வலி உணரும் நேரம்

(இது ஒரு மீள்பதிவு – 7/10/2004  அன்று எழுதியது. வேர்ட் ப்ரஸ்ஸின் புதிய பதிப்பை நிறுவி பரிசோதிப்பதற்காக நானறியாமல் கணேஷ் சந்திராவால் வெளியிடப்பட்டது – பாரா)

நேற்று தற்செயலாக அடையாறு பக்கம் போகவேண்டி இருந்தது. மேம்பாலம் கடக்கும்போது கண்ணில்பட்ட சத்யா ஸ்டுடியோ, பல பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுப் பின்னால் போய் மறைந்தது.

எனக்கும் சத்யா ஸ்டுடியோவுக்குமான உறவு மொத்தம் ஒன்பது மாத காலம் ஆகும். அப்போதே அது பாதிதான் ஸ்டுடியோ. மீதி இடத்தை குடோன் ஆக்கிக்கொண்டிருந்தார்கள். பிறகு கொஞ்சநாள் முழு கொடோனாக இயங்கிவிட்டுப் பின்னால் ஒரு கல்லூரியாகப் புதிய பிறவி கண்டது.

***

அது 1989-90ம் வருட காலகட்டம். வலம்புரி ஜான் விடைபெற்றுப்போய், ‘தாய்’ பத்திரிகை தன்னைத்தானே நடத்திக்கொண்டிருந்த சமயம். ஆசிரியராக இருந்தவரின் பெயர் பத்திரிகையில் வராது. பத்திரிகையில் ஆசிரியர் என்று பெயர் போட்டிருந்த நபரை நான் அந்த ஒன்பது மாதங்களில் ஒரு நாள் கூடப் பார்த்தது கிடையாது.

சிறு கட்டுரைகள் எழுதவும், இடம் நிரப்பும் வேலைகளுக்காகவும் கமலநாதன் என்கிற என் ஓவிய நண்பன் ஒருவன் என்னை தாய் அலுவலகத்துக்கு அழைத்துப் போய் அறிமுகப்படுத்திவைத்தான்.

ரகுநாத் என்பவர் என்னை உட்காரச்சொல்லி, அன்புடன் விசாரித்தார். என்னால் என்னென்ன முடியும் என்று கேட்டறிந்துகொண்டு, “இங்க நிரந்தர வேலை உங்களுக்குக் கிடைக்காது. ஆனா எழுதறதுக்குக் காசு குடுத்துடுவோம்” என்று சொன்னார்.

நான் அப்போது ஒரு ஹெர்குலிஸ் சைக்கிளில் உலகளந்துகொண்டிருந்தேன். யதார்த்தத்தில்தான் சைக்கிளே தவிர கற்பனையில் எப்போதும் விமானப்பயணம்தான் வழக்கம்.

நிரந்தர வேலை இல்லாவிட்டால் என்ன? எழுதியே மாதச்சம்பளத்தைக் காட்டிலும் அதிகம் சம்பாதித்துவிட முடியும் என்று தோன்றியது. தயங்காமல் ஒப்புக்கொண்டேன்.

திரு. ரகுநாத் சற்று இடைவெளிவிட்டு மீண்டும் சொன்னார்: “ஒரு பக்கத்துக்கு முப்பது ரூபா கிடைக்கும். எவ்ளோ எழுதறிங்களோ, அவ்ளோ.”

அன்றைக்குத் தாய் இதழ், கிரவுன் சைஸில் எண்பது பக்கங்கள் வரும். அதில் தொடர்கள் 25 பக்கம் போனால் மீதியெல்லாம் எழுதிச்சம்பாதிக்கக்கூடிய இடங்களே.

“சரி, என்ன எழுதணும் சொல்லுங்க சார்” என்றேன்.

முதல் கட்டுரையாக யாரோ ஒரு வயலின் வாசிக்கும் பெண்ணைப் பார்த்து பேட்டி எடுத்துவரச் சொல்லியிருந்தார். அன்று மாலையே அந்த வேலையை முடித்து எழுதிக் கடாசிவிட்டேன். என் வேகத்தில் மகிழ்ந்த ரகுநாத் மறுநாள் ஏழு அசைன்மெண்ட்களை ஒன்றாக எனக்குக் கொடுத்தார். ஒரு சினிமா விமரிசனம், இரண்டு பக்கங்களூக்கு வருகிற மாதிரி ஆறு ஜோக்குகள், ஒரு பக்கம் கிண்டல் கவிதை, கடற்கரையில் சுண்டல் விற்கும் சிறுவர்களிடம் பட்ஜெட் குறித்த பேட்டி, நகைச்சுவையாக ஏதாவது ஒன்று – மூன்று பக்கங்களுக்குள் அடங்குமாறு, இன்னும் ஏதோ ஒன்றிரண்டு. மறந்துவிட்டது.

அன்றைக்கு சனிக்கிழமை. வேலையை எடுத்துக்கொண்டு கிளம்பி, இரண்டு நாள் அலைந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் மொத்தமாகக் கொண்டு கொடுத்தேன். ஒருகணம் நிமிர்ந்து அவர் என்னைப் பார்த்தார். என்ன நினைத்தாரோ, உடனே நான் எழுதிக்கொண்டுவந்திருந்த தாள்களை விறுவிறுவென்று படித்து, ஓரிரு இடங்களைத் திருத்தி, உடனே அச்சுக்கு அனுப்பிவிட்டார்.

எழுந்து என் தோளில் கைவைத்து, “வா, வெளில போயிட்டு வருவோம்” என்று சொன்னார்.

சத்யா ஸ்டுடியோவின் வாசலில் பிள்ளையார் கோயிலை ஒட்டி இருந்த ஒரு டீக்கடைக்கு என்னை அவர் அழைத்துப்போய் டீ வாங்கிக்கொடுத்தார். முடித்ததும் “தம் அடிப்பியா?” என்று கேட்டார்.

“இல்லை சார்”

“நான் அடிப்பேன். அதான் கேட்டேன். உன்னைக்கேக்காம நான் மட்டும் அடிச்சா பாவம். அதான்” என்று சிரித்தபடி சொல்லிவிட்டு ஒரு சிகரெட் வாங்கிப் புகைத்தபடி பேச ஆரம்பித்தார்.

“என்ன படிச்சிருக்கே?”

“டி.எம்.ஈ. சார்”

“அப்புறம் எதுக்கு பத்திரிகை வேலைக்கு வர நினைக்கறே?”

என்ன பதில் சொன்னேன் என்று சரியாக நினைவில்லை. ஆனால் ஒரு எழுத்தாளனாக அல்லாமல் வேறு என்னவாகவும் என்னை நினைத்துப்பார்க்க முடியவில்லை என்கிற அர்த்தத்தில்தான் பதில் சொன்னேன்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவர், “இது ரொம்பக் கஷ்டம்யா. சில்லறை அதிகம் வராத வேலை. பார்ட் டைமா பண்ணேன்” என்றார்.

சிரித்துவிட்டுப் பேசாமல் இருந்தேன். சரி, வா என்று கிளம்பிவிட்டார்.

தாயில் நான் நிறைய எழுதினேன். ஒருபக்கக் கட்டுரை, அரைப்பக்கத் துணுக்கு. இரண்டு பக்க ஜோக், மூணு பக்கக் கதை, நாலு பக்க பேட்டி.

இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இதழை எடுத்து வைத்துக்கொண்டு பக்கம் எண்ணி, கரெக்டாகக் காசு கொடுத்துவிடுவார்கள். சிறுகதை எழுதினால் மட்டும் எத்தனை பக்கமானாலும் நூற்றைம்பது ரூபாய்.

பல எழுத்தாளர்கள் அங்கே வருவார்கள். விக்கிரமாதித்தியன் அடிக்கடி வருவார். “யோவ், கவிதை வேணாம்யா. அம்பது ரூபாதான் கிடைக்கும். நீ கதை எழுது” என்று அவரை வற்புறுத்திக் கதை எழுத வைத்து நூற்றைம்பது ரூபாய் கொடுத்தனுப்புவார் ரகுநாத். விக்கிரமாதித்தன் அங்கே மொத்தம் எட்டோ என்னவோ கதைகள் எழுதினார் என்று நினைக்கிறேன். அவர் எழுதிய மொத்த கதைகளே அவ்வளவுதான். அங்கே எழுதியவைதான். அவை ‘திரிபு’ என்று ஒரு தொகுப்பாகவும் வந்திருக்கிறது. வண்ணநிலவனின் தாமிரபரணிக்கதைகளும் அந்தக் காலகட்டத்தில்தான் தாயில் வெளியாயின. அவற்றுள் மெஹருன்னிஸா என்ற கதையைப் படித்துவிட்டு எத்தனைநாள் பிரமை கொண்டு திரிந்தேனோ கணக்கே இல்லை.

எஸ். சங்கரநாராயணன், சிறுகதை எழுதி எடுத்துக்கொண்டு நடந்தே வருவார். பாரதிபாலன் வருவார். ஆர். வெங்கடேஷ் அடிக்கடி வருவான். தாயில் அவன் எழுதிய பால் அட்டை என்கிற சிறுகதை, இன்றுவரை அவன் எழுதியவற்றுள் மிகச்சிறந்ததொரு படைப்பு.

தமிழின் பல முக்கியமான படைப்பாளிகள் எனக்குத் தாய் அலுவலகத்தில்தான் அறிமுகமானார்கள். எல்லோருக்குமே ரகுநாத் ஒரு பேண்ட் போட்ட தாயாக இருந்தார். மாறாத புன்னகை. அளந்து அளந்து தான் பேசுவார். என்றாவது எழுத்தாளர்களுக்குக் கொடுக்க, கேஷியரிடம் காசு இல்லாவிட்டால் வாசலிலேயே தடுத்து நிறுத்தி, தோளில் கைபோட்டு வாசல் டீக்கடைக்கு அழைத்துப்போய்விடுவார். இரண்டொருநாள் கழித்து வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்வார்.

பாபநாசம் குறள்பித்தன் என்பவர் அப்போது அங்கே உதவியாசிரியராக இருந்தார். யாருடனும் பேசுவதைத் தவிர்ப்பதற்காகவே எப்போதும் வாயில் புகையிலையுடன் இருப்பார். மனோஜ் என்ற இளைஞர் அங்கே சினிமா பகுதியைப் பார்த்துக்கொண்டிருந்தார். கௌதமி பெயரில் அவர் ஒரு தொடர்கதை கூட எழுதினார்.

ஆசிரியர் குழுவினர் தவிர அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட், சர்குலேஷன் பிரிவு ஆகிய இடங்களில் இருந்தோர் கூட என்னிடம் அங்கே மிகுந்த அன்புடன் பழகினார்கள். ஆனாலும் எல்லாருமே ஏதோ விவரிக்கமுடியாத பதற்றத்துடன் இருந்ததாகவே எனக்கு எப்போதும் தோன்றும்.

“இந்த வேலை நிரந்தரமில்லை சார். எப்ப போகச்சொல்லுவாங்கன்னு தெரியல” என்று பலபேர் பலமுறை என்னிடம் அங்கே சொல்லியிருக்கிறார்கள்.

ரகுநாத்திடம் அதுபற்றிக் கேட்கப் பலசமயம் நினைத்திருக்கிறேன். ஒருமுறை கூட வாய்வந்ததில்லை. என்னதான் அவர் ‘நிரந்தர வேலைக்கு வாய்ப்பில்லை’ என்று சொல்லியிருந்தாலும் ஆறேழு மாதங்களில் நான் தாயில் எழுதியவற்றைப் பார்த்தபிறகு அப்படியொரு வாய்ப்பு வந்தே தீரும் என்றுதான் நம்பியிருந்தேன்.

திடீரென்று ஒருவாரம் சேர்ந்தாற்போல அலுவலகத்தில் நான் ரகுநாத்தைப் பார்க்கவில்லை. யாரிடம் விசாரித்தாலும் சரியான பதில் இல்லை. சினிமா நிருபர் மனோஜ் மட்டும் ரகசியமாக “அவர் பி.வாசு படத்துக்குக் கதை, வசனம் எழுதறாரு” என்று சொன்னார்.

ரகுநாத் கதைகள் எழுதக்கூடியவர் என்பதே எனக்கு அப்போதுதான் தெரியும்.

“எந்தப்படம்?” என்று கேட்டேன்.

“வாசு படங்களுக்கெல்லாம் அவர்தான் எழுதுவார். பேர் வராது” என்று மனோஜ் சொன்னார். இதுவும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இரண்டு மாதங்களுக்கு மேலாக எனக்குப் பணம் வராமலிருந்தது. எண்ணிப்பார்த்ததில் ரூபாய் 760 பாக்கி இருப்பது தெரிந்தது. ஒருநாள் மனோஜிடம் விஷயத்தைச் சொல்லி, எப்போது கிடைக்கும் என்று கேட்டேன்.

“திங்கக்கிழமை சார் வருவாருன்னு நினைக்கறேன். வந்து பாருங்க” என்று சொன்னார்.

அந்தத் திங்கட்கிழமை என்னால் சத்யா ஸ்டுடியோவுக்குப் போகமுடியவில்லை. செவ்வாய்க்கிழமைதான் போனேன். அலுவலகம் பூட்டியிருந்தது. பதறிக்கொண்டு அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் இருந்த இன்னொரு கட்டடத்துக்குப் போனேன். நல்ல வேளையாக அங்கே எனக்குத் தெரிந்த ஒருவர் இருந்தார்.

விசாரித்தேன். சரியான பதில் ஏதும் வரவில்லை. “யாரும் வரலை சார்” என்று மட்டும் திரும்பத்திரும்பச் சொன்னார் அவர்.

அடுத்த தினமும், அதற்கடுத்த தினமும் பலமுறை போன் செய்து பார்த்தும் அலுவலகத்தில் யாரும் எடுக்கவில்லை.

அடுத்தவாரம் ஒருநாள் நேரில் போனபோது ரகுநாத் மட்டும் அலுவலகத்தில் இருந்தார். அவரது மேசை வழக்கத்துக்கு விரோதமாக சுத்தமாகத் துடைத்து இருந்தது. ஒரு தாள் கூட இல்லை. வெறுமனே சுவரைப் பார்த்து அவர் உட்கார்ந்திருந்து நான் அதுவரை பார்த்ததில்லை. எதிர்ப்புற ஸ்டுடியோ தளத்தில் அருண்பாண்டியன் திரும்பத்திரும்ப பைக் ஓட்டி ஓட்டி ரீடேக் வாங்கிக்கொண்டிருந்தார்.

“என்ன ஆச்சு சார்?” என்றேன் மெதுவாக.

“அவ்ளோதான்யா. பத்திரிகை நின்னாச்சு” என்று சொன்னார்.

அந்தமாதிரி ஒரு கட்டத்தில், பெயர் கூட வராமல் ஆசிரியராக வேலை பார்த்த ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும் ஆதலால் என்னுடைய 760 ரூபாய் பற்றிக் கேட்க வாய் வரவில்லை.

வெகுநேரம் பேச்சில்லாமல் நானும் சும்மாவே உட்கார்ந்திருந்தேன். என்னென்னவோ கேட்க நினைத்தும் ஒரு சொல் கூடப் பேசவில்லை. நான் கேட்கநினைத்தவற்றுள் முக்கியமானது “இந்தப்பத்திரிகையின் ஆசிரியர் யார்? ”

எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகனான திரு. அப்பு என்பவர்தான் அதன் ஆசிரியர். அவர் ஒருநாள் கூட அலுவலகத்துக்கு வந்ததில்லை. பத்திரிகையை திரு ரகுநாத் தான் நடத்திக்கொண்டிருந்தார்.

“நீ வேற எதனா பெரிய பத்திரிகைல முயற்சி பண்ணுய்யா. உன்கிட்டே திறமை இருக்கு. வீணா போயிடாதே” என்று கடைசியாக ரகுநாத் சொன்னார்.

கிளம்பி வெளியே வந்ததும் அவசரமாகக் கூப்பிட்டார்.

“யோவ், மறந்தேபோயிட்டேன்யா. ஒரு நிமிஷம் இரு” என்றவர் அவசரமாக எழுந்து அக்கவுண்ட்ஸ் அறைக்குப் போய்விட்டு இரண்டு நிமிடத்தில் திரும்ப வந்தார். அவர் கையில் சில ரூபாய் நோட்டுக்கள் இருந்தன.

“இந்தா. இப்ப இவ்ளோதான் இருக்கு. உனக்கு எவ்ளோ தரணும்னு ஞாபகம் இல்லை. இருக்கறதை வாங்கிக்கோ” என்று என் சட்டைப்பையில் அவரே சொருகிவிட்டுத் தோளைத் தட்டினார்.

நான் அந்தப் பணத்தைக் கடைசிவரை எண்ணிப்பார்க்கவேயில்லை. பொங்கிய துக்கம் வெகுகாலம் மனத்தில் அப்படியே ததும்பிக்கொண்டுதான் இருந்தது.

கண்முன்னால் ஒரு பத்திரிகை அழிவதைப் பார்ப்பதைக் காட்டிலும் மிகப்பெரிய சோகம் ஒரு பத்திரிகையாளனுக்குக் கிடையாது. அந்தக் கடைசி தினத்திலும் எழுத்தாளனுக்குச் சேரவேண்டிய பணம் குறித்த ஞாபகம் உள்ள ஆசிரியர்கள் இத்துறையில் வெகு அபூர்வம்.

ரகுநாத் அப்புறம் என்ன ஆனார், எங்கே போனார் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. அவர் தன்னைப்பற்றிய எந்த ஒரு சொந்தத்தகவலையும் யாரிடமும் சொன்னதில்லை. அவர் வீட்டுத் தொலைபேசி எண்ணைக்கூடத் தந்ததில்லை.

குறள்பித்தன் என்ன ஆனார் என்றும் தெரியவில்லை. மனோஜ் மட்டும் காலமாகிவிட்டதாக வெகுநாள் கழித்துக் கேள்விப்பட்டேன். அவரது புத்தகம் ஒன்று திருப்பிக் கொடுக்கப்படாமல் என்னிடமே இருக்கிறது இன்றும். அதைப் பார்க்கும்போதெல்லாம் அவர் ஞாபகம் வரும்.

யோசித்துப் பார்த்தால் தாய் இன்னும் சிலகாலம் கூட இருந்திருக்கவேண்டிய பத்திரிகைதான். எத்தனையோ அருமையான சிறுகதைகளும் கட்டுரைகளும் அதில் வெளியாகியிருக்கின்றன. பல புதிய எழுத்தாளர்களுக்கு வழிகாட்டிய பத்திரிகை அது. (நாற்பது வயதேயான பாலகுமாரனை அப்போது துணிந்து சுயசரிதம் எழுத வைத்தவர் ரகுநாத்தான். அவரது முன்கதைச் சுருக்கம் தாயில் அமோகவெற்றி கண்ட தொடர்களுள் ஒன்று. நான் சில அத்தியாயங்கள் அதன் ப்ரூஃப் படித்திருக்கிறேன்.)

காலம் சில கேள்விகளுக்கு ஏனோ விடை தருவதே இல்லை. தாய் ஏன் நின்றுபோனது என்பதும் அவற்றுள் ஒன்று.

(பி.கு: இக்கட்டுரைக்குப் பொருத்தமாக சத்யா ஸ்டுடியோ படம் ஏதாவது கிடைக்குமா என்று கூகிளில் தேடிப்பார்த்தேன். சத்யசாய்பாபா படங்கள்தான் திரும்பத்திரும்ப வருகின்றன.)

[இந்தவரி தேவையில்லை என்று இப்போது தோன்றியதால் எடுத்திருக்கிறேன் – பாரா]
Share

4 comments

  • Pa Ra

    Enakku Balakumaran Arimugam aanathu appothu than, Thai moolamaaga.

    1989il oru katchi (en annan) nadathiya ilakiya kootathirku Tirupur Brindavan vandthirunthar! Autograph cake vaithu kodutha pink nira tissue paperil vaangiye gnabagam.

  • பதிவை படிக்கும்போதே வலியை உணரமுடிகிறது. அப்பா ரெகுலராக தாய் வாங்கிக் கொண்டிருந்தார். சில நேரங்கள் வாசித்திருக்கிறேன். நீங்கள் அங்கே எழுதிக் கொண்டிருந்தபோது நக்கீரன் கோபாலும் அங்கிருந்தாரா?

  • //நீங்கள் அங்கே எழுதிக் கொண்டிருந்தபோது நக்கீரன் கோபாலும் அங்கிருந்தாரா?//

    இல்லை. நான் தாய்க்குச் சென்றது, அப்பத்திரிகையின் இறுதிக்காலம். அந்தக் காலத்துடன் ஒப்பிடுகையில் கோபால் இருந்தது சங்ககாலம்.

  • தாய் நின்று போனது எனக்கு அப்போது பெரிய அதிர்ச்சி. நான் எழுதிய ஜோக்ஸ் அப்போது தாய், பாக்யா, விகடன் அனைத்திலும் வந்து கொண்டிருந்தது….

    மாலனின் திசைகள் இதழுக்கு அனுப்பிய சிறுகதை திரும்பி வந்தது அவரின் கடிதத்தோடு…..இதழ் நின்று விட்டது நண்பரே..என்று…such instances are always painful

    வலம்புரி அத்தனை எளிதில் மறக்க முடியாதவர்

By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி