கண்ணீரின் ருசி

அலை உறங்கும் கடல் நாவலை இன்று கிண்டில் மின் நூலாக வெளியிட்டிருக்கிறேன்.

இன்று வரை என்னைச் சந்திக்கும் வாசக நண்பர்களுள் பத்துக்கு நாலு பேராவது இதைப் பற்றிப் பேசாதிருந்ததில்லை. உமாவையும் அருள்தாஸையும் அற்புத மேரியையும் நீலுப்பாட்டியையும் சங்குக்கடை ராஜுவையும் தமது மனத்துக்கு நெருக்கமாக வைத்துப் பரவசத்துடன் என் கைகளைப் பிடித்துக்கொண்டு அவர்கள் மூச்சு விடாமல் பேசுகிற போதெல்லாம் எனக்குக் கண்ணீர் மல்கும். என்னுடைய வேறெந்த எழுத்தும் என்னை அப்படி உணர்ச்சி வசப்பட வைத்ததில்லை.

காரணம் இருக்கிறது.

இந்நாவலின் ருசியே கண்ணீரின் ருசிதான். அதுதான் கடலாக உருவகித்துக் கதையெங்கும் விரிந்து கிடப்பது. அலைகளற்ற ராமேஸ்வரத்தின் கடல் பரப்பு எனக்கு அங்கு போகும்போதெல்லாம் நூற்றுக்கணக்கான கதைகளைச் சொல்லிக்கொண்டே இருக்கும். எட்டு மணி நேரம், பத்து மணி நேரமெல்லாம் தனுஷ்கோடிக் கரையில் மல்லாக்கக் கிடந்திருக்கிறேன். கடலுக்குள் இறங்கி நாலைந்து அடி நடந்து சென்று அப்படியே அமர்ந்துவிடுவேன். அலை அடித்துப் போய்விடாது என்ற நம்பிக்கை. ஒரு குளத்துக்குள் இருப்பது போலத்தான் இருக்கும். ஆனால் குளிராது; கொதிக்கும். அந்தச் சூடு தண்ணீரில் இருந்து வருவதல்ல; அது அம்மண்ணின் தகிப்பு என்பதை மனம் சொற்களற்று உணரும்.

என் பிரயத்தனமே இன்றித் தன்னை எழுதிக்கொண்ட நாவல் இது. காரணம், இதன் கதாபாத்திரங்கள் அனைவரையும் எனக்கு வெகு நன்றாகத் தெரியும். நீலுப் பாட்டியைத் தவிர மற்ற அத்தனை பேரும் இன்னும் அங்கு வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்தாம். பாட்டி காலமாகிவிட்டாள். இருந்திருந்தால் இன்றைக்கு அவளுக்கு 104 வயது!

உண்மையில் இந்தக் கதையே அவள் சொல்லி ஆரம்பித்ததுதான். கமலஹாசன் படம் மாதிரி கதை, திரைக்கதை, வசனமெல்லாம் தானே எழுதிக் கொடுத்து, நடித்தும் கொடுத்து இன்னொருத்தரை இயக்கவைக்கிற காரியத்தையே அவள் செய்தாள். எப்பேர்ப்பட்ட ஆகிருதி! இப்போது நினைத்தாலும் பிரமிப்பில் பேச்சற்றுப் போய்விடுகிறேன்.

இந்நாவலை எழுதத் தொடங்கும்போது நான் கல்கியில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். மிகவும் பாதுகாப்பான, அன்பான, அக்கறை மிக்க ஓரிடமாக அது அன்றைக்கு இருந்தது. கல்கி ராஜேந்திரன், சீதா ரவி இருவரும் என்னை உள்ளங்கையில் வைத்துத் தாங்கிக்கொண்டிருந்தார்கள். ஓர் இளவரசன் மாதிரிதான் நான் அங்கு வாழ்ந்துகொண்டிருந்தேன். கல்கியில் அன்றைக்கெல்லாம், நான் எழுதியது போக இடம் ஏதேனும் மிச்சம் இருந்தால்தான் மற்றவர்களுக்கு. அப்படியொரு சுதந்தரம்; அப்படியொரு கொண்டாட்டம்.

சட்டென்று ஒருநாள் அங்கிருந்து கிளம்பிவிட வேண்டும் என்று தோன்றியது. அந்தப் பாதுகாப்புணர்வு வளர்ச்சிக்கு ஆகாது என்ற எண்ணம். அம்மாவின் கையைப் பிடிக்காமல் நடை பழகிப் பார்க்கிற விருப்பம். விழுந்து எழத்தான் வேண்டும். அடி படத்தான் செய்யும். ஆனால் அது அவசியம் என்று பட்டது. அரை நாள் யோசனை. கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டேன்.

என் கடிதம் ஆசிரியரின் கையில் இருந்தபோது அன்றைய கல்கி இதழ் அச்சாகி வந்தது. அதில் அலை உறங்கும் கடல் அடுத்த வாரம் ஆரம்பம் என்கிற விளம்பரம் வந்திருந்தது.

அன்றைய என் பணி விலகலைக் கல்கியால் ஜீரணிக்க முடியவில்லை. ஆசிரியர் எவ்வளவோ சொன்னார். கிரா வீட்டுக்குக் கூப்பிட்டுப் பேசினார். அது தீபாவளி மலர் நேரம் வேறு. அந்தப் பெரும் பணியை முடித்துக்கொடுக்க நான் இருந்தாக வேண்டியது உண்மையிலேயே அன்று அவசியமாக இருந்தது. இது தெரிந்தும் நான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தேன். விலகி விடுவது.

அடுத்த வேலை கிடைத்துத்தான் நான் பணியை விடுகிறேன் என்று உலகம் நினைத்தது. உண்மையில் நான் பணியை விட்டுச் சில மாதங்கள் கழிந்த பிறகுதான் அடுத்த வேலைக்குப் போனேன் (குமுதம்).

நிராதரவாக நின்று பார்க்கிற அனுபவத்தை அன்று பெற்றேன். எட்டாண்டுகள் வாழ்வோடு ஒன்றிய பத்திரிகையையும் நல்ல மனிதர்களையும் விட்டுப் பிரிவது எளிதல்ல. எனக்கு எழுதச் சொல்லிக் கொடுத்த குருகுலம் அதுதான். இன்று நான் உண்ணும் உணவே கல்கியின் ஆசிதான்.

அப்படிப்பட்ட இடத்தைவிட்டு விலகி வெளியே வந்த காலத்தில்தான் இந்நாவலை எழுத ஆரம்பித்தேன். எதிர்காலம் குறித்த கனவுகளும் அச்சம் போர்த்திய ஆர்வங்களும் முட்டி மோதிக்கொண்டிருக்க, என்றென்றும் கல்கி என்னை மறக்காதிருக்கும்படியாக இந்நாவல் அமைந்துவிட வேண்டும் என்ற வெறியில் எழுதியது.

துணிந்து ஒரு கிழவியைக் கதாநாயகியாக வைத்தேன். இறுதி அத்தியாயத்தில் இறக்கும்வரை அவள் நிகழ்த்தும் பேயாட்டம்தான் இக்கதையின் ஆதார சக்தி. ஊன்றி வாசித்தால் ஒரு காதல் கதை, ஒரு சிறு தீவின் சமகால சரித்திரம் என்பதைத் தாண்டி இந்நாவலுக்குள் ஒரு பெரும் ரகசியத்தை ஒளித்து வைத்திருப்பதைக் கண்டுகொள்ள முடியும். அச்சமும் ஆசையும் உரசுகிற கணத்தில் எழுகிற தீப்பொறிக்குள் புதைந்த ரகசியம் அது.

“என் கனவுகளில் மிக மேலானதும் மிக சத்தியமானதுமான ஒன்றையே நீ எனக்கு இறுதியாக அருளியிருக்கிறாய். நீ முற்றும் உணர்ந்தவள். நீ தீ. நீ நீர். நீ காற்று. நீ புவி. நீ ஆகாயம். நீ பூதங்களில் உறைந்திருப்பதோடு பூதங்களாகவும் நீயே இருக்கிறாய். உன் பரவசம் தென்றலாகிறது. உன் முகச் சுளிப்பு தீயாகிறது. உன் கனிவே புவி. உன் புன்னகையே ஜலம். உன் மனம் ஆகாயம். நீ நித்தியம். நீ சத்தியம். வா. வந்தென்னை ஆலிங்கனம் செய்துகொள்.”

நாவலில் வருகிற ஒரு பத்தி இது. ஒரு வகையில் இந்நாவலின் சாரமும் இதுவே.

நூலைப் பெற இங்கே செல்லவும்.

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி