கவிதைக்கு வந்த கஷ்டகாலம்

தனிமையிலே இனிமை

ஒரு வழியாக பபாசி ஏற்பாடு செய்திருக்கும் ஜனதா க்ரெடிட் கார்ட் கவுண்ட்டர் இன்று இயங்க ஆரம்பித்துவிட்டதுபோல் தெரிந்தது. ஆனால் துரதிருஷ்டம், அதைப் பெரும்பாலானோர் பயன்படுத்த விரும்பவில்லை. க்ரெடிட் கார்டு என்ற போர்டும் கீழே ஒரு மிஷினும் இரண்டு பெண்களும் தனியாக அம்போவென்று உட்கார்ந்திருந்தார்கள். பல இடங்களில் கடைக்காரர்கள் இதைப் பொருட்படுத்த மறுக்கிறார்கள். காசு கொடு, புத்தகம் எடு. தீர்ந்தது விஷயம். இதுகூடப் பரவாயில்லை. க்ரெடிட் கார்ட் வசதியைச் சுயமாக வைத்திருக்கும் சில கடைகளில் வேறுவித வினோதப் பிரச்னைகள் இருப்பதை இன்று கவனித்தேன்.

ஒரு கடையில் க்ரெடிட் கார்ட் தேய்த்தால் எட்டு சதவீதத் தள்ளுபடிதான் கொடுப்போம் என்றார்கள். பத்து சதக் கழிவு கட்டாயமென்பது பபாசி விதி. ஆனால் எங்கள் கடையில் க்ரெடிட் கார்ட் தேய்த்தால் இரண்டு சத சர்வீஸ் சார்ஜ் உண்டு என்று சொல்லிவிடுகிறார்கள். இன்னொரு கடையில் இருநூறு ரூபாய்க்கு மேல் வாங்கினால்தான் க்ரெடிட் கார்ட் வசதி என்றார்கள். இதெல்லாம் என்ன லாஜிக் என்று எனக்கு சுத்தமாகப் புரியவில்லை. கிழக்கு நடைமுறையை உறுதிப்படுத்திக்கொள்ள, அடுத்த வரியை எழுதுவதற்கு முன்னால் மெசஞ்சரில் பிரசன்னாவைக் கூப்பிட்டுக் கேட்டேன். அவர் கூறியதாவது:-

Pa: there?
Haranprasanna: s
Pa: நம்ம கடைல ஒருத்தர் வெறும் 25 ரூபாய்க்கு ப்ராடிஜி புக் வாங்கி க்ரெடிட் கார்ட் நீட்டினா என்ன பண்ணுவிங்க?
Haranprasanna: சந்தோஷமா கிரெடி கார்ட் போட்டுட்டு, புக்கை கொடுத்துடுவோம்
10 ரூபாய்க்கும் போடத் தயார்
Pa: நல்ல பிரசன்னா. நன்றி பத்ரி.

இந்த சூப்பில் சொக்கனுடைய ஓர் எலும்புத்துண்டும் உண்டு

இன்று முழுதும் சொக்கனுடன் தான் சுற்றிக்கொண்டிருந்தேன். முழு கண்காட்சி வளாகத்தையும் இன்று இன்னுமொருமுறை முழுதாகச் சுற்றியதில் மிகக் கடுமையான கால்வலி. சொக்கன் பெங்களூரிலிருந்து எடுத்து வந்த பணம் முழுதும் அநேகமாகத் தீர்ந்திருக்கும். அவனது க்ரெடிட் கார்ட் முயற்சிகளும் பெரும்பாலும் பலிக்கவில்லை. இந்த ஒரு காரணத்துக்காகவே தமிழ் பதிப்பாளர் சமூகம் நாட்டு மக்களிடம் நிறைய சாபம் வாங்கவேண்டியிருக்கும்.

மாலை ரோசா வசந்த் வந்தார். கிழக்கு சந்தில் அவரோடு கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். கீழைக்காற்றில் இரண்டே இரண்டு ஒல்லி புத்தகங்கள் மட்டும் வாங்கியிருந்தார். இன்று சும்மா சுற்றத்தான் வந்ததாகவும் நாளை திரும்ப வரப்போவதாகவும் சொன்னார். தமிழ் பேப்பரில் அவர் எழுதிய நந்தலாலா மதிப்புரை குறித்துக் கொஞ்சம் பேசினோம். கூடிய சீக்கிரம் என் ட்விட்டர் விமரிசனத்துக்கு நெருக்கமாக அவர் கருத்தும் மாறும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். கவிதைக்கான மொழி சார்ந்த சவால்கள் பற்றியும் அதன் அடியாழத்தில் இருந்தே ஆகவேண்டிய ஒரு ரிதம் குறித்தும் கொஞ்சம் பேசினோம். [அவர் தலையெழுத்து, இதையெல்லாம் என்னோடு பேசவேண்டியிருக்கிறது.]

சில நாள்களாக என்னைப் படுத்திவரும் வறட்டு இருமல் இன்று சற்று அதிகரித்திருந்தது. நாள் முழுதும் சுற்றியதில் சோர்வும் அதிகமாக இருந்தது. எனவே சீக்கிரமே கிளம்பிவிட முடிவு செய்து புறப்பட்டேன். ஆனால், எப்போதும் நேரத்துக்கு வரும் மாமல்லன் ஏனோ இன்று லேட்டாக வந்தபடியால் நின்றபடியே அவரோடு கொஞ்ச நேரம். அவருடைய நேற்றைய பேயோன் கட்டுரை பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது சுரேஷ் கண்ணன் வந்தார். ஓ, இவர்தான் சுரேஷ் கண்ணனா, இவரோடதான் பஸ்ஸுல ஒரு சண்டை… என்று அறிமுகத்தையே குஸ்தியை முன்வைத்துத்தான் ஆரம்பிக்கிறார். மாம்ஸ் தன் பெயரைத் தேர்ந்தெடுத்துவிட்டு சண்டை போடத் தொடங்கினாரா, சண்டைகளுக்குப் பொருத்தமாகப் புனைபெயர் தேர்ந்தெடுத்தாரா என்று கொஞ்சம்போல் சிந்தித்தேன். என் பங்குக்கு நானும் ஒரு சிறு சண்டை போடலாம் என்று தோன்றியது.

அவரது நேற்றைய கட்டுரையில் இருந்த ஒரு குறிப்பிட்ட வரியைச் சுட்டிக்காட்டி [பல ஆயிரம் பக்கங்களில் வரட்டி தட்டிக் கொண்டிருப்பவன்கள் எல்லாம் பேயோனை, நகைச்சுவை எழுத்தாளன் என்கிற ஒரு செளகரிய லேபிள் ஒட்டி தந்திரமாய் நகர்த்திவிட்டுப் போகவே முன்னுவான்கள்.] என் நண்பர் ஒருவர், ‘என்னய்யா மாமல்லன் கடைசில உங்களைப் போட்டுத்தாக்க ஆரம்பிச்சிட்டாரு?’ என்று கேட்டதைக் குறிப்பிட்டு, ‘ஏன் இப்படி தப்பபிப்பிராயத்துக்கு இடம் கொடுக்கிறீர்கள்? நீங்கள் குறிப்பிடும் எழுத்தாளர் இதுவரை ஆயிரம் பக்கத்தை எந்தப் புத்தகத்திலும் தொட்டதில்லை, என் மேக்சிமம் ஸ்கோர் ஆயிரத்து இருநூற்றுச் சில்லறை. இப்படியெல்லாம் சரித்திரப் பிழை செய்யாதீர்கள்’ என்று மாயவலையைத் தூக்கிப் போட்டேன். ‘ஓ, யாரச் சொன்னேன்னு உங்களுக்குப் புரிஞ்சிடுச்சில்ல?’ என்று வெடிச்சிரிப்பு சிரித்தார்.

மாமல்லனை ஒரு மொட்டைமாடிக் கூட்டத்துக்குக் கூப்பிடவேண்டும்.

கூட்டத்துக்குக் குறைவில்லை

புறப்படும்போது பத்ரி ஒருவரைச் சுட்டிக்காட்டி, அவர்தான் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் என்று சொன்னார். பல வருடங்களுக்கு முன்னர் கல்கியில் இருந்தபோது ஒரே ஒருமுறை சந்தித்த நினைவிருக்கிறது. பத்ரியும் ரவிச்சந்திரனும் நாளைக்கு ஏதோ உட்கார்ந்து கலந்துரையாடப் போகிறார்கள் போலத் தெரிகிறது. கண்காட்சி வளாகம் களேபரமாகாதிருக்க எம்பெருமான் அருள் புரியவேண்டும்.

ஜே.எஸ். ராகவன், பல்லடம் மாணிக்கம் [இவரைப் பற்றித் தனியே ஒரு கட்டுரை எழுதவேண்டும். இவரைப் போல ஒரு புத்தகப் பிரியரை இதுவரை நான் சந்தித்ததில்லை.], இயக்குநர் மனோபாலா, இன்னும் ஒரு சில சினிமாக்காரர்கள் இன்று வருகை தந்தார்கள். பொதுவாகத் திங்கள் கிழமை கூட்டம் மிகக் குறைவாகவே இருக்கும். ஏனோ எனக்கு இன்று ஓரளவு நல்ல கூட்டம் என்றே தோன்றியது. நல்ல விற்பனையும்கூட. வரும் நாள்களில் இன்னுமே அதிகரிக்கக்கூடும்.

நாளை ஒருநாள் நான் வீட்டைவிட்டு வெளியே படியிறங்கக்கூடாது என்று சற்றுமுன் என் மனைவி உத்தரவிட்டுச் சென்றிருக்கிறார். இருமல் மிகவும் அதிகரித்திருக்கிறது. தலைவலியும், இருமல் காரணத்தால் கழுத்து, தோள்பட்டை வலியும் பிராணனை வாங்குகின்றன. மிச்ச நாள்கள் பிரச்னையின்றிக் கழிய நாளைய தினத்தை ஓய்வு நாளாக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன்.

எனவே நாளை நான் புத்தகக் கண்காட்சி, அலுவலகம் இரண்டுக்கும் நான் லீவு. வியாழன் அன்று சந்திப்போம்.

Share

19 comments

 • //இவரோடதான் பஸ்ஸுல ஒரு சண்டை… என்று அறிமுகத்தையே குஸ்தியை முன்வைத்துத்தான் ஆரம்பிக்கிறார். மாம்ஸ் தன் பெயரைத் தேர்ந்தெடுத்துவிட்டு//

  உலொல்லு :)))))
  ___________________________________

  பெங்களூர் என்.சொக்கன் மிக இளமையாக காட்சி தரும் இந்த புகைப்படம் இந்த புத்தககண்காட்சியில்தான் எடுத்தது எனில் கிழக்கின் எழுத்தாளர் பக்கத்தில் இருக்கும் சொக்கன் என்ற பெயர் கொண்ட அந்த பெரியவர் யார் ? 🙂

  [சொக்கன் சார் நீங்க சொன்ன மாதிரியே அப்படியே சொல்லிட்டேனா? ]

 • //மாமல்லனை ஒரு மொட்டைமாடிக் கூட்டத்துக்குக் கூப்பிடவேண்டும்.//

  கூப்டுங்க கூப்டுங்க. ஹ்ம்ம் ஊரில் இருந்தால் கலந்துகொள்ளும் பாக்கியம் கிடைக்கும்.

  //இருமல் மிகவும் அதிகரித்திருக்கிறது. தலைவலியும், இருமல் காரணத்தால் கழுத்து, தோள்பட்டை வலியும் பிராணனை வாங்குகின்றன.//

  take care of your health sir

 • ஒன்று, இரண்டு. அதற்கும் மேற்பட்டதுதான் பல. ஆகையால் ஆயிரத்து சில்லறைப் பக்கம் எழுதி இருக்கும் நீர் பல ஆயிரம் பக்கங்களில் வரட்டி தட்டி இருக்கும் கும்பலில் சேர ஜீப் ஏற முடியாது. நன்றி ஹை!

  உடம்பைப் பார்த்துக்கும்.

 • அப்படிப்பட்ட இருமல், இப்படிப்பட்ட இருமல், அங்கே வலி, இங்கே வலி என்று புலம்பிக்கொண்டு- மணி பனிரெண்டுக்கும் மேலே ஆகி விட்டது- எழுதிக்கொண்டிருந்தால், உடம்பு என்ன ஆகும்? போய்ப் படும். பதிவிறக்க உலகம் எங்கேயும் பறந்து போய்விடாது. அப்புறம் இன்னொன்று: ஆல் கைண்ட்ஸ் ஆஃப் ஓசி அல்வாஸை ஒரு கை பார்ப்பதை விட்டு, வெறும் துளசி தீர்த்தத்தைச் சாப்பிட்டுப் படுக்கவும்.

  எம்பெருமான் மகரகுண்டலகுழைக்காதன் அருளால் நலம் பெறுவீராக!

 • // வெறும் துளசி தீர்த்தத்தைச் சாப்பிட்டுப் படுக்கவும்.//

  aahaa… இது!!!!1

  உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்க.

 • Dear PaRa saw you when I visited the fair last Sunday. You were amidst a big crowd of friends, so could not approach you for a chat. Maybe another time.

  Take good care of your health.

 • ஆனா நேத்து உங்ககூட சாதரணமா பேசிட்டு இருந்தத பார்த்தப்போ, அவரு உங்ககிட்ட சண்டைபோடற மாதிரியும் நீங்க பரிதாபமா நிக்கிற மாதிரியும் இருந்தது. ஒரு வேலை அவர் இயல்பே அதானோ. நான் உங்ககூட ஒரு போட்டோ எடுக்கும் போது மனிதர் விலகி போய் நின்றார். எடுத்து முடிந்ததும் உடனே வந்து உங்களுடன் பேச ஆரம்பித்து விட்டார். உங்ககிட்ட ஆட்டோகிராப் வாங்க வைத்திருந்த பேயோன் புத்தகம் அப்படியே இருக்கு.

  • எறும்பு, பேயோன் புத்தகத்தில் என் ஆட்டோகிராஃப் எதற்கு? பேயோனிடம் போய் வாங்குங்கள்.

 • Pls tell me where can I get Ra.Ki.Rangarajan’s books-all,by Ra.Ki,Mohini,Krishnakumar and translations.Allaiance and Vanathi answers in negative.Dont mind for old books,even!
  Thanks
  Anbutan
  Shrini

  • ஸ்ரீனி: ரங்கராஜனின் புத்தகங்கள் வானதி, அல்லயன்ஸில் கிடைக்கலாம்.

 • // ஸ்ரீனி: ரங்கராஜனின் புத்தகங்கள் வானதி, அல்லயன்ஸில் கிடைக்கலாம் //

  என்ன அநியாயமான பதில் பாரா இது ! அவர் அங்கு கேட்டு இல்லை என்று சொன்னார்கள் என்று எழுதி இருக்கிறார் 🙂

  • மணிகண்டன்: மிகவும் நியாயமான பதில் இதுவே. அவர்கள்தான் ராகிரவின் பப்ளிஷர்கள்.

 • >உங்ககிட்ட ஆட்டோகிராப் வாங்க வைத்திருந்த பேயோன் புத்தகம் அப்படியே இருக்கு.<

  அது!

  😉

 • புத்தகக் கண்காட்சி பற்றிய உங்கள் பதிவு தான் நம்பர் 1 . உங்களால் இன்று போக முடியாதது வருத்தம் தான். இருந்தாலும் உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்ளவும். இந்த விஷயத்தில் (மட்டுமா?) மனைவி சொல்லே மந்திரம்!!!.

 • //இருமல் மிகவும் அதிகரித்திருக்கிறது. தலைவலியும், இருமல் காரணத்தால் கழுத்து, தோள்பட்டை வலியும் பிராணனை வாங்குகின்றன//

  இப்போது உடம்பு பரவாயில்லையா?
  17ஆம் தேதி செ.பு.க வரலாம் என்று திட்டம் வைத்திருக்கிறேன். (16ஆம் தேதி வரை தேர்வுகள் இருக்கின்றன) அங்கே உங்களைச் சந்தித்து சில நிமிடங்கள் பேச ஆசை.

எழுத்துக் கல்வி

வலை எழுத்து

தொகுப்பு

Links

அஞ்சல் வழி


RSS Feeds