பொலிக! பொலிக! 38

அதிர்ந்து நின்றது திருவரங்கத்து அடியார் கூட்டம். திடீரென்று ராமானுஜர் உபவாசம் இருக்கக் காரணம் என்னவாயிருக்கும்?

‘முதலியாண்டான்! உமக்குத் தெரியாதிருக்காது. தயவுசெய்து நீர் சொல்லும். இது எதற்கான விரதம்?’

‘தெரியவில்லை சுவாமி. உடையவர் என்னிடம் இது குறித்துப் பேசவேயில்லை!’ என்றான் முதலியாண்டான்.

‘அன்று காலைகூட பிட்சை கேட்டுத்தானே கிளம்பிப் போனார்? உபவாசம் என்றால் கிளம்பியிருக்கவே மாட்டாரே!’ கூரத்தாழ்வான் வேறொரு கூட்டத்தின் நடுவே சிக்கிக்கொண்டு விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதானது.

‘போன இடத்தில் ஏதோ நடந்திருக்கிறது. இல்லாவிட்டால் இப்படி திடீரென்று ஆரம்பித்திருக்க வாய்ப்பே இல்லை.’

‘ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் உபவாசம் என்றால் சரி. இதென்ன வாரக்கணக்கில் நீண்டுகொண்டே போகிறதே!’

கவலை அலையெனப் பரவிக்கொண்டிருந்தது. பெரிய நம்பி மடத்துக்கு வந்து ராமானுஜரைச் சந்தித்துப் பேசிப் பார்த்தார். தேகம் மெலியத் தொடங்கிவிட்டதே, ஏன் இப்படி வருத்திக்கொள்கிறீர்கள் என்று திருவரங்கப் பெருமாள் அரையர் கவலையோடு வந்து கேட்டார். கூரத்தாழ்வானின் தர்ம பத்தினியான ஆண்டாள் கெஞ்சிப் பார்த்துப் பலனின்றிக் கதறியே விட்டாள். ஆளவந்தாரின் சீடர்கள், அவரவர் குடும்பத்தார், ராமானுஜரின் நேரடி சீடர்கள், பக்தர்கள், திருவரங்கத்து மக்கள், கோயில் பணியாற்றுகிறவர்கள் ஒருவர் மிச்சமில்லை.

எதற்காக இந்த உபவாசம்?

ராமானுஜர் யாருக்கும் பதில் சொல்லவில்லை. இது தீர்மானம். கேவலம் இந்த உடலம் இருப்பதும் இயங்குவதும் அல்லவா அவர்களைச் சங்கடப்படுத்தியிருக்கிறது? இயக்குபவன் அரங்கனே என்பதை எண்ணிப் பாராதிருந்துவிட்டார்கள். செய்வது அனைத்தும் அவனுக்குத்தான். செய்ய வைப்பதும் அவனேதான். எனில் கலந்த விஷம் யாரைச் சென்று தாக்கும்?

அரங்கப் பெருமானே, அவர்கள் தெரியாமல் பிழை புரிந்துவிட்டார்கள். தண்டித்து விடாமல் இரு. பிராயச்சித்தமாக நான் இருக்கிறேன் உபவாசம்.

அது மழை மேகம் நிகர்த்த பெருங்கருணையின் மௌன வெளிப்பாடு. யார் என்ன சொன்னாலும் கேளாத திட சித்தத்தின் தீவிரம் அன்று அவர்களுக்குப் புரிந்தது.

‘இல்லை. இப்படியே விட்டால் உடையவர் நமக்கு இல்லாமல் போய்விடுவார். உபவாசம் தொடங்கி ஒரு மாதமாகிவிட்டது. பருக்கைச் சோறு கூட உள்ளே போகவில்லை. இது ஆபத்து. பெரிய ஆபத்து. ஏதாவது செய்தாக வேண்டும்!’ என்றார் பெரிய நம்பி.

என்ன செய்வது என்றுதான் யாருக்கும் புரியவில்லை. விஷயம் மெல்ல மெல்ல திருவரங்கத்தைத் தாண்டியும் பரவத் தொடங்கியது. எங்கெங்கு இருந்தோ பக்தர்கள் அலையலையாகத் திரண்டு வர ஆரம்பித்தார்கள். ‘வேண்டாம் இந்த உபவாசம். தயவுசெய்து நிறுத்திக்கொள்ளுங்கள்!’ என்று கதறத் தொடங்கினார்கள்.

‘ஒரு மாதம் கடந்துவிட்டதா! எம்பெருமானே, இதென்ன விபரீதம்?’ என்று அங்கே திருக்கோட்டியூரில் துடித்து எழுந்தார் குருகேசப் பிரான்.

‘இதற்குமேல் பொறுத்திருக்க இயலாது. கிளம்புங்கள்!’ என்று தமது சீடர்களுக்கு உத்தரவிட்டுவிட்டு அந்தக்கணமே வெளியே பாய்ந்துவிட்டார்.

ராமானுஜரைப் பார்க்க திருக்கோட்டியூர் நம்பி புறப்பட்டிருக்கிறார் என்னும் தகவல் அவர் வந்து சேருமுன் திருவரங்கத்தை எட்டிவிட்டது.

‘நம்பிகள் மிகவும் வயதானவர். அவர் எதற்கு என்னைக் காண வரவேண்டும்? அபசாரம்!’ என்று ராமானுஜர் துடித்துப் போனார். ஆனால் தடுத்து நிறுத்துவது இயலாத காரியம்.

‘வரட்டும். அவர் சொன்னாலாவது கேட்கிறாரா பார்ப்போம்!’ என்று முதலியாண்டான் உள்ளிட்ட சீடர் குழாம் அமைதியாக இருந்தது.

ராமானுஜரால் அப்போது எழக்கூட முடியவில்லை. உடல் முற்றிலும் துவண்டு ஒரு ஓரத்தில் சுருண்டு கிடந்தார். கண்கள் இருண்டு, நரம்புகள் தளர்ந்துவிட்டிருந்தன. பேச்சில்லை. செயல் இல்லை. அசைவும் இல்லை. மூச்சு மட்டும் விட்டுக்கொண்டிருந்தார். எந்தக் கணத்திலும் அது நின்றுபோகலாம் என்னும் அபாயம் அரங்க நகர் முழுதும் அறிவிக்கப்பட்டிருந்தது.

என்ன நிகழப் போகிறதோ என்று அத்தனை பேரும் மனத்துக்குள் அலறிக்கொண்டிருந்தபோது யாரோ ஓடி வந்து சொன்னார்கள், ‘திருக்கோட்டியூர் நம்பி ஆற்றைக் கடந்துவிட்டார். காவிரிக் கரையோரம் அவரது கோஷ்டி வந்துகொண்டிருக்கிறது.’

எங்கிருந்துதான் அந்த பலம் அவருக்கு வந்ததோ. சட்டென்று வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தார் ராமானுஜர். ‘புறப்படுங்கள். ஆசாரியரை நாம் எதிர்கொண்டு வரவேற்க வேண்டும்!’

சீடர்கள் கைத்தாங்கலாக அவரை அழைத்துச் செல்ல, காவிரி மணல் படுகையில் திருக்கோட்டியூர் நம்பியை ராமானுஜர் பார்த்துவிட்டார்.

‘சுவாமி…!’ என்று ஓடோடிச் சென்று தடாரென்று அப்படியே அவர் காலில் விழுந்தார்.

அது உச்சிப் பொழுது. வெயில் அடித்து வீழ்த்திக்கொண்டிருந்த சமயம். வெறுங்காலுடன் ஆற்று மணல் வெளியில் ஓடிய ராமானுஜர் தமது மெலிந்த தேகத்தை அப்படியே சுடுமணலில் கிடத்தி சேவித்துக்கொண்டிருந்தார்.

எழுந்திரு என்று ஆசாரியர் சொல்லாமல் எழுந்திருக்க முடியாது. அது மரியாதை இல்லை. ஆனால் இந்தத் திருக்கோட்டியூர் நம்பி ஏன் வாய் திறக்காமல் அப்படியே பார்த்துக்கொண்டிருக்கிறார்?

சீடர்கள் துடித்தார்கள். என்ன வெயில், எப்பேர்ப்பட்ட சூடு! ஆற்று மணலில் ஒரு மனிதர் விழுந்து கிடக்கிறார். எழுந்திரு என்று ஏன் இவர் இன்னும் சொல்லவில்லை? ஐயோ ஐயோ என்று அவர்கள் மனத்துக்குள் அலறிக்கொண்டிருந்தபோது சட்டென்று ஒரு குரல் கேட்டது.

‘இது தகாது நம்பிகளே! உபவாசத்தால் அவர் ஏற்கெனவே மெலிந்து கருகிவிட்டிருக்கிறார். நீங்கள் இப்படி வெயிலில் இட்டு வாட்டிக்கொண்டிருப்பது அராஜகம்!’ என்று கூவியபடி சட்டென்று ராமானுஜருக்கு அருகே தான் படுத்துக்கொண்டு அவரை அப்படியே தூக்கித் தன்மீது போட்டுக்கொண்டான் அவன்.

அத்தனை பேரும் திடுக்கிட்டுப் போனார்கள். யார், யார் என்று கூட்டம் முண்டியடித்து எட்டிப் பார்த்தது.

அவன் கிடாம்பி ஆச்சான். பெரிய திருமலை நம்பியின் தூரத்து உறவினன். அவர்தான் ஆச்சானை ராமானுஜரிடம் சென்று சேரச் சொல்லி அனுப்பிவைத்தவர்.

செயல் சரியானதுதான். ஆனால் கோபக்காரப் பெரியவரான திருக்கோட்டியூர் நம்பி இதனை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்?

திகிலுடன் அவர்கள் நம்பியைப் பார்த்தபோது அவர் முகத்தில் மிகச் சிறிதாக ஒரு புன்னகை விரிந்தது.

‘வாரும் கிடாம்பி ஆச்சான்! உம்மைப் போல் ஒருவரைத்தான் தேடிக்கொண்டிருந்தேன். இந்தப் பெருங்கூட்டத்தில் உடையவரின் திருமேனிமீது யாருக்கு அதிகப் பரிவு உள்ளதென்று சோதித்துப் பார்க்க விரும்பித்தான் அவரை எழச் சொல்லத் தாமதித்திருந்தேன். உமது அன்பும் குரு பக்தியும் ஒப்பற்றதென இப்போது விளங்கிவிட்டது. உடையவருக்கு உணவிட நீரே சரியான நபர்!’ என்று திருக்கோட்டியூர் நம்பி சொன்னதும் திடுக்கிட்டுப் பார்த்தார் ராமானுஜர்.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி