பொலிக! பொலிக! 82

விஷயம் அரண்மனையை எட்டியபோது மன்னன் பதறிப் போனான்.

‘என்ன சொல்கிறீர்கள்? நமது பண்டிதர்களா? நடுத்தெருவில் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு ஓடுகிறார்களா? அவர்களுக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?’

‘ஒன்றுமே புரியவில்லை மன்னா. வெறுமனே கிழித்துக்கொண்டு ஓடினாலும் பரவாயில்லை. ஆனால் ஒருவரையொருவர் தாக்கிக்கொள்கிறார்கள். கழுத்தை நெரிக்கிறார்கள். குப்புறத் தள்ளி ஏறி மிதி மிதியென்று மிதிக்கிறார்கள்.’

‘முட்டாள் காவலர்களே, அவர்களை இழுத்து வந்து கட்டிப் போடவேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு இங்கே வந்து கதை சொல்லிக்கொண்டிருப்பதில் என்ன பயன்?’

‘இல்லை மன்னா. இத்தனைக் காலம் அவர்கள் தங்கள் மரியாதைக்குரிய புலவர் பெருமக்களாகவும் ஞானாசிரியர்களாகவும் வித்வான்களாகவும் இருந்தவர்கள். அவர்களை அடித்து இழுத்து வருவதென்பது…’

மன்னன் யோசித்தான். ஒரு பண்டிதருக்குப் பைத்தியம் பிடிப்பது என்றால் சரி. மொத்தப் பேருக்கும் எப்படி ஒரே சமயத்தில் அப்படியாகும்? இந்த வினா அவன் மனத்தில் எழுந்த கணமே அமைச்சரை அழைத்தான். ‘ஏதோ தவறு நடந்திருக்கிறது. அத்தவறு யார் பக்கம், என்ன பிரச்னை என்று முதலில் பாருங்கள்!’

விசாரித்து வந்த மந்திரி உண்மையைச் சொன்னார். ராமானுஜருக்கு எதிராக துர்தேவதைகளை ஏவிவிட்ட பண்டிதர்களை அந்தத் தேவதைகளே தாக்கத் தொடங்கியிருக்கிற விஷயம்.

‘ஈஸ்வரா..!’ என்று நெஞ்சில் கைவைத்த மன்னன் உடனே, ‘உடையவரின் சீடர்கள் யாரையாவது அழையுங்கள். அந்தக் கூரத்தாழ்வான் இருக்கிறாரா பாருங்கள்!’ என்றான்.

கூரத்தாழ்வான் சபைக்கு வந்தபோது மன்னன் நடந்ததை அவரிடம் முழுதாக விவரித்தான். ‘ஆழ்வானே, காஷ்மீரத்துப் பண்டிதர்கள் அறியாமல் இப்படியொரு காரியம் செய்துவிட்டார்கள். ராமானுஜர் அவர்களை மன்னித்துக் காப்பாற்ற வேண்டும்.’

‘புரிகிறது மன்னா. நான் என் ஆசாரியரிடம் இதைத் தெரிவித்துவிடுகிறேன்.  இன்னும் சிறிது நேரத்தில் உமது பண்டிதர்கள் பழையபடி மாறித் தெளிந்துவிடுவார்கள்.’

‘மிக்க நன்றி சுவாமி. உடையவரிடம் நான் இன்னும் ஒன்றே ஒன்று கேட்கவேண்டும்.’

‘சொல்லுங்கள்.’

‘பண்டிதர்கள் அனுப்பிய துர்தேவதைகள் எப்படி திரும்பி வந்து அவர்களையே தாக்கும்? ராமானுஜர் அவற்றைத் திருப்பி அனுப்பினாரா அல்லது தாமாகத் திரும்பினவா என்பது எனக்குத் தெரியவேண்டும்.’

கூரத்தாழ்வான் புன்னகை செய்தார். ‘மன்னா, உடையவருக்கு இத்தகைய சக்திகளுடன் பரிச்சயமில்லை. இவற்றால் கிடைக்கும் சிறு லாபங்களை அவர் கடுகளவும் மதிக்கிறவரில்லை. சொல்லப் போனால் சிறு தெய்வ வழிபாடுகள் மூலம் கிடைக்கும் சிறு சக்திகளைப் பொருட்படுத்தாமல் கடந்துபோவதே மோட்சத்தின் வாயில் திறக்க உதவும். உடையவர் அவற்றை வழிபட்டதும் இல்லை, அவை அவரது வழிக்கு வந்ததுமில்லை.’

‘பிறகு எப்படி அவை எய்தவர்களை நோக்கித் திரும்பி வரும்?’

கூரத்தாழ்வான் கணப் பொழுது கண்மூடி தியானித்தார். பிறகு சொன்னார். ‘மன்னா, பிழைபட்ட வாழ்க்கை, அறமற்ற செய்கை, பழி கொண்ட பேச்சு, ஒழுக்கமில்லாத நடவடிக்கைகள், பக்தியற்ற நெஞ்சம், பண்பறுக்கும் வஞ்சம் எங்குள்ளனவோ, அங்குதான் தீய சக்திகள் குடியேறும்; சீரழிக்கும். இவை எதுவுமற்ற புனிதர்களை நோக்கி அவை ஏவப்படும்போது அவர்களின் தவ வாழ்வின் தகிப்பு அச்சக்திகளை எதிர்த்துத் தாக்கும். அப்படித் தாக்குதலுக்கு உள்ளாகும் துர்தேவதைகள் எதிர்த்து நிற்க முடியாமல் திரும்பும். எய்யப்பட்டது எதுவானாலும் ஓர் இலக்கு வேண்டுமல்லவா? அனுப்பிய இலக்கு தனக்கானதல்ல என்று தெரிந்தால் அவை உடனே எய்த இடத்தை நோக்கித்தான் திரும்பும்.’ என்று சொன்னார்.

திகைத்துவிட்டார் மன்னர். ‘கூரத்தாழ்வானே, என் தேசத்துப் பண்டிதர்களை நீங்களும் உடையவரும் தயவுசெய்து மன்னிக்கவேண்டும். அவர்களை எப்படியாவது காப்பாற்றிக் கொடுங்கள்!’

‘என்னால் இயலாது மன்னா. நீங்கள் என் ஆசாரியரைத்தான் அணுக வேண்டும்!’

ராமானுஜர் தங்கியிருந்த மடத்துக்கு மன்னன் ஓடிவந்தான்.

‘என்ன ஆயிற்று ராஜனே?’

‘காஷ்மீர மண்ணின் சிறப்பே இங்கிருந்த ஞானபண்டிதர்கள்தாம். அவர்கள் புத்தி கெட்டுப் போய்த் தங்களுக்குக் கெடுதல் செய்ய நினைத்ததன் பலன், இன்று பைத்தியம் பிடித்து விதியின் வசத்தில் வீதியில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அருள்கூர்ந்து அவர்களைக் காப்பாற்றித் தரவேண்டும் சுவாமி!’

பணிவோடு அவன் கரம் கூப்ப, நடந்ததைக் கூரத்தாழ்வான் விவரித்துச் சொன்னார்.

உடையவர் கண்மூடி அமைதியாக யோசித்தார்.

‘சுவாமி, காப்பாற்றலாம் என்று ஒரு சொல் உம்மிடமிருந்து வரவேண்டும். என்ன செய்ய வேண்டுமென்பதை நான் பார்த்துக்கொள்வேன்!’

ராமானுஜர் தலையசைத்தார். சட்டென்று கூரத்தாழ்வான் ஓடிச் சென்று ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்து வந்தார். அதை ராமானுஜரின் காலடியில் வைத்தார். ‘இதில் தங்கள் பாதங்களை ஒரு முறை வைத்து எடுங்கள் சுவாமி.’

ராமானுஜர் அப்படியே செய்தார். அந்தத் தண்ணீர்ப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கிளம்பிய கூரத்தாழ்வான், ‘மன்னா, வீரர்களை அனுப்பிப் பண்டிதர்களை பிடித்து அழைத்து வரச் சொல்லுங்கள்!’ என்று சொன்னார்.

ஒரு மணி நேரத்தில் அத்தனைப் பண்டிதர்களும் அரண்மனைக்கு கட்டி இழுத்து வரப்பட்டார்கள்.

அவர்கள் இருந்த கோலத்தைக் கண்டு சபை மிரண்டு போனது. கிழிந்த ஆடைகள். தலைவிரி கோலம். ஒருவரையொருவர் அடித்துப் புரட்டியெடுத்த ரத்த காயங்கள். உடலெங்கும் மண் புழுதி. நாராசமான பேச்சு. பேய்பிடித்த தன்மை.

‘கூரத்தாழ்வாரே, இவர்கள் சரியாகிவிடுவார்களா?’ மன்னன் சந்தேகத்துடன் கேட்டான்.

கூரத்தாழ்வான் பதில் சொல்லவில்லை. ராமானுஜரின் பாதம் பட்ட தீர்த்தப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் அருகே வந்தார். தண்ணீரை அள்ளி அவர்கள் தலைமீது தெளித்தார்.

மறுகணம் மூர்ச்சித்து விழுந்த பண்டிதர்கள் சில வினாடிகளில் உறங்கி விழிப்பது போல எழுந்தார்கள்.

‘ஆ! மன்னர் சபைக்கு நாம் எப்போது வந்தோம்?’ ஒருவரையொருவர் கேட்டுக்கொண்டார்கள்.

‘பண்டிதர்களே, எத்தனை பெரிய பாவம் செய்துவிட்டீர்கள் நீங்கள். பரம பாகவத உத்தமரான ராமானுஜரை அழிக்க எண்ணி நீங்கள் செலுத்திய கெட்ட தேவதைகள் தங்களைத் திருப்பித் தாக்கியதைக் கூட நீங்கள் உணரவில்லை. உங்களது பைத்தியக்காரப் பேயாட்டத்தை இன்று ஊரே பார்த்துக் கைகொட்டிச் சிரித்துவிட்டது!’

அவர்கள் வெட்கத்தில் தலைகுனிந்தார்கள். உடையவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டார்கள்.

‘நாங்கள் தோற்றோம் சுவாமி. இது இனி வைணவ மண். தங்கள் வழியே எங்கள் வழியும்.’ தாள் பணிந்து நின்றார்கள்.

சரஸ்வதி தேவி பரிசாக அளித்த ஹயக்ரீவர் விக்ரகத்துடன் ராமானுஜர் காஷ்மீரத்தில் இருந்து புறப்பட்டார். வழியெங்கும் திவ்யதேசங்களை சேவித்துக்கொண்டு அவர் திருமலைக்கு அருகே வந்து சேர்ந்தபோது அங்கே ஒரு பிரச்னை காத்திருந்தது.

(தொடரும்)

Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி