முந்தைய அத்தியாயத்தில் சொல்லப்பட்ட கோவிந்தசாமியின் 40 ஆண்டு கால வரலாறும் இந்த அத்தியாயத்தில் சொல்லப்படுகின்ற அதற்கும் முந்திய அவனுடைய சில தலைமுறைகளின் வாழ்வும் வாசித்தபோது சிரிப்பை வரவழைத்ததற்கு அது எழுதப்பட்ட சுவாரசியமான மொழிநடை தான் காரணம். என்றாலும் அதில் சூசகமாக சொல்லப்படுகின்ற கண்மூடித்தனமான வாழ்க்கை போக்கினை நாம் புறந்தள்ள முடியாது.
அடையாளச் சார்பு நிலை இல்லாத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது. அது மொழி, மதம், கலாச்சாரம், நிலம், பால் என்று எதை சார்ந்ததாகவும் இருக்கக்கூடும். எது சரி தவறு என்ற விவாதத்திற்கு இங்கு இடம் இல்லை,ஏனென்றால் அது தனிமனித சுதந்திரத்தை சார்ந்தது. சார்புநிலை என்பது இயல்பானது. நடுநிலை என்பது தான் மாயை.
ஆனால் அந்த சார்பு நிலை என்பது குழு அரசியலாக பரிணமித்து, இன்னும் ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் மீது உரிமையற்ற ஒரு தாக்குதலாக மாறிவிடுவது சற்றே சிக்கலானது. அதில் ஒரு வடிவம்தான் கோவிந்தசாமி, சாகரிகாவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் நிகழ்கின்றது.
கோவிந்தசாமியின் மதம் சார்ந்த அடையாளமும் சாகரிகாவின் பால் சார்ந்த அடையாளமும் அவர்களுடைய இல்லற வாழ்வில் ஏற்படுத்திய முரண்பாட்டை, மனித வாழ்வோடும் அதன் இயல்புகளோடும் சற்றும் பரிச்சயம் இல்லாத சூனியனால் எப்படி தீர்க்க முடியும் என்கின்ற ஆச்சரியத்தோடு நிறைவு பெறுகின்றது ஐந்தாவது அத்தியாயம்.
பிகு : இந்தப் பிரிவினால் கோவிந்தசாமி இவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பதும் சாகரிகா சற்றும் பாதிக்கப்படாதவளாக சித்தரிக்கப்படுவதும் கூட ஒரு அடையாள சார்புநிலை தானோ
Discover more from Pa Raghavan
Subscribe to get the latest posts sent to your email.