அவர்களால் தாங்க முடியவில்லை. கோயில் நிர்வாகத்தில் ராமானுஜர் செய்த மாற்றங்களை மட்டுமல்ல. பக்தியின் மிகக் கனிந்த நிலையில் அரங்கனை ஒரு குழந்தையைப் போல் கவனித்துக்கொள்ள அவர் மேற்கொண்ட சில ஏற்பாடுகளும் அவர்களுக்கு வெறுப்பூட்டியது.
சட்டென்று ஒருநாள் ராமானுஜர் கேட்டார், ‘முதலியாண்டான்! அரங்கனின் திருமுகம் வாடியிருக்கிறதே. இன்று என்ன அமுது செய்யப்பட்டது?’
மடைப்பள்ளியில் என்ன தளிகையாகிறது என்று கவனிக்க வேண்டியது முதலியாண்டான் பொறுப்பு. அரங்கனுக்கு அமுது செய்விக்கப்படுகிற அனைத்து வகை உணவினங்களும் உயர்தரமாக இருக்கவேண்டும் என்பது உடையவர் கட்டளை. புளியோதரையோ, சர்க்கரைப் பொங்கலோ, வெண்பொங்கலோ, வேறெதுவோ. சேர்மானங்களில் ஒரு சிறு பிழையும் நேர்ந்துவிடக் கூடாது.
நேர்ந்ததும் இல்லை. முதலியாண்டான் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டிருந்த நாளில்தான் ராமானுஜர் கேட்டார். அரங்கன் திருமுகம் ஏன் வாடியிருக்கிறது?
தோற்றமா, தோற்ற மயக்கமா என்ற வினாவுக்கே இடமில்லை. உடையவர் மனத்தில் அப்படிப் பட்டுவிட்டது.
‘தெரியவில்லை சுவாமி! இன்று ததியோதனம் (பால் சேர்த்த தயிர்சாதம்)தான் அமுது செய்யப்பட்டது. வழக்கம்போலத்தான் தளிகையானது.’
‘இல்லையே. அப்படித் தெரியவில்லையே. அவர் முகம் வாடியிருக்கிறது. ஜலதோஷம் உண்டாகியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஏதோ தவறு நடந்திருக்கிறது.’
முதலியாண்டான் யோசித்துக்கொண்டிருந்தபோது ராமானுஜரே கேட்டார், ‘வெறும் ததியோதனம் மட்டுமா?’
‘ஆம் சுவாமி. அது மட்டும்தான். ஆனால் அதற்குப் பிறகு நாவல் பழம் அமுது செய்யப் பண்ணினேன். நல்ல பழங்கள்தாம். பரிசோதித்துவிட்டுத்தான் சன்னிதிக்குள் எடுத்துச் சென்றேன்.’
‘அதுதான் பிழை’ என்றார் ராமானுஜர். ‘தயிர் சாதத்துக்குப் பிறகு யாரேனும் நாவல் பழம் உண்பார்களோ? கண்டிப்பாக அது உடல்நலக் குறைவைத்தான் உண்டுபண்ணும்.’
யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘ஆனால், சுவாமி…’
‘ம்ஹும். கூப்பிடுங்கள் கருடவாகன பண்டிதரை!’
அவர் திருக்கோயில் தன்வந்திரி சன்னிதிக்குப் பொறுப்பாளர். உடையவர் அழைக்கிறார் என்றதும் ஓடோடி வந்தவரிடம், ‘உடனே எம்பெருமானுக்குக் கஷாயம் தயாராகட்டும்.’ என்றார்.
அதோடு நிற்கவில்லை. கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், குங்குமப்பூ மூன்றையும் சேர்த்து அரைத்து பெருமான் திருமேனியில் உடனே சாற்றச் சொன்னார்.
பார்த்துக்கொண்டிருந்த அத்தனை பேரும் வாயடைத்துப் போனார்கள். இது எம்மாதிரியான கரிசனம்! பக்திதான். ஆனால் வெறும் பக்தியல்ல. பாவனைதான். ஆனால் அனைவருக்கும் சாத்தியமானதல்ல. ஆத்மார்த்தமாக அரங்கனோடு கரைந்து போகாத ஒருவருக்கு இப்படியெல்லாம் தோன்றுவதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு ஜீவன் உள்ளே உடம்புக்கு முடியாமல் படுத்திருக்கிறது; அதைப் பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை என்று வீட்டில் இருப்போர் நினைப்பது போன்றே கோயில் கொண்டிருப்பவனையும் கருத முடியுமா! ராமானுஜரால் முடிந்தது.
‘வெறும் அபத்தம். சரியான கிறுக்குத்தனம்!’ என்றது எதிர்க்கூட்டம்.
ஒவ்வொரு வேளை உணவுக்குப் பிறகும் பெருமாளுக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பது, அந்த வெற்றிலை மடிப்பில் சிறிது பச்சைக் கற்பூரம் சேர்ப்பது, தாலாட்டி உறங்கச் செய்வது, தாலாட்டுக்கு முன்னால் ரங்க நாச்சியார் சன்னிதிக்கு எழுந்தருள வைத்து ஊஞ்சலில் அமர வைப்பது, ஊஞ்சலை மெல்லப் பிடித்து ஆட்டிவிடுவது என்று அவர் கொண்டு வந்த நடைமுறைகள் யாவும் கலாபூர்வமானவை. வெறும் நம்பிக்கையல்ல. அதற்கும் அப்பால். வெறும் பக்தியல்ல. பிரேம பக்தி. பூரண சரணாகதிக்குப் பிறகு கிடைக்கிற உள்ளார்ந்த நெருக்கம்.
‘ஓய், இதெல்லாம் நமக்குச் சரிப்பட்டு வராது. இவர் அடிக்கிற அத்தனை கூத்துக்கும் நாம் கணக்கு எழுதிக் காட்டவேண்டியிருக்கிறது. முன்னைப் போல் கோயில் மடைப்பள்ளியில் இருந்து வீட்டுக்கு எதுவும் எடுத்துச் செல்ல முடிவதில்லை. நன்கொடைகளில் நமக்குப் பங்கு வருவதில்லை. முன்னெல்லாம் விளைச்சல் நடந்து அறுவடையாகி வந்தால் மூட்டை மூட்டையாக நமக்குத் தானியங்கள் தனியே வரும். இப்போது அதெல்லாம் இல்லை என்றாகிவிட்டது. இப்படியே போனால் நாமும் பிட்சைக்குப் போகவேண்டியதுதான்.’
‘புலம்பாமல் யோசிக்கலாம் சுவாமி. என்ன செய்யலாம் என்று நீரே சொல்லும்.’
முகமும் பெயருமற்ற அந்தக் கூட்டம் அடிக்கடிக் கூடிப் பேசி ஒரு முடிவு செய்தது. ராமானுஜரைக் கொன்றுவிடலம்.
சன்னியாசிகளுக்கான இலக்கணப்படி தினமும் ஏழு வீடுகளில் பிட்சை எடுத்து உண்பதே ராமானுஜரின் வழக்கம். வசதியாகப் போய்விட்டது. ஏழிலொரு வீட்டானைப் பிடித்து போடுகிற பிட்சையில் விஷத்தைக் கலக்கச் சொன்னால் தீர்ந்தது.
பிடித்தார்கள். பேசினார்கள். சம்மதிக்க வைக்கப் பொன்னும் பொருளும் கொடுத்தார்கள்.
‘நீ என்ன செய்வாய் என்று தெரியாது. நாளைக் காலை ராமானுஜர் உன் வீட்டுக்குப் பிட்சைக்கு வரும்போது உணவில் விஷம் கலந்துவிட வேண்டும். உண்ட மறுகணம் அவர் உயிர் பிரிந்துவிட வேண்டும்.’
‘ஆனால் இது தவறல்லவா? ஆசாரிய அபசாரம் அல்லவா? நமக்கு நரகமல்லவா கிடைக்கும்?’ என்று தவித்தாள் அவனது மனைவி.
‘நாளைய நரகத்தைப் பற்றி இன்று ஏன் நினைக்கிறாய்? இதோ பார், வந்து குவிந்திருக்கும் பொன்னையும் பொருளையும். நான் வாழ்நாள் முழுதும் சம்பாதித்தாலும் நமக்கு இத்தனை சொத்து சேராது. நீ சொன்னதைச் செய். ராமானுஜருக்கு இடுகிற உணவில் இந்த விஷத்தைக் கலந்தே தீரவேண்டும்!’
கட்டாயப்படுத்தி மனைவியிடம் விஷத்தைக் கொடுத்துவிட்டு, காரியம் முடிந்துவிடும் என்று நிம்மதியாகப் போனான் அவன்.
மறுநாள் ராமானுஜர் அந்த வீட்டுக்குப் பிட்சைக்கு வந்தார். அன்னமிட வந்தவளுக்குக் கைகள் நடுங்கின. நடை தளர்ந்தது. சட்டென்று உடையவரின் பாதம் பணிந்து தம் கண்ணீரால் கழுவினாள்.
‘தாயே, ஏன் அழுகிறீர்கள்?’
‘ஒன்றுமில்லை உடையவரே! இந்தாரும்…’
கணவன் சொல்லைத் தட்ட முடியாமல் உணவை இட்டாள். ராமானுஜர் ஒரு கணம் அவளை உற்றுப் பார்த்தார். தயிர் சாதத்துக்குப் பிறகு நாவல் பழம் சாப்பிட்டு அரங்கனுக்கு வந்த ஜலதோஷத்தையே அறிய முடிந்தவருக்கு அந்தப் பெண் இட்ட உணவில் விஷம் கலந்திருப்பதையா புரிந்துகொள்ள முடியாது?
ஒரு கணம் கண்மூடி அமைதியாக நின்றார். இட்ட பிட்சையை அப்படியே எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போய் நீரில் கரைத்துவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்.
பிட்சைக்குச் சென்று நெடுநேரமாகியும் ராமானுஜர் மடத்துக்குத் திரும்பவில்லையே என்று கவலைப்பட்டு அங்கிருந்து தேடிக்கொண்டு ஆட்கள் போனார்கள். ஆற்றங்கரையில் அவரைக் கண்டதும் ஓடி வந்து, ‘என்ன ஆயிற்று சுவாமி? ஏன் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள்? நீங்கள் இன்னும் சாப்பிடவில்லையா?’
‘இல்லை. நான் இன்றுமுதல் உணவருந்தப் போவதில்லை.’ என்றார் ராமானுஜர்.
(தொடரும்)