுதி வேண்டும் எல்லா எழுத்தாளர்களும் என்று ஆசைபடும் என்னை போன்ற வாசகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் . பின்னூட்டம் முனூட்டம் ன்னு இருக்கரவர்கள் கூகுளே போதும் என்று நின்று விடுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் . ஆனால் என்னை போன்ற சில ஆர்வம் கொண்ட வாசகர்களை இந்த கடைசி வரிகள் காயப்படுத்தி விட்டது .

  வாசிப்பது வாசிப்பதை நேசிப்பது நேசித்ததை அனுபவிப்பது அனுபவித்ததை அசை போடுவது என்று தீவிரமான தேடல் உடைய வாசகர்கள் நிறையவே உண்டு சார் .

 7. போட்டோவை பிரசுரிக்கப் போவதாக சொல்லி இருந்தால் கொஞ்சம் கம்மியாய் இளித்திருப்பேன்.

  ஒரே ஒரு clarification:

  >>>அவரே எழுதிய ஒரு சில கட்டுரைகளும் இருக்கின்றன. <<<<

  ஜி.என்.பி எழுதிய அனைத்து கட்டுரைகளும் உள்ளன (கிடைத்த வரை). பிரசுரமாகாத கையெழுத்துப் பிரதியாய் இருந்த 3 கட்டுரைகளும் உள்ளன. புத்தகத்தின் 3 பகுதிகளில் நீண்ட பகுதி அவரும் அவர் தந்தை நாராயணசாமி ஐயரும் எழுதிய கட்டுரைகள் அடங்கிய பகுதியே.

 8. ஞானியை கிழக்கு பதிப்பகம் வாசலில் பார்த்தேன். அப்போ நீங்க அங்கே இல்லை.
  //பின்னூட்ட ஜல்லிகள் .//
  இப்படி சொன்னதுக்காகவாவது வாங்கின எல்லா புத்தகங்களையும் படித்து விடுவது என்று முடிவெடுத்து இருக்கிறேன்.
  உங்களோட சில பதிவுகளையும் புத்தகக் கண்காட்சி தொடர்பான ஹ.பி இட்லி வடை பதிவுகளையும் படித்துத் தொலைத்ததனால் rss , உலோகம் எல்லாம் மனதில் பதிந்து தொலைத்து விட உள்ளே நுழைந்தவுடன் வாங்கித் தொலைத்தும் விட்டேன். ஒரு லிச்சி ஜூஸ் நீங்களோ ஹ.பி யோ பார்சல் செய்து விடவும். படித்து விட்டு திட்டி ஒரு பின்னூட்டம் போட்டு அ.நீ கிட்டே ஒரு ஜூஸ் பார்சல் வாங்கிக்கறேன்.

  ஒரு பிட்டு போர்மை கொடுத்து டிக்க சொன்னார்கள். சும்மா இஷ்டத்துக்கு டிக்கி வைத்திருக்கிறேன்.

  ஒரு பின்னூட்டம் எல்லாம் ஜல்லிக் கணக்கிலே வராதில்லையா?

 9. //பா.ரா…..! நான் ஜிப்பா போடுவது 1959லிருந்து அல்ல. அப்போது எனக்கு வயது 5 தான். 1969லிருந்து. ஞாநி//

  ஞாநி சார் 🙂

  ஜோக்கை கூட சீரியஸாதான் அடிப்பீங்களா? சான்ஸே இல்லை!

 10. நானும் நேத்திக்கி வந்து கிரெடிட் கார்டு தேய்க்க முடியாம (ஜனதாவும் முடியாதாம் ?!)
  நொந்து பொய் வந்தேன் (சாஹித்ய அகாடமி)

  மற்ற படி வாண்டுக்களுக்களெல்லாம் நேரய வாங்குறாங்க பள்ளி கூட புக்க படிச்சி என்ன செய்ய போராங்களோ பாவம்!!

 11. அன்புள்ள பாரா,
  மாத்வா சமையல் ஸ்பெசல், பிட்லா, போளி, மண்டி சாம்பார், டாங்கர, அம்பட்ட பாஜீ, மீரெ பிட்லா, சப்பக் பிட்லா, கடி etc.
  You can have try at our home if you wish.
  குரு

 12. \\…வெரைட்டி இருக்கிறதா என்ன.\\ நிறைய இருக்கிறது. ஏற்கனவே ஒருவர் சொல்லிவிட்டார். Cross word புத்தகக் கடையில் நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் பார்த்திருக்கிறேன் மாத்வர் ஸ்டைல் சமையலுக்கென்றே பிரத்தியேகமாக.

  \\பின்னூட்ட ஜல்லிகள், முழ நீள வாசகர் கடிதங்கள் எழுதாதவர்கள்தான் பெரும்பாலும் புத்தகம் வாங்குகிறார்கள்\\
  இதற்கும் புத்தகம் வாங்குவதற்கும் என்ன correlation என்று புரியவில்லை.

  நான் ஏகப்பட்ட பின்னூட்டங்கள் இடுபவன். முழு நீளக் கடிதங்கள் இனிமேல்தான் எழுத ஆரம்பிக்க வேண்டும். உங்கள் பதிப்பகத்தின் எல்லாப் புத்தகங்களும் என்னிடம் உண்டு. இந்த வருடம் வெளியிட்டது போக எல்லாப் புத்தகங்களையும் படித்துமிருக்கிறேன்.

  1. கோபி! ரொம்ப சிம்பிள். எனில், இக்கட்டுரை உங்களைச் சுட்டவில்லை! 😉

 13. உங்கள் பதிவை மின்னஞ்சலில் பெறும் வசதி தரலாமே?

  பலமுறை கேட்க வேண்டும் என்று நினைத்த விசயம்,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *