அலமாரி இதழ் பேட்டி

அலமாரி, ஜனவரி 2019 இதழில் வெளியாகியுள்ள எனது பேட்டி:

ஏன் திடீரென்று புனைவின் பக்கம் ஒதுங்கிவிட்டீர்கள்?

எழுத ஆரம்பித்தது முதல் இன்றுவரை புனைவு மட்டுமே என் ஆர்வமாக இருக்கிறது. ராவ் குமுதத்தின் ஆசிரியராக இருந்தபோது முதல் முதலில் பாகிஸ்தானின் அரசியல் வரலாறை எழுதச் சொல்லி என்னை அந்தப் பக்கம் இழுத்துவிட்டார். அந்தத் தொடரின் எதிர்பாராத பெரும் வெற்றி, அடுத்தப் பத்தாண்டுகளுக்கு என்னை அரசியல் வரலாறுகளையே எழுத வைத்தது. உலக அரசியலின்பால் எனக்கு இருந்த இயல்பான ஆர்வம் அதை சிரத்தையுடன் செய்ய வைத்தது. ஆனால் அடிப்படையில் நான் கதை சொல்ல மட்டுமே விரும்புபவன். தொழில்முறையில் பத்திரிகையாளனாக இருந்தபோது அரசியல் எழுத்துகளைத் தவிர்க்க முடியவில்லை. அது போதும் என்று முடிவு செய்து உதறிய கணத்தில் இருந்து மீண்டும் கதைகளை மட்டுமே எழுதுகிறேன். ஒரு நிர்ப்பந்தம், வெளியில் இருந்தோ / எனக்குள் இருந்தோ மீண்டும் வருமானால் மீண்டும் நான் அரசியல் எழுதலாம். ஆனால் அதுகூடக் கதைகளுக்குள் பேசும் அரசியலுக்கு நிகராகாது.

அபுனைவு, தொலைக்காட்சி நாடகங்கள் என்று எழுதும்போது திடீரென நாவல் மொழிக்குள் செல்வது கடினமாக இல்லையா?

நிச்சயமாக இல்லை. அபுனைவு எழுத்தும் சரி, தொலைக்காட்சித் தொடர்களுக்கு எழுதுவதும் சரி, தொழில் சார்ந்தது. புனைவு என் பிரத்தியேக விருப்பம் சார்ந்தது. நான் ஒரு குமாஸ்தாவாகவோ, கோயில் பூசாரியாகவோ, குப்பை அள்ளுபவனாகவோ, விஞ்ஞானியாகவோ இருந்திருந்தால் வாங்கும் சம்பளத்துக்கு எவ்வளவு நேர்மையாக உழைப்பேனோ அதைத்தான் இந்த எழுத்தில் செலுத்துகிறேன். வேலை நேரம் முடிவதோடு அதிலிருந்து விலகிவிடுகிறேன். நாவல் எழுதுவது எனக்கு வேலையல்ல. விருப்பம் சார்ந்த செயல்பாடு அது. அந்த உலகில் நான் நுழையும்போது, ஒரு திருமணத்துக்குக் கிளம்பும் பெண் பெட்டிக்குள் இருந்து பட்டுப்புடைவையை எடுத்துத் தொட்டுத் தடவி அழகு பார்த்து அணிவது போல என் மொழியை நான் என் ரகசியச் சுரங்கத்துக்குள் இருந்து எடுத்துக்கொள்கிறேன். மீண்டும் தொழிலுக்குப் போகும்போது அதைப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவிட்டு, தொழிலுக்கான மொழியை விரல்களின் நுனியில் பொருத்திக்கொண்டுவிடுவேன். இதில் எனக்குப் பிரச்னையே இல்லை. உங்களுக்குத் தமிழும் ஆங்கிலமும் தெரிவது போல எனக்குப் புனைவின் மொழியும் வர்த்தக மொழியும் பரிச்சயம்.

யதியைப் பற்றிச் சொல்லுங்கள். சமூக வலைத்தளம் முழுதும் இதைக் குறித்த பேச்சாகவே இருக்கிறது. யதி எதைப் பற்றிய நாவல்?

மூன்றாண்டுகளுக்கு முன்னால் எழுத நினைத்து, இந்த ஆண்டு எழுதி முடித்தது யதி. இது சன்னியாசிகளின் உலகில் சுற்றிச் சுழலுகிற நாவல். நான்கு சன்னியாசிகளின் வாழ்வனுபவங்களின் மூலம், இந்தியாவில் புழக்கத்தில் உள்ள அனைத்து விதமான சன்னியாச ஆசிரமங்களிலும் புழங்குவோரின் அந்தரங்க உலகைத் திறந்து காட்டுகிறது இது. ஒரு காலத்தில் ஞானப்பித்து தலைக்கேறி, பல்வேறு சன்னியாசிகளின் பின்னால் திரிந்திருக்கிறேன். வேதங்கள், உபநிடதங்கள் தொடங்கி தந்திரா வரை அனைத்தையும் தலைக்குள் திணித்துக்கொண்டுவிட மாட்டோமா, ஒரு விரலசைப்பில் உலகையே வசப்படுத்திவிட மாட்டோமா என்று ஏங்கியிருக்கிறேன். எப்படியாவது கடவுளைப் பார்த்துவிடுவது என்னும் வெறியுடன் அலையாத இடங்களில்லை. பார்த்தபின் என்ன செய்யப் போகிறோம் என்ற வினா எழுந்தபோது அந்த அலைச்சல் நின்றுபோனது. சரியாகச் சொல்வதென்றால் கடவுளுக்கென நேரம் ஒதுக்க முடியாத அளவு வாழ்க்கை விளையாடத் தொடங்கியபோது அதையே ரசிக்க ஆரம்பித்தேன். கடவுளைவிட்டுச் சற்று நகர்ந்தபோதுதான் அவரை அதிகம் ரசிக்கவும் ஆராதிக்கவும் முடிந்தது. இதை, இது நிகழ்வதற்குப் பலகாலம் முன்பே நான் இப்படித்தான் ஆவேன் என்று ராமகிருஷ்ண மடத்து சன்னியாசி ஒருவர் என்னிடம் சொல்லியிருந்தார். ஒரு சன்னியாசி ஆகிவிட வேண்டும் என்ற முடிவோடு நான் அலைந்து திரிந்த நாள்களில் ஏற்பட்ட அனுபவங்களையே யதியில் சொல்லியிருக்கிறேன். இந்தக் கதையில் வரும் நான்கு விதமான சன்னியாசிகளுக்குள்ளும் நான் இருக்கிறேன். நான் நெருங்கிய, கவனித்த, ரசித்த, ஆராதித்த, இன்றுவரை மனத்துக்குள் வணங்கும் / வெறுக்கும் பலபேர் இருக்கிறார்கள். சன்னியாசிகளைப் பற்றிய இப்படி ஒரு புனைவுப் பிரதி இதுவரை வந்ததில்லை. நாமறிந்த காவி, நாமறிந்த ஆளுமைகள், நமக்குத் தெரிந்த துறவிகளின் வாழ்வுக்கும் செயலுக்கும் அப்பால் உள்ள, எங்கோ ஓடி ஒளிந்துகொண்ட ஒரு ஜீவநதியின் சத்தியத் தடம் தேடிப் போகும் பயணம், யதி.

யாராவது நாவலை வாசிக்கிறார்களா என்று கேட்கலாம். ஆனால் யதி நாவலுக்கு முன்னுரை அனுப்பச் சொல்லிக் கேட்டதற்கு, இத்தனை பேர் அனுப்புவார்கள் என்று எதிர்பார்த்தீர்களா?

இது நிச்சயமாக நான் எதிர்பாராதது. யதிக்கு முன்னுரை எழுதுங்கள் என்று சமூக வலைத்தளங்களில் ஓர் அறிவிப்பு வெளியிட்டேன். ஆயிரம் பக்கங்கள் வரக்கூடிய ஒரு நாவலை எத்தனைப் பேர் முழுதும் படித்து எழுதுவார்கள் என்ற அவநம்பிக்கை இருந்தது. ஆனால் சுமார் நாற்பது பேர் அக்கறையுடன் முன்னுரை எழுதியிருந்தார்கள். அவற்றை எனது இணையத் தளத்திலும் ஃபேஸ்புக்கிலும் தொடர்ந்து பிரசுரித்தேன். கேளிக்கை அம்சங்கள் இல்லாத, தீவிரமான ஒரு விஷயத்தைப் பேசுகிற பிரதியைப் பொருந்தி வாசிக்கவும் கருத்துச் சொல்லவும் இவ்வளவு பேர் இன்னமும் மிச்சம் இருக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.

ஏன் ஒரு முன்னுரையைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை விளக்குவீர்களா?

புத்தகத்தில் ஒரு முன்னுரையைத்தானே பிரசுரிக்க முடியும்? வந்தவற்றுள் சிறந்ததென நானும் தினமணி டாட்காம் ஆசிரியரும் கருதியதைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் பிரசுரமான அனைத்து முன்னுரைகளையும் விரைவில் ஒரு மின்னூலாக வெளியிட எண்ணியிருக்கிறேன். யதியின் கிண்டில் எடிஷன் வெளியாகும்போது அதனுடன் இந்த மதிப்புரைகளின் மின் பதிப்பு இலவச இணைப்பாகக் கிடைக்கும்.

அடுத்து எழுதப் போவது நாவலா அல்லது அபுனைவா?

நாவல்தான். இரண்டு யோசனைகள் உள்ளன. ஒன்று மிகப் பெரிது. யதியை விடப் பெரிது. அதர்வ வேதம் தோன்றிய காலம் தொடங்கி, சரஸ்வதி நதி மண்ணுக்குள் ஓடி மறைந்த காலம் வரையிலான பரப்பினை, அந்நதிக்கரை நாகரிகத்தினை முற்றிலும் கற்பனையில் கட்டியெழுப்பும் திட்டம் ஒன்றுள்ளது. இன்னொரு நாவல் ஒரு முக்கியமான சமகாலப் பிரச்னை சார்ந்தது. அளவில் சிறியது. இரண்டில் எது முதலில் வரும் என்று தெரியவில்லை. பெரும்பாலும் என் தீர்மானங்களை என் எழுத்து எடிட் செய்தோ, ரீரைட் செய்தோதான் வெளிவருகிறது. அதன் போக்கில் விட்டுவிடுவதே எனக்கும் சௌகரியமாக இருக்கிறது.

ஆயிரம் பக்கம் நாவலை எத்தனை பேர் தமிழ்நாட்டில் வாசிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? அப்படி இருக்கும்போது எது உங்களை நாவலை எழுத வைக்கிறது?

தமிழில் ஒரு நாவலுக்கான வாசகர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். இது இன்று நேற்றல்ல. எக்காலத்திலும் இதுதான் நிலைமை. ஜெயமோகன் மாதம் மும்மாரி பொழிந்துகொண்டே இருக்கிறார். வெண்முரசின் அத்தனை வால்யூம்களை எத்தனைப் பேர் முழுதாக வாசித்திருப்பார்கள்? இந்தக் கவலை அவருக்கு வந்துவிட்டால் அடுத்த நாவலை அவர் எழுத முடியாது. அனைவரும் படிக்க வேண்டும் என்று ஓர் எழுத்தாளன் ஆசைப்படுவது நியாயம். ஆனால் அது நடைமுறை சாத்தியமற்றது என்பதை அவன் அறிந்தே இருப்பான். இது ஒரு அகவயமான செயல்பாடு. எங்கோ ஒரு மூலையில், என்றோ ஒருநாள் எதிர்ப்பட்டுக் கையைப் பிடித்துக்கொண்டு சொற்களற்ற உணர்வினை எழுதுபவனுக்குள் கடத்திச் செல்கின்ற அந்த முகமறியா ஒரு வாசகனே இங்கே அத்தனைப் பேரையும் எழுத வைத்துக்கொண்டிருக்கிறான். அது ஆயிரம் பக்கமோ, அரைப் பக்கமோ. அந்த ஒரு வாசகனே எழுதுபவனுக்கு முக்கியம். அவனை நோக்கியே அத்தனை பேரும் பேசுகிறார்கள். நான் உள்பட. இதில் ஒரு சிறு வித்தியாசம், எனக்கு லட்சக்கணக்கான வாசகர்களுடன் வேறு தளத்தில் நீண்ட நாள் பரிச்சயம் உண்டு. எதை எப்படி எழுதினால் வாசகர் எண்ணிக்கை கூடும் என்ற சூட்சுமம் நான் அறிவேன். ஆனால் படைப்பிலக்கியத்தின் எல்லைகளுக்குள் அவர்களை எதிர்பார்ப்பது நியாயமில்லை. ஆனால், தாமாக விரும்பி வருவோரை வரவேற்க மட்டும் எப்போதும் காத்திருப்பேன்.

தற்போது எழுத வரும் இளம் எழுத்தாளர்களை வாசிக்கிறீர்களா?

நான் முதிய எழுத்தாளன் அல்லன். இன்று எழுத வந்திருக்கும் தலைமுறைக்கு ஒரு தலைமுறை மட்டுமே மூத்தவன். எனக்கும் மூத்த மூன்று தலைமுறை இன்னமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்பதை மறக்காதீர்கள். இன்றைய தலைமுறையில் எழுதும் அனைவரையும் வாசிக்கிறேன் என்று சொல்ல முடியாது. யாராவது சுட்டிக்காட்டும்போது நிச்சயமாகப் படித்துவிடுகிறேன்.

Share
By Para

தொகுப்பு

Recent Posts

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி

error: Content is protected !!