புத்தகக் காட்சி 2011

மீட்டருக்கு மேலே.

கடந்த இரு தினங்களாக, புத்தகக் கண்காட்சி வளாகத்தில் நான் சந்திக்கும் பெரும்பாலானவர்கள் முதலில் கேட்கும் கேள்வி: ‘கிழக்கு ஸ்டாலில் வைரமுத்து எப்படி?’

என் பதில், எனக்குத் தெரியாது என்பதுதான்! அதெல்லாம் சத்யா, பிரசன்னா டிபார்ட்மெண்ட். என் தொகுதி எல்லைக்கு அப்பாற்பட்ட விஷயம்.

இரு தினங்கள் முன்னர் நான் கண்காட்சிக்குச் சென்றபோது கிழக்கு அரங்கம் வாசலில் பெட்டி பெட்டியாகக் கொண்டுவந்து இறக்கிக்கொண்டிருந்தார்கள். பழைய ஜெய்சங்கர் படங்களின் தங்கக்கடத்தல் காட்சி போல் இருந்தது. இது என்ன என்று பிரசன்னாவிடம் கேட்டேன். அவர் பதில் சொல்லுமுன் ஒரு பெட்டியை ஒருவர் திறக்க, வைரமுத்துவின் ஆயிரம் திரைப்பாடல்கள் தொகுப்பைப் பார்த்தேன். நான் பார்த்த கணத்தில் எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஒரு வாசகர் தபாலென்று பெட்டிக்குள் கைவிட்டு ஒரு புத்தகத்தைப் பிடுங்கி எடுத்துவந்து பில் கவுண்ட்டரில் வைத்துக் காசை நீட்டினார்.

இது எனக்கு வியப்பாக இருந்தது. கண்காட்சி வளாகத்தில் கிழக்குக்கு முன்னதாகப் பல இடங்களில் இந்தப் புத்தகத்தை நான் பார்த்திருந்தேன். ஒருவேளை அவர் கண்ணில் படவில்லையோ என்று ஒரு கணம் யோசித்தேன். வாய்ப்பில்லை. அவர் புதிதாக உள்ளே நுழைந்தவராகத்தான் இருக்கவேண்டும். அவர் கடைக்குள் நுழையவில்லை. மற்ற புத்தகங்களைப் பார்க்கவில்லை. வேறு எது குறித்தும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. ஒரே குறி. ஒரே புத்தகம். தீர்ந்தது விஷயம்.

நான் பிரசன்னாவைப் பார்த்துச் சிரித்தேன். அங்க பாருங்க என்று இன்னொரு கவுண்ட்டரை அவர் காட்டினார். அங்கே வேறு சிலர் அதே புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு பில்லுக்கு நின்றுகொண்டிருந்தார்கள். நேரம் ஆக ஆக, வரிசையாக அரங்குக்கு வந்த பல வாசகர்கள் அந்த ஆயிரம் கவிதைகள் தொகுப்பை எடுத்துப் போய்க்கொண்டே இருந்ததைப் பார்த்தேன். கிழக்கில் மட்டுமல்ல. அந்தப் புத்தகம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாமும். 600 ரூபாய் ஒரு பொருட்டல்ல. நிச்சயமாக அல்ல.

இயக்குநர் மனோபாலா ஓர் அம்பு மாதிரி கடைக்கு வந்தார். எனக்கு வாம்மா மின்னல் நகைச்சுவைக் காட்சிதான் உடனே நினைவுக்கு வந்தது. வந்த சுருக்கில் அதே புத்தகத்தை அவர் ஒரு பிரதி எடுத்தார். அடுத்த கணம் பில்லிங். அதற்கடுத்த கணத்தில் ஆளைக் காணோம்.

இந்தப் புத்தகம் எதனால் இப்படியொரு கவன ஈர்ப்பைப் பெற்றது என்று சிறிது யோசித்தேன். கலைஞர் வெளியிட்டதாலா? வாய்ப்பில்லை. வைரமுத்துவின் எல்லா வெளியீட்டு விழாக்களிலும் அவர் இருக்கவே இருக்கிறார். சினிமாப் பாடல்களின்மீது தமிழனின் தீராத மோகம்? எனில், நாலணா பாட்டுப் புத்தகக் கலாசாரம் இன்னும் தொடர்ந்திருக்கும். இணையத்தைத் திறந்தால் இன்று எல்லாமே எளிதில் கிடைத்துவிடுகிறது. வைரமுத்து+டமில்+ஃபில்ம் ஸாங்ஸ்+லிரிக்ஸ் என்று ஒரு தட்டுத் தட்டினால் ஆயிரத்துக்கு அப்பாலும் அநேகம் கிடைத்துவிடும். அத்தனை கனமான புத்தகத்தை அத்தனை பெரிய விலை கொடுத்து வாங்கித்தான் படிக்கவேண்டுமென்பதில்லை. ஆனாலும் வாங்குகிறார்கள்!

சந்தேகமில்லாமல் வைரமுத்து ஒரு தலைமுறையை வெகுவாக பாதித்திருக்கிறார். சினிமாவின் சின்ன சதுரங்களுக்குள் தன்னால் முடிந்த ஆகச்சிறந்ததைத் தருவதற்கு எப்போதும் முயற்சி செய்து வந்திருக்கிறார். கண்ணதாசனை ஒரு பெஞ்ச் மார்க்காக வைத்துப் பேசுகிற வழக்கம் இங்கே இருக்கிறது. அது அத்தனை அவசியமில்லை என்று நினைக்கிறேன். அவரது பாதை, பார்வை இரண்டுமே வேறாகத்தான் எனக்குப் படுகிறது. வைரமுத்து எழுத வந்த காலத்தில் தமிழ் சினிமாவின் முகம் வெகுவாக மாறத் தொடங்கியிருந்தது. பத்திரிகை உலகுக்கு சுஜாதா வந்த மாதிரிதான் சினிமாவுக்கு வைரமுத்து வந்ததும்.  முற்றிலும் புதியதொரு அனுபவத்தை அவரது வரிகள் கொடுத்ததை மறுக்க இயலாது. எளிய பதங்கள், அதே சமயம் புதிய பதங்கள். எளிய சந்தம், ஆனால் வலுவான சந்தம். பொது ஜனங்கள் விரும்பும் மெட்டை அன்று இளையராஜா தந்தார். பிறகு ரகுமான் தந்தார். அப்புறம் பலபேர்.

ஆனால் வைரமுத்து நுழைந்த காலத்துக்குப் பிறகு இன்றுவரை அநேக வரிகளை நினைவுகூர்ந்து வியக்கவும் பாராட்டவும் வாய்ப்பளித்த சினிமா பாடலாசிரியர்கள் என்று வேறு யாரையும் எனக்குச் சொல்லத் தோன்றவில்லை. [சமீபத்தில் நா. முத்துக்குமார் நீங்கலாக.] இன்றைக்கு எழுதுகிற சிலர் வெறும் ப்ரோஸைக் கொடுத்து கம்போஸ் பண்ணிவிடுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட கவிஞரை முன்வைத்து எங்கள் அலுவலகத்தில் எனக்கும் மருதனுக்கும் அடிக்கடி இந்த உரையாடல் வரும். அவர் எழுத வந்த நாளாக இன்று வரை எழுதிய எதுவுமே கவிதையோ, பாடலோ இல்லை; வெறும் உரைநடைதான் என்பது என் வாதம். இதை என்னால் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க முடியும். மருதன் மறுப்பான். துரதிருஷ்டவசமாக அவரது ஒவ்வொரு பாட்டும் சொல்லி சொல்லி சூப்பர் ஹிட் ஆவதைச் சுட்டிக்காட்டி வெறுப்பேற்றுவான்.

ஹிட் ஆகலாம். சிலகாலம் முணுமுணுக்கப்படலாம். ஆனால் இப்படி மீட்டருக்கு எழுதியவற்றையும் தொகுத்துப் பார்க்கும் துணிச்சல் அவருக்கோ அவரைப் போன்றவர்களுக்கோ வருமா என்பது சந்தேகம். அப்படியே வந்தாலும் மக்கள் இப்படிப் பாய்ந்து பாய்ந்து வாங்குவதற்கு வாய்ப்பிருப்பதாக நான் நினைக்கவில்லை.

சினிமா பாடல்களில் மீட்டர்தான் முக்கியம். இதில் சந்தேகமே இல்லை. ஆனால் மீட்டருக்கு மேலே என்ன வைக்கிறோம் என்பதில்தான் ஒரு பாடலாசிரியரின் வெற்றி அடங்கியிருக்கிறது. வைரமுத்து மீட்டருக்குச் சில மகுடங்கள் சூட்டியிருக்கிறார். அதைத்தான் வாசகர்கள் இன்று சுட்டிக்காட்டுகிறார்கள்.

Share

14 Comments

 • பாரா,

  நானும் இந்தப் புத்தகம் வாங்கினேன் – கிழக்கு ஸ்டாலில்தான். என் மனைவி ஒரே திட்டு, ’பாட்டுப் புஸ்தகத்தைப்போய் 600 ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கியே’ என்று.

  ஆனால் நான் இந்தப் புத்தகத்தை வாங்க முக்கியமான காரணம் பாடல்களைவிட, 1979 டு 2010 முப்பது வருடத் தமிழ் சினிமாப் பாடல் சரித்திரம் இந்த புத்தகத்தில் வந்துவிடுகிறது – அல்மோஸ்ட்!

  அடுத்தபடியாக, அருமையான தயாரிப்பு. நேர்த்தியான லே-அவுட். ரேண்டமாக எந்தப் பக்கத்தைத் திருப்பினாலும் ரசித்துப் படிக்கமுடிகிறது. (அப்படி முதன்முறை ரேண்டமாகத் திருப்பியபோது வந்த பாட்டு ‘ஓ போடு’ :>

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 • >முப்பது வருடத் தமிழ் சினிமாப் பாடல் சரித்திரம்<

  நான் கேள்விப்பட்டதும் அதுதான். பாடல்கள் மட்டுமன்றி, அது உருவானவிதம், அதற்கு ஏற்றதாக ஒரு நிகழ்வையும் எழுதியிருக்கிறாராம். தினத்தந்தி புக்கு போல.

  பாருங்க, சுனாமிக்குகூட சினிமா தியேட்டர்பக்கம் ஒதுங்காத சொக்கனே வாங்கீட்டாராம் 😉

 • //வைரமுத்து+டமில்+ஃபில்ம் ஸாங்ஸ்+லிரிக்ஸ் என்று ஒரு தட்டுத் தட்டினால் ஆயிரத்துக்கு அப்பாலும் அநேகம் கிடைத்துவிடும்.// ஆனால் ஒவ்வரு பாட்டிற்க்கும் வைரமுத்து எழுதிய காமண்ட் (comment)கிடையாதே…

 • வைரமுத்து க்ரேட்தான்! அவர் வைர வரிகளால் என்னைப் பல கணங்களில் கட்டிப்போட்டவர்தான். இல்லையென்று சொல்லவில்லை.

  இருந்தாலும், மற்ற புத்தகங்களின் விலையை ஒப்புநோக்கிப் பார்க்கும்போது, ரூ. 600 என்பது பகல் கொள்ளை. அதுவும் நாலணா பாட்டு பொஸ்தக கலெக்‌ஷனுக்கு!

  ஹும்ம், கல்லா கட்டத் தெரிஞ்சவங்க எல்லாருமே கட்றாங்க, நடக்கட்டும்!

  • ராம்: எனக்குத் தெரிந்து இன்றைய விலைவாசி நிலவரத்துக்கு, மிகவும் சரியான விலையே. கட்டமைப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது.

 • அதுவும் நாலணா பாட்டு பொஸ்தக கலெக்‌ஷனுக்கு!

  ராம் டூரிங்க் கொட்டகையில வாங்குன ஞாபகம் வந்துடுச்சோ? நானும் உங்களைப் போலத்தான் நினைத்துக் கொண்டேன்.

 • மீட்டருக்கு மேலே வைப்பதெல்லாம் சரிதான், சமயத்தில் கதைக்கு வெளியே வந்து தனது அறிவுஜீவி தனத்தை காட்டுவது பற்றி?????

  சிலநேரங்களில் சிலரின் நடையை அப்பட்டமாக காப்பி அடிப்பது பற்றி??????
  (சமீபத்திய உ.ம்)
  1. நெல்லாடும் நிலம் எங்கே? – ஆயிரத்தில் ஒருவன்
  சீரீய நெற்றி எங்கே – நேரு அஞ்சலி பாடல்

  2. பிரம்மன் கஞ்சன் வள்ளல் — ஜீன்ஸ்
  நாகேஷ் தனது மகனை இயக்கிய படத்தில் இதே வரிகள் அப்படியே வசனமாக வரும். இந்த படத்தை ஜீன்ஸ்க்கு முன்பே பார்த்து தொலைத்ததால் பலரை கவர்ந்த இந்த பாடல், என்னைக் கவரவில்லை.

  // ஒரு குறிப்பிட்ட கவிஞரை முன்வைத்து எங்கள் அலுவலகத்தில் எனக்கும் மருதனுக்கும் அடிக்கடி இந்த உரையாடல் வரும்.//

  யாரந்த கவிஞர் குருவா? இல்லை சிஷ்யனா?

 • டைனோ,

  //பாடல்கள் மட்டுமன்றி, அது உருவானவிதம், அதற்கு ஏற்றதாக ஒரு நிகழ்வையும் எழுதியிருக்கிறாராம். தினத்தந்தி புக்கு போல.//

  இல்லவே இல்லை. ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு வரி அல்லது ரெண்டு வரிதான் எழுதியிருக்கிறார். அதைத் தவிர்த்துப் பார்த்தால் நீளமான முன்னுரைகள் (கலைஞர், வைரமுத்து) – படித்துவிட்டு மேட்டர் இருக்கிறதா என்று சொல்கிறேன்!

  //சுனாமிக்குக்கூட//

  உண்மைதான். ஆனால் பாட்டென்றால் முன்னால் நிற்பேனே :>

  – என். சொக்கன்,
  பெங்களூரு.

 • ஒரு குறிப்பிட்ட கவிஞரை முன்வைத்து எங்கள் அலுவலகத்தில் எனக்கும் மருதனுக்கும் அடிக்கடி இந்த உரையாடல் வரும். அவர் எழுத வந்த நாளாக இன்று வரை எழுதிய எதுவுமே கவிதையோ, பாடலோ இல்லை;
  //

  நீங்க யாரை நினைத்து இசொல்கிறிகள் என்று எனக்கு தெரியாது . என்னை பொறுத்த வரை அது தாமரை அதன் பின் பா விஜய் . இளைய பாடல் ஆசிரியர்களில் கவித்துவம் கொண்டவர் என்று யுகபாரதியை சொல்லலாம் . ஆனந்த விகடன் கொடுமை பார்த்திர்களா ?… எதுகை மோனை போட்டு உரை நடை எழுதிய , இல்லை வாக்கியத்திற்கு சிறந்த பாடலாசிரியர் என்று தாமரையை மொழிந்திருக்கிறார்கள் . வேஷம் வேஷம் வேஷம் . அவரின் ஈழ பற்று அரசியல் இல்லை எனில் நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் எவரேனும் அதுவா கடந்த ஆண்டின் சிறந்த திரை இசை பாடல் வரிகள் ?… தா படத்தின் வரிகள் ந முத்து குமாரின் பூக்கள் பூக்கும் தருணம் எல்லாம் எனவாம் அவர்களுக்கு ?.. வைர முத்துவின் உசுரே போகுதே , காட்டு சிறுக்கியை விடுங்கள் அவர் பாடல் எழுதினாலே சச்சின் 100 அடிப்பது மாறி . நீங்க வசனம் எழுதி இருக்கிற தம்பி வேட்டோதி சுந்தரம் படத்தின் கொலை கார பாடல் வரைக்கும் அவரை நிறைய சொல்லலாம் . நான் எல்லாம் 600 illai 6000 இருந்தாலும் வாங்குவோம் . திரு சொக்கன் சொன்னது போல் . அது காலத்தை சொல்லாட்சியை நிலைத்தன்மையை சிறந்த பாடல் சூழலை வழங்கு கிறது . MSV கு கண்ணதாசன் இளையராஜா ரகுமானுக்கு வைரமுத்து என்று இருந்ததால் தான் . இவர்கள் இசையால் நிரம்பி இருக்கிறார்கள் . எதிர் காலத்தில் அப்படி யாரும் திரை இசை அமப்ப்பளர்கள் இருக்க மாட்டார்கள் . எல்லாம் வைர முத்துவின் காலத்துடனே முடிந்து விட போகிறது . இது சர்வ நிச்சியம் .

 • நானும் வாங்கினேன் !!

  //இருந்தாலும், மற்ற புத்தகங்களின் விலையை ஒப்புநோக்கிப் பார்க்கும்போது, ரூ. 600 என்பது பகல் கொள்ளை. அதுவும் நாலணா பாட்டு பொஸ்தக கலெக்‌ஷனுக்கு!//

  இல்லை சார்

  தாள் / அட்டை / வடிவமைப்பு என்று பார்த்தால் நியாயமாகவே தோன்றுகிறது

 • MSV கு கண்ணதாசன் இளையராஜா ரகுமானுக்கு வைரமுத்து என்று இருந்ததால் தான் . இவர்கள் இசையால் நிரம்பி இருக்கிறார்கள் . //

  நண்பரே,

  மண்ணிக்கவும்

  வைரமுத்து மீது உள்ள அபிமானத்தால் பிதற்ற கூடாது.

  எம்.எஸ்.விக்கு கண்ணதாசன் மட்டுமல்ல, பட்டுக்கோட்டை, வாலி போன்றவர்களும் பக்கபலமாக இருந்துள்ளார்கள். இம்மூவர் இல்லாவிட்டாலும் ஜொலித்திருப்பார்.

  // இளையராஜா ரகுமானுக்கு வைரமுத்து என்று இருந்ததால் தான் //

  உச்சகட்ட காமெடி.

  வைரமுத்துவை தான் இருந்த சிகரத்திற்கு அழைத்து வந்ததே ராஜாதான். ராஜாவால் கைவிடப்பட்டு மீண்டும் பள்ளத்தாக்கில் விழுந்து, 7 ஆண்டுகளாக வைஜெயந்தி ஐ.பி.எஸ் போன்ற படங்களுக்கு காப்பியங்கள் எழுதிக்கொண்டிருந்த வைரமுத்துவிற்கு மீண்டும் சிகரத்தை காட்டியது ரகுமான்.

  ராஜா ரகுமானால் தான் வைரமுத்து. வைரமுத்துவால் ராஜா ரகுமான் அல்ல.

  ரகுமானே நாகரீகமாக வைரமுத்துவிடம் இருந்து தள்ளி நிற்பதை நீங்கள் அறிந்தீர்களோ இல்லையோ!
  மணிரத்தினம், ஷங்கர் இருவர் இயக்கத்திற்காக / வற்புறுத்தலுக்காக மட்டும்தான் கடந்த 7-8 ஆண்டுகளாக வைரமுத்துவிற்கு அவர்கள் படத்திற்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கிறார்.

 • //இணையத்தைத் திறந்தால் இன்று எல்லாமே எளிதில் கிடைத்துவிடுகிறது. வைரமுத்து+டமில்+ஃபில்ம் ஸாங்ஸ்+லிரிக்ஸ் என்று ஒரு தட்டுத் தட்டினால் ஆயிரத்துக்கு அப்பாலும் அநேகம் கிடைத்துவிடும். அத்தனை கனமான புத்தகத்தை அத்தனை பெரிய விலை கொடுத்து வாங்கித்தான் படிக்கவேண்டுமென்பதில்லை. ஆனாலும் வாங்குகிறார்கள்!
  //

  இணையத்தை திறந்தால் ஏறத்தாழ அனைத்து கர்நாடக கீர்த்தனைகளும் கிடைக்கிறது

  பிறகு ஏன் டிசம்பரில் கச்சேரி சீசன்

  அதே பதில் தான் இங்கும்

Click here to post a comment

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி