தீராப் பிரச்னைகள்

இந்தக் கட்டுரையில் இடம்பெறும் விஷயத்தைப் பற்றி நீங்கள் இரண்டுவிதமாக நினைக்கலாம்.

* இம்மாதிரியெல்லாமும் பிரச்னைகள் சாத்தியமா?
* சே. இதெல்லாம் ஒரு பிரச்னையா?

வெறுமனே புன்னகை செய்துவிட்டு நகர்ந்துவிடுவீர்களானால் நான் சொல்ல ஒன்றுமில்லை. நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். இனி ஒரு பாவப்பட்ட ஜென்மத்தின் பதினோரு பிரச்னைகள். என் வாழ்வில் நான் மிக அதிகம் அவதிப்படுவது இந்தப் பிரச்னைகளால்தான். பல்லாண்டுகாலமாகத் தீராமல் என்னைத் தொடர்கிறது, விதியைப் போல அல்லது வியாதியைப் போல.

என்ன செய்தால் நான் மீளலாம்? தெரியவில்லை.

1. கையிலிருந்து வாய்க்குள் செல்லும் எந்த ஒரு உணவுப் பொருளும், பானமும் ஒரு துளியேனும் சட்டையில் சிந்தாமல் இருப்பதிலை. நினைவு தெரிந்து ஒருநாளும் கறைபடாத சட்டை அணியவேயில்லை. சாம்பார்க் கறை, ஊறுகாய்க் கறை, பான்பராக் கறை, காப்பி கறை, டீ கறை, இங்க் கறை, ஜூஸ் கறை, எண்ணெய்க் கறை – எதுவுமில்லாத திருநாளில் எப்படியாவது ஒரு துளி பெயிண்ட் அல்லது வண்ண சுண்ணாம்புக் கறையேனும் பட்டுவிடுகிறது. எங்கே, எப்படியாகிறது என்று தெரிவதில்லை. கறை நல்லது. விளம்பரதாரர்களுக்கு. எனக்கில்லை. தினசரி இதன்பொருட்டு வீட்டில் வாங்கிக் கட்டிக்கொள்ளும் மண்டகப் படிகள் அனந்தம். ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் எனது எச்சரிக்கை உணர்வு, பய உணர்வாகப் பரிமாண வளர்ச்சியுற்று மேலும் நடுக்கம் ஏற்படுத்திவிடுகிறது. தெரியாமல் மேலே சிந்திக்கொள்கிற வழக்கம், அப்போதெல்லாம் தெரிந்தே கொட்டிக்கொள்ளும்படியாக உருமாற்றம் பெற்றுவிடுகிறது. வெளியே எங்காவது செல்லும்போது கவனம் முழுதும் சட்டையின்மீதே தங்குகிறது. இருக்கிற கறை குறித்த சங்கட உணர்வு. அல்லது புதிதாக எங்கே, என்ன படப்போகிறதோ என்கிற கவலை உணர்வு. என் பிரச்னைகள் அனைத்திலும் தலையாயது இதுவேயாகும்.

2. லேப்டாப்பில் நான் டைப் செய்யும் வேகம் நீங்கள் கற்பனை செய்யமுடியாதது. நிமிடத்துக்கு நூறு சொற்கள் என்னால் முடியும். 1150 சொற்கள் வரவேண்டிய என்னுடைய ரிப்போர்ட்டர் தொடர் அத்தியாயங்களை அதிகபட்சம் இருபத்திரண்டு நிமிடங்களுக்குள் அடித்து முடித்துவிடுவேன். இடையில் சில வினாடிகள் நிறுத்துவது கூட பாக்கு போடவும் தண்ணீர் குடிக்கவும் இயற்கை அன்னை அழைத்தால் செவி சாய்க்கவும் மட்டுமே.

இத்தனை வேகத்தில் டைப் செய்கிறவனின் கீ போர்டுக்குள் எப்படியோ ஏதாவது குப்பை நுழைந்துவிடுகிறது. கடுகு அளவு அல்லது அதனைக் காட்டிலும் சிறிய மணல் துளிகள் அல்லது அதனையொத்த வேறேதாவது பொருள். எப்படி இந்தச் சிறு குப்பை என் லேப்டாப்பைத் தேடி வந்து சரியாக R அல்லது O எழுத்துகளுக்கு அடியில் போய்ப் பதுங்குகின்றன என்கிற சூட்சுமம் எனக்குப் புரிந்ததில்லை.

இப்படி கீ போர்டுக்குள் குப்பை நுழைந்துவிட்டால் அடுத்தக் கணம் டைப் செய்யும் வேகம் இறந்துவிடுகிறது. உள்ளே போனதை வெளியே எடுப்பது ஒரு பெரிய கலை. குண்டூசி ஒன்றை எடுத்துக்கொண்டு மிகவும் லாகவமாக கீக்களுக்கிடையே சொருகி, கண்ட கசுமாலங்களை நசுக்கிச் சேதப்படுத்திவிடாமல், குப்பையை மட்டும் வெளியே கொண்டுவருவது மாபெரும் இம்சை.

திருவள்ளுவர் குண்டூசிமாதிரி ஒரு பொருளுடன் சாப்பிட அமர்வார் என்றும் வெளியே இரைபடும் பருக்கையை அதனால் குத்தி எடுத்து இலைக்குள் போட்டுக்கொள்வார் என்றும் எங்கோ கேள்விப்பட்டிருக்கிறேன்.

டைப் செய்ய அமரும்போதெல்லாம் குண்டூசியளவில் நான் திருவள்ளுவராகின்றேன்.

3. காய்கறிகளில் எனக்கு அறவே பிடிக்காதது, பீட்ரூட்.  மெனுவில் பீட்ரூட் இருந்துவிடும் பட்சத்தில், அந்த உணவு தேவலோகத்தில் சமைக்கப்பட்டதென்றாலும் எனக்கு வேண்டாம்.
என் குணமறிந்த வீடு என்பதால் நான் உண்ணும் வேளைகளில் பீட்ரூட் இருக்காது. அல்லது எனக்கு வேறு ஏதாவது இருக்கும்.

பொதுவாக ருசிக்கு அல்லாமல் பசிக்கு மட்டுமே உண்ணும் சுபாவம் கொண்டவன் என்கிறபடியால், நியாயமாக இது எனக்குப் பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கக் கூடாது.

ஆனால் எப்போது ஹோட்டலுக்கு சாப்பிடப் போனாலும் விதியேபோல் பீட்ரூட் மட்டுமே கிடைக்கிறது. தாஜ் கன்னிமராவிலிருந்து உடுப்பி சுகநிவாஸ் வரை இதைப் பரீட்சை செய்து பார்த்துவிட்டேன். பா. ராகவன் உண்ண வருகிறார், பரிமாறுவீர் பீட்ரூட் என்று எந்தக் கழிச்சல்ல போற தேவதை அல்லது சாத்தான் அவர்கள் காதில்வந்து ஓதிவிட்டுப் போகுமோ தெரியாது.

தவிரவும் கடந்த சில மாதங்களாகத் தீவிர எடைக்குறைப்பு முயற்சிகளில் இருக்கிறபடியால், காய்கறிகளின்மீது மாளாக்காதல் ஒன்று தோன்றியிருக்கிறது. தவிரவும் வாரம் ஒன்றிரண்டு தினங்கள் மட்டுமே மதியத்தில் அரிசி உணவு சாப்பிடுகிறேன் என்பதாலும் பழகிய நாக்கு அந்த வேளை உணவுக்காக முந்தைய வேளையிலிருந்தே எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகிறது.

ஆனால் சொல்லிவைத்தமாதிரி நான் சாப்பாட்டுக்குத் தயாராகும் தினங்களில் எல்லாம் வெளியில் சாப்பிடும்படியாகவும் அன்றைக்கு பீட்ரூட் மட்டுமே கிடைக்கும்படியாகவும் ஆகிவிடுகிறது. இது எத்தனைதூரம் என் சகஜவாழ்வை பாதிக்கிறது என்பதை லேசில் விவரிக்க முடியாது.

4. கடும் மழை பொழியும் தினங்களில் ஏனோ நான் குடை எடுத்துச் செல்ல மறந்துவிடுகிறேன். இன்றல்ல. வெகு காலமாக இப்படித்தான். நனைந்த பிறகுதான் குடை கொண்டுவந்திருக்கலாம் என்று தோன்றும்.

அது ஒரு பிரச்னையில்லை. நான் கவனமாக அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டு, குடையை மறக்காமல் எடுத்துச் செல்லும் மழை நாள்களில் தவறாமல் வெயில் அடிக்கிறது. பேருந்திலும் ரயிலிலும் ஷேர் ஆட்டோவிலும் பேருந்து நிறுத்தங்களிலும் இன்னபிற இடங்களிலும் சங்கராச்சாரியார் கையில் இருக்கும் தண்டம் போல், தண்டத்துக்கு அந்தக் குடையைச் சுமந்துகொண்டு நிற்கவேண்டியதாகிவிடுகிறது.

நான் எடுத்துவந்த பாவத்துக்காகவேனும் ஒன்றிரண்டு துளி விழலாம் என்று அதற்குத் தோன்றுவதில்லை. உபயோகமில்லாமல் கையில் குடையுடன் திரிவது எப்போதும் என்னைப் பதற்றநிலைக்குத் தள்ளிவிடுகிறது. அதைக் கண்டிப்பாகத் தொலைத்துவிடுவேன் என்கிற எண்ணம் ஒவ்வொரு பொழுதும் தோன்றும். ஒருமுறை தொலைத்தால் கூடத்தேவலை; தொலைத்துவிடுவோமோ என்கிற கவலையிலிருந்து விடுபட முடிந்தால் தேவலை.

5. ரெடிமேட் உடைகள் பெரும்பாலும் எனக்குச் சரியாக இருப்பதில்லை. சட்டை கூடத் தேவலாம். ரெடிமேட் பேண்ட் என்னால் அணியவே முடியாது. யானையின் சுற்றளவும் பூனையின் உயரமும் கொண்ட எனது கால் அளவுக்குத் தமிழகத்தில் யாரும் ஆயத்த ஆடை தருவதில்லை.

இதனாலேயே புராதனமான முறைப்படி துணி எடுத்துக் கொடுத்து தைத்துக்கொள்வது வழக்கம்.

இப்படித் தைத்துப் போடும் பேண்ட்டுகளில் ஒருபோதும் முதல் இஸ்திரி மடிப்பு சரியாக அமைந்ததில்லை. கடைக்காரன் போட்டுத்தரும் இஸ்திரி மடிப்பு, அந்நாளில் மால்கம் மார்ஷல் ஓடி வந்து பந்து வீசும் கோணத்தில்தான் அமைகிறது. அதன்பின், இஸ்திரிக்கடைக்காரர் தன் இஷ்டத்துக்கு இன்னொரு மடிப்பு போடுவார். ஆக, என் பேண்ட்களில் மட்டும் எப்போதும் இரண்டு இஸ்திரிக் கோடுகள் தெரியும்.

வெளியே எங்கேனும் புறப்பட்டால் இந்தக் கோடுகள் லக்ஷ்மணன் கோடுகள் மாதிரி என்னைச் சங்கடப்படுத்தும். பலமுறை டைலர்களையும் இஸ்திரியாளர்களையும் மாற்றிவிட்டேன். இந்த இரு இனத்தாரும் தனித்தனியேதான் மடிப்புக்கோடுகள் போடுகிறார்கள்.

எல்லோருக்கும் இப்படித்தானா என்று போகிற வருகிற வழியில் கண்ணில்படும் அத்தனை பேண்டுகளையும் கவனிப்பது ஒரு கட்டத்தில் என் அனிச்சை சுபாவமாகிப் போனது.

ம்ஹும். அனைவருக்கும் கத்தி மடிப்பு மாதிரி ஒரே கோடுதான். அபாக்கியசாலி பாராவுக்கு மட்டும் இரண்டு கோடுகள். இணைகோடுகள். தலைமுழுகித் தொலைத்துவிட்டு வேட்டிக்கு மாறிவிடலாமா என்று கூட யோசித்திருக்கிறேன். சமூக நலன் கருதியே அம்முடிவை இன்னும் செயல்படுத்தவில்லை.

[இந்த வரிசையில் இன்னும் ஆறு தலையாய பிரச்னைகள் உள்ளன. இப்போது எழுத அவகாசம் குறைவாக உள்ளது. திங்கள் கிழமை மாலை எழுதுகிறேன்.]
Share
By Para

வலை எழுத்து

தொகுப்பு

அஞ்சல் வழி


Links

RSS Feeds

எழுத்துக் கல்வி