எதிர்பார்த்ததைக் காட்டிலும் சற்று முன்னதாகவே அமேசான் என்னுடைய ‘மூவர்’ சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது. [திங்கள் அன்று எதிர்பார்த்தேன். இன்றே வந்துவிட்டது.]
முதல் முதலில் வெளிவந்த என் சிறுகதைத் தொகுப்பு இது. இதுவரை நான் எழுதிய சுமார் ஐம்பது புத்தகங்களுள் இந்த ஒன்றனுக்குத்தான் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. வெளியீட்டு விழா. பின்னாளில் தமிழகமெங்கும் பிரபலமான இலக்கியக் கூட்டக் குடி களேபர குஸ்தித் திருவிழா ஆரம்பித்துவைக்கப்பட்டது இந்த விழாவில்தான். தொடங்கிவைத்தவர் விக்கிரமாதித்தன். [அவரோடு லஷ்மி மணிவண்ணனும் வந்திருந்தார். ஆனால் கடைசிவரை அவர் அமைதியாகவே அமர்ந்திருந்தார்!]
அந்தக் கூட்டம் ஒரு வினோதமான கலவை. மேடையில் பேசுவோராக சாரு நிவேதிதா, மாலன், திருப்பூர் கிருஷ்ணன், ஆர். வெங்கடேஷ், கல்கி ஆசிரியர் சீதா ரவி. பார்வையாளர்களாகப் பங்குபெற்று என்னை வாழ்த்த வந்தவர்களில் வண்ணதாசன், ரா.கி. ரங்கராஜன், எடிட்டர் லெனின், கவிஞர் இளையபாரதி உள்ளிட்ட எண்ணற்ற பெரியவர்கள்.
சமோசா கலாசாரம் தோன்றாத காலத்து விழா. முற்றிலும் என்மீதிருந்த அன்பால் மட்டுமே அவர்கள் அத்தனை பேரும் கலந்துகொண்டார்கள். விக்கிரமாதித்தனும் என் நண்பர்தான். சொல்லப் போனால் உதயம் தியேட்டருக்குப் பின்னால் உள்ள டீக்கடை வாசலில் நின்று மணிக்கணக்கில் பேசக்கூடிய நண்பர். கல்கிக்கு முன்னால் நான் தாய்க்காகப் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே பழக்கம் உண்டு. கவிதைகள் மட்டும் எழுதிக்கொண்டிருந்தவரை, தாயில் தொடர்ந்து சிறுகதைகள் எழுத வைத்ததில் எனக்கும் பங்குண்டு. இதை அவரது தொகுப்பிலேயே குறிப்பிட்டிருப்பார்.
அன்றைய வெளியீட்டு விழாவில் அவர் செய்த களேபரங்களுக்காகப் பின்னால் அவரே என்னிடம் வருத்தம் தெரிவித்தார். நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் ஒரு மொக்கைக் கலாசாரத்தின் தோற்றுவாயாக என் புத்தக வெளியீட்டு விழா அமைந்துவிட்டதே என்கிற வருத்தம் மட்டும் இன்றுவரை உண்டு. இதனால்தானோ என்னமோ, இந்த ஒரு விழாவுக்குப் பின் வெளிவந்த என்னுடைய எந்தப் புத்தகத்துக்கும் வெளியீட்டு விழா நிகழவேயில்லை.
‘மூவர்’ எனக்கு மிக முக்கியமானதொரு நூல். அமரர்கள் திகசி, கோமல் சுவாமிநாதன், வெங்கட் சாமிநாதன், அசோகமித்திரன் தொடங்கி இபா, பிரபஞ்சன் வரை பல பெரும் படைப்பாளிகள் இந்நூலுக்கு மதிப்புரை எழுதியிருக்கிறார்கள். ஒரு புதிய எழுத்தாளனாக, அதுவும் வாரப் பத்திரிகை சார்ந்த எழுத்தாளனாக அறிமுகமான எனக்கு அன்றைய இலக்கிய உலகம் அளித்த வரவேற்பும் ஆதரவும் பெரிது.
இதைப் படித்துவிட்டுத்தான், ‘நீ என்னோட வந்து சேந்துரு’ என்று இயக்குநர் கே. பாலசந்தர் கூப்பிட்டார். நான் அவரிடம் விரும்பிக் கேட்டுக்கொண்டிருந்த காலத்திலெல்லாம் பதில் சொல்லாத மனிதர். அவர் அழைத்தபோது எனக்குத் திருமணமாகியிருந்தது. பத்திரிகை உலகில் அழுத்தமாகக் காலூன்றியிருந்தேன். விருப்பங்களும் ஆர்வங்களும் இடம் நகர்ந்துவிட்டிருந்த நேரம்.
வாழ்க்கை விசித்திரங்கள் நிறைந்தது. ஞாபகங்களை நிறைப்பதற்காகவே நிறைய நினைவுகளை உதிரிகளாகச் சேகரித்து வைக்கிறது.
இதெல்லாம் கையால் எழுதிக்கொண்டிருந்த காலத்துக் கதைகள். என் மனைவி பத்திரப்படுத்தி வைத்திருந்த ஒரே ஒரு பிரதியில் இருந்து மீண்டும் இதனை இவ்வண்ணமாக உருமாற்றம் செய்ய உதவியர் நண்பர் பால கணேஷ். அவருக்கு என் நன்றி.
மூவர் பிரதி எங்கே கிடைக்கும் என்று இன்றுவரை கேட்கிற வாசகர்கள் பலருண்டு. அச்சில் இல்லாதுபோனால் என்ன? மின் நூலாக இனி இது என்றும் இருக்கும்.