பொலிக! பொலிக! 47

அரையருக்கு மிகவும் சுவாரசியமாகிவிட்டது. ‘சொல்லும், சொல்லும்! ராமன் நினைத்தால் இருந்த இடத்தில் இருந்தபடிக்கே சீதையை மீட்டிருக்க முடியும்தான். ஆனால் ஏன் செய்யவில்லை?’ ஆர்வம் தாளமாட்டாமல் கேட்டார்.

‘சுவாமி, இலங்கைக்குப் போவதற்கு முன்னால் ராமேஸ்வரத்துக் கடற்கரையில் இருந்தபடி ராமன் கடலரசனைக் கூப்பிட்டான் அல்லவா?’

‘ஆமாம். கடலைத் தாண்ட அனுமதி கேட்பதற்காக.’

‘அவன் வரத் தாமதமானதில் கோபமாகி வில்லை எடுத்து நாணேற்றிவிட்டான் அல்லவா?’

‘அதுவும் உண்மைதான். ராமன் அழைத்துத் தாமதம் செய்யலாமோ?’

‘ஆனால் நாண் ஏற்றிய கணத்தில் கடலரசன் ஓடி வந்துவிட்டான். தாமதத்துக்கு மன்னிப்புக் கேட்டு ராமனின் கோபத்தைக் கரைத்தான் அல்லவா?’

‘ஆமாம், அதற்கென்ன?’

‘அப்போது என்ன நடந்ததென்று யோசித்துப் பாருங்கள். ஏற்றிய அம்பை இறக்க முடியாது என்று சொல்லி, அதே கடலரசனின் எதிரியான யாரோ ஒரு அரக்கனை நோக்கி அந்த அம்பைச் செலுத்தி அவனை அழித்தானா இல்லையா? அதுவும் வடக்கே எங்கோ மூவாயிரம் காத தூரத்தில் இருந்த அரக்கன் அவன்.’

‘நீர் சொல்வது உண்மைதான் உடையவரே. கவி வால்மீகி அப்படித்தான் எழுதியிருக்கிறார்.’

‘இப்போது சொல்லுங்கள். ஒரே ஒரு அம்பை வைத்து மூவாயிரம் காத தூரத்தில் உள்ள ஓர் அரக்கனை அழிக்கத் தெரிந்தவனுக்கு, வெறும் நூறு யோசனை தூரத்தில் இருந்த ராவணனை ஓர் அம்பால் வீழ்த்தத் தெரியாதா? எதற்கு வேலை மெனக்கெட்டுக் கடல் தாண்டிப் போகவேண்டும்?’

‘அதானே.. நான் இதை யோசித்ததே இல்லை உடையவரே!’

‘ராமன் கடல் தாண்ட ஒரே காரணம் விபீஷண சரணாகதிதான். வைஷ்ணவத்தின் ஆதார சூத்திரமே பிரபத்தி என்கிற சரணாகதி அல்லவா? விபீஷணனின் சரணாகதியை அங்கீகரித்துக் காட்டுவதன்மூலம் உயிர்கள் அனைத்துக்கும் மௌனமாகத் தனது மனத்தைப் புரியவைத்துவிடத் தான் ராமன் இலங்கைக்குப் போனான்.’

‘அருமை, அருமை ராமானுஜரே! எப்பேர்ப்பட்ட விளக்கம்! இதைத்தானே கிருஷ்ணாவதாரத்திலும் கீதையில் அறுதியிட்டுச் சொன்னான்! பிரமாதம். ஒருநாள் உமது காலட்சேபத்தை முழுமையாகக் கேட்க வேண்டும்.’

ராமானுஜர் புன்னகை செய்தார். அவர் காலட்சேபம் செய்ய அங்கு சென்றிருக்கவில்லை. அரையரிடம் இருந்த பெரும் புதையல் ஒன்றைப் பெறுவதற்காகவே போயிருந்தார். திருமாலையாண்டான் குறிப்பிட்டதும் பெரிய நம்பி குறிப்பிட்டதும் அதனைத்தான். சரமோபாய நிஷ்டை என்கிற ஆசாரிய நிஷ்டை.

என்றைக்கு அது எனக்குக் கிட்டும்? எப்போது காலம் கனியும் எம்பெருமானே?

மனத்துக்குள் ஏங்கியபடியே அவர் ஆசாரியருக்கு மஞ்சள் காப்பு இட்டுக்கொண்டிருந்தபோது சட்டென்று அரையரின் முகம் சுருங்குவதைக் கண்டார். பதறிப் போனார். ஏதோ சரியில்லை.

‘மன்னியுங்கள் சுவாமி. ஒரே ஒரு நிமிடம் பொறுங்கள்.’ என்று சொல்லிவிட்டு இட்ட மஞ்சள் காப்பைத் துடைத்து எடுத்துவிட்டு மீண்டும் புதிதாக, சரியான பதத்தில் மஞ்சள் காப்பு தயாரித்து அவருக்குப் பூசிவிட ஆரம்பித்தார்.

அரையர் வியப்படைந்தார். மஞ்சள் காப்பின் சேர்மானத்தில் ஏதோ சரியில்லை. மேனியில் சிறு உறுத்தல். தன்னையறியாமல் அவர் முகம் சுளித்தது அவருக்கே தெரிந்திருக்கவில்லை. இந்த ராமானுஜர் அதை எப்படிக் கவனித்தார்?

‘சுவாமி, தங்களுக்குச் சேவை செய்யக் கிட்டிய வாய்ப்பு என் பூர்வஜென்மப் பலன். அதில் நான் பிழை புரியலாமா? இனி இப்படி நேராது. வாருங்கள், நீராடலாம்.’

அழைத்துச் சென்று அமர வைத்து வாசனை திரவியங்கள் சேர்த்த இதமான சுடு நீரில் அவரைக் குளிப்பாட்டினார். கோயிலில் மணிக்கணக்கில் பாடி, சோர்ந்து திரும்பியிருந்த அரையருக்கு அந்த நீராடல் மிகுந்த பரவசத்தை அளித்தது. அப்படியே கண்மூடி அதை ரசித்துக்கொண்டிருந்தார்.

குளித்து முடித்து அவர் வந்து அமர்ந்ததும் சுண்டக் காய்ச்சிய பசும்பாலைக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.

‘எம்பெருமானாரே, உம்மைப் போலொரு சீடனை நான் கண்டதில்லை. இந்த குரு பக்திக்கு, இந்த செய் நேர்த்திக்கு, இந்த அக்கறைக்கு, அன்புக்கு நான் ஏதாவது பதிலுக்குத் தங்களுக்குத் தந்தே தீரவேண்டும். என்னிடமுள்ள எல்லா செல்வத்தையும் அள்ளிச் செல்லுங்கள்.’ என்று உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார் அரையர்.

‘நன்றி சுவாமி. அனைத்து செல்வங்களிலும் மேலானதும் சிறப்பானதும் பெருமைக்குரியதுமான ஆசாரிய நிஷ்டையைத் தங்களிடமிருந்து பெற விரும்புகிறேன். தங்களைத் தவிர அதை போதிக்க வேறொருவர் இல்லை என்று திருமாலையாண்டானும் பெரிய நம்பியும் சொன்னார்கள். எனக்கு அந்தப் பேறை அளிப்பீர்களா?’

பரவசத்தில் அப்படியே உடையவரை வாரி அணைத்துக்கொண்டார் அரையர்.

‘உம்மைப் போலொரு சிஷ்யருக்குத்தான் அதைச் சொல்லவேண்டும். குருவே பிரம்மம் என்பதைப் புரிந்துகொள்ள சீடன் சரியானவனாக இருப்பது அவசியம். தந்தேன், ஏந்திக்கொள்ளும்!’ என்று சொல்லி ஆரம்பித்தார்.

‘உடையவரே! அவ்வப்போதைய தேர்வுகளுக்கான பாடங்களை ஓர் ஆசிரியரால் சரியாகச் சொல்லித்தந்துவிட முடியும். தேர்ச்சி பெற்று மாணவன் அடுத்த வகுப்புக்குச் சென்றால் அங்கே வேறொரு ஆசிரியர் இருப்பார். அவர் அந்த நிலைக்கான தேர்வுகளுக்கு மாணவனைத் தயார் செய்து அனுப்புவார். மீண்டும் அடுத்த வகுப்பு. இப்படியே ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு ஆசிரியர் வருவார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வித்தையைச் சொல்லிக் கொடுப்பார். அவரது எல்லை அதுதான். ஆனால் குருவானவர் வேறு. அவர் முழு வாழ்வுக்குமான பாதையை அமைத்துக் கொடுப்பவர். தேர்வுகள் அல்ல அவரது நோக்கம். ஒரு பயிற்சியாளனைப் போல் மரணம் வரை மனத்துக்குள் உடன் வருபவர். இறுதிவரை வழி காட்டுபவர். சென்றடைய வேண்டிய இலக்கைச் சுட்டுபவர். இறுதியில் மாணவன் சென்று சேரும் இடம் பரமாத்மாவின் இடமாக இருக்கும். அங்கே தகிக்கும் பேரொளிப் பெருவெள்ளமாயிருக்கும் எம்பெருமானிடத்திலும் அவன் தன் குருவையே காண்பான். படுத்துக் கிடக்கிற பரமனேதான் எழுந்து நடமாடும் குருவாகவும் இருக்கிறான். இதுதான் சூட்சுமம். பிரம்ம ஞானமென்பது இதனை அறிவதில் தொடங்குவதுதான்.’

ராமானுஜர் கண்மூடி, கைகூப்பிக் கேட்டுக்கொண்டிருந்தார். எப்பேர்ப்பட்ட உண்மை! இறுதி வரை உடன் வருகிற குரு. தன் விஷயத்தில் தமது இறப்புக்குப் பிறகு உடன் வரத் தொடங்கிய ஆளவந்தாரை அவர் எண்ணிப் பார்த்தார். பெரிய நம்பி வடிவத்தில் வந்து த்வயம் அளித்தது அவர்தான். திருக்கோட்டியூருக்குத் தன்னை வரவழைத்து சரமப் பொருள் சொல்லித்தந்தவரும் அவர்தான். திருமாலையாண்டான் ரூபத்தில் திருவாய்மொழிப் பாடம் சொல்லிக் கொடுத்ததும் அவரேதான். இதோ இப்போது ஆசாரிய நிஷ்டையை விளக்குகிற ஆசாரியரும் அவரன்றி வேறு யார்?

குருவே சரணம் என்று அரையரின் தாள் பணிந்தார் ராமானுஜர்.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி