இந்தி எதிர்ப்புப் போராட்டத்துக்குப் பிறகு தமிழ் இளைஞர்கள் இப்படி உணர்வுபூர்வமாகத் திரண்டெழுந்த சம்பவம் வேறு நிகழ்ந்ததில்லை. எனக்கென்னவோ, ஜல்லிக்கட்டு விவகாரம் என்பது இளைய தலைமுறையின் பல்வேறு அதிருப்திகளின் அடையாளப் பிரதிபலிப்பாகத்தான் தோன்றுகிறது. முல்லைப் பெரியாறு, காவிரி விவகாரங்கள் தொடங்கி நேற்றைய / இன்றைய தாள் பணமற்ற பொருளாதார மண்டையிடிகள் வரை துவண்டு கிடந்த சமூகத்துக்கு ஒரு வெளிப்பாட்டுத் தருணம் தேவைப்பட்டது. அது ஜல்லிக்கட்டானது.
நமது பண்பாட்டு அடையாளங்களை அழிக்க நினைக்கிற எதையும் எதிர்ப்பது நியாயமானதே. எதிர்ப்பை இப்படியான அறவழியில் காண்பிப்பது நமது தலைமுறையின் மன முதிர்ச்சியைக் காட்டுகிறது. அரசியல்வாதிகள் தொடங்கி அத்தனை தரப்பினரும் இளைய சமூகத்திடம் பயில வேண்டிய பாடம் இது. இது அனைத்துத் தளங்களிலும் தொடரவும் பரவவும் வேண்டும்.
பீட்டா போன்ற அமைப்புகளின் உள்நோக்கங்களும் ரகசிய செயல்திட்டங்களும் இன்று ஊருக்கே தெரியும். நமது மண்ணின் மீதும் மக்களின்மீதும் மதிப்புக் கொண்ட அரசாங்கமெனில் இத்தகு ஆதிக்கக் கூலிப்படைகளை அடியோடு களைந்தெறிவதில் இரண்டாம் யோசனை இருக்கக்கூடாது. பிராணி நலன் என்பது ஒரு பாவனை. மாடுகளை மகாலட்சுமியாகத் தொழத் தெரிந்த சமூகம் இது. நமக்கு என்.ஜி.ஓக்கள் பாடம் எடுக்கவேண்டிய அவசியமில்லை.
பிரதமருடனான தமிழக முதல்வரின் இன்றைய பேச்சுவார்த்தை ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் மகிழ்ச்சியளிக்கத்தக்கதாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். இந்த அறப் போராட்டத்தில் வெற்றி காணப்போகிற மாணவர்கள், இதே மன உறுதி, செயல்வேகத்தைத் தமது படிப்பிலும் காண்பித்து அடுத்தத் தலைமுறைக்கு ஆதர்சமாக விளங்க வாழ்த்துகிறேன்.