அனுபவம் நகைச்சுவை

தோற்ற மயக்கம் அல்லது யாருடா நீ மூதேவி.

நான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் முன்னூறு குடும்பங்கள் இருக்கின்றன. தோராயமாகக் கணக்குப் போட்டால் மொத்த மக்கள் தொகை சுமார் ஆயிரம். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு என்னைத் தெரியாது. தெரிந்த சிலருக்கும் முகம் தெரியுமே தவிர என்னைப் பற்றிய தகவல்கள் எதுவும் தெரிய வாய்ப்பில்லை. கவனமாக நான் அதைத் தவிர்ப்பேன். ஓர் எழுத்தாளனாக, புகைப்படங்களைப் பத்திரிகைகளில் பார்த்துவிட்டு அடையாளம் கண்டு பேசக்கூடிய பிரகஸ்பதிகள் இங்கு யாருமில்லை. இவர்களுடைய அதிகபட்ச வாசிப்பு என்பது தினத்தந்தியுடன் முடிந்துவிடுகிறது என்று நினைக்கிறேன்.

அப்படி முகம் மட்டும் தெரிந்த மனிதர்களுக்கு எப்போதும் என்னைப் பற்றிய வினா ஒன்று உண்டு. நான் என்ன செய்கிறேன்? எங்கே உத்தியோகம் பார்க்கிறேன்? இருபத்தி நான்கு மணி நேரமும் அரை டிராயர், டி ஷர்ட் அணிந்து வீட்டு வளாகத்திலேயே உலவிக்கொண்டிருக்கிற ஒருவன் என்ன செய்து சம்பாதிப்பான்? இது அனைவருக்கும் தீராக் கேள்வி. என்னிடம் கேட்டதில்லையே தவிர ஒருவருக்கொருவர் அவர்கள் கேட்டுக்கொள்வதை நான் அறிவேன். வளாகத்துக் குழந்தைகளில் பலர் எனது ஒற்றர்கள்.

இவர்களுக்கெல்லாம் கடந்த சில நாள்களாக என்னைப் பற்றிய ஒரு யூகம் வந்திருக்கிறது. இவன் பார்ப்பான். வைதிக பிராமணன். எங்கோ ஹோமம் செய்துவைத்துப் பிழைப்பு நடத்துகிறவன். இத்தனை நாளாக இவனுக்கு வாய்ப்பில்லை. இப்போது நிறைய குவிகிறது போலிருக்கிறது.

விஷயம் என்னவென்றால், என் தந்தை இறந்து இன்னும் ஒரு மாதம்கூட ஆகவில்லை. பத்தாம் நாள், பன்னிரண்டாம் நாள், சுபம், தொடர்ச்சியாக சந்திர கிரகணம், ஆவணி அவிட்டம் என்று வந்துவிட்டபடியால், வேறு வழியின்றி பல நாள் தொடர்ந்து வேட்டி அணிய வேண்டியிருக்கிறது. அதுவும் பஞ்சகச்சம். திருமண் பஞ்சகச்சத்துடன்  என்னைப் பார்த்தவர்கள் அநேகமாக யாரும் இருக்கமாட்டார்கள். என் திருமணத்தன்று அந்தக் கோலத்தில் இருந்தேன். அதன்பின் பதினைந்து வருடங்கள் கழித்து சமாஸ்ரயணம் செய்துகொள்ள ஶ்ரீரங்கத்துக்குப் போனபோது மீண்டும் அந்தத் தோற்றம். மற்றபடி நான் எப்போதும் அணிவது மதுரை மீனாட்சி குங்குமமும் சீரடி பாபாவின் உதியும்தான். இது பற்றி என் நண்பர்கள், உறவினர்கள் பலர் பல சமயம் கேட்டிருக்கிறார்கள், விமரிசனம் செய்திருக்கிறார்கள். நான் பொருட்படுத்த மாட்டேன். ஜாதி மதங்களுக்கும் எனது இறை நம்பிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. எனது இறை நம்பிக்கைக்கும் எனது ஆன்மிகத்துக்குமே சம்பந்தம் இருந்ததில்லை. இதுதான் என் வழக்கம், இப்படித்தான் இருப்பேன்.

எனவே அரை டிராயர், அழுக்கு டி ஷர்ட் கோலத்தில் மட்டுமே என்னைப் பார்த்துப் பழகிய சக குடியிருப்பாளர்களுக்கு எனது திடீர் தோற்ற மாற்றம் மிகுந்த குழப்பத்தை அளித்திருக்கிறது. தவிர அவர்கள் பார்த்தது எனது சட்டையில்லாத வெறும் வேட்டிக் கோலம். கூடவே எனது பிரத்தியேக ஸ்படிக, துளசி, தாமரை மணி மாலைகளும் சேர்ந்து ஒரு பிம்பத்தை உண்டாக்கியிருக்கின்றன. மத மாற்றம் சரி; ஜாதி மாற்றம் சாத்தியமா என்ன? சிண்டைப் பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். தாங்க முடியாமல் ஒருவர் என்னிடம் கேட்டே விட்டார்: ‘நீங்க ஹோமம், பூஜையெல்லாம் பண்ணி வெக்கற சாஸ்திரியா?’

நானொரு ரவி சாஸ்திரிகூட இல்லை என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன்.

இது நடந்து ஒரு வாரம் ஆகிறது. நேற்று என்னைப் பார்க்க நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். இளைஞர். பெரிய படிப்பாளி. சிஏ முடித்துவிட்டு நன்கு சம்பாதித்துக்கொண்டிருந்தவர், அனைத்தையும் விடுத்து, துறவியானவர்.  தூய காவி ஆடையும் துளசி மாலையும் அணிந்தவர்.

என்னதான் நண்பர் என்றாலும் துறவிக்கு ஒரு மரியாதை இல்லையா. எனவே நேற்றும் நான் வேட்டி அணிந்திருந்தேன். இருக்கவே இருக்கிறது எப்போதும் அணியும் எனது பிரத்தியேக ஸ்படிக, துளசி, தாமரை மணிமாலைகள். ஆனால் இம்முறை திருமண் ஶ்ரீசூர்ணம் இல்லை. வழக்கமான குங்குமம் விபூதிதான். வெற்றுடம்பு கிடையாது. வழக்கமான டி ஷர்ட்.

வந்தவர் விடைபெற்றுத் திரும்பும்போது வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தேன். அவர் வண்டி ஏறுமுன் நின்று சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்ததை இவர் பார்த்துவிட்டார். நீங்கள் சாஸ்திரிகளா என்று முன்னர் என்னைக் கேட்டவர்.

இப்போது அவருக்கு இன்னும் குழப்பமாகிவிட்டது. ஏனென்றால் நேற்றுக் காலைதான் அவர் மீண்டும் என்னை என் வழக்கமான அரை டிராயர் கோலத்தில் கண்டிருந்தார். அவர் பார்க்கிறபோது புதியதொரு மாவா பொட்டலத்தைப் பிரித்து ஒரு வாய் போட்டுக்கொண்டு வண்டியை எடுத்துக்கொண்டிருந்தேன். மிக நிச்சயமாக ஒரு வேஷப் பொறுக்கி என்று நினைத்திருப்பார். மாலையே மீண்டும் வேறொரு கோலத்தில் கண்டதில் திகைத்திருப்பார் என்பது நிச்சயம்.

ஐந்தாவதோ ஆறாவதோ படிக்கிற அவரது மகனுக்கு என்னைத் தெரியும். நான் வாணி ராணிக்கு எழுதுபவன் என்பது தெரியும். சூர்யா ஏன் இப்பல்லாம் காமெடியே பண்றதில்ல என்று ஒரு சமயம் என்னைக் கேட்டிருக்கிறான். நான் வசனம் எழுதிய படமொன்றை ஜெயா டிவியில் அவன் பார்த்திருக்கிறான். படம் சூப்பர் அங்கிள் என்றும் சொல்லியிருக்கிறான்.

மேற்படி மகானுபாவர் என்றாவது அவர் வீட்டில் என்னைப் பற்றிப் பேச்செடுப்பார். அப்போது அவரது மகன் அவசியம் இத்தகவலைச் சொல்லுவான். அரைகுறையாகக் காதில் வாங்கிக்கொண்டு மறுநாள் அவசியம் கேட்பார். சார், நீங்க நடிகரா?

இல்லை, பீடா கடை வைத்திருக்கிறேன் என்று சொல்ல நினைத்திருக்கிறேன்.

Share

தொகுப்பு

அஞ்சல் வழி


எழுத்துக் கல்வி