பெரிய நம்பியைப் பார்க்கப் போயிருந்தார் ராமானுஜர்.
திருவாய்மொழிப் பாடம் முடிவடைந்திருந்தது. அடுத்த யோசனையாக திருமாலையாண்டான் சொல்லிவிட்டுப் போனதைச் செயல்படுத்திவிட வேண்டியதுதான். அதற்குமுன் நம்பிகளிடம் ஒரு வார்த்தை சொல்லிவிடலாம் என்று நினைத்துத்தான் அவர் வீட்டுக்குப் போயிருந்தார்.
‘வாரும் ராமானுஜரே! திருவாய்மொழி வகுப்பு நிறைவடைந்துவிட்டதெனக் கேள்விப்பட்டேன்.’
‘ஆம் சுவாமி. எப்பேர்ப்பட்ட ஞான சமுத்திரத்திடம் பாடம் கேட்டிருக்கிறேன்! நான் புண்ணியம் செய்தவன்.’
‘அதற்குள் திருப்தியடைந்துவிடாதீர்கள். இன்னும் ஒன்று மிச்சம் இருக்கிறது உமக்கு.’
ராமானுஜர் சற்றே வியப்புடன் பார்க்க, ‘அடுத்தபடியாக நீர் அரையரைச் சென்று பாரும். மற்ற யாரிடமும் இல்லாத ஓர் அர்த்த விசேஷம் அவரிடம் உண்டு. சரம உபாய நிஷ்டை என்கிற ஆசாரிய நிஷ்டை!’
‘ஆம் சுவாமி. இதையேதான் திருமாலையாண்டானும் சொன்னார்.’
‘சொன்னாரா? அதுதான்! எதைக் கற்றுவிட்டால் மற்றதெல்லாம் ஒன்றுமில்லையோ அதை நீர் கற்றே தீரவேண்டும்.’ என்றவர் ஆசாரிய நிஷ்டையின் முக்கியத்துவத்தைப் பற்றி ராமானுஜருக்கு எடுத்துரைக்க ஆரம்பித்தார்.
‘சாமானியர்களால் பரம புருஷனை நேரில் பார்க்க முடியாது. அவன் பக்தி செய்யலாம். கர்ம, ஞான யோகங்களில் சாதகம் செய்யலாம். இன்னுமுள்ள எத்தனையோ விதமான உபாயங்களைக் கடைப்பிடித்துப் பார்க்கலாம். ஆனால் பகவான் தரிசனம் அத்தனை சுலபமா? ஆனால், பகவானைக் காணவேண்டுமென்கிற தாபம் இல்லாதிருக்காதல்லவா? அதற்கான எளிய உபாயம் இது. ஆசாரியரே நடமாடும் பரம புருஷன்.’
ராமானுஜர் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்.
‘உறங்கும் பெருமான் தானே உலவும் பெருமானாய் வந்தான் என்பார்கள். உலவும் பெருமான் என்றால் அது ஆசாரியரைக் குறிக்கும். தேவு மற்றறியேன் என்று மதுரகவி யாரைச் சொன்னார் என்று சிந்தித்துப் பாரும். அவரது ஆசாரியர் நம்மாழ்வாரைத்தான் அவர் அப்படிச் சொன்னார்.’
‘புரிகிறது சுவாமி.’
‘அதனால்தான் சொல்கிறேன். ஆசாரிய நிஷ்டையைப் பூரணமாகக் கற்கவேண்டியது மிக அவசியம். அதை அரையர் சுவாமியிடம்தான் நீர் பயின்றாக வேண்டும். அதைச் சொல்லித்தர அவரைக் காட்டிலும் வேறு சரியான நபர் இல்லை.’
அன்று இரவு ராமானுஜர் அரையரின் இல்லத்துக்குச் சென்றார். அரையர் அப்போது கோயிலில் இருந்து வந்திருக்கவில்லை. கையோடு எடுத்துச் சென்றிருந்த பாலை சுண்டக் காய்ச்சினார். பனங்கற்கண்டு, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ என்று பசும்பாலுக்குக் குணம் சேர்க்கக்கூடிய பொருள்களைச் சேர்த்தார். அரையர் வீடு திரும்பியதும், ‘அடியேன்’ என்று அவர் பாதம் பணிந்து, தயாராக வைத்திருந்த காய்ச்சிய பாலை எடுத்து நீட்டினார்.’
‘வாரும் உடையவரே, என்ன இந்நேரத்தில் இங்கே?’
‘பாலை அருந்துங்கள் சுவாமி. பாடிக் களைத்து வந்திருக்கிறீர்கள். முதலில் சிரம பரிகாரம் செய்துகொள்ளுங்கள்’
அரையர் சாய்ந்து அமர்ந்து பாலைப் பருக ஆரம்பித்தார். ராமானுஜர் அவர் காலருகே அமர்ந்து அவரது பாதங்களை எடுத்துத் தம் மடிமீது வைத்து மெல்லப் பிடித்துவிடத் தொடங்கினார்.
அரையர் சேவை என்பது ஆனந்தத்தின் உச்சம். சன்னிதியில் அவர் பாடத் தொடங்கினால் காற்றும் வீசுவதை நிறுத்திவிட்டு நின்று கவனிக்கும். பக்திப் பரவசத்தில் பாடிக்கொண்டே அவர் மெல்ல ஆடவும் ஆரம்பிப்பார். தன்னை மறந்து, உலகை மறந்து, இரவு பகல் மறந்து, இடம் மறந்து, இருப்பு மறந்து இறைவனோடு இரண்டறக் கலக்கிற பரவசப் பேரனுபவம் அது. பிரேம பக்திதான். ஆனால் அந்தப் பிரேமை நிகரற்றது. ஆண்டாளுக்கும் பக்த மீராவுக்கும் ராதைக்கும் சாத்தியமான பக்தி. அந்தப் பரவசப் பெருவெள்ளம் தாங்க முடியாமல் பாய்ந்து வந்து பரமனே கட்டியணைத்துக் கடாட்சிக்கிற உச்சக்கட்ட பக்தி.
ராமானுஜருக்கு அரையரைத் தெரியும். காஞ்சியிலேயே அவர் பார்த்திருந்தார். பேரருளாளனையே தன் வசப்படுத்திய பெரியவர். ஆளவந்தாரின் மகனுக்கு பக்தி செய்யச் சொல்லித்தரவும் வேண்டுமா?
காலம் மறந்து பாடியும் ஆடியும் களைத்து வந்திருந்த அரையருக்கு அந்த சூடான பசும்பாலும் இதமான கால் பிடித்து விடலும் பரம சுகமாக இருந்தன.
‘அருமை உடையவரே. உமக்கு ஆளவந்தார் அருளிய ஸ்தோத்திர ரத்தினம் தெரியுமோ?’
‘இல்லை சுவாமி. தாங்கள் சொல்லித் தந்தால் பயில ஆர்வமாயிருக்கிறேன்.’
அன்றைக்கு அவருக்கு ஸ்தோத்திர ரத்தினம் கிடைத்தது. இன்னொரு நாள் ‘சதுச்லோகி’ என்கிற இன்னொரு வைர வைடூரியம் கிடைத்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொற்கிழி. ஒவ்வொரு முத்துக்குவியல்.
ராமானுஜர் தினமும் அரையர் வீட்டுக்குப் போய்விடுவார். அரையர் குளிப்பதற்குத் தயாராவதற்கு முன்னால் அவர் குளிப்பாட்டத் தயாராகிவிடுவார். அரையருக்கு மஞ்சள் காப்பிட்டுக் குளிப்பதென்றால் இஷ்டம். இதை அறிந்த ராமானுஜர் தினசரி தானே அவருக்கு மஞ்சள் காப்பு தயாரிக்கத் தொடங்கினார். அருமையான கஸ்தூரி மஞ்சள் தூளில் பலவித வாசனைத் திரவியங்களைச் சேர்த்து கெட்டியாகக் கரைத்து அவரது மேனியெங்கும் மென்மையாகப் பூசிவிடுவார். மஞ்சள் காயும் நேரம் அரையர் கீழ்க்குரலில் மென்மையாக ஏதாவது பாசுரம் பாடிக்கொண்டே இருப்பார். சட்டென்று நிறுத்தி, ‘இதற்குப் பொருள் தெரியுமோ?’ என்று ஆரம்பித்தால் அன்றைய பொழுதுக்கு ஒரு ரத்தினம் கிடைத்துவிடும்.
ஒருநாள் இருநாள் அல்ல. ஆறு மாதங்களாக ராமானுஜர் இதனைச் செய்துகொண்டிருந்தார்.
அரையருக்குப் பழகிவிட்டது. ‘இன்றைக்கு உடையவர் இன்னும் வரவில்லையோ?’ என்று வீட்டுக்குள் நுழையும்போதே கவலைப்பட ஆரம்பித்துவிடுவார்.
‘மன்னித்துக்கொள்ளுங்கள் சுவாமி. மடத்தில் இன்று ஏகப்பட்ட அதிதிகள். காலட்சேபம் முடியத் தாமதமாகிவிட்டது.’
‘அப்படியா? அதனால் பரவாயில்லை. இன்றைக்கு என்ன காலட்சேபம் நடந்தது?’
‘சுவாமி, ராமாயணம் நடந்துகொண்டிருக்கிறது. விபீஷண சரணகதிக் கட்டம் வந்திருக்கிறது.’
‘அடடா.. அருமையான இடமாயிற்றே. எங்கே, இன்றைக்கு என்ன சொன்னீர் என்று சொல்லும்?’
ராமானுஜருக்குக் கூச்சமாகிவிட்டது. ஆளவந்தாரின் திருமகன். தவிரவும் அவரது பிரதான சீடர். அவருக்கு நாம் ராமாயண உபன்யாசம் செய்வதா?
‘அட பரவாயில்லை சுவாமி. ஏதாவது ஒரு விஷயத்தைச் சொல்லும், நாமும் கேட்போம்.’
மிகுந்த தயக்கத்துக்குப் பிறகு ராமானுஜர் ஆரம்பித்தார்.
‘சுவாமி, ராமன் எப்பேர்ப்பட்ட பராக்கிரமசாலி. அவன் நினைத்தால் ராமேஸ்வரத்தில் இருந்தபடியே ராவணனை அழித்துவிட முடியாதா? எதற்காக அவன் வேலை மெனக்கெட்டு இலங்கைக்குப் போகவேண்டும்?’
‘நல்ல கதையாக இருக்கிறதே. சீதாதேவியை சிறை மீட்கவேண்டாமா?’
‘ஏன் ராமன் நினைத்தால் இருந்த இடத்தில் இருந்தபடியே சீதையை மீட்டிருக்க முடியாதா?’
‘அதெப்படி முடியும்?’
‘முடிந்திருக்கும் சுவாமி. நடந்ததைச் சற்று யோசித்துப் பாருங்கள்!’ என்று பொடி வைத்தார்.
(தொடரும்)