ஆடுகளமும் ஆய்வுக்களமும்

கட்டுக்கடங்காத கூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்படும் என்றெல்லாம் நினைத்துக்கொண்டு இன்று புறப்பட்டேன். அயன், ஆதவன், ஆடுகளம், காவலன், கலைஞரின் இளைஞன், சாலமன் பாப்பையா, கு. ஞானசம்பந்தன் உள்ளிட்ட பெரும் படைதான் தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும். சுமாரான கூட்டம்தான். மாலை ஆறு மணிக்குப் பிறகு ஒரு பெரிய அலை அடிக்கத் தொடங்கியது. அதுவும் இரண்டு மணிநேரத்துக்குள்ளாகவே வடிந்துவிட்டது. இத்தனைக்கும் இன்று கண்காட்சி நேரத்தை ஒன்பது மணிவரை என்று அறிவித்திருந்தார்கள் என்று நினைக்கிறேன்.

கண்காட்சியில் இன்று அதிகம் பேசப்பட்ட விஷயம்: ஆடுகளம் ஹிட். ஐகாரஸ் பிரகாஷ் மட்டும் காவலன் ஹிட் என்று சொன்னார். என் கவலையெல்லாம் இளைஞன் ஹிட்டா இல்லையா என்பதுதான். இன்று முதல் காட்சிக்கே சென்றுவிட வேண்டும் என்று எண்ணியிருந்தேன். காலை சாப்பிட்ட பொங்கல் ஆளை அடித்துவிட, கண்காட்சிக்கே மதியம்தான் போனேன். மனமெல்லாம் சக படைப்பாளி கலைஞரின் வசனங்கள் எப்படி இருக்குமோ என்பதிலேயே இருந்தது. ஒரு ஜெயமோகனோ, ராமகிருஷ்ணனோ, பாஸ்கர் சக்தியோ ஒருநாளும் என்னை இப்படிப் பதற்றம் கொள்ளச் செய்ததில்லை. என்னைப் போலவே அவர்களும் இன்று நிம்மதி இழந்து தவித்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நிற்க. இன்று முழுதும் நான் கிழக்கின் நான்கு கவுண்ட்டர்களில் ஒன்றின் அருகிலேயே அமர்ந்திருந்தேன். இடையில் ஒருமுறை காப்பி சாப்பிடச் சென்றது, நண்பர்கள் வந்தபோது நாலைந்து சொற்கள் பேசுவதற்கு எழுந்தது தவிர இடத்தைவிட்டு அசையவில்லை. என்ன மாதிரியான வாசகர்களை நாங்கள் அதிகம் பெற்றிருக்கிறோம் என்று ஒரு சுமாரான ஆராய்ச்சி மேற்கொள்வதற்கு இன்றைய தினத்தைப் பயன்படுத்துவது என்பது முடிவு.

சுக்ருபாஷங்கர், ஐகாரஸ் பிரகாஷ்

நான் உட்கார்ந்திருந்த கவுண்ட்டர், கிழக்கு புத்தகங்கள் அதிகம் இருக்கும் பகுதியில் இருந்தது. ஆயினும் இன்று ப்ராடிஜி மற்றும் மினிமேக்ஸ் புத்தகங்களின் விற்பனையே அதிகம் நடைபெற்றதாக எனக்குத் தோன்றியது. 10,20,30 என்று கொத்துக் கொத்தாக எடுத்துச் செல்லும் மக்கள் அதிகபட்சம் 200 ரூபாய்க்குள் இந்தக் கடை பர்ச்சேஸை முடித்துவிட வேண்டும் என்று நினைக்கக்கூடியவர்களாக இருந்ததுபோல் பட்டது. தாங்கள் தீர்மானித்து வரும் தொகைக்குள் அதிகபட்சப் புத்தகங்களை எடுப்பதிலேயே அவர்களுடைய ஆர்வம் இருந்தது.

இந்தப் புத்தகங்கள் பெரும்பாலும் சமையல் மற்றும் வாழ்க்கை வரலாறு பிரிவுக்குள் வரக்கூடியவை. பள்ளி வயதுப் பையனோ பெண்ணோ உள்ள பெற்றோர் அதிகம். அபூர்வமாக ஓர் இளம் பெண் திருமணத் திருத்தலங்கள் அல்லது அந்த மாதிரி ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து வந்தார். பக்கத்தில் இருந்த பத்ரி மெதுவாக விவாஹப்ராப்தி ரஸ்து என்று [என் காதில்] சொன்னார். என் மனைவி காதுக்கு இது சென்றால் பத்ரி பஜ்ஜியாவது நிச்சயம்.

இந்தக் கணம் வரை பிரசன்னாவிடமிருந்து டாப் 10 பட்டியல் வரவில்லை. கிழக்கைப் பொறுத்தவரை இன்று அந்தக் கணக்கை முடிப்பது கொஞ்சம் நேரமெடுக்கும் என்று நினைக்கிறேன். பரவலாக எல்லா புத்தகங்களுமே இன்று மாறி மாறி விற்பனையானதைப் பார்த்தேன். எப்போதும் நம்பர் 1ல் இருக்கும் ராஜராஜ சோழன் இன்று கொஞ்சம் பொங்கல் மப்பில் இருந்தார் என்று எனக்குத் தோன்றியது.

என் புத்தகங்களைப் பொறுத்தவரை டாலர் தேசத்தைவிட இந்த ஆண்டு நிலமெல்லாம் ரத்தம் நிறைய விற்பதை கவனித்தேன். எப்போதும் பிய்த்துக்கொண்டு போகும் தாலிபன், அல் காயிதா இந்த ஆண்டு அதிகம் போனதாகத் தெரியவில்லை. மாறாக, மொத்தத் தொகுப்பான மாயவலை மிகச் சிறப்பான விற்பனையைப் பெற்றிருக்கிறது. [இதற்குச் சற்றேறக்குறைய சம அளவில் முகிலின் அகம் புறம் அந்தப்புரமும் விற்றிருக்கிறது. விலையாவது மண்ணாங்கட்டியாவது?] ஹிட்லரைவிட உணவின் வரலாறு அதிகம் விற்றதைக் கண்டேன்.

’டெக்னாமிக்ஸ்’ நரேன்

பெரிய ஆச்சர்யம், இந்த ஆண்டு ஈழம், புலிகள் தொடர்பான புத்தகங்கள் சென்ற ஆண்டின் அளவுக்கு மக்களைக் கவரவில்லை. இது கிழக்கில் மட்டுமல்ல. பொதுவாகவே பல இடங்களில் விசாரித்தபோது இதையேதான் சொன்னார்கள். சுய முன்னேற்றப் புத்தகங்கள் விஷயத்திலும் ஒரு மாற்றம் நிகழ்ந்திருப்பதை உணர முடிந்தது. கிழக்கு கொண்டுவந்திருக்கும் ஒரு சில மொழிபெயர்ப்பு நூல்கள் அதிகம் நகர்ந்தன. சுய முன்னேற்றப் புத்தகங்களைக் கட்டுரை வடிவில் அல்லாமல் புல்லட் பாயிண்ட் வடிவில் எழுதினால் படிக்க மக்கள் மிகவும் விரும்புகிறார்கள் என்று ஒரு சில மாதங்கள் முன்னரே எனக்குத் தோன்றியது. இன்று அதைக் கண்கூடாகப் பார்த்தேன். புல்லட் பாயிண்ட் புத்தகங்கள் புல்லட் மாதிரியே பறந்தன.

இன்னொன்றையும் கவனித்தேன். சுய முன்னேற்றப் புத்தகங்களை வாங்குவோர் தவறியும் அரசியல், வரலாறு போன்ற துறைகள் சார்ந்த புத்தகங்களைத் தொடுவதில்லை. அந்த ரகத்திலேயே குறைந்தது மூன்று புத்தகங்களாவது வாங்காமல் செல்வதுமில்லை. ஒரே ஒரு வாழ்க்கை வரலாறு வாங்குவோர் உண்டு. ஆனால் ஒரே ஒரு சுயமுன்னேற்றம் வாங்குவோர் என் கண்ணில் இன்று படவில்லை. அந்தத் துறைக்கு நூறு சத விசுவாசம் காட்டுகிறார்கள்.

ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு இரு பாகங்களும் வாங்குவோர் பெரும்பாலும் வேறு வரலாற்று நூல்களைத் தொடமாட்டேனென்கிறார்கள். இதுவே பல்லவி ஐயரின் சீனாவை எடுப்பவர்கள் செங்கிஸ்கானையும் அலெக்சாண்டரையும் சேர்த்து வாங்காமல் போவதில்லை. இது என்ன லாஜிக் என்று புரியவில்லை. இன்று ஒரு வாசகர் சே குவேரா புத்தகத்தின் முப்பது பிரதிகள் [என்று நினைக்கிறேன்] மொத்தமாக வாங்கினார். நண்பர்களுக்குப் பரிசளிக்கவாம்.

கிழக்கில் என்ன மாதிரியான புத்தகங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று கண்காட்சியில் பிரசன்னாவின் டீம் ஒரு சர்வே நடத்திக்கொண்டிருக்கிறது. அந்த சர்வேயில் கலந்துகொண்ட ஒரு வாசகர், இரண்டு புத்தகங்களை அடுத்த ஆண்டு கிழக்கு கொண்டு வந்தே தீரவேண்டும் என்று தையாதக்காவென்று அடம் பிடித்தார். ஒன்று: இந்தியா ஒரு நாடா? [இதுதான் டைட்டிலாக இருக்கவேண்டுமாம்.] இரண்டாவது: இந்தியாவின் இறையாண்மை என்றால் என்ன? இந்த மாதிரி அந்த சர்வேயில் இன்னும் என்னென்ன ஐடியாக்கள் வந்திருக்கிறதோ தெரியவில்லை. போஸ்ட் புக்ஃபேர் மீட்டிங்குகள் டெரராகத்தான் இருக்கப்போகிறது.

நண்பர்கள் நரேன், ஐகாரஸ் பிரகாஷ் இருவரையும் இன்று சந்தித்துச் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தேன். சென்ற நூற்றாண்டில் கடைசியாகப் பார்த்த கிருபா ஷங்கரை இன்று திரும்பவும் பார்த்தேன். மாளவிகாக்னிமித்திரம் என்ற புத்தகத்தை எங்கேயோ பீறாய்ந்து வந்திருந்தான். நாளை குடும்பத்துடன் வந்து நிறைய வாங்கிக் கட்டிக்கொள்ளப் போவதாகச் சொன்னான். அநேகமாக மனைவியிடமாகத்தான் இருக்கவேண்டும்.

[முடித்த கணத்தில் டாப் 5 பட்டியல் கிடைத்தது. 1. ஸ்பெக்ட்ரம் 2. ராஜராஜ சோழன் 3. உலோகம் 4. குமரிக் கண்டம் 5. காஷ்மீர் & ஆர்.எஸ்.எஸ்]
Share

16 comments

  • //புல்லட் பாயிண்ட் வடிவில் எழுதினால் படிக்க மக்கள் மிகவும் விரும்புகிறார்கள் என்று ஒரு சில மாதங்கள் முன்னரே எனக்குத் தோன்றியது. இன்று அதைக் கண்கூடாகப் பார்த்தேன். புல்லட் பாயிண்ட் புத்தகங்கள் புல்லட் மாதிரியே பறந்தன.//

    ஆக்சுவலி புல்லட் பாயிண்ட் டைப்புன்னா ரொம்ப எளிதாக, – பயன்படுத்துறோமோ இல்லையோ – டைமிங்க்ல ரைமிங்கா வர்றதா ஒரு வாட்டி படிச்சுட்டு போய்க்கிட்டே இருக்கலாம்ல அதை விட்டுட்டு பக்கம் பக்கமா எழுதின புத்தகத்தில எந்த பக்கத்துல கேட்சிங்கான வரி இருக்குன்னு கண்டுபுடிச்சு அதை படிச்சு போங்க சார் ! 🙂

    //பத்ரி மெதுவாக விவாஹப்ராப்தி ரஸ்து என்று [என் காதில்] சொன்னார்//

    கூட இருக்கிறவரும் இன்னொரு வாட்டி விவாஹப்ராப்தி ரஸ்து சொன்னா எஃபெக்டிவா இருக்கும்ன்னு நினைச்சு சொல்லியிருப்பாங்க அப்படிச்செய்யாம நீங்க இப்படி நினைச்சதுக்கே முதல்ல உங்களை பஜ்ஜியாக்கணும் ! 🙂

  • உங்கள பார்க்கணும். கடந்த விடுமுறையில் தவரவிட்டுடேன். குறைந்தது உங்களிடம் பேச ஆசை இப்போ. போன் நம்பர் கிடைக்குமா?

  • //பெரிய ஆச்சர்யம், இந்த ஆண்டு ஈழம், புலிகள் தொடர்பான புத்தகங்கள் சென்ற ஆண்டின் அளவுக்கு மக்களைக் கவரவில்லை. இது கிழக்கில் மட்டுமல்ல. பொதுவாகவே பல இடங்களில் விசாரித்தபோது இதையேதான் சொன்னார்கள்.//

    எங்க விசாரித்தீர்கள்? சீமானின் அலுவலகத்திலா? நீங்க ரொம்ப லேட். சீமான் புத்திசாலி. சேர்வார் போய் சேர்ந்த இடம் சரிதானே?

  • அய்யகோ சிறுத்தையையும் தலைவி தமண்ணாவையும் விட்டு விட்டீர்களே!

  • சூரி‌யக்‌கதி‌ரி‌ல்‌ நீ‌ங்‌கள்‌ எழுதி‌ய, பு‌த்‌தக சந்‌தை‌க்‌கு வெ‌ளி‌யே‌ நடக்‌கும்‌ கவி‌யரங்‌கம்‌, பட்‌டி‌மன்‌ற கூத்‌துகளை‌ பற்‌றி‌ய கட்‌டுரை‌ படி‌த்‌தே‌ன்‌. கரெ‌க்‌ட்‌ததான்‌. நே‌ற்‌று நா‌ன்‌ அதை‌ மூ‌ச்‌சு முட்‌ட “அனுபவி‌த்‌தே‌ன்‌” இங்‌கி‌ருந்‌து ரத்‌தம்‌ சி‌ந்‌துவதை‌ வி‌ட வெ‌ளி‌யே‌ நி‌ற்‌கி‌ற வே‌னுக்‌கு செ‌ன்‌று ரத்‌தம்‌ கொ‌டுத்‌தா‌ல்‌ தே‌வலா‌ம்‌ போ‌லி‌ருந்‌தது

    -அந்‌தணன்‌

  • ஆடுகளம் ஹிட் என்று தனுஷே சொல்லியிருந்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்று பாரா நம்புவது நியாயமாகத்தான் இருக்கவேண்டும்.

    –ஹரன் பிரசன்னா

  • //கிழக்கில் என்ன மாதிரியான புத்தகங்கள் எதிர்பார்க்கிறீர்கள்//
    ஆங்கில் நாவல்களின் மொழிபெயர்ப்பு.

  • தங்களின் நேரலை கருத்துகள் நன்று.
    ஒரு தகவல் தேவை:
    இஸ்லாமியர்கள் வருகை கண்காட்சியில் உள்ளதா?
    இஸ்லாமியர்கள் புக் ஸ்டால் கண்காட்சியில் உள்ளதா?
    இத்தகவல் ஆய்வுக்காக தேவைபடுகிறது . உதவுக .
    குடந்தை பேராசிரியர் முனைவர் மு .அ. முகமது உசேன்

    • ஹுஸைன்: கண்காட்சிக்கு வருகிறவர்களை வாசகர்கள் – பதிப்பாளர்கள் என்று மட்டுமே இதுவரை பார்த்தேன். நீங்கள் சொல்லித்தான் இஸ்லாமியர்கள் என்று தனித்து யோசிக்கவே தோன்றியது. நிறையவே வருகிறார்கள். நிறைய வாங்கவும் செய்கிறார்கள். இஸ்லாமிய பதிப்பு நிறுவனங்கள் நாலைந்து இருக்கின்றன.

  • //கிழக்கில் என்ன மாதிரியான புத்தகங்கள் எதிர்பார்க்கிறீர்கள்//
    I ‘ve already given my feed back in hard copies at book fair. But here once more. 1BABUR NAMA, 2.AKBAR NAMA, 3.MORE SHERLOK HOMES NOVELs (All by a good translator – Especialy BADRI)

  • நம்ப கூடாத கடவுள் எத்தனை வித்துதுங்க ?… உங்க RSS நூல் பற்றிய சரியான புள்ளிவிவரம் தேவை . அந்த புத்தகத்தில் மாப்ப்ளா கலவரத்தை பற்றி நீங்கள் ஒன்றுமே ஒன்றுமே சர்வ நிச்சயாமாக ஒன்றுமே கூரவிரும்பாததன் காரணம் தெரிய வேண்டுகிறேன் . ( ரயில் பெட்டி எரிப்பு கம்யுனிஸ்ட் காரர்கள் முஸ்லீம் அடியாள்கள் எல்லாம் எப்படி அப்போது நடந்து கொண்டார்கள் என்று நீங்கள் கூறவே இல்லை உங்கள் புத்தகம் RSS காரர்களை ரவுடிகளை உருவாக்கும் அமைப்பு என்பது போல் உள்ளதாக புலனாகிறது . யார் ஆரம்பித்தார்கள் என்பது முக்கியம் இல்லை என்றால் எதுவுமே நிகழாது என்பது நீங்கள் நிச்சியம் அறிந்து இருப்பிர்கள் . திருட மதம் பரப்ப வந்த கஜினி முகமதுவில் இருந்து ஆரம்பித்து உங்கள் எளிய நடையில் நீங்கள் ஒரு திறந்த புத்தகத்தை எழுத வேண்டும் என்பது ஆசை

  • உங்கள் ஞானத்ருஷ்டியே த்ருஷ்டி. வர முடியாவிட்டாலும், வாங்கிக்கட்டிக்கொள்ளப்போகிறான்
    என்ற உங்கள் ஆரூடம் அப்படியே பலித்துவிட்டது. அதே நாளில் சுரங்கங்கள் குடைந்தெடுத்து கேடிஎம் முத்திரையிட்ட உலோகத்தாலான ஒரு பொருளுக்கு நிதியைப்பயன்படுத்தும்படி ஆகிவிட்டது.

    ஆனாலும் உங்கள் கேமரா மொபைல் ரொம்ப நல்ல கேமரா மொபைல். என்னை ஒல்லியாகக்காண்பிக்கிறது.

  • //ராமச்சந்திர குஹாவின் இந்திய வரலாறு இரு பாகங்களும் வாங்குவோர் பெரும்பாலும் வேறு வரலாற்று நூல்களைத் தொடமாட்டேனென்கிறார்கள்.//

    பின்ன. இதுவே 700ரூ. எனக்கு 2 பாகம் என்று தெரியாமல் முதல் பாகம் மட்டும் எடுத்துக் கொண்டு போனேன். கிழக்கு பில் கவுன்ட்டரில் இருந்த (குண்டான நபர்) செகன்ட் பார்ட் வேண்டாமா என்றார். சரி! இரண்டும் சேர்த்து தான் 350 என்று நினைத்து “கொடுங்கள்” என்றேன். அப்புறம் தான் தெரிந்தது இரண்டும் சேர்த்து 700ரூ என்று. சரியென்று “முதல் உலகப் போர்”ஐ தியாகம் செய்யவேண்டியிருந்தது…மருதன் மன்னிக்க.

  • உங்கள் எண்ணங்கள் மொழிந்த உங்கள் எழுத்தால் என்னை கவர்ந்த பாரா , உங்கள் பெயரை போலவே உங்கள் அத்தனை எழுத்து பாராக்களும் அருமை . நீங்கள் சொல்வது போல் நான் கூட குறைந்த பணத்தில் எல்லா புத்தகங்களையும் படிக்க ஆசை படும் வாசகன் , இனி அந்த எண்ணத்திலிருந்து என்னை திருத்தி கொள்கிறேன் .நன்றி

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி