சமீபத்தில் ஒருநாள் என் பழைய குப்பைகளைக் குடைந்துகொண்டிருந்தபோது ஆதி ராயர் காப்பி க்ளப்புக்கு நான் எழுதி அனுப்பிய சில குறுங்கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகள் அகப்பட்டன. பரபரவென்று யோசித்துப் பார்த்தால் நான் இணையத்துக்கு வந்து எட்டு ஆண்டுகள் முடிகின்றன. இடையே சில வருடங்கள் எழுதாமல் இருந்திருக்கிறேன். பல மாதங்கள் படிக்காமலேயேகூட இருந்திருக்கிறேன். நிறைய நண்பர்கள், ஏராளமான அனுபவங்கள், சந்தோஷங்கள், வருத்தங்கள். இது ஓர் உலகம். இவ்வுலகின் ஒரு மூலையில் எனக்குமொரு குடிசை இருந்துவந்திருக்கிறது.
இரண்டாயிரமாவது வருஷம் இரா. முருகன் மூலம் முதல் முதலில் எனக்கு இணையம் அறிமுகமானது தொலைபேசி வழியே. அப்போது நான் குமுதத்தில் சேர்ந்திருந்தேன். ஒரு ஆபீஸ் என்றால் கம்ப்யூட்டரும் இருக்கவேண்டும் என்கிற கணக்கில் அப்போது அங்கே 150 பேர் கொண்ட எடிட்டோரியலுக்குப் பொதுவில் ஒரு கம்ப்யூட்டர் வைக்கப்பட்டது. பளபளவென்று துடைத்து சந்தன, குங்குமப் பொட்டெல்லாம் வைத்து, தமிழ் சினிமா முதலிரவுக் காட்சிப் பெண் மாதிரி ஒரு கண்ணாடி அறைக்குள்ளே அது காத்திருந்தது.
அந்த அறை, குமுதத்தின் தலைமை நிருபராக அப்போது இருந்த மணாவின் அறை. மணாவுக்கும் கம்ப்யூட்டருக்கும் வெகு தூரத்து சொந்தம்கூட அப்போது இல்லை. எடிட்டோரியலில் இரண்டு பேர்தான் அப்போது மின்னஞ்சல் முகவரி உள்ளவர்களாக இருந்தார்கள். நான் ஒருத்தன். இன்னொருவர் கிருஷ்ணா டாவின்சி. ஆயினும் கம்ப்யூட்டரை மணாவின் அறையில் வைப்பது என்றே நிர்வாகம் முடிவு செய்தது.
ஒன்றும் பிரச்னையில்லை. மணா எப்போதும் அலுவலகத்தில் இருக்கமாட்டார். அவரது அறையும் திறந்தே கிடக்கும். ஆகவே ஒரு கள்ளக்காதலி்யாகத்தான் கம்ப்யூட்டரை ஆளமுடியும் என்கிற நிலை இருந்தது. அதனாலென்ன, பரவாயில்லை. போனில் கூப்பிட்டு இரா. முருகன் சொன்னார். ராயர் காப்பி க்ளப் என்றொரு குழு ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. நீங்களும் வந்து சேருங்கள்.
எங்கே, எங்கே, என்று நாலு முறை கேட்டேன். எப்படி எப்படி என்று மூன்று முறை. தமிழே தெரியலியே, தமிழே தெரியலியே என்று நாற்பது முறை. எப்படி எழுதுவது எப்படி எழுதுவது என்று ஐம்பது முறை. தொழில் முறையில் ஒரு ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட் நிபுணரான முருகன் நிச்சயம் வெறுத்து ஓடியிருப்பார். தொலைபேசி வழியே நான் படுத்திய பாடு இன்னமும் அவருக்கு நிச்சயம் மறந்திருக்க முடியாது. அவர் எத்தனையோ விதமாகச் சொல்லிக்கொடுத்தும் அடுத்த பல மாதங்களுக்கு என்னால் நேரடியாக ராகாகியில் எதையும் எழுத முடியவில்லை. பேப்பரில் எழுதி எடுத்துச் சென்று மணா இல்லாத பொழுதுகளில் கம்போஸ் செய்து முருகனுக்கு மின்னஞ்சலில் அனுப்புவேன். அவர்தான் என் சார்பில் அதை ராகாகியில் போடுவார். அவர் இல்லாவிட்டால் இந்த உபகாரத்தை வெங்கடேஷ் செய்வான். அவனும் இல்லாவிட்டால் சொக்கன். இணையத்தைப் பொறுத்தவரை இந்த வகையில் இவர்களெல்லாம் எனக்கு சீனியர். சொக்கன் ரொம்பவே சீனியர். அவனது தினமொரு கவிதை என்னும் குழு அப்போது படு பயங்கர பாப்புலர். தினசரி பத்து கவிஞர்களைப் பிள்ளை பிடிக்கிறவன் மாதிரி பிடித்துப் போட்டுப் படுத்திக்கொண்டிருந்தான். அந்தக் குழுவில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக இருந்தார்கள். அல்லது ஆயிரக்கணக்கான உறுப்பினர்களும் கவிதை எழுதிக்கொண்டிருந்தார்கள்.
ராகாகி எனக்கு அருமையான பல நண்பர்களைத் தேடித்தந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் ராம், ஆனந்த் ராகவ், பாஸ்டன் பாலாஜி, மூக்கு சுந்தர், மதி கந்தசாமி, ஐகாரஸ் பிரகாஷ், ஹரி கிருஷ்ணன், மதுரபாரதி, ஆசாத், ரமணீதரன் என்று பட்டியலிட ஆரம்பித்தால் இடம் போதாது. ராகாகி மூலமாகவே எனக்கு மரத்தடி அறிமுகமானது. பி.கே.சிவகுமார், ஹரன் பிரசன்னாவெல்லாம் அங்கே போடு போடென்று போட்டுக்கொண்டிருந்தார்கள். இலங்கையில் தான் பிறந்து வளர்ந்த சிறு தீவைப் பற்றி, அங்கிருந்த காலம் பற்றியெல்லாம் மதி எழுதிய சிறு கட்டுரைகளில்தான் எத்தனை அழகு, எத்தனை லயம், எத்தனை பிரகாசம்! பிரசன்னா ஒரு கவிதாதா [தாத்தா அல்ல]வாக அந்தக் குழுவில் அறியப்பட்டிருந்தார். நிறைய ஆரோக்கியமான விவாதங்கள் இந்தக் குழுக்களில் நடந்தன. படிப்பதற்கும் மிகுந்த சுவாரசியமாக இருக்கும்.
இந்தக் குழுக்கள் அளித்த உற்சாகத்தில் ராகாகியில் இருந்தபடியே புத்தகப் புழு என்று நானொரு குழுவைத் தொடங்கினேன். குறுகிய காலத்தில் இந்தக் குழு மரணமடைய நேரிட்டாலும் சில நம்பிக்கை தரும் எழுத்தாளர்களை உருவாக்கிய குழு இது.
இன்றைக்கு உஷாவைத் தெரியாத இணையர்கள் இருக்கமுடியாது. அன்றைக்கு அவர் புழுவில் எழுத வந்தபோது நானும் ஆனந்த் ராகவும் சேர்ந்து அவரை ஓட்டு ஓட்டென்று ஓட்டியிருக்கிறோம். என்ன கிண்டல் செய்தாலும் சளைக்காமல் மல்லுக்கட்டும் தெம்பு அவருக்கு இருந்தது. குறிப்பாக இலக்கிய நூல்கள், நூலாசிரியர்களின் பெயர் விஷயத்தில் உஷாவின் ஞாபக சக்தி அன்றைக்கு அபாரமாக இருந்தது. நூறு சதவீதம் தப்பாகவே சொல்லுவார். மாட்டிக்கொள்ள அது போதாதா? சளைக்காமல் பயணக்கட்டுரைகள் எழுதுவார். சிறுகதைகள் எழுதுவார். இன்னதுதான் என்றில்லை. தினமும் என்னத்தையாவது எழுதிக் கடாசிக்கொண்டே இருப்பார். எத்தனை வேண்டுமானாலும் சீண்டலாம். கிண்டல் செய்யலாம். கோபித்துக்கொள்ளவே மாட்டார். நுனிப்புல் மேயாதீர்கள் என்று ஒரு சமயம் அவரை மாலன் சொல்லப்போக, அதையே இன்று தனது வலைப்பதிவின் தலைப்பாக வைத்திருக்கிறார்!
நிர்மலா என்றொரு எழுத்தாளர். கொஞ்சமாக எழுதினாலும் நிறைவாக எழுதுபவர். தினமொரு கவிதை குழுவில் கவிதைகள் மட்டும் எழுதிக்கொண்டிருந்த சேவியர், உரைநடைக்கு வரவும் இந்தக் குழுவே காரணமாயிருந்தது. இன்றைக்கு சேவியர் மிக அழகாக உரைநடை எழுதுகிறார். அவரது புத்தகங்கள் மொழி அழகும் ஆய்வுச் சிறப்பும் கொண்டு விளங்குகின்றன. அவரது கவிதைகளைக் காட்டிலும் எனக்கு அவரது உரைநடை பிடித்திருக்கிறது.
இன்னும் உண்டு பலபேர். பெயரிலியாக வலைப்பதிவுலகில் இயங்கும் ரமணீதரனை முதல் முதலில் நான் நேருக்கு நேர் எதிர்கொண்டது புத்தகப் புழுவில்தான். அதுவும் சரியான மோதலில் ஆரம்பித்த பழக்கம் அது. முன்னதாக அவரது ‘நகுலேஸ்வரதாஸ்’ படித்து பிரமித்துப் போயிருந்தேன். யாரிந்த ஆள் என்று பார்க்கிறவர்களிடமெல்லாம் கேட்டுக்கொண்டுமிருந்தேன்.
எனக்கு இணையம் புதிது. ஒரு குழுவை நிர்வகிக்கும் அனுபவமும் புதிது. ரமணியோ ஆதியிலே எம்பெருமான் பூமியையும் இணையத்தையும் படைத்த காலத்திலிருந்து இயங்கி வருபவர் போலிருக்கிறது. எனக்கு அது தெரியாது. இந்த உலகின் விதிகள், இலக்கணங்கள், சுதந்தரங்கள் குறித்து எதுவும் அப்போது எனக்குத் தெரியாது. விதவிதமான பெயர்களில் அவரிடமிருந்து மடல்கள் வரும்போதெல்லாம் எனக்கு பேஜாராகிப் போகும். வெளியிடாமல் அழித்தால் வேறு வேறு பெயர்களில் மீண்டும் வருவார். எழுதுவதெல்லாம் அணுகுண்டுகளாக இருக்கும். என்ன செய்வதென்றே புரியாமல் விழிப்பேன்.
நினைத்துப் பார்த்தால் எல்லாமே சிரிப்பாக இருக்கிறது. இணையம் எனக்கு ஓரளவு புரியத் தொடங்கியது பத்ரி மூலம் வலைப்பதிவுகள் அறிமுகமான பிறகுதான். அடிதடி, வெட்டு, குத்து, கத்தி, கபடாக்களுடன் வரிந்துகட்டிக்கொண்டு நிகழ்த்தப்பட்ட மோதல்களாலும் அத்துமீறல்களாலும் அவ்வப்போது அலுப்பேற்பட்டாலும் இதன் சுவாரசியம் என்னளவில், விடாத கறுப்பு. ப்ளாக் ஸ்பாட்டுக்கு வந்த பிறகு ராகாகியில் நிகழ்ந்த அடிதடிகள், பல உறவு முறிவுகள், ராகாகியே முடங்கிப் போனது, என்றோ ஒருநாள் எனக்குத் தெரியாமலேயே என் பெயர் அங்கிருந்து நீக்கப்பட்டிருந்தது, ராகாகிக்கும் மரத்தடிக்கும் நிகழ்ந்த குஸ்திகள், ராகாகி பெயரிலேயே சிறு மாறுதல் செய்து யாரோ ஒரு பலான குழு தொடங்கி கலக்கியது, ரமணி ‘பெயரிலி’ தளம் ஆரம்பித்து வாரம் தவறாமல் பலரை வெளுத்து வாங்கியது [அதிக பாக்கியம் அடியேனுக்குத்தான்.], யார் பெயரிலி என்று எல்லோரும் ஒருத்தரை ஒருத்தர் கேட்டுக்கொண்டது, முதல் முதலில் நான் அதைக் கண்டுபிடித்து மறைமுகமாக எழுதியது, கணேஷ் எனக்காகவே அவரது தமிழோவியம் தளத்தில் ஒரு வலைப்பதிவை உருவாக்கித் தந்தது, மதியும் [பின்னாளில் தமிழ்மணம்] காசியும் இணைந்து நடத்திய வலைப்பூ வார இதழுக்கு ஒருவாரம் நான் ஆசிரியராக இருந்து ஆன்லைனில் அவர்களைப் படுத்தி எடுத்தது, அந்த ஒருவார வலைப்பூ இதழுக்கு அமோகமான வரவேற்பு கிடைத்தது – எண்ணிப் பார்த்தால் எல்லாமே இப்போதும் ரசமாக இருக்கிறது.
குறிப்பாக என் பழைய தமிழோவியம் வலைப்பதிவில் நான் எழுதிய ஒன்பது கட்டளைகள். அப்பப்பா! எத்தனை பரபரப்பு, எத்தனை கோபதாபங்கள்! இன்றைக்கு திரைப்பட இயக்குநராகப் புதிய அவதாரமெடுத்திருக்கும் அன்றைய தமிழோவியம் ஆசிரியர் அருண் வைத்தியநாதனுடன் போட்ட சண்டைகள் போல் சுவாரசியமான சண்டைகள் வேறு இருக்கமுடியாது. அதையெல்லாம் சேகரித்து வைக்க அப்போது தோன்றவில்லை. பாலாஜியிடம் கேட்டுப் பார்க்கவேண்டும். பின்னும் கிழக்கு ஆரம்பித்த பிறகு நடந்த சில [ஆர்வக்]குளறுபடிகளால் ஏற்பட்ட கொந்தளிப்புகள், மதி என்னை லெஃப்ட் & ரைட் வாங்கியது, அதான் சாக்கு என்று ஆளாளுக்கு ஆனந்தமாக ஏறி நின்று காளிங்க நர்த்தனம் ஆடியது, இட்லி வடை வந்தது, டோண்டு வந்தது, போலி டோண்டு வந்தது வரையிலான இந்த எட்டாண்டு காலச் சம்பவங்களைத் தொகுத்துத் தனியே ஒரு புத்தகமே எழுதலாம் போலிருக்கிறது.
பற்பல பிரச்னைகளின் மையப்புள்ளியாகவோ, ஓரப்புள்ளியாகவோ, வெறும் பார்வையாளனாகவோ இருந்திருந்தாலும், பல்வேறு தாக்குதல்களுக்கு இலக்காக இருந்திருந்தாலும் தனிப்பட்ட முறையில் – மனத்துக்குள் யார் மீதும் விரோதம் கொண்டதில்லை என்கிற எண்ணம்தான் என்னுடைய எட்டாண்டு கால இணையச் செயல்பாடுகள் எனக்களிக்கும் ஒரே பெரிய திருப்தி. இது என்னுடைய இயல்பாக இருப்பதை விழிப்புணர்வுடன் கவனிக்கிறேன். எனது தொழிலிலும் இவ்வாறே இருந்து வந்திருக்கிறேன். முதலில் கல்கியிலிருந்து விலகியபோதும் சரி, பின்னர் குமுதத்திலிருந்து விலகியபோதும் சரி. உறவு முறிவு வரை எந்தக் கோபதாபமும் எனக்கு ஏற்பட்டதில்லை. இப்போதும் நான் கல்கியில் எழுதுகிறேன். குமுதத்தில் எழுதுகிறேன். அனைவருடனும் நல்லுறவுதான். பழைய சண்டை சச்சரவுகளை, கோபதாபங்களை நினைவுகூர்ந்து ரசிக்கமுடிகிறது. இப்போதும் இணையத்தில் எழுதுவது போல. இப்போதும் நட்புணர்வில் மாற்றமில்லாதது போல. இப்போதும் பழையவற்றை நினைவுகூர்ந்து ரசிப்பது போல.
இந்த உரசல்கள் எல்லாம் இல்லாமல் வாழ்க்கையில் சுவாரசியம் என்பதுதான் ஏது? என்னுடைய வருத்தமெல்லாம் இந்தப் பழைய சரித்திரங்கள் அனைத்துக்கும் ஒரு காப்பி எடுத்துவைக்கவில்லையே என்பதுதான். ஒரு சில என்னிடம் இருக்கின்றன. புதைபொருள் தொகுப்பாளர் பாஸ்டன் பாலாஜியிடம் கொஞ்சம் இருக்கலாம். கணேஷ் சந்திரா கொஞ்சம் உதவலாம். வேறு யார் சேகரித்திருக்கக் கூடும்? பி.கே.எஸ்? மதி? டைனோபாய்? பிரசன்னா? நிச்சயமாக முருகனிடம் இருக்காது. லாஸ் ஏஞ்சல்ஸ் ராமிடம் இருக்க வாய்ப்பில்லை. ரமணி? என்னைப் பற்றி அவர் பெயரிலி தளத்தில் எழுதியவை மட்டும் கிடைத்தால்கூடப் போதும். என்ன அருமையான நையாண்டி!
எட்டு வருடங்கள். இணையத்தில் நான் பெரிதாக ஏதும் சாதித்ததில்லை. எனக்கு அது உத்தேசமும் இல்லை. எனக்கு இது எழுதிப்பார்க்க ஒரு பயிற்சிக்களம். அவ்வளவே. ஆனால் இந்த லட்சணத்திலேயே பல முக்கியமான தருணங்களுக்கு சாட்சியாக இருந்திருக்கிறேன் என்பதில் திருப்தியாக இருக்கிறது.
ஒரே ஒரு விஷயம். கல்கிக்குப் [அஃப்கோர்ஸ் என் மனைவிக்கும்] பிறகு நான் முழு எட்டு வருடங்கள் தாண்டுகிற ஒரே இடம் இதுதான். எனவே என்னை நான் வாழ்த்திக்கொள்கிறேன்.
இன்னுமொரு நூற்றாண்டிரு.
கெளறி விட்டுட்டீங்களே அய்யா……
ஒவ்வொரு சுட்டியும் கிளிக்கி, படிச்சு, பெருமூச்சு விட்டு,,,.. நைட்டு தூங்கினாப்பலதான் 🙂
http://punaivu.blogspot.com/2005/01/blog-post_110690267668663687.html
பாரா,
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் காலக்கட்டங்களில் எனக்குத் தமிழ் பதிவுலகம் பற்றி ஏதும் தெரியாது. ஆனால் தெரிந்துகொள்ளவேண்டும் என்று ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில் எழுதியிருக்கின்றீர்கள். நிச்சயமாய் ஒரு புத்தகம் எழுதுங்கள். காத்திருக்கிறோம்.
இரா.கா.கி தோழி ஒருத்தி 2001ஓ 2002லோ எனக்கு அறிமுகப்படுத்தினார் என நினைக்கிறேன். தூர நின்று கவனித்திருக்கிறேன். தமிழோவியத்துக்கு கொஞ்ச முன்பு தான் இணையத்தில் இணைய ஆரம்பித்தேன். தடாலடியாக கணேஷ் சந்திரா (2001 வாக்கிலென நினைக்கிறேன்) கூப்பிட்டு பேசி ஆச்சரியப்படுத்தினார்(என் ஃபோன் நம்பர் யாருக்கும் தெரியாதென நினைத்திருந்தேன்)…. அப்புறம் அவர் தான் தமிழ்மணத்தையும் சொன்னார்….
விட்ட வெளுப்பு விடாத கருப்புவென நடந்த பந்தாட்டாமெல்லாம் நினைவிருக்கு…
ஹிம் ஹிம்… எதோ போங்க பழைய நினைப்ப தூண்டி விட்டீங்க.
அன்புள்ள மிஸ்டர் எக்ஸ்,
நகுலேஸ்வரதாஸ் சுட்டிக்கு நன்றி. திரும்ப ஒருமுறை படித்துப் பார்க்கிறேன்.
Hi para,
This is really a nice article. I remember the days of Rayar Klub in which you, Eramu and LA Ram were writing very seriously about modern tamil literature and tamil cinema, Venba etc., BTW, you forgot to mention about the \”Third World war\” between you and Ram!;-) Hope still you keep your friendship with him! cheers.
Vazhthukkal Para sir !!!
ஆஹா, காலங்கார்த்தால ஜில்லுன்னு ஆயிடுச்சு. இனி இந்த நாள் இனிய நாளே. நல்லா இருங்க.
அட்டகாசம்! இவ்வளவு வெளிப்படையாக இணையத்தில் பேசவும் எழுதவும் ஆள் இருப்பது வரவேற்புக்குரியது! சமீபகாலத்தில்தான் உங்கள் இணைய தளத்துக்கு வரத் துவங்கினேன். நீங்கள் பல ஆண்டுகளாக இங்கே எழுதிக்கொண்டிருக்கின்றீர்கள் என்கிற விவரமே இப்போதுதான் தெரியவந்துள்ளது எனக்கு! பதிவுகள் அனைத்துமே நன்றாக உள்ளது! உங்களது எழுத்து நடை சொக்கவைக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்!
அருமையான பதிவு. பழைய யாஹு குழுமங்களின் காலத்தைத் துல்லியமாகப் படம்பிடித்திருக்கிறீர்கள். சக பதிவர்களை நீங்கள் வியந்து பாராட்டும் விதம், அவர்களைத் தேடிச்சென்று படிக்கச் செய்யும் வகையில் அமைகிறது. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ஆஹா… எல்லா இணைய குழுக்களையும் வாசித்து வாசித்தே பொழுதை கழித்த ஒரு காலம் இருந்தது. அதை நினைவூட்டிவிட்டீர்கள் பா.ரா. 🙂 எனினும் உங்கள் மனமார்ந்த பாராட்டின் இன்றைய பொழுது இனிதே கழிகிறது.
(உங்களிடமிருந்து ஒரு மடலை நான் எதிர்பார்ப்பது குறித்து மீண்டுமொரு நினைவூட்டல் )
இதுவரை இணையத்தில் வராத (அல்லது எனக்கு காணக்கிடைக்காத) பறவை யுத்தம் போன்ற தொகுப்புகளில் ஏதாவது கணி சேமிப்பில் இருக்குமா??
(குறிப்பாக, அந்தக் கடைசி கதை; அனுமதி கிடைத்தால் தட்டச்சி கூட போட்டுடுவேன்! 🙂
பலரும் சொன்னது போல பழைய நினைவுகளை அசைபோட வைத்துவிட்டீர்கள். என் நண்பன் usenet அறிமுகப்படுத்தியவுடன் நான் முதலில் தமிழ் குழுக்களைத்தான் தேடினேன். அதில் எழுதுபவர்களைப்பார்த்து பிரம்மித்து இருக்கிறேன் (பெரும்பான்மையாளர்கள் முனைவர்கள் வேறு). அப்புறம் இணைய சண்டைகள். தமிழ் இணைய வரலாற்றில் இந்த சச்சரவுகள்தான் சுவாரஸ்யமானவை. ஒரு இழையில் நூற்றுக்கணக்கான பதிவுகள், அதில் நாம் எண்ணியே பார்க்க இயலாத தர்க்கங்கள்… அப்பப்பா கற்றது கைநகக்கண் அளவே! முதன்முதலின் யூஸ்நெட்டில் தமிழைப்பார்த்தவுடன் இருந்த சில்லிப்பு இருக்கிறதே வெளியூர் போய்வந்தவுடன் வீட்டில் தண்ணீர் குடிக்கும் சுகத்திற்கு சமம்! பெயரிலி, ஜெய் மகாராஜ், வாசன்,கல்யாணசுந்தரம், எல்லே போன்றவர்களால் அதற்கு முன்னர் இருந்தவர்களைப்பற்றியும் நினைவுக்கூறமுடியும்.
இப்போதுகூட நேரம் கிடைக்கும்போது soc.culture.tamil பழைய மடல்களை பார்த்து சிரிப்பதுண்டு.
இப்போதைக்கு இணைய சேமிப்பில் முன்னணி பாபாதான் (பாஸ்டன் பாலாஜி)!
கொசுவத்தி சுருள் சுத்தியதற்கு மிக்க நன்றி!
பாபா,
ஆர்வத்துக்கு நன்றி. பறவை யுத்தத்தின் சில கதைகள் டைப் செய்யப்பட்டிருக்கின்றன என்று நினைக்கிறேன். எப்போது, யார் என்று சரியாக நினைவில்லை. முத்துராமனுக்கு ஒருவேளை தெரிந்திருக்கலாம். விசாரிக்கிறேன். என்னிடம் கைவசம் ஒரு பிரதி கூட இல்லாத காரணத்தால் ஒன்றும் செய்யமுடியவில்லை. எப்படியாவது மீட்கப் பார்க்கிறேன்.
சுவாரஸ்யமான வீர வரலாறு 🙂
//ராகாகி பெயரிலேயே சிறு மாறுதல் செய்து யாரோ ஒரு பலான குழு தொடங்கி கலக்கியது,//
இந்த வரிகளையும், வரிகளுக்கான அரசியலையும் ரொம்ப ரசித்தேன் 🙂