பொலிக! பொலிக! 48

இதைக் காட்டிலும் ஒரு பெருங்கருணை இருந்துவிட முடியுமா என்று ராமானுஜர் திகைத்துத் திகைத்துத் தணிந்துகொண்டிருந்தார். ஆளவந்தாரின் ஐந்து பெரும் சீடர்களிடம் பாடம் கேட்கக் கிடைத்த வாய்ப்பு பற்றிய திகைப்பு. யாருக்கு இதெல்லாம் வாய்க்கும்? தன்னைத் தேர்ந்தெடுத்த பெருந்திருவின் உலகளந்த சித்தமே அவரது தியானப் பொருளாயிற்று.

பெரிய பெருமானே! என்னைக் காட்டிலும் ஞானிகள் நிறைந்த மண் இது. என்னைக் காட்டிலும் பக்தி செய்வதில் சிறந்த பலர் உதித்து மலர்ந்த உலகம் இது. தவமும் ஒழுக்கமும் தவறாத பற்பல ரிஷிகள் இருந்து சென்றிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கருணைப் பெருவெள்ளத்தில் எத்தனை பேர் முக்குளித்திருப்பார்கள்? எனக்கு இது சாத்தியமானதென்றால் நான் அப்படி என்ன செய்துவிட்டேன்?

இடையறாத சிந்திப்பில் அவருக்குக் கிட்டிய விடை ஒன்றே. சரணாகதி. பக்தி சிறப்பானதுதான். பரமனை அடைய எளிய வழியும் கூட.  ஆனால் ஜீவ சொரூபத்துக்கு பக்தியைக் காட்டிலும் சரணாகதியே எளிது; பொருத்தமானது. ஒரு பக்தனுக்கான தகுதிகளைப் பெறுவதைக் காட்டிலும் நீயே சரணம் என்று அடிபணிந்துவிடுவது சுலபம். அது கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிப்பதல்ல. என்ன ஆனாலும் தாய் நம்மை விழவிடமாட்டாள் என்று நம்பி இடுப்பில் இருந்து எம்பிக் குதிக்க முனைகிற குழந்தையின் அசாத்திய நம்பிக்கை நிகர்த்தது. அந்தச் சரணாகதி மனநிலைதான் பெறற்கரிய செல்வங்களை ராமானுஜருக்குப் பெற்றுத் தந்திருந்தது.

அன்றைக்குப் பங்குனி உத்திரம். திருவரங்கன் தமது நாச்சியாருடன் ஒரே சிம்மாசனத்தில் எழுந்தருளியிருந்தபோது சன்னிதியில் கரம் கூப்பி நின்றிருந்தவர் உள்ளத்தில் இருந்து மழையேபோல் பொழியத் தொடங்கியது நன்றி உணர்ச்சி. தத்துவங்களில் ஆகச் சிறந்ததும் மேலானதும் எளிமையானதும் சரணாகதியே. பிடித்தாரைப் பிடித்து நிற்கும் வழி அது. சரணாகதிக்கு எம்பெருமான்கூடத் தேவையில்லை. அவன் பாதங்கள் போதும். அதன்மீது வைக்கிற முழு நம்பிக்கை அனைத்தையும் கொண்டு சேர்க்கவல்லது என்பதே முக்கியம்.

உள்ளுக்குள் அலையடித்த உணர்வை அப்படியே சுலோகங்களாகப் பொழிந்துகொண்டிருந்தார் ராமானுஜர்.  கத்ய த்ரயம், சரணாகதி கத்யம், வைகுந்த கத்யம் என்று அடுத்தடுத்து அவர் இயற்றிய நூல்கள் அனைத்தும் அதையேதான் பேசின. பற்றுக பற்றற்றான் தாள்.

‘மிகச் சிறப்பு. மிக மிகச் சிறப்பு எம்பெருமானாரே! இந்தச் சரணாகதியை ஆசாரியரின் திருப்பாதங்களில் வைத்தவர் ஒருவர் உண்டு. தெரியுமா உமக்கு?’ என்று கேட்டார் பெரிய நம்பி.

‘எம்பெருமான் மீது வைத்தாலென்ன? ஆசாரியன் மீது வைத்தாலென்ன? இரண்டும் ஒன்றுதான். அதுசரி, யார் அவர்? எனக்கு அவரைக் காணவேண்டுமே?’ ஆர்வத்துடன் கேட்டார் உடையவர்.

‘நீங்கள் அறிந்தவர்தாம். மாறனேர் நம்பி’

‘ஆஹா!’ என்று கரம் கூப்பினார் ராமானுஜர்.

‘நம்மாழ்வாரையே பரம புருஷனாகக் கொண்ட மதுரகவியை நிகர்த்தவர் அவர். ஆளவந்தாருக்கு மிகவும் உவப்பான சீடர்.’

‘கேள்விப்பட்டிருக்கிறேன் சுவாமி. ஆளவந்தார் பரமபதம் அடைந்தபோது திருவரங்கம் வந்திருந்த அன்று அவரைக் கண்டேன். ஆனால் நெருங்கிப் பழக வாய்க்கவில்லை. ஞானத்தில் நம்மாழ்வாரை நிகர்த்தவர் என்பதால்தான் அவரை மாறன் நேர் நம்பி என்று அழைக்கிறார்களாமே?’

‘அப்படியும் உண்டு. மாறன் ஏரி என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்பதாலும் அப்படிச் சொல்லுவார்கள்.’

மாறனேர் நம்பி அரிஜன குலத்தில் பிறந்தவர். ஊருக்கு வெளியே அரிஜன மக்கள் வசித்து வந்த சேரிக்கும் அப்பால் ஒரு பொட்டல் வெளியில் சிறு குடிசை அமைத்துத் தனியே வசித்துக்கொண்டிருந்தார். வயதாகிவிட்டபடியால் வெளியே நடமாட்டம் முடியாதிருந்தது. தவிரவும் நோய்மை. ஆசாரியப் பிரசாதமாகத் தமது குரு ஆளவந்தாரிடமிருந்து விரும்பிக் கேட்டுப் பெற்ற புற்றுநோய். அதன் வலியும் தீவிரமும் மாறனேர் நம்பியை அசையவிடாமல் அடித்துவிட்டிருந்தது. ஆளவந்தார் திருவடிகளையே எண்ணிக்கொண்டு தம் நாட்களை நகர்த்திக்கொண்டிருந்தார்.

‘எத்தனைக் கொடுமை தெரியுமா? மாறனேர் நம்பிக்கு நிகராக இன்னொரு பாகவதனைச் சொல்லவே முடியாது. அப்படியொரு உத்தமப் பிறவி. இந்த உலகில் அவர் அறிந்ததெல்லாம் இரு ஜோடிப் பாதங்கள் மட்டுமே. ஒன்று அரங்கனுடையது. இன்னொன்று ஆளவந்தாருடையது. ஞான, கர்ம, பக்தி யோகங்களால் எட்ட முடியாத மிக உயரிய நிலையைப் பாதாரவிந்தங்களைச் சரணடைந்து எட்டிப் பிடித்தவர் அவர். அவரைப் போய் இம்மக்கள் தீண்டத்தகாதவர் என்று சொல்லுகிறார்கள். அவரைத் தீண்டும் தகுதி அற்றவர்கள் அல்லவா இவர்கள்?’

‘உண்மைதான் சுவாமி. நமது மக்கள் சாதியெனும் அழுக்குப் போர்வையைப் போர்த்திக்கொண்டு உலவுகிறார்கள். அது போர்வைதான். கழட்டித் தூர எறிந்துவிடுவது எளிது. ஆனால் காலகாலமாகக் கழட்ட மனம் வராமல் போர்வையையே தோலாக்கிக்கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி எத்தனை மாறனேர் நம்பிகளை இவ்வுலகம் இன்னும் ஒதுக்கிவைத்திருக்கிறதோ தெரியவில்லை. அத்தனையும் மகா பாவம். திருமாலின் அடியார் அனைவரும் ஒரே சாதியல்லவா? அல்லது சாதியற்றவர்கள் அல்லவா? பேதம், பெருவிஷம்.’

‘சரியாகச் சொன்னீர் உடையவரே. இறைப்பணி என்பது முதலில் இவர்களைத் திருத்துவதுதான்.’

‘எம்பெருமான் அருளுடன் அதையும் செய்வோம் சுவாமி. அதுசரி, எனக்கு மாறனேர் நம்பியைச் சந்திக்க வேண்டுமே? என்னை அவரிடத்துக்கு அழைத்துச் செல்கிறீர்களா?’

பெரிய நம்பி ஒரு கணம் தயங்கினார். ஆகட்டும் அதற்கென்ன என்று மட்டும் சொல்லிவிட்டு விடை பெற்றுப் போனார்.

அழைத்துச் செல்வதில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லைதான். ஆனால் ஜீயரை ஓர் அரிசன குடிசைக்கு அழைத்துச் சென்றால் ஊர் சும்மா இருக்குமா என்கிற கவலை. அவரேகூட யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத்தான் நம்பியின் வீட்டுக்குப் போய்வந்துகொண்டிருந்தார். ஊரடங்கிய நேரத்தில் மாறனேர் நம்பிக்கு உணவு சமைத்து எடுத்துக்கொண்டு, மருந்து வகை, மாற்றுத் துணி உள்ளிட்ட தேவைகளுடன் புறப்படுவார். யாருக்கும் தெரியாமல் அவரது குடிசையை அடைந்து, கதவை மூடிவிடுவார்.

பிறகு மாறநேர் நம்பியை எழுப்பி அழைத்துச் சென்று தானே குளிப்பாட்டுவார். மென்மையாக ஒற்றிவிட்டு, புண்பட்ட இடங்களில் மருந்துகளைத் தடவுவார். பிறகு அமரவைத்துத் தன் கையால் ஊட்டிவிடுவார். சாப்பிட்டு ஆனதும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு தன் வீடு திரும்பிவிடுவார்.

இதை எப்படி ராமானுஜரிடம் சொல்லுவது? எப்படி அவரை நம்பியின் இருப்பிடத்துக்கு அழைத்துச் செல்வது? பொல்லாக் குடியினம் வசிக்கிற பூமி. ஆசாரத்தின் பெயரால் அறம் அழிக்கிற கூட்டத்துக்கு ஆசாரிய ஸ்தானத்தில் இருப்பவரின் அருமை புரியாதே?

அவருக்கு ஒரே கவலையாகிவிட்டது.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி